எனக்குப் பிடித்தக் குறள்

ஜனவரி 16-31

திருக்குறளைப் படிக்காத தமிழர்களே இருக்கமாட்டார்கள். கல்வி, இலக்கியத் துறைகளைச் சார்ந்தவர்கள் பெரும்பாலும் திருக்குறளை நன்றாக அறிந்திருப்பர். ஆனால், பலருக்கு பள்ளி இறுதி வகுப்புவரை மட்டுமே திருக்குறள் படிக்க வாய்ப்பு இருந்திருக்கும். அப்படிப் படித்து முடித்து வெவ்வேறு துறைகளில் முன்னணியிலிருக்கும் சில தமிழர்களிடம் உங்களுக்குப் பிடித்த குறள் எது?  என செல்பேசியிலேயே கேட்டோம். பளிச் பளிச்சென்று தங்களுக்குப் பிடித்த குறளினைச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன குறட்பாக்களையும், அதற்கான பொருளையும் புலவர் குழந்தை உரையிலிருந்து தந்திருக்கிறோம்.

ஆண்டோ பீட்டர் (தமிழ்க் கணினி வல்லுநர்)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

ஊற்று தோண்டிய அளவு நீர் சுரக்கும்; அதுபோல, மக்கட்குக் கற்ற அளவு அறிவு உண்டாகும்.

இளவரசு (நடிகர், ஒளிப்பதிவாளர்)

யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

பிற பொறிகளைக் காவாராயினும் நாவை மட்டும் காக்கக்கடவர், நாவைக் காவாராயின் சொற்குற்றத்திலகப்பட்டுத் துன்பப்படுவர்.

சௌந்தரபாண்டியன் (குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

யாதொரு பொருளை யார் யார் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

செழியன் (திரைப்பட ஒளிப்பதிவாளர்)

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

ஒருவன் செய்யும் வினையை ஏற்ற காலமறிந்து ஏற்ற இடத்துடன் பொருந்தச் செய்வானாயின், இவ்வுலக முழுவதையும் பெற நினைத்தாலும் அவன் பெறக் கூடும்.

சிபிராஜ் (நடிகர்)

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
தமக்குத் துன்பஞ் செய்தவரைத் தண்டித்தலாவது, அவர் வெட்கப்படும்படி நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுவதே.

தினத்தந்தி சண்முகநாதன் (பத்திரிகையாளர்)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இன்சொற்கள் தன்னிடத்தே இருக்க அவற்றைக் கூறாமல் ஒருவன் கடுஞ் சொற்களைக் கூறுதல், சுவையுள்ள பழங்கள் இருக்க அவற்றைவிட்டுச் சுவையில்லாத காய்களைத் தின்ன விரும்புவதை ஒக்கும்.

ரமேஷ் பிரபா (ஊடகவியலாளர்)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

யாவரும் உண்ணும்படி உழவுத் தொழிலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்பவரே உரிமையுடன் வாழ்பவராவர், பிறரெல்லாம் அவ்வுழவுத் தொழிலைப் பின்பற்றி வாழ்பவராவர்.

கரு. பழனியப்பன் (நடிகர், திரைப்பட இயக்குநர்)

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

செய்யுந் திறத்தினையறிந்து பிறருக்குத் தீமை பயத்தல் இன்றி வந்த பொருளானது, அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையுங் கொடுக்கும்.

கல்கி (சகோதரி-திருநங்கைகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம்)

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

தமக்குத் துன்பஞ் செய்தவரைத் தண்டித்தலாவது, அவர் வெட்கப்படும்படி நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த தீமையையும் தாம் செய்த நன்மையையும் மறந்து விடுவதே.

சி.சுகுமார் (மேலாண்மை நிருவாகி)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்

பகைவரிடம் வினைசெய்யும் இடத்தை அறிந்து தம்மைக் காத்து வினை செய்வராயின், வலியில்லாதாரும் வலிமை பெற்று வெல்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *