என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

2024 கட்டுரைகள் மற்றவர்கள் மார்ச் 1-15, 2024

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நான் மட்டுமல்ல, என்னுடைய சக விஞ்ஞானிகளை வைத்துத்தான் கொண்டு வருகிறோம்.

அதேபோன்று, சிங்கப்பூரில் நேற்று என்ன நடந்தது? என்பதைப்பற்றி, நான் பெங்களூருவில் இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்தாலும் என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோன்று, அறிவியல் உலகில், இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதை, நாளைக்குத் தமிழன் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ‘அறிவியல் பலகை’.
அன்று ‘சங்கப் பலகை’ இருந்திருக்கலாம்; இப்பொழுது தேவைப்படுவது அறிவியல் பலகை. அதை நோக்கி நாம் எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறோம்.
பெரியார் என்ன சொன்னார் என்றால் – மனிதன் என்பவன் சிந்திக்கலாம்; அந்தச் சிந்தனையினுடைய வெளிப்பாடு வெளியில் வருகிறது. மொழி, நம்முடைய மொழி, தாய்மொழி மிகவும் பழைமையானதுதான்; மிகவும் தொன்மையானதுதான். ஆனால், அதை மட்டுமே வைத்துப் பெருமை மட்டும் பேசக்கூடாது.
அவரவருடைய உயரத்தை வைத்துக்கொண்டு விவேகமாக முன்னேறிப் போகவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

இது என்னுடைய துறையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருப்பதுபோன்று, என்னுடைய சக விஞ்ஞானிகளிடம் சொல்வது, அந்தந்தத் துறையில் இருப்பவர்கள், அவரவர்கள் தமிழில் வெளிப்படுத்தினார்கள் என்றால், தமிழும் உயரும்; தமிழனும் உயருவான், தானும் உயர்வான் என்பதற்காகத்தான் அதைச் சொல்ல முயற்சி செய்கிறேன்.
‘‘ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு வளர்ச்சி / பிறழ்ச்சி இல்லை என்பதுதான் பொருள்’’ என்றார் பெரியார்.
ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்றுதான் அர்த்தம். கிட்டத்தட்ட செக்குமாடு என்று சொல்வது போன்றதுதான்.
ஏனென்றால், இன்றைக்கு என்ன சொன்னோம் என்பது, 6 மாதத்திற்கு முன்பு அதே மாதிரி இருந்தாலோ, 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே மாதிரி இருந்தாலோ, 60 ஆண்டுகளுக்கு முன்பு அதே மாதிரி இருந்தாலோ சரியாக இருக்காது.

நான் இங்கே உரையாற்றுகிறேன் அல்லவா! இந்த உரைகூட, 11 ஆண்டுகளுக்கு முன்பு என்ன பேசினேனோ, அதே மாதிரி திரும்பவும் பேசினேன் என்றால், நான் வளரவில்லை என்று அர்த்தம்.
நான் வளர்ந்திருக்கிறேன் என்று சொன்னால், அன்றைக்குப் பேசியதைவிட, இன்றைக்குப் பேசும்பொழுது ஒரு துளியாவது வித்தியாசம் இருக்கவேண்டும்.
அன்றைக்கு நான் என்ன பேசினேன் என்பதைவிட, ஒரு துளியாவது வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் என்னுடைய வெளிப்பாடுதான் இன்றைய பேச்சு.

நேற்று இரவு உணவின்போது பேசிக்கொண்டிருந்தோம்; உங்களுடைய வெற்றிக்குக் காரணம் என்னவென்று கேட்டார்கள்.
வெற்றிக்குக் காரணம் என்று எதுவுமில்லை. கொஞ்சம் தான் என்றேன். அந்தக் கொஞ்சம் என்பது, தினம் தினம் கொஞ்சம். தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறவேண்டும். சரியான திசையில் அந்தக் கொஞ்சம் போனால், அது சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால், இங்கே சின்னக் குழந்தை பேசியது அல்லவா! இன்றைக்கு நன்றாகப் பேசியது. நாளைக்கு இன்னும் கொஞ்சம் நன்றாகப் பேசவேண்டும். 10 ஆண்டுகள் கழித்து, மயில்சாமி அண்ணாதுரை (அவையில் ஒரு மூலையைக் காட்டி) அங்கே இருந்து கேட்கவேண்டும். அந்தச் சின்னப் பெண் பெரிதாய் வளர்ந்து மேடையிலிருந்து பேசவேண்டும்.
உயரம் என்பது அதுதான். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவரவர்களுக்கான உயரம் என்பது இருக்கிறது. அடைந்த உயரம் மட்டும் போதும் என்று நினைத்தால் போதாது. மேலே மேலே போகவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகவாவது மேலே போகவேண்டும் என்பதுதான்.
அதைத்தான் பெரியார் சொல்கிறார். ஆனால், சில சமயம் அந்தக் கொஞ்சம் என்பது சரியான திசையில் போகவில்லை என்றால், வளர்ச்சி இல்லாமல், பிறழ்ச்சியாகவும் போய்விடும்.
ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

குடிநீர், 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது?
உடை எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது?
கல்வி எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது?

40 மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே வகுப்பில் பாடம் நடத்தும்பொழுது, ஒரு காலத்தில் அது சரியாக இருக்கலாம்; ஆனால், இன்று அப்படி இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு பாடத் திட்டம், 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளில் மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்குத் தகுந்த மாதிரி கல்வி என்பதுகூட – நான் 15 ஆண்டுகள் படித்தேன்; 20 ஆண்டுகள் படித்தேன் – முற்றுப் பெறுகிறதா? என்றால், இல்லை.

ஏனென்றால், கல்வி இப்பொழுது இருக்கின்ற நிலையில், கல்வியினுடைய சாராம்சமே மாறுகிறது.
அதேபோன்று தொழில்! கல்வியைச் சார்ந்த தொழிலாக இருக்கட்டும். பல பல தொழில்கள், நேற்றைக்கு, முந்தைய நாள் இருந்தது. இன்றைக்குக் காணாமல் போகிறது. புதிதாக ஒன்று வருகிறது. அதற்குத் தகுந்தாற்போன்று நான் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.
அதேபோன்று நோய், கோவிட் என்பது 2019 ஆம் ஆண்டு வந்தது. கோவிட் 25 வரலாமோ? கோவிட் 30 வரலாமோ? என்கிற கேள்வி இருக்கிறது.

அப்படி வந்தாலும்கூட, அதைச் சரி செய்வதற்கான மருத்துவம் தயாராக இருக்கிறது. ஒரு பக்கம் பிறழ்ச்சி இருக்கிறது; இன்னொரு பக்கம் வளர்ச்சி இருக்கிறது.
ஆட்சி முறைகளில்கூட, பெரியார் சொல்லுகிறார்,

ஒரு காலத்தில் இருந்ததுபோன்று, அடுத்த நூற்றாண்டில், அடுத்தடுத்த நூற்றாண்டில் இருக்கவேண்டிய அவசியமில்லை. காலத்திற்கேற்ப மாறவேண்டிய அவசியம் உருவாகிறது.
உறவுகளில்கூட மிகப்பெரிய கேள்விக் குறிகள் உருவாகின்றன. சிந்திக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உறவுகள், இப்பொழுது எப்படி மாறிக்கொண்டிருக்கிறது? நாளைக்கு எப்படிப் போகப் போகிறது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அது வளர்ச்சியா? பிறழ்ச்சியா? என்பதை ஒவ்வொருவரும் யோசிக்கவேண்டும்.
இதுபோன்ற கேள்விகளைக் கேட்கும்பொழுது தான், கேள்விகளுக்கான விடைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

(தொடரும் )