செவ்வாய் மனிதர்கள்… – செந்துறை மதியழகன்

2024 சிறுகதை மார்ச் 1-15, 2024

ஆண்டு 2050 செவ்வாய் மண்டலம், மரினர் பள்ளத்தாக்கின் விளிம்பு முகாம்.

“அந்தப் ப்ளாட் 145இல் தண்ணீர்ப்பாசனம் சரிவர இல்லையாம், நெற்பயிர் வாடிவிட்டதாக அதிகாலையே குறுந்தகவல் புகார்” என்ற துணை அதிகாரி அகிலனைக் கோபமாக ஏறிட்டான் நித்திலன்.

“யாருப்பா புகார் சொன்னது, அந்த… இந்திய அமைச்சர் தானே?
இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களில் இந்த அமைச்சரிடம் இருந்துதான் நிறைய புகார் வருகிறது.
வாடிக்கையாளர்க்கு நம்மால் முடிந்த அளவு சேவையைத் தருகிறோம். மற்றவர் நம் தொழில் நேர்மையைச் சந்தேகிப்பதை எக்காரணம் கொண்டும் நம்மால் ஏற்க முடியாது.
செவ்வாய் மனிதர்களின் அடிப்படைக் குணமே நேர்மைதான் என்பது அவருக்குத் தெரியாது போலிருக்கிறது,” என்றான் நித்திலன்.

“ஆமாம், பூமியிலிருந்து சுமார் 1000 வாடிக்கையாளர்கள் இங்கு உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யச் சொல்லி இறக்குமதி செய்து கொள்கின்றனர். எல்லாம் நம் மீதான நம்பிக்கைதானே…! இவரைத் தவிர வேறு யாரும் இப்படி புகார் தட்டிக்கொண்டு இருப்பதில்லை, பூமியில்தான் இந்த அமைச்சர் விவசாயிகளுக்குத் தொல்லை என்றால், நமக்கும் பெருந்தொல்லையாக இருக்கிறார்.

இதுபற்றி நமது அமைச்சகத்திற்குத் தகவல் தெரிவித்துவிட வேண்டும்” என்றான், துணை அதிகாரி அகிலன்.
ஆம், இப்போதெல்லாம் உலகின் பெரும் பணக்காரர்கள் இயற்கை முறையிலான உணவு தானியங்களுக்காகக் கையேந்தி நிற்கும் ஒரே இடம் செவ்வாய் மண்டலம்தான்.
அங்கு விளையும் தானியங்கள், காய் கனிகளை உண்டு நீண்ட காலம் வாழமுடியும் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை பூமியில் பெருகிவருவதைத் தடுக்க இங்குள்ள அரசுக்கு வழியேதும் தெரியவில்லை. இரசாயன உரங்களைக் கொடுத்துக் கொடுத்து விளைநிலங்களை மலடாக்கியதில் அரசாங்கத்திற்கும் பெரும்பங்கு இருக்கிறதே!
அதனாலேயே, உணவுக்கு மாற்று வழி தேடி செவ்வாய் மண்டலத்தில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து, தன் குடும்ப உணவுத் தேவைகளுக்கு அங்கு கையேந்துகிறார்கள்.
ஒவ்வொரு எண்பது சதுர மீட்டர் அளவிலான நிலத்திலும் அதிநவீன ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டு, அதன்மூலமாக தன் குத்தகை நிலத்தின் விவசாயச் செயல்பாடுகளை, ஒருவர்

பூமியில் எந்த நாட்டிலிருந்தும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
பூமி உள்பட, பிற கோள்களிலிருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாகச் செவ்வாய் மண்டலம் சென்று பார்வையிட அனுமதி இல்லை. அங்கு அந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ள செவ்வாய் மனிதர்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.

இதன்மூலம் பூமிக்கும் செவ்வாய் மண்டலத்திற்கும், பல பில்லியன் டாலர் வணிகம் நடைபெற்று வருகிறது.
தன் குத்தகை இடத்தில் என்னென்ன தானியங்கள் பயிர் செய்ய வேண்டும், என்னென்ன காய்கறிகள் பயிர்செய்ய வேண்டும். உற்பத்தியில் தங்களுக்குப் போக, மீதத்தை சந்தைப்படுத்துவது எப்படி, போன்ற விவரங்கள் அனைத்தும், செவ்வாய் மண்டல உணவு உற்பத்தித் துறைச் செயலாளர், நித்திலன் வாயிலாகவே அறிய முடியும்.
புதிய வகை நெல் விதைகளைச் சோதித்துக் கொண்டிருந்த நித்திலன்

“அகிலன் இந்தியாவிலிருந்து இளையநாச்சி தொடர்பு கொண்டாளா? பூமிக்கு விமானத்தில் அனுப்பிய காய்கறிகள் எல்லாம் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களுக்குச் சென்று சேர்ந்ததா? அமைச்சர் பற்றிய செய்தியைக்கூட அவள் காதில் போட்டு வைக்க வேண்டும்,” என்றான்.

“நேற்றிரவு உங்களைத் தொடர்பு கொள்வதற்கு முயற்சி செய்து தொடர்பு கிடைக்கவில்லை என்றும், இன்று பத்து மணியளவில் உங்களை அழைத்து முக்கியமான செய்திகள் பற்றி பேசவேண்டும் என்றும் சொன்னாள்.”

“சரி… சரி, வீனஸ், யுரேனஸ்க்கு அனுப்ப வேண்டிய சரக்குகளும், ‘அதுபோல பூமியில் அமெரிக்கா செல்லவேண்டிய சரக்கு விமானங்களும் ஆயத்தம் தானா…?”.

“எல்லாம் தயார்தான்… ஆனால்…”

“ஆனால், என்ன?”

“அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஜோன்சு நமது அதிபர் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.”

“என்னவாம்?“

“அமெரிக்கர்கள் நூறு நபர்களையாவது வேலைக்கு நமது விவசாயப் பண்ணையில் நியமனம் செய்துகொள்ள வேண்டுமாம். கோரிக்கையை நீண்ட காலமாக நிராகரிப்பது முறையில்லை. மீண்டும், மீண்டும் மறுத்தால் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பேசியிருக்கிறார். குரலில் மிரட்டல் தொனி இருந்ததாக அலுவலகத்தில் இருந்து செய்தி வந்தது,” என்றான் அகிலன்.

“என்ன, பூமியில் மற்றவர்களை மிரட்டுவதைப் போல் நினைக்கிறார்களா?” அலட்சியப் புன்னகை பூத்தான் நித்திலன்.
காலைப்பொழுது, ஒலிம்பசு மலைத்தொடரில் பனிமூட்டம் விலகி, செந்நிற ஒளி படர்ந்திருந்தது.
குன்றின்மீது உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நித்திலனிடம், மடிக்கணினி பிளிறுவதாக பணிப்பெண் ஒருத்தி ஓடிவந்து சொல்லவும், வியர்வை பூத்த உடலுடன் விரைந்து சென்று கணினியை உயிர்ப்பித்தான்.

‘அவள்தான் இளையநாச்சி! பூமியில் இத்தனை ரசாயன உரங்கள் தருவிக்கும் உணவுப் பண்டங்களைத் தின்றும் எத்தனை அழகாக இருக்கிறாள்….! அப்படியே செவ்வாய் தேசத்து பெண்கள் போலவே….’

“ஹேய்… நிலவா…?” பார்வையாலே தன்னைப் பருகிய நித்திலனின் கனவைக் கலைத்தாள் இளையநாச்சி.
சுயநினைவுக்கு வந்த நித்திலன், “நிலவா…’! நிலவா என்றால் என்ன நாச்சி?” என்றவனின் குரலில் இருந்த கம்பீரம் மறைந்து மென்மை குடியேறியிருந்தது.
“ஆமாம், நீங்கள் ஒரு போபோசு, அகிலன் ஒரு டைமோசு. இரண்டு நிலவுகள் தானே செவ்வாய் தேசத்தை வழி நடத்துகிறீர்கள்.”

“ஓ… அப்படியா! இளையநாச்சி மட்டும் என்ன அந்த நிலவைப் போன்ற பேரழகிதானே,” என்றான் அவளை ரசித்தபடி.
“அய்யோ…டா…” வாய்விட்டுச் சிரித்தாள் இளையநாச்சி.

“என்ன சிரிப்பு இது…?” புரியாமல் வினவினான்.

“ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை. பெண்களைப்
புகழ்வதில் எல்லா தேசத்து மனிதர்களும் ஒன்றுபோலதான், என்று நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்துவிட்டது,” என்றாள் குறும்பாக.

“ஓ…” என்று தலையில் கை‘ வைத்து அசடு வழிந்தவன், “சரி நாச்சி, நலம் தானா?” பேச்சின் திசையை மாற்றினான்.

“எங்கே… நீங்கள் செவ்வாய்க் கோளை ஆட்சி செய்கிறீர்கள், பூமியில் பெண்களைச் செவ்வாய்த் தோஷம் வச்சு செய்கிறது, இதில் எங்கிருந்து நலமாக இருப்பது.
என் பெற்றோர் எனக்கு மணமகன் தேடி நாடுநாடாக அலைகிறார்கள். இதுவரை அவர்கள் கையில் ஒருகுடிகாரன் கூட சிக்கவில்லை. இப்போதைக்கு திருமணத்திலிருந்து செவ்வாய்த் தோஷம்தான் என்னைக் காப்பாற்றுகிறது,” என்று பெருமூச்சு விட்டாள்.

“அகா… ‘கா.., கா…’ கக…” சத்தமாக சிரித்தான் நித்திலன்.

“எங்கள் திருநாடு எங்களைப் பாதிக்காமல் உங்களைப் பாதிக்குதா…? என்றுதான் திருந்துவார்
களோ…?” என்றவன், மீண்டும் பலமாகச் சிரித்தான்.

“ஏய்… அழகா… சிரித்து மழுப்பாதே… எப்போது என்னைச் செவ்வாய் தேசம் கடத்தப் போகிறாய்?”.

“ம், பூமியிலிருந்து ஒரு பெண்ணைத் துணைக்கொள்ள நிறைய சட்டப் போராட்டங்கள் இருக்கே, எல்லாவற்றையும் சரி செய்து உன்னைச் சிறையெடுக்க முயற்சிக்கிறேன், அதுவரை செவ்வாய் தோஷமே உன்னைக் காப்பாற்றட்டும், அது சரி, பூமியில் என்னதான் பிரச்சினை? உங்கள் அமைச்சர், குத்தகைக்கு இங்கு ஒரு எண்பது சதுரமீட்டர் நிலத்தை எடுத்துக்கொண்டு தலைவலி கொடுக்கிறார்.”

“ஆம்… அது தொடர்பாகத் தான் அழைத்தேன், செவ்வாய்க்கு ரசாயன உரங்களை அனுப்புவது பற்றிய திட்டம் இருக்கிறது. அந்த அமைச்சர்தான் உங்களைச் சம்மதிக்க வைப்பதாக பன்னாட்டு நிறுவனத்திடம் பொறுப்பேற்று இருக்கிறார். இந்த வகையில், பூமியில் அனைத்து நாடும் ஒருமித்தக் கருத்துடன் இருக்கிறார்கள். உரங்களையும், பூச்சி மருந்துகளையும் இறக்குமதி செய்துகொள்ள உங்கள் அதிபருக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என நினைக்கிறேன். உரங்களின் மூலம் பூமியை அழித்தது போதாது என்று, இப்போது செவ்வாய் மண்டலத்திற்கு குறிவைக்கிறார்கள். கவனமாகச் செயல்படவும்” என்றாள், இளையநாச்சி.

“ம்… நான் சந்தேகித்தது சரிதான், இருபது கோடி மைல்கள் கடந்து வணிகம் செய்கிறவர்கள் நாங்கள். எங்களையும் உள்ளூர் விவசாயிகளைப் போல் நினைக்கிறார்களா? இங்குகூட யானை, சிங்கம், புலிகள் இருக்கிறது. அதைப் பார்த்து செவ்வாய் மனிதர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. ஆனால், பூமி மனிதர்களை அழைப்பதற்குதான் அச்சப்படுகிறார்கள். அதற்கு இதுதான் காரணம். ஆகட்டும் பார்த்துக் கொள்கிறோம்! வேறு ஏதும் தகவல் உண்டா?” என்றான்.
“இருக்கு… ஒரு புகார் இருக்கு, பூமியை யாரெல்லாம் நச்சாக மாற்றி பணக்காரர்கள் ஆனார்களோ, அவர்களைத் தான் ஆரோக்கிய
மான உணவு கொடுத்து காப்பாற்றுகிறது உங்கள் தேசம்! பூமியின் சாமானிய மக்களுக்கு என்ன செய்கிறார்கள்? என்று இங்குள்ள எழுத்து ஊடகம், காட்சி ஊடகம், ஏன்? மக்களும்கூட பேசிக்கொள்கிறார்கள்.”
ஏதேதோ பேசி நீண்டநாள் கேட்காமல் போன கேள்வியை இன்று கேட்டுவிட்டாள் நாச்சி.

“நாச்சி.. அதுபற்றிய குற்ற உணர்வு எங்களுக்கும்
உண்டு, தற்போதுதான் இயற்கை உணவு உற்பத்தியின் அடிக்கட்டுமானம் இங்கு வலுப்பெற்று வருகிறது. சாமானியர்களுக்கும் உதவும் வகையில் அமைச்சகத்தில் பரிசீலித்து வருகிறோம்.
அதற்கானச் செலவுகளைக் குத்தகைக்காரர்கள் தலையிலேயே கட்டுவது, இயற்கை முறை உணவுப் பொருள்களுக்காக பணத்தைக் கொட்டிக்
கொடுக்கிறார்கள். அவ்வளவும் உயிர்பயம், அந்த மூலதனத்தைக் கொண்டு எளிய மக்களுக்கும் உதவிடுவோம். மயிலுக்குத் தெரியாமல், அதன் இறகுகளைப் பிடுங்கி குழந்தைகளுக்குக் கொடுப்பது இல்லையா? அதுபோல… பூமியில் உன்னுடைய உதவி இதற்கு அதிகம் தேவைப்படும், கொஞ்சம் பொறுமை அவசியம்.” என்றான்.
”எப்படியோ… எங்கள் வாழ்க்கையை செவ்வாய்
அழிக்கிறது என்ற கற்பிதங்கள் ஒழிந்து செவ்வாயின்
துணைக் கொண்டு மக்கள் வாழ்கிறோம் என்ற கருத்து பூமியில் நிலவினால் மகிழ்ச்சிதான்,” என்று கண்சிமிட்டி சிரித்தாள் இளையநாச்சி.
ம்…சரி, சரி, எனக்கும் நேரம் ஆகிறது. அமைச்சகம்
வரையில் செல்லவேண்டும், பிறிதொரு முறை அழைக்கிறேன். விடை பெறுகிறேன் நாச்சி,” என்று கையசைத்து பிரியா விடை கொடுத்தான் நித்திலன்.
நீண்டு விரிந்த ரப்பர் வழிச் சாலையில் மின்னி ஓடியது நித்திலனின் கார். காரின் வேகம் காட்டி 500இல், நிலைகொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தது.
மலைக்குகைகள், பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளைத் தன்னிச்சையாக ரெக்கைகளை விரித்து மேல் நோக்கிப் பறந்து பாய்ந்து சென்ற கார், சிகப்பு நகரத்தைச் சென்றடைந்தது.
முழுவதும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட, சிமெண்ட் வாசனையற்ற வீடுகள், எங்கு நோக்கினும் அரசு பொது உணவுக் கூடங்கள், கல்விக்கூடங்கள், அடடா… ஆச்சரியம்தான்…!’ எங்குமே மதுக்கடைகளோ, காவல் நிலையமோ, நீதிமன்றங்களோ, வழிபாட்டுத் தலங்களோ, மருத்துவமனைகளோ கூட இல்லாதது.
அதிபர் மாளிகை கோட்டையின் முகப்பில், கற்சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது எழுத்தாணியுடன் அமர்ந்திருந்த திருவள்ளுவர் உருவம்.
நித்திலனும், அகிலனும் வளாகத்தில் வாகனத்தை
நிறுத்திவிட்டு மாளிகைக்குள் நுழைந்தார்கள். இயற்கை விவசாயத்தைக் காக்கும் கடமை உணர்வோடு! நன்றி! ♦