சிறுகதை : அணில் குஞ்சு

உங்களுக்குத் தெரியுமா? முற்றம் ஜுன் 01-15

– டாக்டர் கலைஞர்

கல் ஒன்று வீசப்பட்டவுடன் புறாக் கூட்டம் சிதறிப் பறப்பது போல புனித மேரிப் பள்ளியின் தண்டவாள மணி அடிக்கப்பட்டவுடன், இளம் பிள்ளைகள் தயாராகக் கட்டி வைத்திருந்த புத்தக மூட்டைகளைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அவர்களைக் கேட்காமலே அவர்களின் கால்கள், அவர்களின் வீடுகளை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருந்தன.

புனித மேரிப் பள்ளியிலிருந்து சிறிது தொலைவில் கிளை கிளையாகப் பிரியும் தெருக்களில் அந்தப் பிள்ளைகளும் பிரிந்து சென்றனர். கூட்டமாகக் கிளம்பிய அந்தச் சிட்டுக்குருவிகள் சிறிது நேரத்தில் மூன்று நான்கு பேராகவும் பின்னும் கொஞ்ச நேரம் கழித்து ஒருவர் இருவராகவும் தங்களின் வீடு நோக்கிச் செல்லும் பாதைகளில் நடக்கத் தலைப்பட்டனர்.

அந்தப் பிள்ளைகளில் ஒருவன்தான் பரூக் _ பத்து வயதிருக்கும். கட்டம் போட்ட கால்சட்டை _ பச்சை நிறத்தில் மேல் சட்டை _ உச்சியை மட்டும் மூடிக்கொண்டு முழுத்தலையையும் மறைக்காத ஒரு வெள்ளைக் குல்லாய், பூ வேலைப்பாடுகளுடன்!

மணி அடித்தவுடன் உற்சாகம் பொங்க ஓடிவந்து, பின்னர் நடக்கத் தொடங்கி, அதற்குப் பிறகு அவன் மேகத்தைப் போல் தெருவில் நகர்ந்து கொண்டிருந்தான். கொஞ்ச நேரத்தில் அந்த நடையும்கூட தளர்ந்து, எதையோ கூர்மையாகக் காது கொடுத்துக் கவனித்தான்.

பக்கத்தில் யாரோ கூட்டத்தில் பேசுகிற ஒலிபெருக்கி சப்தம். பரூக் நின்றுவிட்டான். பேச்சு தெளிவாகக் காதில் விழுவதற்காக அந்தத் தெருவின் ஓரம் ஒதுங்கினான்.

நானூறு ஆண்டு கால வரலாற்றுக்குச் சொந்தமான பாபர் மசூதியை இடித்தது பயங்கரமான மதவெறிக் கூத்தல்லவா? இத்தகைய மதவெறிக்கு நாம் துளியும் இடம் தரலாமா? யோசித்துப் பாருங்கள். கரசேவை என்ற பெயரால் மசூதியை இடித்தது எவ்வளவு வன்முறைக்கு இடம் கொடுத்து நாட்டையே ரத்தக்களரி ஆக்கிவிட்டிருக்கிறது. எனவே, மதப் பூசலுக்கு நமது தமிழ் மண்ணில் அனுமதி கிடையாது என்பதில் அனைவரும் கைகோர்த்து நின்று அணிவகுப்போம்! அமைதி காப்போம்!

அந்த வேண்டுகோளை வரவேற்றுக் கையொலி எழுந்தது.

இதுவரை முழக்கமிட்ட நமது தம்பித்துரை அவர்களுக்கு இந்த சால்வை அணிவிக்கப்படுகிறது.

ஒலிபெருக்கியில் நன்றி கூறி சால்வை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பரூக், பாட்டைக் கேட்டவாறு மீண்டும் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தான். அவன் மனத்தில் மட்டும் பாபர் மசூதி _ கரசேவை என்ற அந்தச் சொற்கள் அலைமோதிக் கொண்டிருந்தன. மேலும் இரண்டு தெருக்களைக் கடந்திருப்பான்; அப்போது அவன் கவனத்தை மற்றொரு ஒலிபெருக்கி திருப்பியதால் _ அதையும் கேட்கும் ஆர்வத்தில் நின்றுகொண்டான்.
அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதனால் பாபர் மசூதியும் இருக்கட்டும், பக்கத்தில் ராமர் கோயிலும் கட்டிக் கொள்ளலாம் என்று வாதிட்டவர்களின் பேச்சை உண்மையான ராமபக்தர்கள் ஏற்கவில்லை. எனவே அந்த மசூதியை இடித்து அகற்றியதில் எந்தவிதமான தவறும் இல்லை.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கி முழக்கம் நின்றுவிட்டது. ஏன் பேச்சு நின்றுவிட்டது என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் ஆவல் இல்லாமலே பரூக் அங்கிருந்து மெல்ல நடந்து கொண்டிருந்தான்.

பாபர் மசூதி _ கரசேவை _ மதவெறி _ ராமர் கோயில் _ அயோத்தி இந்த வார்த்தைகளைச் சமீபகாலமாக அவன் அடிக்கடி கேட்டிருக்கிறான் என்றாலும், அப்படிக் கேட்கும் போதும் அவற்றைப் பற்றி அவன் ஆழமாகச் சிந்தித்ததில்லை. இப்போது ஒலி பெருக்கிகளில் _ இரண்டு கூட்டங்களின் பேச்சுகளைக் கேட்டபோதும் அதைப் பற்றி முழு விபரமும் தெரிந்துகொள்ள அவனொன்றும் விரும்பவுமில்லை

இருந்த போதிலும் இப்போது அவன் மனத்தில் அலைமோதிய பாபர் மசூதி _ கரசேவை என்ற அந்த இரண்டு வார்த்தைகளுடன், ராமர் கோயில் _ அயோத்தி என்ற இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துகொண்டன.

மாலை நேரத்து மெல்லிய காற்று பரூக்கின் உடலைத் தழுவி உற்சாகமூட்டியபோதிலும், அந்த ஒலிபெருக்கிகளில் இரண்டு விதமான கருத்துகள் வெளிவந்ததை நினைத்துக் கொண்டே குழம்பிப்போன நிலையில் ஆகாயத்தைச் சற்று அண்ணாந்து பார்த்தவாறு தன் வீட்டுக்குச் செல்ல இன்னும் இரண்டே தெருக்கள் இருக்கும்போது இடையில் மரங்கள் நிறைந்த ஒரு தெருவில் ஏதோ ஒரு சினிமாப் படம் பார்த்த நினைவில் மெதுவாகக் கைகால்களை அசைத்து நடனமாடிக்கொண்டு போனான்.

என்னப்பா பரூக், தெருவுன்னு நினைச்சியா டிராமா மேடைன்னு நினைச்சியா? டூயட் டான்சா? என்னையும் வேணும்னா சேத்துக்கிட்டு ஆடுறியா?

காய்கறி விற்கிற கிழவி, வியாபாரம் முடிந்து வெறுங்கூடையுடன் எதிரே வந்தவள் இந்தக் கேலி நிரம்பிய கேள்வியைக் கேட்டவுடன், பரூக், படக் என்று பதில் சொன்னான்: நீ என்னைத் தூக்கிக்கிட்டு ஆடேன் பாட்டீ! முடியாதுன்னா வீட்டிலே பாட்டன் காத்துக்கிட்டிருப்பார், அங்கே போயி அவரோட டிஸ்கோ ஆடு பாட்டி!

காய்கறிப் பாட்டிக்குச் சிரிப்பும் கோபமும் வந்துவிட்டது. கணவனுடன் நடனமாடுவதைக் கனவில் கண்டு வெட்கமும் பிடுங்கித் தின்றது. பரூக்கின் கன்னத்தில் லேசாகத்தட்டி, டேய், இப்ராகிம் ராவுத்தர் மவனே! உனக்கு என்னா குறும்பு! என்று கூறிவிட்டு படிக்காத ராவுத்தருக்கு புள்ளையா பொறந்து எவ்வளவு துடிப்பா பேசுறே! என்று ஆச்சரியம் பொங்க அவனை முத்தமிட்டுவிட்டு அவள் போய்விட்டாள் என்றாலும் பரூக்கிற்கு அந்தப் பாட்டியின் மீதுள்ள அன்பும் பரிவும் அங்கேயே அவன் நெஞ்சில் நிலைகொண்டுவிட்டன. அந்தப் பாட்டி, பக்கத்தில் உள்ள காலனியில் வாழ்பவள் என்பதால் அந்தத் தெருவிலிருந்து குறுக்கே போகும் வரப்பு வழியாகப் போவதைப் பார்த்துக் கொண்டேயிருந்த பரூக்கின் அருகே, ஏதோ ஒன்று மரத்திலிருந்து பொத் என்று விழுந்த சப்தம் கேட்டது. திடுக்கிட்டான். திரும்பி மரத்தடியில் பார்வையைச் செலுத்தினான்.

மரக்கிளையிலிருந்து ஓர் அணில்குஞ்சு எப்படியோ தவறியோ, தடம் மாறியோ தரையில் விழுந்து, விழுந்த அதிர்ச்சியில் அசைவற்றுக் கிடந்தது. பரூக்கிற்கு அந்த அணில்குஞ்சின் மீது அனுதாபம் பெருக்கெடுத்தது. உடனே ஓடி அதைக் கையிலெடுத்து ஆசுவாசப்படுத்தினான். அணில்குஞ்சு, மெலிந்த குரலில் கீச்சு கீச்சு என்று முனகியது. இளம் விரல்களால் அதை அவன் இதமாகத் தடவிக் கொடுத்தான். அணில்குஞ்சு அவன் உள்ளங்கையில் புரண்டு, தனக்கு உயிர் இருப்பதை நிரூபித்துக்கொண்டது. மிக லாவகமாக அதைப் பிடித்துக்கொண்டு, ஒரு கையில் அணில்குஞ்சும், அதற்கு இன்னொரு கையின் அணைப்புமாக வீடு நோக்கி விரைந்தான்.

இந்த அணில்குஞ்சை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். அதற்குப் பழரசம் கொடுக்க வேண்டும் பழரசமென்ன, ஒரு கரண்டியோ இரண்டு கரண்டியோ போதுமானது. பள்ளிக்கூடம் போகும்போதும் _ இதைப் பையில் வைத்து பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி மனக்கோட்டை கட்டிக்கொண்டு நடந்த பரூக்கின் நினைவுக்கு அணிலைப் பற்றிப் பள்ளி ஆசிரியர் சொன்ன கதையும்கூட வரத் தவறவில்லை. அந்த இனிய ஞாபகத்துடன் கையின் கதகதப்பில் அணில்குஞ்சை வைத்தவாறு பரூக் வீட்டுக்குள் நுழைந்தான். அம்மா! இன்னம் வாப்பா வரலியா? என்று ஆசையுடன் கேட்ட மகனிடம் வாப்பா கசாப்புக்கடை பாக்கியெல்லாம் வசூலிச்சுக்கிட்டு சாயந்திரம் வந்திடுறேன்னு சொன்னாரு. இப்ப வந்திடுவாரு! என்று பதில் சொன்னாள் பரூக்கின் தாயார்.

அப்போது அவன் அப்பா கசாப்புக்கடை இப்ராகிம் ராவுத்தரும் தனது பெரிய மீசையைத் தடவிக்கொண்டு இடுப்பில் கட்டிய லுங்கிக்கு மேலே, பிடிப்பாகப் போட்டிருந்த பச்சை கேன்வாஸ் பெல்ட்டை மேலும் இழுத்துவிட்டுக்கொண்டு, என்னடா, புள்ளையாண்டான் வந்துட்டியா? இன்னைக்கு உங்க ஸ்கூல்ல என்ன விசேஷம்? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.

வாப்பா! இதோ பாருங்க வாப்பா, அணில் குஞ்சு! மரத்தடியிலே கிடந்துச்சு! இதை நான் வளர்க்கப் போறேன்.

பரூக்கின் தாயும் தந்தையும் இமைகொட்டாமல், அவன் கையிலிருந்த அணில்குஞ்சைப் பார்த்தனர். அவர்களும் அதன்மீது பரிவுடன் தடவிக் கொடுத்தனர்.

வாப்பா, இந்த அணில்குஞ்சு ஒன்னும் சாமான்யமில்லியாம். ராமாயணத்திலே ராமரும் அவரோட சேர்ந்து குரங்குகளும் இலங்கைக்குப் பாலம் கட்டி ராவணன்மீது படையெடுத்தப்ப, அணில்கூட அந்தப் பாலம்கட்ட ராமருக்கு உதவி செஞ்சுதாம். அதுக்காக ராமர் அணில் முதுகிலே மூனு விரலாலே தடவிக்கொடுத்துப் பாராட்டினாராம். அதான் இது முதுகில மூனு கோடுகளாம் _ எங்க டீச்சர் போன வாரம் கிளாசிலே சொன்னாரு!

பரூக் சொன்னதைக் கேட்டவுடன் இப்ராகிம் ராவுத்தருக்குக் கோபம் பொங்கியது. பெரிய மீசைகள் துடித்தன! ராமர் பெயர் _ அவர் தடவிக் கொடுத்த அணில் _ இலங்கைப் பாலம் _ அயோத்தி _ பாபர் மசூதி இடிப்பு இத்தனையும் இணைத்துப் பார்த்துவிட்டார் போலும்! பரூக் சொன்ன கதையை இதுவரை அவர் கேள்விப்பட்டதில்லை.

ஏய் பரூக்! அணில்குஞ்சு நம்ப வீட்ல ஒரு நிமிஷம்கூட இருக்கக்கூடாது! இது இங்கே இருந்தா, இது ராமபக்தன் அணிலோட வீடுன்னு இதையும் இடிக்க வருவாங்க! மரியாதையா இப்பவே கொண்டு போய் இதை எங்கு எடுத்தியோ அங்க கொண்டு போயி விட்டுவிட்டு வந்துடு! ம்… போ!

இது வாயில்லா ஜீவன், இது என்ன வாப்பா செய்யும்? பாவம், போனாப் போகுது, நான் கவனமாக வளர்க்கிறேன் வாப்பா!

டேய், என் பேச்சையா தட்டிப் பேசுறே? இந்த அணில் ராமருக்கு உதவி செஞ்சதுன்னு நீயே சொல்லிட்டு, இது மேல இருக்கிற மூனு கோடும் ராமர் போட்ட கோடுன்னு சொல்லிட்டு அதுக்கப்புறமும் இதை இங்க வளர்க்கிறதா?

முடியாது. இப்பவே கொண்டு போய் விட்டுவிட்டு வா! போ!

பரூக், கண்கலங்க நின்றான். அணில்குஞ்சைப் பரிதாபமாகப் பார்த்தான். பார்த்துக் கொண்டே தன் தாயாரையும் உருக்கமாகப் பார்த்தான். தாயார் இருவருக்கும் பொதுவாக ஒரு சமரச ஏற்பாடு செய்தாள்.

போனாப் போகுதுங்க, இனிமே இருட்டிலே கொண்டு போயி இதை எங்க விட முடியும். பரூக் நல்லபிள்ளை, நம்ப பேச்சை நிச்சயம் கேட்பான். பொழுது விடிஞ்சோன்ன கொண்டு போயி விட்டுட்டு வந்திருவான். ஏன்டா கண்ணு பரூக்? நான் சொல்றது சரிதானே, காலையில கொண்டு போயி விட்டுடணும்!

சரிம்மா!

இரவு அணில்குஞ்சை காற்றோட்டமான ஒரு பிரம்புக் கூடை போட்டுக் கவிழ்த்து விட்டு, அதனருகேயே. ஒரு பாயைப் போட்டுப் பாதுகாப்பாக பரூக் படுத்துக் கொண்டான். இரவு முழுவதும் அவன் தூங்கவே இல்லை. ஒரு சிறிய கரண்டியில் ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு, அதைக் கூடையின் இடுக்கு வழியாக உள்ளே நீட்டி, அதை அணில்குஞ்சு சுவைத்து அருந்துவதை அவன் ரசித்துப் பார்த்துக் களித்தான்.
தந்தையின் கட்டளைப்படி, அணில்குஞ்சை எடுத்துக் கொண்டு அதை எங்கே பத்திரமான இடத்தில் விடலாமென்று யோசித்துக் கொண்டே அதைக் கண்டெடுத்த பழைய மரத்தடியின் பக்கமே பரூக் வந்தான்.

என்னடா, காலங்காத்தாலே எங்கடா போறே? நோக்கு இன்னக்கு ஸ்கூல் இல்லியோ? படிக்காம எங்க வெட்டியிலே சுத்தறே? என்று கேட்டுக்கொண்டே எதிரே வந்தவர், ஆராவமுத அய்யங்கார் _ அந்த ஊரின் சனாதனப் புள்ளிகளில் ஒருவர். அவர் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பரூக் நின்றான்.
என்னடா கையிலே? என்ன வச்சிண்டு அழறே?

அணில்குஞ்சு! இதை வளர்க்கணும்னு எடுத்துக்கிட்டுப் போனேன்…

பரூக், பேச்சை முடிப்பதற்குள் ஆராவமுத அய்யங்கார் பதறிப் போய்,

என்ன, அணிலை வளர்க்கிறதாவது _ அதுவும் நீ வளர்க்கிறதாவது; அணில் ராமரோட கடாட்சம் பெற்ற ஜீவனாச்சே! அதை நீங்க தொடுறதே தப்பாச்சே! என்று சீறினார்.

அப்போது இப்ராகிம் ராவுத்தரும் அங்கே வந்துவிட்டார்.

என்ன பெரியவாள், ஏன் பையன்கிட்ட கோபிக்கிறீங்க? என்ன தப்பு செஞ்சான் என் மவன்?

இப்ராகிம்! உமக்கு விஷயம் தெரியாதோ? அணில் வளர்க்கிறானாம் இவன்? அது ராமரோட சிஷ்யப் பிராணி! அதை வளர்க்க உங்க மதத்திலே உள்ளவாளுக்கு என்ன உரிமை இருக்கு? மகா பாபமில்லையோ?

ஆராவமுதரின் இந்த எரிச்சல் வார்த்தைகளைக் கேட்டதும் இப்ராகிம் ராவுத்தருக்கும் சினம் தலைக்கேறிவிட்டது. உரிமைக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ஏன், நாங்க வளர்த்தா என்ன? அயோத்தியிலே எங்க மசூதிதான் இருக்கக் கூடாதுன்னு இடிச்சீங்க. அணில் கூடவா வளர்க்கக் கூடாது? நல்ல நியாயம் இது
என்னங்காணும் ராவுத்தரே, என்கிட்ட நியாயம் பேச வந்துட்டீர்? அணில் குஞ்சுக்கும்  அயோத்திக்கும் ஏன் முடிச்சுப் போடுறீர்?

நீங்கதான் அணில்குஞ்சுக்கும் ராமருக்கும் முடிச்சுப் போடுறீங்க?

நீதான் அயோத்தியைப் பத்திப் பேசி எங்க இந்துக்கள் மனசைப் புண்படுத்துறே?

மரியாதையா பேசணும். நீ நான்னு ஒருமையிலே பேசினா நானும் பேசுவேன்!

வார்த்தைகள் இருவரிடையே தடிக்கத் தடிக்க மரத்தடியில் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கில் கூடிவிட்டனர். பெரிய கலவரத்துக்கான கைகலப்பு ஏற்படப் போகிறது என்று கேள்விப்பட்ட பரூக்கின் தாயாரும் தலைதெறிக்க அங்கு ஓடிவந்து விட்டாள். தனது முக்காட்டை மேலும் இழுத்து மூடியவாறு, மரமொன்றின் பின்னால் மறைந்துகொண்டு,

ஏய் பரூக்! எல்லாம் உன்னால வந்த வினைதான்! அந்த அணில்குஞ்சைத் தூக்கிப் போட்டுவிட்டு வந்துடு! இல்லாவிட்டால் இந்த ஊர்ல பத்துக் கொலை விழுந்துடும்.

அங்கு ஆவேசமாக நின்றுகொண்டிருந்த இரு தரப்பினருமே குரல் வந்த திசையை நோக்கினர். பரூக்கும், அம்மா! என்று கதறியபடி மரத்தடிக்குச் சென்று அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் கொட்டக் கொட்ட, அந்த அணில் குஞ்சை அந்த மரங்களுக்கு இடையே தரையில் மெல்ல வைத்தான்.

திடீரென ஒரு பருந்து…. மரக்கிளையில் அமர்ந்திருந்தது. இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு  அந்த அணில்குஞ்சின் மீது பாய்ந்தது. அதே வேகத்தில் அந்த அற்ப ஜீவனுடன் ஆகாயத்தில் பறந்தது.

இருசாராரும் கலைந்து சென்றனர். அந்த ஊரின் அமைதியை அந்த அணில்குஞ்சு காத்தது, அதனால் முடிந்த தியாகத்தைச் செய்து!

எனினும் பரூக் மட்டும், பருந்து எடுத்துச் செல்லும் அணில்குஞ்சைப் பார்த்தவாறு கண்ணீர் சிந்தி நின்றான்.

 


 

 


 

ஜூன் 16-30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *