சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

பிப்ரவரி 16-28

எந்த மை உண்மை?

ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப் பட்டிருந்தார்.

எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?  சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.  வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.  சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள்.  சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.

ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.

நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும்.  அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை.

இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கடமையாகவும், உரிமையாகவும் கொள்ள வேண்டும் என்றார்.  இடமறிந்து பொருளறிந்து பேசுவதில் கலைவாணர் கில்லாடி என்பதற்கு இது ஒரு சொற்காட்சி. சாமிபோல் அசையாதிருந்தேன்.

கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் தொழிலாளர்களின் சார்பாக சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்த என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா நடந்தது.  திருப்பூர் நகரசபைத் தலைவர் தோழர் வி.கே. பழனிசாமி தலைமை தாங்கினார்.  கோவை காங்கிரஸ் தியாகியாகிய சி.ஏ. அய்யாமுத்து வரவேற்று மிகவும் புகழ்ந்து பேசினார்.  மற்றப் பேச்சாளர்களும் வெகுவாகப் புகழ்ந்தார்கள்.  ஸ்டுடியோ தொழிலாளர்கள் சார்பில் ஒரு வெள்ளிப் பேழையில் வைத்த வரவேற்புப் பத்திரத்தை வாசித்தார்கள்.  என்.எஸ்.கே. நன்றி தெரிவிக்க எழுந்தார்.  புன்னகை புரிந்தவாறே பேசத் தொடங்கினார்.

எல்லோருமாகக் கூடி என்னை வானளாவப் புகழ்ந்தீர்கள்.  எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நான் சாமியைப்போல இருந்தேன்.  அதாவது சிலையைப் போல,

கல்லைப் போல இருந்தேன்

கல்லாலடித்தவனுக்குச் சாமி வரம் கொடுத்ததாகச் சொல்வார்கள்.  சிற்பி, சாமி சிலையைக் கல்லாலடிச்சதாலேதான் இத்தனை பேர்கள் பண்ணும் அபிஷேகத்திலே கரைஞ்சு போகாம இருக்கு.  அதேமாதிரி நானும் கல்லாக இருந்தேன்.  இல்லாவிட்டால் நீங்கள் இத்தனை பேரும் புகழால் அபிஷேகம் செய்தீர்களே (குளிப்பாட்டினீர்களே என்பதைக் கவுரவமாகக் குறிப்பிடுகிறார்)  அதில் நானும் கரைஞ்சு போயிருப்பேன் என்றார்.

புகழுக்கு மயங்காத _ தற்பெருமையைச் செய்துகொள்ளாத கலைவாணர் பிறர் தேடிப் பாராட்டினாலும் அதை நாணத்தோடு ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்.

சின்ன வயது முதலே

கலைவாணர் சிறுவனாக இருந்தபோது மார்த்தாண்டம் என்ற ஊரில் ஒரு சிறு கடையில் நேந்திரம்பழம் வாங்கினாராம்.  பாக்கியைக் கொடுத்த கடைக்காரார் மறதியாக பத்துச் சக்கரம்.  (திருவிதாங்கூர் சமஸ்தான நாணயத்தின் பெயர் அது. 28 சக்கரம் பிரிட்டிஷ் நாணயப்படி ஒரு ரூபாயாகும்.) அதிகமாகக் கொடுக்கவே, அதிகமாகக் கொடுத்த பத்துச் சக்கரத்தைக் கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்தபோது பத்துத் தடவை கடைக்காரர் பாராட்டியதை இன்னும் மறக்க முடியவில்லை என்று கலைவாணர் நண்பர்களிடம் கூறுவதுண்டு.

பிஞ்சுப் பிராயத்திலேயே நாணயம் அவர் உள்ளத்தோடு பின்னிப் பிணைந்து கொண்டது.  எனவே, மற்றவர்கள் நாணயத்தையும் எடைபோட அவர் தவறுவதில்லை.  தன்னிடம் இருப்பவர்களும் நாணயமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.  கலைவாணர் நாணயத்தை (நேர்மை) மதித்தார்.  அதேசமயம் நாணயத்துக்காக (பணம்) ஆசைப்பட்டதில்லை.  ஈட்டிய நாணயத்தை எல்லாம் (பொருளை) நாட்டு மக்களுக்கு அளிப்பதில் நிறைவு கண்டவர்.

அதிர்ஷ்டத்தைத் தேடும் மனிதர்கள்

நம் நாட்டில் உழைப்பு என்ற சொல்லுக்கே கஷ்டம் என்று பொருள் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.  கஷ்டப்பட்டுச் சம்பாதிச்சதய்யா! என்கிறார்கள்.  கஷ்டம் என்பதற்கு உழைத்துச் சம்பாதிப்பது என்பதையே குறிப்பிடுகிறார்கள்.

ஆகையால்தான் இப்போது கஷ்டப்படாமல், உழைக்காமல் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள்.  கோடீஸ்வரன் வீட்டுக்குச் சுவீகாரம் போவது, ஏதாவது லாட்டரி பிரைஸ் அடிப்பது, புதையல் எடுப்பது போன்ற சுலபமான வழிகளில் வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று கருதத் தொடங்கிவிட்டார்கள்.  கஷ்டப்படாமல் அதிர்ஷ்டத்தைத் தேடும் சில மனிதர்களைப்பற்றி கலைவாணர் சொன்ன கருத்து இது.  எத்தனை சரியான சிந்தனை.

தனது சிறிய வயது முதல் உழைப்பில் நம்பிக்கை கொண்ட அளவுக்கு போலி அதிர்ஷ்டங்களில் நம்பிக்கை கொண்டதில்லை எந்த ஜாதியில் தள்ளுவது?
காந்தி புகழ் பரவிய காலம்…டி.கே.எஸ். சகோதரர்கள் தேசபக்தி என்னும் ஒரு நாடகம் நடத்தினார்கள்.  வெ.சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்துவீரன் என்னும் புரட்சிக் கதையே அது.  அதில் ஒரு காட்சி.  சேரி மக்கள் எல்லோரும் கூடி நம்ம, ஜாதியிலே யாரும் குடிக்கவே கூடாது.  மீறிக் குடிக்கிறவர்களை ஜாதியை விட்டுத் தள்ளிறணும் என்று தீர்மானிக்கிறார்கள்.

அப்போது ஒருவன், இருக்கிற ஜாதியிலே நம்மதானே கடைசி.  இதுக்குக் கீழே ஜாதி கிடையாதே.  குடிக்கிறவனை நாம எங்கேண்ணே தள்ள முடியும்? என்று கேட்கிறான்.

யாரும் எதிர்பாராத வகையில் என்.எஸ்.கே.ஒரு நாள்… அந்தக் கேள்விக்கு, இதற்குக் கீழே ஜாதியில்லேன்னா, மேல் ஜாதி எதிலேயாச்சும் தள்ளி விட்டிடுவோம்.  குடிக்கிறவனை நம்ம ஜாதியிலே மட்டும் சேர்த்துக்கக்கூடாது என்பார்.  எதிர்பாராத இந்தக் கேலியைக் கேட்டு பொதுமக்கள் கரகோஷம் செய்து சிரித்தனர்.

இப்படி, புதுப்புதுச் சிந்தனைத் துளிகள் கலைவாணர் நடிப்பில் வந்து விழும்.  அதில் ஆழமான பொருள் இருக்கும்.

திருநீறு பூசியது ஏன்?

ஒரு சமயம் கவிஞர் சுப்பு ஆறுமுகம் வீட்டிற்குக் கலைவாணர் போயிருந்தார்.  ஆறுமுகத்தின் அம்மாள் சுவாமி கும்பிட்டுவிட்டு, விபூதித்தட்டைக் கொண்டு வந்து கலைவாணர் முன் நீட்டினார்.  அவர் கை நிறைய விபூதி அள்ளி நெற்றி நிறையப் பூசிக்கொண்டார்.

பின்னர் தனித்திருக்கும்போது, என்ன அண்ணே நீங்க திருநீறே பூச மாட்டீங்களே… அப்படியிருக்க… என்று கேட்டார் சுப்பு ஆறுமுகம்.

பாரு தம்பி! கண்ணாலே காணாத தெய்வத்தை நினைச்சுக்கிட்டு, கண்கண்ட தெய்வமான தாயார் மனசைப் புண்படுத்தக் கூடாதில்லே.  அப்படிச் செஞ்சா இவங்களை உதாசீனப்படுத்திட்டு தெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாப்பல ஆயிடுமே என்றாராம்.

அவர் பெரியாரின் சீடர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.

எனக்காகக் காப்பாற்றியிருப்பாரே

ஒரு சமயம் கலைவாணர் விமானத்தில் வெளியூர் செல்ல டிக்கெட் புக் பண்ணியிருந்தார்கள்.  திடீரென்று முக்கியமான வேறு வேலையின் காரணமாகப் பிரயாணம் செய்ய முடியாமல் போய்விட்டது.  அதை மறந்து கலைவாணர் வேறு வேலைகளில் மூழ்கிவிட்டார்.

மறுநாள் செய்தி வந்தது.  அவர் போக இருந்த விமானம் விழுந்து தீப்பிடித்து பயணிகள் அத்தனை பேரும் இறந்துவிட்டார்கள் என்று.

மிகுந்த ஆதங்கத்தோடு சிலர் வந்து மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார்கள்.  நல்ல வேளை அண்ணே, நீங்க அந்த விமானத்திலே போகாதது நல்லதாப்போச்சு.  கடவுள் காப்பாத்தினார் என்றார்கள்.

அந்தக் கடவுள் அவங்களைக் காப்பாத்தலியே!  நானும் போயிருக்கணும் என்றார் கலைவாணர்.

ஏண்ணே அப்படிச் சொல்றீங்க…!

நான் போயிருந்தா அவங்களையெல்லாம் காப்பாத்தியிருப்பேன்.  ஏன்னா விமானமே விழுந்திருக்காது.  கடவுள் என்னைக் காப்பாத்துறதுக்காகவாச்சும் அவங்களையும் காப்பாத்தியிருப்பாரே! என்றார் – அந்த வெள்ளை உள்ளம் கொண்ட நகைச்சுவை அரசர்.

இப்படி, பல தடவை பிற உயிர்கள் மேல் இரக்கப்பட்டிருக்கிறார்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போல்.

மனசுல படுதா

ஒரு சமயம் சென்னை ஒற்றைவாடை அரங்கத்தில் கலைவாணர் என்.எஸ்.கே. குழுவினரின் வள்ளுவம் என்ற நாடகம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது கலைவாணரும் மதுரம் அம்மாளும் இணைந்து நடித்த காட்சி நடந்தது.  அந்தக் காட்சி சிறிது நேரத்தில் முடிந்தவுடன் திரையை இழுத்து மூடவேண்டும்.  ஆனால், அந்தப் பணியாள் திரையைக் கீழே இழுத்துவிட மறந்துவிட்டார்.

கலைவாணரும் சீன் முடிந்துவிட்டது திரையைப் போடு என்று எப்படி பகிரங்கமாகச் சொல்வது என்று யோசித்தார்.  உடனே அருகிலிருந்த மதுரத்தை நோக்கி,

நான் இவ்வளவு நேரம் சொன்னது உன் மனசிலே படுதா…? படுதா? என்று அழுத்தமாகச் சொன்னதும், படுதா என்ற சொல்லின் அழுத்தத்தைப் புரிந்துகொண்ட சீன் தொழிலாளி சட்டென்று முன் பக்கப் படுதாவை இழுத்து மூடி காட்சியை முடித்தார்.

கலைவாணரின் இந்தச் சமாளிப்பைப் பார்த்து ரசித்து ரசிகர்கள் கரவொலி எழுப்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *