ஈடி அலுவலர்கள் மோடியின் ஈட்டிக்காரர்களா ?

2024 கட்டுரைகள் மார்ச் 1-15, 2024

சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே

பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. கட்சிகளை உடைக்கவும், பிற கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்துப்போடவுமே பெரும்பாலும் புலனாய்வு மற்றும் நிதி நிர்வாகப் பயன்படுத்தி வந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தற்போது புதிய பயன்பாடும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க. திட்டம் மூலம் அதிகபட்ச நிதியைப் பெற்றது பாரதிய ஜனதா கட்சியாகும். அந்தக் கட்சிக்கு மட்டும் கடந்த 2017-18 முதல் 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.6570 கோடி நிதி, தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்திருந்தது. அந்தக் கால கட்டத்தில் விற்பனையான தேர்தல் பத்திரங்களில் 60 சதவிகிதம் பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை (ஈடி), வருமான வரித்துறை (அய்டி), சி.பி.அய்யை ஏவி அந்த நிறுவனங்களிடம் இருந்து பா.ஜ.க.வுக்கு தேர்தல் நிதி பெறப்பட்டதாக பிரபல ஆங்கில செய்தி இணையதளங்கள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2018–19 முதல் 2022–23 நிதியாண்டு வரை பா.ஜ.க.வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் பட்டியலை பரிசீலித்ததில் அதில் 30 நிறுவனங்கள் மீது அதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஈ.டி, அய்.டி, சிபிஅய் ரெய்டு நடத்தியுள்ளது.

இந்த 30 நிறுவனங்களும் மொத்தம் ரூ.335 கோடியை பா.ஜ.க.வுக்கு தேர்தல் நிதியாக தந்துள்ளன.
இதில் 23 நிறுவனங்கள் ரெய்டு நடத்தப்படும் வரை பா.ஜ.க.வுக்கு ஒரு பைசா கூட தேர்தல் நிதி தந்தது இல்லை.
ரெய்டு நடத்தப்பட்டதும் அந்த 23 நிறுவனங்களும் பா.ஜ.க.வுக்கு நிதி தர ஆரம்பித்துள்ளன. மொத்தம் ரு.187.58 கோடி நிதியை அந்த நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு வாரி வழங்கி உள்ளன.
4 கம்பெனிகள் ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதத்துக்குள் பா.ஜ.க.வுக்கு நிதி தந்துள்ளன.
பா.ஜ.க.வுக்கு ஏற்கனவே குறைவாக நிதி தந்த 6 நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களிலேயே அந்த நிறுவனங்கள் பல மடங்கு அதிக நிதியை பா.ஜ.க.வுக்கு கொடுத்துள்ளன.

தொடர்ந்து பல ஆண்டுகளாக பா.ஜ.க.வுக்கு நிதி தந்த நிறுவனங்கள் திடீரென நிதி தருவதை நிறுத்திவிட்டால் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
இப்படி 6 நிறுவனங்களை ஈடி, அய்டி, சிபிஅய் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நிதி தந்ததும் தெரியவந்துள்ளது.
நன்கொடை தந்த 3 நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து லைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் நிதி தந்த நிறுவனங்கள் பற்றி மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஈடி, அய்.டி, சி.பி.அய்யைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்தி மிரட்டி பாஜ.க.வுக்கு தேர்தல் நிதி குவித்த விவகாரம் அம்பலமானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திரங்களை வழங்கியோர் விவரங்கள் வெளியாகும்போது இன்னும் பல ஆதாரங்கள் வெளிவரும். n