மகர ஜோதியா? மகரவிளக்கா? இரண்டும் ஒன்றா? தனித்தனியா? – வெளிவராத தகவல்கள்

பிப்ரவரி 01-15

115 பேரைக் காவு கொடுத்துப் பல செய்திகள் வெளிவந்துள்ளன. கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை என்பது போலவே, இதுவும்!

சபரிமலை அய்யப்பன் கோயிலைப் பராமரித்து, பரிபாலனம் செய்துவருவது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு எனும் அமைப்பு. இதன் தலைவராக நியமிக்கப்-பட்டிருப்பவர் எம். ராஜகோபாலன் நாயர்.  இவரைக் கேட்டால், பொன்னம்பலமேடு எனும் மலை உச்சியில் ஜனவரி 14 இல் தெரியும் ஒளி, மனிதனால் உண்டாக்கப்படுவதுதான் எனத் தெளிவாகக் கூறுகிறார். அந்தப் பகுதியில் காட்டில் வாழ்ந்த மக்கள் (ஆதிவாசிகள்) மகரவிளக்கை ஏற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் காட்டிலிருந்து வெளியேற்றப்பட்டபிறகும் மகரவிளக்கு கொளுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறியவர், யார் கொளுத்துகிறார்கள் என்பதைக் கூறவில்லை. மறைக்கிறார்.  காரணம் தெரிந்ததுதான்.  சொன்னால், கடவுள் கதை கந்தலாகிவிடும் என்பதால் இவர் கடவுளைக் காப்பாற்ற முயல்கிறார்.

கடவுள் கந்தலாகிவிடும்

தேவஸ்வம் போர்டு சார்பாக, கேரள உயர் நீதிமன்றத்திற்கு உண்மைகளைத் தெரிவிப்போம் என்று கூறித் தப்பித்துக் கொள்கிறார்.  அவர் நிலை பரிதாபம்!  கடவுளைக் காப்பாற்ற வேண்டும், பக்தகோடிகளைக் காப்பாற்ற வேண்டும், தேவஸ்வம் போர்டு தலைவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாகக் கம்யூனிஸ்டு அரசைக் காப்பாற்ற வேண்டும். கார்ல் மார்க்சையே பீட் அடிக்கும் மார்க்சிஸ்டு முதலமைச்சர் அச்சுதானந்தனைக் காப்-பாற்ற வேண்டும். லட்சக்கணக்-கான இந்து மதத்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்; உண்மையிலேயே பரிதாபம்தான்!

பந்தளம் ராஜா பிட்டு வைக்கிறார்

அய்யப்பன் கோயில் நகைகளைக் காப்பாற்றி வரும் பந்தளம் மகராஜா குடும்பத்தைச் சேர்ந்த ராமவர்ம ராஜா தெளிவாகக் கூறுகிறார் – மகரவிளக்கு மனிதனால் ஏற்றப்படுவதுதான் என்று.  இவரது கடிதப்படி, மகரஜோதி என்பதும் மகரவிளக்கு என்பதும் தனித்தனி என்றே ஏற்படுகிறது.  மகரஜோதி என்பது, ஜனவரி 14 இல் அய்யப்பனுக்கு எல்லா ஆபரணங்-களையும் அணிவித்து தீபாராதனை செய்த பிறகு, அதே நேரத்தில், கோயிலின் கிழக்குத் திசையில் ஓர் ஒளி தென்படும் என்றும், அதனைத் தேவர்களின் தீபாராதனை எனப் பக்தர்கள் நம்புமாறு கதை கட்டிவிடப்-பட்டுள்ளது என்றும், அதுவே மகரஜோதி என்கிறார்கள் என்றும் கூறுகிறார்.  விளக்கு என்றால் மலையாளக் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களைக் குறிக்கும் சொல் என்பதால், மகரம் விழாவை மகரவிளக்கு என்கிறார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறார்.  இந்த மகர ஜோதி என்பதே கடந்த 40 ஆண்டுக் காலமாகத்தான் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது என்கிறார்.  அய்யப்பன் கோயிலின் 1000 ஆண்டுக்கால வரலாற்றில் 40 ஆண்டுக்கால கதைதான் மகரஜோதி / மகர விளக்கு.

பக்திப் போட்டி

ஏன் இப்படி ஒரு பித்தலாட்டத்திற்கு இவ்வளவு விளம்பரம்?  மகத்துவம்?  அதையும் சொல்கிறார், ராமவர்மராஜா!  பந்தளம் ராஜகுடும்பத்தின் பாதுகாப்பில் இருக்கும் திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அய்யப்பன் மரப்பொம்மைக்கு அணிவித்து தீபாராதனை செய்யும் விழாதான் ஜனவரி 14 இல் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டால் நடத்தப்படுகிறது. இந்த தீபாராதனையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காக மகரஜோதி எனும் கற்பனைக் கதை கட்டிவிடப்பட்டுள்ளது என்கிறார் இவர். இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள தொழில் போட்டி என்றே நாம் கருதலாம்!

அய்யப்பன்கோயில் தலைமைப் பூசாரி (தந்திரி) கண்டரேரு மகேஸ்வரு புதுக்கரடியை விடுகிறார். மகரவிளக்கு நாளின்போது, சபரிமலைக் கோயிலுக்குக் கிழக்கு வானத்தில் பிரகாசமாகத் தெரியும் மகர நட்சத்திரம்தான் மகரஜோதி என்பது. பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படும் விளக்குக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது என்று ஒரே போடாகப் போடுகிறார்.

அய்யப்ப சேவா சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவரான டி.விஜயகுமார் என்பவர், பொன்னம்பலமேடில் ஏற்றப்படும் விளக்கு மனிதனால் செய்யப்படுகிறது என்றாலும்-கூட, பக்தர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது என்று கூறித் தப்பித்துக் கொள்கிறார். ராமன் அயோத்தியில் பிறந்த இடம் மசூதியாக மாறிவிட்டது என்பதுகூட நம்பிக்கைதான். ராமன் பாலம் கட்டினான் என்பதும்கூட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைகளை ஏற்க மறுக்கும் புரட்சி வீரர்களான கம்யூனிஸ்டுகள், புல்மேடு சாவுக்கு மட்டும் நம்பிக்கையைக் காரணம் காட்டுகிறார்கள்.

இது பெரிய குண்டு

இந்து அய்க்கிய வேதியின் பொதுச் செயலாளராம் கம்மணம் ராஜசேகரன் என்பவர் பெரிய குண்டையே தூக்கிப் போடுகிறார் – சபரிமலைக் கோயில் ஏற்கெனவே இருந்த இடம்தான் பொன்னம்பல மேடு. அந்த இடத்தில் மேடை ஒன்றைத் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு கட்டியுள்ளது. இதற்கு அனுமதி தந்தது கேரள உயர்நீதிமன்றம்.  இதற்கு அடிப்படையாக அமைந்தது தேவப்பிரஸ்னம் எனப்படும் குறிபார்த்தல் சடங்கு.  இச்சடங்கில் தெரியவந்தபடி எல்லாமே செய்யப்பட்டன என்கிறார் இந்து ஒற்றுமைச் சங்கத்துப் பொதுச் செயலாளர். முன்பிருந்த அய்யப்பன் பொம்மை 60 ஆண்டுகளுக்கு முன்பு தீயில் எரிந்து கருகிச் சாம்பல் ஆகிவிட்டது.  புதிய மரப்பொம்மை செய்து, ரயிலில் ஏற்றி ஊர் ஊராகக் கொண்டு போய் அறிமுகம் செய்து பின்னர் கோயிலில் பிரதிஷ்டை செய்த கைங்கர்யம் செய்தவர் பி.டி. ராஜன் பார் அட்லா என்பவர். அந்தச் சமயத்தில் தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டதோ?  யாரேனும் விளக்க வேண்டும்!

பொம்மை புதுசு – கோயிலும் புதுசு

நாயர் சர்வீஸ் சொசைட்டியின் செயலாளர் ஜி. சுகுமாரன் நாயர் ஒரு விளக்கம் கூறுகிறார்.  மகரவிளக்குக் கொளுத்தப்படும் பொன்னம்பல மேடுதான் தென் சபரிமலைக் கோயிலின் (பழைய) மூலஸ்தானம். பழங்காலம் முதற்-கொண்டே அந்தப் பகுதி பழங்குடியினரின் மதச் சடங்குதான் மகரவிளக்கு ஏற்றப்படுவது.  அதனைச் சர்ச்சைக்குரியதாக ஆக்குவது நல்லதல்ல எனக் கூறுகிறார்.  இவர் கருத்துப்படி தற்போதைய அய்யப்பன் பொம்மை மட்டுமல்ல, கோயிலும் புதிதாகக் கட்டப்பட்டதுதான்.  1000 ஆண்டுப் பழைமையோ, புடலங்காயோ எதுவும் கிடையாது.

நோய் முதல் நாடாமல்….

நாராயணகுரு ஏற்படுத்திய எஸ்என்டிபி யோகம் எனும் அமைப்பின் பொதுச் செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன் என்பார், முக்கியமான விசயத்தைத் திசை திருப்ப சிலர் செய்யும் பிரச்சாரம்தான் மகரஜோதியை யார் ஏற்றுகிறார்கள் என்பது.  115 பேர் சாவுக்குக் காரணமான கேரள அரசையும், தேவஸ்வம் போர்டையும் காப்பாற்றுவதற்காகத் திசை திருப்புகிறார்கள் என்று திருவாய் மலர்ந்திருக்-கிறார். நோயின் விளைவைப் பற்றிப் பேசும் இவர், நோய் மூலம் நாட மறுக்கிறார்.  எல்லா-வற்றிலும் அரசியல்தானா?  இது மத, கடவுள், மூடநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விளைந்த கொடூரக் கொலை அல்லவா? மகரவிளக்குக் கொளுத்தப்படும் சிமென்ட் மேடை 1990 இல் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டால் கேரள உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று கட்டப்பட்டுள்ளது.

இங்கே இருந்துதான் மகரவிளக்கு ஏற்றப்படும் பித்தலாட்டம் நடைபெறுகிறது.  2006 இல் எடுக்கப்பட்ட இந்த இடத்தின் ஒளிப்படம், தூரத்தில் தெரியும் சபரிமலைக் கோயிலையும் உள்ளடக்கி எடுக்கப்பட்டு 22.1.2011 தி ஹிந்து இதழின் 9 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  மகர விளக்கைக் கொளுத்தும் மர்ம நபர்கள் யார்?

இவர்கள்தான் பித்தலாட்டக்காரர்கள்

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டே இந்தப் பித்தலாட்டத்தைச் செய்கிறது என்கிறார் போர்டின் மேனாள் ஆணையாளர் நளினாட்சன் நாயர் என்பவர்.

வருமான வரித்துறையில் கூடுதல் ஆணை-யாளராகப் பணிபுரிந்த இவரை, தேவஸ்வம் போர்டு ஆணையாளர் பதவியில் நியமித்தது கேரள உயர் நீதிமன்றம்.  2008 ஆம் ஆண்டில் பதவியில் அமர்த்தப்பட்ட இவர், 2010 நவம்பர் 6 ஆம் நாள் அப்பதவியில் இருந்தார்.  ஜனவரி 14 இல் புல்மேடு பகுதியில் 115 பேர்களின் செத்த உடல்கள் கிழிந்து கிடந்ததும், காயமடைந்தவர்களின் கதறல்களும் அழுகையும் அவர்கள் சிந்திய ரத்தமும் அவர்களின் உடல்களிலிருந்து பிய்ந்து விழுந்த உடல் உறுப்புகளும் என் மனதில் பெரும் ரணத்தை ஏற்படுத்தி, இரவு நேரங்களில்கூட உறங்க இயலாத மனநிலையை ஏற்படுத்திவிட்டதால், என் மனதில் அமுக்-கிவைத்-திருந்த விசயங்களை வெளிக்காட்ட முடிவு செய்து அவற்றைக் கடிதமாக எழுதி நீதிபதி (ஓய்வு) பாஸ்கரனுக்கு அனுப்பிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.  நீதியரசர் பாஸ்கரன் திருவாங்கூர் கொச்சி தேவஸ்வம் போர்டின் ஆம்புட்ஸ்மேன் ஆக இருப்பவர்.  தேவஸ்வம் போர்டின் சார்பில் நிகழ்ச்சிகளையும் கருத்துகளையும் கேரள உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை தரவேண்டிய பொறுப்பு இவருக்கு உண்டு

மின்வாரியம் முதல்…

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுதான் பொன்னம்பலமேடில் மகர விளக்கை ஏற்றும் பித்தலாட்டத்தைச் செய்து வருகிறது என்று தேங்காய் உடைத்ததுபோல உண்மைகளைத் தெரிவித்திருக்கிறார். நான் பதவிப் பொறுப்-பேற்று 6 மாதத்திற்குப் பிறகு தேவஸ்வம் அதிகாரிகளுடன் பொன்னம்பல மேட்டிற்குச் சென்று மகரவிளக்குக் கொளுத்தப்படும் இடத்தைப் பார்வையிட்டேன். மகரவிளக்கு ஏற்றப்படுவது கடந்த 45 ஆண்டுகளாக மட்டுமே இருந்துவரும் பழக்கம்தான்.  பொன்னம்பலமேடு பகுதியில் வாழ்ந்து வந்த மலயராயப் பழங்குடியைச் சேர்ந்த சில குடும்பத்தவர்-களால் மகரவிளக்கு கொளுத்தப்பட்டு வந்தது. சபரிகிரி நீர்மின் திட்டம் தொடங்கப்-பட்டபிறகு, இப்பழங்குடி மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்-பட்டு-விட்டனர். அதன்பிறகு இந்தக் காரியத்தை, கேரள மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து செய்து வந்தனர்.  நீர்மின் திட்டப்பணிகள் முடிவுற்ற நிலையில் கேரள மின்வாரிய அதிகாரிகளும் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டனர்.  அதன்பின் மகரவிளக்குக் கொளுத்துவது கேரள அரசின் தேவஸ்வம் போர்டு மற்றும் காவல் துறை அதிகாரிகள் சேர்ந்து இதனைச் செய்துவந்தனர்.

பம்பா பொறியாளர்வரை…

மகரஜோதியைக் கொளுத்தும் பணி தேவஸ்வம் போர்டைச் சேர்ந்த பம்பா செயற்பொறியாளரின் பொறுப்பாக்கப்பட்டது.  ஆனால், இதற்கான செலவுகளை தேவஸ்வம் நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி கிடையாது.  (அப்படியானால் திருடித்தான் செலவு செய்வார், செயற்பொறிளாளர். சிவ சொத்தில் கைவைக்க அரசே தூண்டி-விட்டுள்ளது).

எதற்காக ஜோதி?

இவ்வளவு சிரமங்களுக்கு இடையே, இந்தப் பித்தலாட்டத்தைச் செய்ய வேண்டுமா?  எனக் கேட்டால் ஆம் என்கிறார்கள் அதிகாரிகள்.  மகரஜோதி விழா முடிந்துவிட்டது என்பதற்-கான அடையாளமே இந்த மகர விளக்கின் ஒளி தெரிவது என்பது! இந்த ஒளி தெரிந்துவிட்டால், பக்தர்கள் ஒளியைப் பார்த்து விட்டால் கலைந்து போக ஆரம்பிப்பார்கள். (48 நாள் விரதம் முடிந்து விட்டதால் காய்ந்த மாடு கம்புக்-கொல்லையில் நுழைந்தது போல அவரவர்க்குத் தேவையான மது, மாது, மாமிசம் தேடிப் பறப்பார்கள்)  இல்லாவிட்டால் நின்று கொண்டே இருப்பார்கள்.  (இந்த பேஜாரைத் தவிர்ப்பதற்காகத்தான் விளக்கு ஏற்றுகிறார்கள்)
இவ்வளவையும் சொன்ன நளினாட்சன் நாயர் பகுத்தறிவுவாதி அல்லர்.  பக்திமான். சபரிமலை யாத்திரைக்கு வருபவர்கள் மகரவிளக்குப் பித்தலாட்டத்தைப் பார்க்க வருவதில்லை, வேறு வித பக்தி அடிப்படையில் கூடுகிறார்கள்.  அவர்கள் இந்த ஃபிராடு வேலையின் காரணமாக வருவது கிடையாது. ஆகவே, அவர்களின் பாதுகாப்பு பற்றி அரசு கவலைப்பட்டு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.  கேரள அரசின் காவல்துறை, வனத்துறை, தேவஸ்வம் போர்டு ஆகியவை தங்கள் கடமையையும் பொறுப்பையும் தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

கேரள அரசு என்ன செய்யப் போகிறது?

கேரள அரசு யோக்கியதை

மறைந்த கேரள முதல்வர் கருணாகரன் பதவியிலிருந்தபோது மகரவிளக்குப் பித்தலாட்டப்  பிரச்சினை எழுந்தது, இதில் அரசு தலையிடாது என்று கூறித் தப்பித்துக் கொண்டார் கருணாகர மேனன். இவர் குருவாயூர் கிருஷ்ணபக்தர், காங்கிரசுக்காரர்.  அந்தப் பதிலைத்தான் சொல்வார் என்பது நாம் எதிர்பார்த்ததே!

ஆனால், இப்போதைய முதல் அமைச்சர் யார்? உலகத்திலே பாட்டாளிவர்க்கப் புரட்சியை ஏற்பாடு செய்து, மார்க்சின் கொள்கைளைக் கொண்டு உலகுக்குச் சிவப்புச் சாயம் பூசுவதற்காக முதல்வர் பதவி நாற்காலியில் உட்கார்ந்து சுகம் கொண்டு அனுபவிப்பவர்.  அவர் என்ன செய்வார்?

முதலில் அவர் என்ன சொன்னார்? என்பதைப் பார்க்கலாம்! மகரவிளக்கு மனிதன் ஏற்றுகிறானா? கடவுள் ஏற்றுகிறதா?  தானாகத் தெரிகிறதா? இதெல்லாம் தேவையற்ற விசயங்கள். லட்சக்கணக்கானவர்களின் நம்பிக்கை தொடர்பானது.  இதில் எல்லாம் நான் மூக்கை நுழைக்க மாட்டேன்! என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

மூக்கை நுழைக்கமாட்டேன் என்பது மூடத்தனத்தை வளர்க்கப் பயன்படுகிறதே!  இவர் ஆளும் அரசின் அங்கங்களான, அரசுத் துறைகளும் சேர்ந்தும் தனித்தனியாகவும் மகரவிளக்குப் பித்தலாட்டத்தைச் செய்து லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தைக் காட்டிக் காசு பார்ப்பது என்ன மார்க்சியம்?

இவையும் நம்பிக்கைதான்

பாபர் மசூதியின் தாழ்வாரத்தின் ஒரு பகுதியில் ராமனின் தாய் இடுப்புவலி வந்து, பனிக்குடம் உடைத்து அவனைப் பெற்றெடுத்-தாள் என்கிற நம்பிக்கையை மட்டும் கண்டிக்கலாமோ?  அதே வெராந்தாவில் சீதை சிறுநீர் கழித்து விளையாடியதாக நாங்கள் நம்புகிறோம் என்று ஒரு பிரிவினரின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு எழுதப்-பட்டதைக் கண்டித்து அந்தரங்க சுத்தியோடு என்றால் – இந்த நம்பிக்கையை ஏன் கண்டிப்-பதில்லை? அந்த நம்பிக்கைகள் வேறு மாநிலத்தில்? மகரவிளக்கு நம்பிக்கை தாம் ஆளும் மாநிலத்தில் என்பதால் கண்டிக்க மாட்டேன் என்றால்_ இது என்ன பிராண்டு மார்க்சியம்? என்ன காரணம்? இதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்! ஒன்று, இந்த மகரவிளக்குப் பித்தலாட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று மார்க்சும் எங்கல்சும் எதுவுமே எழுதிக்காட்ட-வில்லை என்பது! இதயமற்ற உலகின் இதயமாக, ஏழைகளின் பெருமூச்சாக மதம் இருக்கிறது என்று மார்க்சே எழுதி-விட்டபிறகு, அந்த மத விசயங்களின் மடமைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதுதான் மார்க்சியம் என்று இவர்கள் கூறலாம்.

மற்றொன்று, மகரவிளக்கின் பித்தலாட்டத்-தினால் காசு பார்க்கும் கயமைத்தனம். ஒரு கணக்கின்படி, சபரிமலைக் கோயில், விழாக்கள் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 600 மில்லியன் டாலர் என்கிறார்கள். ஒரு மில்லியன் என்றால் 10 லட்சம்.  ஒரு டாலர் என்றால் 46 இந்திய ரூபாய். எவ்வளவு என்று கணக்கிட்டால் மயக்கம் வரும். இந்த வருமானத்தை இழக்க இவர்களுக்கு எப்படி மனம் வரும்?  இதற்காக மக்கள் அறிவை இழக்க வைப்பது எந்த ஊர் நியாயம்?

ஆண்டுக்கு 4 கோடிப்பேர் வருகிறார்களாம்.  இதில் ஆந்திராவிலிருந்து 31 விழுக்காடுபேர், தமிழ்நாட்டிலிருந்து 27 விழுக்காடுபேர்களும் கருநாடகாவிலிருந்து 15 விழுக்காடு பேர்களும் பக்தர்கள் வருகின்றனர்.  இவர்களின் அறிவை அழிக்கின்ற – அல்லது அடகு வைக்கின்ற காரியத்தில் அரசே ஈடுபடலாமா?

இதுதான் மார்க்சிஸ்டுகள்

போப்புக்குக் கீதையைக் கொடுத்துப் புகழ்பெற்ற நாயனார்கூட, சேனல் எட-மருகுவைப் பொன்னம்பலமேடுக்குப் போக-வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.  ஏன்?  புளுகு வெளிப்படுத்தப்படக்கூடாது எனும் புனித நோக்கம் காரணமோ? வேதங்களின் உயர்வு, ஆரியர்களின் மேன்மை பற்றியெல்லாம் எழுதிய சங்கரன் நம்பூதிரியோடு, ஈகே நாயனார் என்று வாழையடிவாழையென வந்த இத்திருக்கூட்டத்தில் அச்சுதானந்தமும் அங்கம் வகிக்கிறார் என்பதால், நாம் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடையத் தேவையில்லை.

ஆனால், இவர்களின் அங்கிகளெல்லாம் உருவப்பட்டு இவர்கள் அம்மணமாக்கப்பட்டு நிற்கும்போது உயர் நீதிமன்றத்தில் என்ன பதில் கூறுவார்கள்? நாங்கள் ஜோசியர்களையும் கேட்கமாட்டோம், விஞ்ஞானிகளையும் கேட்கமாட்டோம் என்கிற நம்பகப் பதிலையே அங்கும் கூறுவார்களா?

புதிய வழக்கு

இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவரும், இந்திய அரசின் தேசிய அறிவியல் மய்யத்தின் பொறுப்பாளருமான சேனல் எடமருகு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்: நாடெங்கும் இருந்துவரும் பக்தர்களும் கடவுளை நம்புபவர்களும் மகரஜோதியின் பெயரால் மோசடிக்கு ஆளாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறுகோரி வழக்குப் போட்டுள்ளார்.  இதே மகரஜோதி நாளன்று 1999 இல் 53 பேர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த ஆண்டு 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துக்-காட்டி கேரள, தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடக மாநில அரசுகளையும் இந்திய அரசையும் பிரதிவாதிகளாக்கி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.  நான்கு மாநில முதல்வர்களும் என்ன செய்வார்கள்?  இந்திய அரசு என்ன செய்யும்?

1947க்குப் பிறகுதான்

இந்திய சுதந்தரத்தின் விளைவுதான் மகரஜோதிப் பித்தலாட்டம்.  பாபர் மசூதியை ராமன் பிறந்த இடம் எனச் சொந்தம் கொண்டாடுவதும் 1948க்குப் பிறகு நடந்தவை-தான்.  என்றால், நம்மை நாமே ஆள்வது என்ற பெயரால் இந்துக்கள் நம்மை ஆள்வது என்று அர்த்தப்படுத்துகிற மாதிரி நடைமுறைகள் இருக்கலாமா?  கடவுளின் சொந்த நாடு என்று தற்பெருமை கொள்ளும் மாநிலம் பைத்தியக்காரர்களின் மடம் என்று விவேகானந்தர் கூறியது போல் அப்படியே இருக்கலாமா?  முற்போக்கு என்று பீற்றிக் கொள்பவர்கள் இவ்வளவு பிற்போக்காக இருக்கலாமா?  இடதுசாரிகள் என்று கூறிக் கொள்பவர்கள் ஆளும் மாநிலத்தில் இப்படிப்-பட்ட அரசப் பித்தலாட்டங்கள் நடைபெறலாமா?

கடவுள் உண்டு என்பதும், இல்லை என்பதும் கதைக்குதவாத வெறும் பேச்சு என்று சினிமாவுக்குப் பாட்டெழுதியவரெல்லாம் பாட்டுக் கோட்டை எனப்படும்போது, நமக்கு எதிர்காலம் பற்றிய அச்சம் ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *