செய்தொழில் வேற்றுமையான் – புதியபார்வை

ஜனவரி 16-31

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -972.

இக்குறட்பா, பொருட்பாலில் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ளது.  இக் குறட்பாவுக்கு மணக்குடவர் மற்றும் பரிமேலழகர் முதல், நம் காலத்திய உரையாசிரியர்கள்வரை எண்ணற்றோர் உரை கண்டுள்ளனர். இப்போதும் பற்பலர் உரையெழுதி வருகின்றனர்.  இக்குறட்பாவுக்கு இதுகாறும் கண்ட உரைகள் இயல்பானவை-யாகவோ பொருத்தமுடையனவாகவோ இல்லை. அவ்வுரைகள் இக்குறட்பாவுக்கு ஓரளவே ஒத்துள்ளனவேயன்றி முழுமையாகப் பொருந்த-வில்லை. இக்குறட்பாவுக்கு இயல்பான, உண்மையான உரையைக் காண வேண்டுமாயின், திருக்குறள் முழுவதையும் ஒப்பு நோக்கி அவருடைய காலச் சமுதாயச் சிந்தனையின் உண்மைகளை உணர்ந்தால்தான் முடியும்.  மேலும், அந்தச் சிந்தனைகளை அக்காலச் சமுதாயச் சூழலோடு ஒப்பிட்டால்தான் உண்மையை உணரமுடியும்.  எல்லா உயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும் தான் செய்தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது என்றவாறு என்கிறார் மணக்குடவர்.

எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே எனினும், செய்யும் தொழில்களது வேறுபாட்டான் பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா என்றவாறு என்கிறார் பரிமேலழகர்.

இவ்விரு விளக்கங்களும் ஒரு பொருளுடைய-தாகவே உள்ளன. இவ்விரு உரைகாரர்களும் வைதிக முறையிலேயே உரையெழுதி உள்ளனர்.  செய்யும் தொழிலின் ஏற்றச் சுருக்கத்தினால் பெருமை ஒத்திருப்பதில்லை; வேறுபாடு உண்டு என்கிறார் மணக்குடவர். பரிமேலழகரும், செய்யும் தொழில்களது வேறுபாட்டால் பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒரே நிலையில் ஒத்திருப்பதில்லை என்கிறார்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும் அவை செய்கின்ற  தொழில் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பதில்லை என்று (1928) – கா. சுப்பிரமணியம்பிள்ளையும்,

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மை-யானதே ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு – தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்று (1949) – டாக்டர் மு.வ.வும்,

மாந்தரெல்லார்க்கும் தாய் வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே ஆயின், அவரவர் செய்யுந் தொழில்களின் வேறு-பாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல – (1965) என்று பாவணரும் பொருள் உரைக்கின்றனர்.

இம்மூன்று உரைகளும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன.  பழைய உரைகாரர்களையொட்டியே இவ்வுரைகளும் அமைந்துள்ளன.  அதாவது, இவ்வுரைகளும் தொழில் வேறுபாட்டால் சிறப்பு வேறுபடும் என்கின்றன. நம் காலத்து உரையாசிரியர்கள், உண்மை காணும் நோக்கில் காய்தல், உவத்தலின்றி ஆய்ந்திருக்க வேண்டும்; அவ்வாறு ஆய்வு செய்யாதது வருந்தத்தக்கதே.  பரிமேலழகரைக் கடுமையாகச் சாடும் பாவாணரும், இக்குறட்பாவுக்குப் பரிமேலழகரையொட்டியே உரை கண்டுள்ளார். இது வியப்பினும் வியப்பாக உள்ளது.  உண்மையை நோக்கும் நாம், ஆயும்போது இவற்றையெல்லாம் ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது.  பல இடங்களில் ஆரியக் கருத்தாக்கங்களை மறுக்கும் பாவாணர், இக்குறட்பாவில் வருணத் தர்மத்தை எதிர்க்காததை விளங்கிக் கொள்ள முடியவில்லை. இக்குறட்பாவுக்கு, இவ்வுரைகளி-லிருந்து வேறுபட்டும் சிலர் உரை கண்டுள்ளனர்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; அதுபோல் தொழில்களும் ஒத்தவையே; எனினும், அவற்றைச் செய்யும் செயல்நிலை வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா என்று (1990) – புலவர் இரா. இளங்குமரனாரும், எல்லா உயிர்களும் பிறப்பினால் சமம்; ஆயினும் செய்யும் தொழிலின் தரத்தால் மாறுபாட்டால் அவர்தம் சிறப்பும் மேன்மையும் வேறுபடுகின்றன என்று (2001)_ கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும் உரை எழுதியுள்ளனர்.

இவ்விரு உரைகளும், முன்னர் உரைகளி-லிருந்து வேறுபடுகின்றன.  இளங்குமரனார், தொழில்களில் வேறுபாடில்லை  அனைத்தும் ஒத்தவையே என்கிறார். தொழில்களில் உயர்வு தாழ்வை வலியுறுத்தும் வருணத் தர்ம முறைக்கும் மனுதர்மத்துக்கும் இவ்வுரை மாறானது.  அனைத்துத் தொழில்களும் ஒத்தவையேயாயினும்  தொழில்களைச் செய்யும் திறத்தால் தரத்தால் சிறப்பு வேறுபடும் என்கிறார் இளங்குமரனார். கவிஞர் சிற்பி, அனைத்துத் தொழில்களும் ஒத்தவையே என்று வெளிப்-படையாகக் கூறாவிடினும், மறைபொருள் அதுதான்.

அதாவது, ஒத்தவை என்பதுதான் அவர் கருத்து.  அதனைச் செய்யும் தொழிலின் தரத்தால் மாறுபாட்டால் அவர்தம் சிறப்பும் மேன்மையும் வேறுபடுகின்றன என்று குறிப்பிடுவதால் உணரலாம். கவிஞர் சிற்பி, இளங்குமரனாரின் உரையையே இங்கு வழி-மொழிகிறார் எனலாம்.  இவ்விரு உரைகளும் வருணத் தர்மத்தை மறுக்கும் உரைகளாக இருந்தாலும், இவ்வுரைகள் வள்ளுவரின் கருத்தாகுமா? என்பது அய்யமே;

திருக்குறளில் முழுமைப் பார்வை தேவை; அதாவது, ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளையும் முழுவதும் பயில்வார்க்கே தனியொரு குறளின் உண்மைப் பொருள் விளங்கும். இதற்குக் குறள் மூலங்களையே திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.  மூலத்தை இவ்வாறு படித்துணர நுண் பொருளுரைகளை ஒரு கைவிளக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறள்களுக்குள்ளேயே குறளுக்கு உரை தேட வேண்டும்; இயலுமானால், குறள்கள் வழியாகவே குறள் உரை விளக்கம் அமைய வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளை மறப்பினும், ஒத்துக் கொளலாகும் என்ற குறளோடு ஒப்புநோக்கின் வள்ளுவரின் நோக்கு நிலை புலனாகும். அதன்வழி அக்குறளுக்குச் சரியான உரை காணலாம்.  மேலும், கீழுள்ள குறள்களை நோக்கின் அவ்வுண்மை உறுதிப்படும்.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு – 409

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்; கீழல்லார் கீழல் லவர் – 973

கல்லாதவர் மேற்குடியில் பிறந்தவராயிருப்பினும், கீழ்க்குடியில் பிறந்த கற்றவரைப் போன்று பெருமையுடையவர் அல்லர் என்றும், மேல்-நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர் என்றும், கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர் என்றும் அவர் வரையறுக்கிறார்.  இந்த வரையறுப்பு மிகமிக முக்கியமானது; இவ்விரு குறள்களும் வடநூன் மரபுக்கு மாறானவை.  இக்குறள்கள் வள்ளுவரின் நெஞ்சை நமக்குத் தெளிவுறக் காட்டுவனவாகும்.  முதற்குறள் கல்வியைக் கொண்டு மக்களை மேல் – கீழ் என்று வரையறுக்கிறது.  இரண்டாம் குறள் பண்பு நலனைக் கொண்டு மேல் – கீழ் என்று வரையறுக்கிறது.  ஆனால், தொழிலைக் கொண்டு மக்களை மேல் – கீழ் என்று எங்கும் அவர் கூறவில்லை.  முதற்குறள் ஜாதி _ மற்றும் வருண உயர்ச்சியை மறுத்து, கல்வியின் வழி சமநீதியை உருவாக்க வழிகாட்டுகிறது.

வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கண் படுமே – புறம் – 181

என்று புறநானூறு கூறுவதும் வருண தர்மத்துக்கு எதிரானதேயாகும்.  இப்பாடலும் குறளும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன.  இரண்டாம் குறள், பதவி, பொறுப்பு, செல்வம், ஜாதி, வருணம் ஆகியவற்றின் உயர்ச்சியை மறுத்து, பண்பின் உயர்வை நிலைநாட்டுகிறது. உயர்பணியிலிருந்தாலும், கீழ்ப்பணியிலிருந்-தாலும் எல்லாம் ஒன்றே; ஆனால், பண்பு அப்படிப்பட்டதன்று; அதாவது, ஒருவர் பண்புடையவராக இருப்பின் (கீழ் ஜாதியில் இருப்பவராயினும்) அவர் மேன்மை மிக்கவரே; மேற்ஜாதியில் பிறந்திருந்தாலும் பண்பற்றவராக இருப்பின் அவர் கீழானவரே என்பது அவர் கருத்து. இந்த அடிப்படையில்தான் பிறப்-பொக்கும் எனத் தொடங்கும் குறளுக்கும் பொருள் காண வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் – 972

எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒரே தன்மைத்தேயாகும்.  எல்லாத் தொழில்களும் ஒத்தவையே; அதனால், தொழில் வேறு-பாட்டைக் கொண்டு சிறப்புத் தருவது பொருந்தாது என்று பொருள் கொள்வதே ஏற்றது.  எக்குடியில் பிறந்தாலும் பிறப்பு ஒரே தன்மைத்தாக இருப்பதைப் போன்று, எந்தத் தொழில் செய்தாலும் அதில் உயர்வு தாழ்வு இல்லை; எல்லாத் தொழில்களும் மதிப்-புடையனவாகும் என்கிறார்.

அதாவது, தொழில் வேறுபாட்டைக் கொண்டு உயர்வு தாழ்வைக் கற்பிக்கக் கூடாது என்கிறார்.  அந்தந்தத் தொழில் அந்தந்த நிலையில் சிறப்புடையதாகு-மென்பது அவர் கருத்து.     தலையிலிருந்தும், தோளிலிருந்தும், தொடையிலிருந்தும், காலிலிருந்தும் மனிதர்கள் பிறக்கிறார்களென்று கூறி அந்தந்தப் பிறப்பைக் கொண்டு உயர்வு தாழ்வைக் கற்பித்தார் மனு.  இப்படிக் கூறுவது அறிவியலுக்கு முற்றிலும் மாறானது.  அவ்வுறுப்புகளிலிருந்து எவ்வுயிரும் பிறக்க-முடியாது, அதுவேறு கதை; மனு கூறும் பிறப்பு முறையை மறுக்கவே வள்ளுவர் பிறப்பொக்கும் என்றார்.

தொழில்களால் சிறப்பு வேறுபடும் என்பதை மறுக்கவே சிறப்பொவ்வா என்றார்.

வருணத்துக்கேற்ற தொழிலைக் கூறி, அந்தந்தத் தொழில்களுக்குப் பெருமை சிறுமையைக் கற்பித்த மனுவை மறுக்கவே வள்ளுவர் சிறப்பு ஒவ்வா என்றார். அதாவது, சிறப்பு அளிப்பது பொருந்தாது என்கிறார்.  பிறப்பு ஒத்திருப்பதைப் போன்று, எல்லாத் தொழில்களும் அந்தந்த நிலையில் சிறப்புடையன-வாகும் என்பது அவர் முடிவு.

வள்ளுவர் எவ்வாறு பிறப்பைக் கொண்டு உயர்ந்தவராகக் கருதுவதை மறுத்துள்ளாரோ, அவ்வாறே வடபுலத்தில் பிறப்பைக் கொண்டு பார்ப்பனரை உயர்ந்தவராகக் கருதப்படுவதைப் புத்தரும் மறுத்துள்ளார். அவ்வாறு புத்தர் மறுப்பதற்கு சமூகத் தேவை இருந்துள்ளது.  அதே தேவை தமிழகத்திலும் இருந்துள்ளது; அந்தத் தேவை ஏன் ஏற்பட்டது என்பதைப் புறநானூற்றுப் பாடலால் நன்கு உணரலாம்.  அதனால்தான் வள்ளுவர் ஒழுக்கங்கெட பிறப்பு குன்றும் _ 134 என்றும், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் – 133 என்றும் கடுமையாகக் கூறினார்.  இந்தக் கடுமை புத்தரின் தம்மபதத்திலும் காணப்படுகிறது.

ஒருவன் அந்தணனாவது சடைத்-தலையால் அன்று; தன் கோத்திரத்தால் அன்று; பிறப்பினாலும் அன்று; எவனிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ அவனே அந்தணன் – தம்மம் – 391

தாயைக் கொண்டோ குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் அந்தணன் என்று கூறுவதில்லை – தம்மம் – 394

இவ்வாறு புத்தர் கூறுவதைப் பின்பற்றியே வள்ளுவரும், பிறப்பால் அந்தணரென்று கூறுவதை மறுக்கும் முறையில், அந்தணர் என்போர் அறவோர் – 30 என்றார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவனடி சேரா தார் – 10

இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தாரென்கிறார் வள்ளுவர்; அப்படியெனில் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் யார்?  அதற்கு விடை குறளில் இல்லை.  ஆதலின் இறைவனடி சேராதார் என்பதற்கு எதிர்மறையாக, சேர்ந்தார் என்ற சொல்லை வருவித்து, இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்று பொருள் கொள்கிறோம். அவ்வாறே சிறப்பொவ்வா என்பதற்கு, தருவது எனும் சொல்லை வருவித்து சிறப்புத் தருவது பொருந்தா வென்று பொருள் கொள்வதே ஏற்றது.  வள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருண தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

எனுங் குறளுக்கு, மக்கள் அனைவருக்கும் பிறப்பு ஒரு தன்மைத்தே ஆகும். எல்லாத் தொழில்களும் மதிப்புடையனவே யாகும்.  ஆதலின், தொழில் வேறுபாட்டைக் கொண்டு சிறப்பளிப்பது பொருந்தாதென்று பொருள் கொள்வதே ஏற்றது; சிறந்தது. பிறப்பு எல்லோருக்கும் ஒத்திருப்பதைப் போன்று, மக்களைத் தொழில்களால் பெருமை – சிறுமைக்கு உட்படுத்தாமல், அனைத்துத் தொழில்களையும் ஒத்ததாகக் கருத வேண்டு-மென்பது அவர் நோக்கு.  அதாவது, பிறப்பிலும் ஏற்றத்தாழ்வு இல்லை; அதே போன்று தொழில்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்கிறார்.  வள்ளுவரின் நெஞ்சை உள்ளவாறு உணர்ந்ததால்தான் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை மிகச் சரியாக,

வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொரு நீதி என்றார்.

மனுநீதியைச் சுந்தரம்பிள்ளை சரியாக அடையாளம் காட்டியுள்ளார். அவர் கூற்றாலும் வள்ளுவம் மனுவுக்கு நேர் எதிரானது என்பதை உணரலாம். தமிழறிஞர்களும், குறளாய்வாளர்களும் இது குறித்து மேலும் சிந்திக்க வேண்டும்.  மெய்ப்பொருள் காண்பது ஆய்வாளரின் கடனன்றோ!

– புலவர் பா.வீரமனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *