தந்தை பெரியாரின் தத்துவ நயங்கள்

செப்டம்பர் 16-30 முற்றம்

தந்தை பெரியார் பல நேரங்களில் உவமைகூறி தத்துவங்களை விளக்கும்போது, அதில் மிளிரும் நயம் பண்டிதர்களுக்கே வியப்பளிக்கக் கூடியவையாகும்.

 

1. 1925ல் சுயராஜ்ய கட்சியை பெரியார் கடுமையாக எதிர்த்தார். சுயராஜ்யவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களைக் கண்டித்து அவர்களின் யோக்கியதை என்ன என்பதை தத்துவ நடையில் எழுதினார்.

இவர்களை சுயராஜ்யவாதிகள் என்று கூப்பிடுவதே விபச்சாரிகளை தேவதாசிகள் என்று கூப்பிடுவது போலும், கொடுமைக்காரரை பிராமணர் என்று சொல்வது போலும், தற்கால கோர்ட்டுகளையும், வக்கீல்களையும் நியாயஸ்தல மென்றும், நியாயவாதியென்றும் சொல்லுவதுபோலும், சர்க்கார் உத்தியோகஸ்தரை பொதுநல ஊழியர்கள் என்று சொல்வதுபோலும், தேசத்தின் பொருளைக் கொள்ளையடித்துக் கொண்டுபோக வந்திருக்கும் ஒரு வியாபாரக் கூட்டத்தை அரசாங்கத்தார் என்று சொல்வது போலும், அந்நிய ராஜ்யம் நிலை பெறுவதற்கு பாடுபடப் பிறந்திருக்கும் ஒரு கூட்டத்தாரை சுயராஜ்ய கட்சியினர் என்று குறிப்பிடுவது ஆகும். (குடியரசு 20.09.1925)

2. மதச்சார்பின்மை என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை விளக்க அவர்தந்த தத்துவார்த்த உவமை உச்சநிலை நயமுடையதாகும்.
மதச்சார்பின்மை என்றால் எல்லா மதத்தையும் சமமாகக் கருதுவது; எந்தவொரு மதத்திற்கும் சார்பாக நடவாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். நமது அரசும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு செயல்படுகிறது.

எல்லா மதப் பண்டிகைகளுக்கும் விடுமுறை விடுவது, நிதி உதவுவது, எல்லா மத விழாக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, வானொலியிலும், தொலைக் காட்சியிலும் எல்லா மதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் ஒலிபரப்புவது, ஒளிபரப்புவது.

ஆனால், இது மதச்சார்பின்மையா என்றால் இல்லை. மதம் சாரா அரசு என்றால் மதத் தொடர்பான எந்த செயலையும் செய்யக்கூடாது. அது தனிப்பட்டோர் செயல்பாடு என்று கருதவேண்டும். சுருங்கச் சொன்னால் மதத் தொடர்பு இல்லாதிருத்தலே மதச்சார்பின்மை. மாறாக எல்லா மதத்தையும் சமமாகக் கருதுவது அல்ல.

இதை விளக்க தந்தை பெரியார் அற்புதமான ஓர் உவமையை தத்துவமாகக் கூறினார்கள்.

கன்னிப்பெண் என்றால், ஆண் தொடர்பு (உறவு) இல்லாதவள் என்பதுதான் பொருள். மாறாக எல்லா ஆண்களையும் சமமாகக் கருதுபவள் அல்ல என்றார் நயம்மிளிற.

3. 1927ல் காந்தியாரை பெரியார் சந்தித்து மதம் சார்ந்து விவாதித்தார். அப்போது காந்தியார், உலகில் ஒரு நேர்மையான பிராமணனை தேடிக்கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமானது என்பதுதான் உங்கள் கருத்தா? என்று பெரியாரிடம் கேட்க, நான் யாரையும் பாக்கவில்லை என்று பெரியார் பதில் அளிக்கிறார். அதற்குக் காந்தியார், அவ்வாறு சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனை பார்த்தேன். அவர் ஒரு சிறந்த பிராமணர். அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே என்றார். இதைக்கேட்ட பெரியார், ஓ! உங்களைப் போன்ற மகாத்மாவிற்கு இந்த உலகில் ஒரே ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது சாத்தியமாய் இருக்கலாம். ஆனால் என்னைப்போன்ற சாதாரண பாவிகளுக்கு ஒரு நல்ல பிராமணரைக் கண்டுபிடிப்பது எவ்வாறு சாத்தியம்? என்றார்.

பெரியாரின் நயமான, இந்த பதிலைக் கேட்ட காந்தியார், அதிலுள்ள சொல்லாற்றலை, நயத்தை, நகைச்சுவையை எண்ணி வாய்விட்டுச் சிரித்தார்.

4. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம், விடுதலை ஆசிரியர் பொறுப்பை அய்யா வழங்கியபோது, அய்யா இவ்வளவு பெரிய பொறுப்பை என்னால்… என்று இவர் தயங்கியபோது அய்யா சொன்ன அறிவுரை இருக்கிறதே அது நுட்பமும், சுருக்கமும் நயமும் உடையது.

நீங்கள் எம்.ஏ.,பி.எல்., படித்தவர்கள். ஆங்கிலம் நன்றாகத் தெரியும். பிவீஸீபீ பேப்பர் என்ன எழுதுகிறானோ அதற்குப் எதிர்ப்பாய் எழுதுங்கள் அதுதான் விடுதலை என்றாராம் பெரியார். ஆசிரியர் _அய்யாவின் நுட்பத்தையும், தெளிவையும், நறுக்குத் தைத்தாற்போன்ற நயத்தையும் கண்டு நெகிழ்ந்து மகிழ்ந்தார்கள். இதுபோன்ற பதில்கள் அய்யாவுக்கன்றி எவர்க்கும் வந்ததில்லை. ஆம். அடுத்த நயத்தைப் பாருங்கள் புரியும்.

ஆரியப் பார்ப்பனர்கள் பரம்பரையாய் படித்தவர்கள். நம் மக்களோ படிப்பறிவு இல்லாதவர்கள். இதைப் பயன்படுத்தியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஏய்த்துவந்தனர்.

இந்நிலையில் ஆங்கில ஆட்சி முடிவுற்றது. இந்தியாவில் குடியாட்சி ஏற்பட்டு தேர்தல் வந்தது. மக்கள் வாக்களித்து ஆட்சி அமைக்க வேண்டும். வாக்களிக்க வேண்டுமானால் விழிப்பு வேண்டும். இன்றைக்கு நமது மக்கள் ஏமாந்து, பார்ப்பன சூழ்ச்சியில் மயங்கி வாக்களிக்கிறார்கள் என்னும்போது அன்றைய நிலையைச் சொல்லவும் வேண்டுமா? பார்ப்பனர்கள் நம் மக்களை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள் என்பதால், நம் மக்கள் விழிப்போடு இருக்க ஒரு அறிவுரையை தத்துவ நயத்தோடு தந்தார்.

பார்ப்பான் விஷயம் தெரிந்தவன். தனக்கு எது நல்லது; யார் வந்தால் நல்லது என்று சிந்தித்து ஓட்டு போடுவான். நம் மக்களுக்கு அந்த விழிப்பு இன்னும் வரவில்லை. அதனால், ஒரு எளிய வழி சொல்கிறேன். பார்ப்பானுக்கு நல்லது என்றால் அது நமக்குக் கேடு. அவன் யாரை ஆதரித்து ஓட்டுப்போடுகிறானோ, பார்ப்பன ஏடுகள் யாரை ஆதரித்து எழுதுகின்றனவோ அவர்களை எதிர்த்து நீங்கள் ஓட்டுப்போடுங்கள். அதுதான் நமக்கு நன்மை தரும் என்றார். இதில் உள்ள நயமும், நுட்பமும் எத்தகையது பாருங்கள்.

இந்த அளவுகோலைத் தமிழர்கள் இன்று பின்பற்றியிருந்தால் இன்றைக்கு தமிழகத்திற்கு இந்த அவலம் வந்திருக்குமா? பார்ப்பனர் எண்ணம் ஈடேறியிருக்குமா?

– மஞ்சை வசந்தன்

 

 

செப்டம்பர் 01-15-2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *