அறிவாயுதம்

2023 சிறுகதை டிசம்பர் 16-31, 2023

– ஆறு. கலைச்செல்வன் 

அந்த நகரத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட திருமண மண்டபம் என்பது இலட்சுமி திருமண மண்டபம்தான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தத் திருமண மண்டபத்தில் அக்கால கட்டத்தில் நிறைய திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முன்பணம் கட்டி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்டபம் கிடைக்கும்.

இந்தத் திருமண மண்டபம் கட்டுவதற்கு முன்பாக சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே பந்தல் போட்டு திருமணங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இது கட்டப்பட்ட பிறகு கிராமத்து மக்களும் தங்கள் இல்லத் திருமணங்களை நடத்த இம்மண்டபத்தைத் தேர்வு செய்ய ஆரம்பித்தனர். கட்டணமும் குறைவாகவே வசூலிக்கப்பட்டது.

ஆனால், சில ஆண்டுகள் சென்றபின் நகரில் பல திருமண மண்டபங்கள் கட்டப் பட்டன. அதுவும் அண்மைக் காலங்களில் மிகவும்
ஆடம்பரமாகவும், நிறைய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தத் தேவையான இடவசதிகளுடனும் குளிர்சாதன வசதிகளுடனும் பல திருமண மண்டபங்கள் முளைத்துவிட்டன.

பணம் படைத்த பலர் ஆடம்பரத்தையும், பற்பல வசதிகளையும் விரும்பி அத்தகைய மண்டபங்களையே தேர்வு செய்தனர். வசதி குறைந்தவர்களும் பெருமைக்காக புதிய மண்டபங்களையே நாடினர். இதனால் இலட்சுமி மண்டபத்தில் நடக்கும் திருமணங்கள் வெகுவாகக் குறைந்தன. திருமண நாட்களில் எல்லா மண்டபங்
களும் திருமண ஏற்பாட்டால் நிறைந்திருக்கும். ஆனால் இலட்சுமி மண்டபம் மட்டும் யாரும் அணுகாமல் பூட்டிய நிலையில் இருக்கும்.

இந்த நிலை குறித்து இலட்சுமி மண்டபத்தின் உரிமையாளர் அழகரசனும், அவரது துணைவியார் இலட்சுமியும் அடிக்கடி விவாதிக்க ஆரம்பித்தனர். எப்போதாவது அவர்களது விவாதங்களில் அவர்கள் மகன் இளமாறனும் கலந்து கொள்வதுண்டு.

“நம்ம கல்யாண மண்டபத்தை நாடி இப்பவெல்லாம் யாரும் வர்ரதில்லை. ரொம்பவும் குறைஞ்சு போயிடுச்சு. மண்டபத்துக்கு வரிகட்டக்கூட வருமானம் வரலையே! என்ன செய்யலாம்?” என்று இலட்சுமி ஒருநாள் அழகரசனிடம் கேட்டார்.

“நானும் அதப்பத்திதான் யோசிக்கிறேன். ஊரில் புற்றீசல்கள் போல நிறைய மண்டபங்கள் முளைத்துவிட்டன. மக்களும் நவீன வசதிகளையே விரும்புறாங்க. மண்டபம் ரொம்பப் பழசாயிடுச்சு. புதுப்பிக்க வேணும். இப்ப நம்மகிட்ட பணமும் இல்லை. அப்படியே புதுப்பிச்சாலும் சரிப்பட்டு வராது போலிருக்கு. நம்ம மண்டபத்துக்குப் பக்கத்தில் நிறைய கட்டடங்கள் வந்துடுச்சி. கார், பைக்குகள் நிறுத்த போதுமான இடவசதியும் நம்ம மண்டபத்தில் இல்லையே!” என்றார் அழகரசன்.

“அப்போ மண்டபத்தை இடிச்சுடலாம்னு சொல்ல வர்ரீங்களா?” என்று கவலையுடன் கேட்டார் இலட்சுமி.
அழகரசன் பதில் சொன்னார்.

“அந்த எண்ணம் எனக்கு இல்லை இலட்சுமி. மண்டபத்துக்கு உன்னோட பேரைத்தானே வைச்சேன். நாம் பழசையும் நினைச்சிப் பார்க்க வேண்டியிருக்கு. நூற்றுக்கணக்கான கல்யாணம் நம்ம மண்டபத்தில் நடந்திருக்கு. குறிப்பா கிராமப்புற மக்கள் நம்மைத் தேடித்தானே வந்தாங்க. அவங்களோட நினைவலைகள் எல்லாம் நம்ம மண்டபத்தைச் சுத்தியே இருக்கும். நாம் மண்டபத்தை இடிச்சுட்டா அவங்களோட நினைவலைகள் தடைபட்டுப் போயிடும் அல்லவா? நம்ம பையன் கல்யாணமும் நம்ம மண்டபத்தில்தானே நடந்தது!”

அப்போது இளமாறனும் அங்கு வந்தான். அவனும் அவர்களது உரையாடலைக் கவனித்ததோடு மட்டுமல்லாமல் அதில் கலந்துகொள்ளவும் செய்தான்.

“அப்பா, ஏதேனும் ஒன்றைச் செய்யணும். ஒன்று புதுப்பிக்க வேணும்; இல்லாட்டி இடிச்சுட்டு வேற தொழில் செய்யவேணும்”, என்றான்.

“இடிக்கிறதா? கூடவே கூடாது”, என்று உடனடியாக மறுத்துப் பேசினார் அழகரசன்.
ஆனால், இலட்சுமி மகனுக்கு ஆதரவாகவே பேசினார். இடித்துவிட்டு வேறு தொழில் செய்யலாம் என்று அவரும் நினைத்தார்.
அழகரசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மறுத்துப் பேசினார்.

“அப்பா, நீங்க இந்த மண்டபத்தைக் கட்டும்போது நம்ம ஊரில் எத்தனை சினிமா தியேட்டர்கள் இருந்தது?” என்று தந்தையைப் பார்த்துக் கேட்டான் இளமாறன்.

“ஆறு தியேட்டர்கள் இருந்துச்சு.”

“இப்போ எத்தனை தியேட்டர்கள் இருக்கு அப்பா?”

“இப்போ மூணு தியேட்டர்கள்தான் இருக்கு இளமாறா”

“மீதி மூணு தியேட்டருங்க என்னாச்சு அப்பா?”

“இடிச்சுட்டாங்க”

“ஏன்? சரியாப் போகல, வசூல் இல்லை, தியேட்டருக்கு வர்றவங்க கம்மியாயிட்டாங்க. காரணம், தொலைக்காட்சிப் பெட்டிகள், மற்ற ஊடகங்கள். காலத்துக்கு ஏற்றபடி தியேட்டர் முதலாளிங்க தங்களை மாத்திகிட்டாங்க இல்லையா? அதுபோல நாமும் மண்டபத்தை இடிச்சுட்டு வேற தொழில் பண்ண வேண்டியதுதான்” என்று பேசி முடித்தான் இளமாறன்.
அழகரசன் அவனுக்குப் பதில் சொன்னார்.

“நீ சொல்றது உண்மைதான் இளமாறா. ஆனால் அந்தத் தியேட்டர்களை இடிக்கும்போது அங்கு வேலை செஞ்சவங்க, அதில் படம் பார்த்த ரசிகர்கள் மனசு எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும் தெரியுமா? ஒரு காலத்தில் நமக்கு நல்ல வருமானத்தைக் கொடுத்தது நம்ம மண்டபம். அந்த வருமானத்தில்தான் நீயும் நிறைய படிச்சி இப்ப வேலைக்குப் போய் சம்பாதிச்சிக்கிட்டு இருக்க பழசை மறந்திடக்கூடாதல்லவா? நாம் வேற வழியில் சிந்திச்சிப் பார்க்கலாமே”

“அப்பா, நம்ம ஊரில் மட்டுமல்ல. சென்னையில் பார்த்தீங்களா? பெரிய பெரிய ஆளுங்ககூட புகழ் வாய்ந்த தியேட்டர்களையெல்லாம் இடிச்சுட்டாங்க. அந்த இடங்களில் வேற கட்டடங்கள் கட்டி கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. நாம் மட்டும் பழசையே நினைச்சிகிட்டு இருக்கிறதா? எதன் மீதும் நாம் அதிகப் பற்று வைக்கக்கூடாது அப்பா.”

“இளமாறா, சென்னை போன்ற நகரங்களில் பெரிய ஆளுங்க இறந்த பிறகுதான் அவங்க பிள்ளைங்க தியேட்டர்களை இடிச்சிப் போட்டுட்டாங்க. அவங்க உயிரோடு இருக்கிற வரைக்கும் இடிக்கத் துணியவில்லையே. அதையும் ஞாபகம் வைச்சுக்கோ.”

இதற்கு மேல் இலட்சுமியும் இளமாறனும் எதுவும் பேசவில்லை. அப்பா ஏதோ ஒரு முடிவில் இருப்பதாகவே இளமாறன் நினைத்தான். சொத்துவரி கட்டுவதற்காகவாவது வருமானம் வரவேண்டுமே என அனைவரும் கவலைப்பட்டனர்.

இந்நிலையில் ஒருநாள் சாந்த சாமியார் என்பவரின் பக்தர்கள் சிலர் அழகரசன் வீட்டிற்கு வந்தனர். அவர்களை வீட்டின் கூடத்தில் உட்காரவைத்து வந்த விவரம் கேட்டார் அழகரசன். சாந்த சாமியார் தனது ஆன்மிகப் பணிகளைச் செய்ய ஓராண்டுக்கு மண்டபத்தை குத்தகைக்கு விடுமாறு கேட்டனர். அதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதற்குத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

“எவ்வளவு தருவீர்கள்?” என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன தொகையைக் கேட்டு அழகரசன் அதிர்ந்தே போனார்.
இவர்கள் உரையாடலை வீட்டின் உள்ளிருந்து கேட்ட இலட்சுமியும் இளமாறனும் அழகரசனை உள்ளே வருமாறு அழைத்தனர்.

“நம்ம மண்டபத்துக்கு நல்ல காலம் பொறந்துடுச்சி. சாந்த சாமியார் நம்ம மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்தட்டும். நிறைய மக்கள் வருவாங்க. நல்ல விளம்பரமும் கிடைக்கும். நமக்குப் பணமும் கிடைக்கும்”, என்றார் இலட்சுமி.

இளமாறனும் அம்மா சொல்வதை ஆதரித்தான். சாந்த சாமியார் தரும் பணத்தை வைத்துக் கொண்டு மண்டபத்தைப் புதுப்பித்துவிடலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் அழகரசன் எதுவும் பேசவில்லை. சாந்த சாமியாருக்காக மண்டபம் கேட்க வந்தவர்களிடம் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவை நாளை தெரிவிப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் கேட்டார் இலட்சுமி.

“சாமியார்தானே கேட்கிறார். கவுரவமாக இருக்கும். குத்தகைக்கு விடலாம்” என்றார்.
ஆனால் அழகரசன் தொடர்ந்து மவுனம் காத்தார்.

“இப்படி பேசாமல் இருந்தா எப்படி? ஏதாச்சும் பதில் சொல்லுங்க”, என்றார் இலட்சுமி.

“அந்த சாமியாரைப் பத்தி விசாரிச்சேன் லட்சுமி. அவன் ஒரு போலிச் சாமியார். கபடதாரி. பல வருஷங்களுக்கு முன்னாடி அவன் ஒரு கஞ்சா வியாபாரியாம். கொலைகூட பண்ணிட்டு தப்பிச்சுட்டானாம். இதுக்குமுன் ஒரு ஊரில் முகாம்போட்டு அங்கு வந்த பெண்களுக்குப் பலவிதமான தொல்லைகள் கொடுத்திருக்கானாம். சொல்லவே அசிங்கமா இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சி மண்டபத்தை தனக்கு விற்பனை செய்யுமாறு மிரட்டுவானாம். நிறைய வாடகை தர்ரேன்னு சொன்னபோதே எனக்குச் சந்தேகம் வந்துடுச்சி”

“ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. சாமியார் தகாத காரியங்கள் செய்ஞ்சிகிட்டு இருப்பதாச் சொல்றீங்க. ஆனாலும் அவருக்கு நிறைய பக்தர்கள் இருக்காங்களாமே! நானும் விசாரிச்சேன். குறிப்பா பெண் பக்தைகள் அதிகமாம். தப்பு செஞ்சிருந்தா தண்டனை கிடைச்சிருக்காதா?” என்று கேட்டார் இலட்சுமி.

“இப்படித்தான் பல அயோக்கிய சாமியார்கள் சில அரசியல்வாதிகளின் பின்னணியில் இருந்துகொண்டு பல சமூகச் சீர்கேடுகளைச் செய்ஞ்சிகிட்டு இருக்காங்க. பல அப்பாவி மக்களும் அந்தச் சாமியார்களது வார்த்தை ஜாலத்தில் மயங்கி அவர்களுக்கு ஆதரவா இருக்காங்க. பெண்களை அடிமைப்படுத்தி அவங்களைப் பிற்போக்குவாதிகளா மாத்திவிடுறாங்க. இளம்பெண்களின் வாழ்வையே நாசமாக்கிட்டு வர்ராங்க. அவங்களுக்கு இடம் தந்து நாமும் சமூகச் சீர்கேடுகளுக்கு பக்கபலமா இருந்துவிடக்கூடாது. நான் சொல்றது உனக்குப் புரிஞ்சிருக்கும் என நம்புறேன். சுருக்கமாச் சொன்னா அவன் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது, மூளைச்சலவை செய்து குடும்பங்களைச் சிதைப்பது, போலியாகத் துறவறம் மேற்கொள்ள வைப்பது, கொள்ளையடிப்பது, இதுதான் சாமியார்களின் செயல்கள்”, என்று விரிவாக எடுத்துக் கூறினார் அழகரசன்.

“அப்படின்னா வேணாம். நமக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு. அயோக்கியர்களுக்கு நம் மண்டபத்தைத் தரவேணாம்,” என்றார் இலட்சுமி.
இந்நிலையில் சாமியாரின் ஆட்கள் மீண்டும் வந்து அழகரசனிடம் கேட்டனர். அழகரசன் மறுத்தார். ஆனால் சாமியாரின் ஆட்கள் ஒரு கட்டத்தில் அழகரசனை மிரட்டவும் செய்தனர். சாமியாருக்கு ஆதரவான அரசியல்வாதிகளிடமிருந்தும் மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. சாமியாருக்கு மண்டபத்தைக் குத்தகைக்கு விடவேண்டும் எனத் தொடர்ந்து மிரட்டினர்.

“மண்டபத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை. வருமானமும் இல்லை. அவர்கள் மிரட்டல்களால் எனக்கு வருமான இழப்பு ஏதுமில்லையே”, என

எண்ணிக்கொண்டார் அழகரசன்.
சில நாட்களில் சாமியாரின் மிரட்டல் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. அதாவது மண்டபத்தை சாமியாருக்கு விற்றுவிட்டு இடத்தைக் காலி செய்து விட்டுப் போகவேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

“ஒரு அயோக்கியனின் மிரட்டல்களுக்கெல்லாம் நாம் அடிபணிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் அழகரசன். சாமியார்களின் உண்மையான முகத்தை அறிவதற்கு அவருக்கு இது நல்வாய்ப்பாகவும் அமைந்தது. மேலும் மண்டபத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் எனத் தீவிரமாக ஆலோசிக்கலானார்.
அப்போது ஒரு நாள் நெய்யூர் நெடுஞ்செழியன் என்பவர் அழகரசனை அணுகினார். அவர் தன்னை தமிழ்ப் பதிப்பக உரிமையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“அய்யா, நான் தமிழ்ப் பதிப்பகத்தின் உரிமையாளர், எங்கள் பதிப்பகம் மூலம் நூற்றுக்கணக்கான புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். நமது ஊரில் பெரிய அளவில் புத்தகக் காட்சி நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். இதில் எங்கள் பதிப்பகம் மட்டுமல்லாமல் மற்ற பல பதிப்பகங்களும் கலந்துகொள்ளும் அது சம்பந்தமாகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்”, என்றார்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார் அழகரசன்.

“அய்யா, அந்தப் புத்தகக் காட்சியை உங்கள் திருமண மண்டபத்தில் நடத்தலாமென்று உள்ளேன். அதற்கு நீங்கள் ஒப்புதல் தரவேண்டும்.”
“எவ்வளவு நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறும்?”

“ஒரு மாத காலம் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். கிடைக்கும் வரவேற்பைக் கணக்கில் கொண்டு மேலும் நீடிக்கலாம்.”
அழகரசன் சற்று யோசித்தார். அப்போது இலட்சுமி வீட்டிற்குள் இருந்தார். அவரை அழைத்து விவரத்தைச் சொன்னார்.

“வாடகை எவ்வளவு கிடைக்கும்?” என்று கேட்டார் இலட்சுமி.
அழகரசன் நெடுஞ்செழியனைப் பார்த்தார்.

“அய்யா, மக்களுக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். குழந்தைகளுக்கான புத்தகங்களும் நிறையவே விற்பனைக்கு வரும். அனைத்துப் புத்தகங்களும் சிறப்புக் கழிவுகளுடன் விற்கப்படும். இது ஒரு சமூகப்பணி என்றே எண்ண வேண்டும். இட வாடகைக்காக விற்பனையில் குறிப்பிட்ட சதவிகிதத்தைத் தருகிறோம்”, என்றார் நெடுஞ்செழியன்.

அழகரசனுக்கும் இலட்சுமிக்கும் ஒரு செய்தி நன்றாகப் புரிந்தது. வாடகைக்காக அதிக அளவில் பணம் கிடைக்காது என்பதே அது. இருப்பினும் புத்தகக் காட்சிக்கு அனுமதி அளிக்கலாம் என்றே இருவரும் எண்ணினர்.

தங்களது ஒப்புதலை நெடுஞ்செழியனிடம் தெரிவித்தனர். மிகவும் மகிழ்ந்த அவர் அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றார்.
அடுத்த சில நாட்களில் புத்தகக் காட்சி இலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது பற்றிய விளம்பரம் பெரிய அளவில் செய்யப்பட்டது. நகரில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன. உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

நகரம் முழுவதும் இலட்சுமி மண்டபத்தில் நடைபெற உள்ள புத்தகக் காட்சி பற்றிய பேச்சாகவே இருந்தது.

புத்தகக் காட்சியின் தொடக்கவிழா உள்ளூர் அமைச்சரைக்கொண்டு சிறப்பாக நடைபெற்றது. பல அறிஞர் பெருமக்கள் வருகை தந்து வாழ்த்துரை வழங்கினர். அழைப்பிதழில் அழகரசன் பெயரையும் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அவரையும் அவரது துணைவியார், மகன் ஆகியோரையும் மேடைக்கு அழைத்து பயனாடை அணிவித்து கவுரவப்படுத்தினார் நெடுஞ்செழியன்.

புத்தகக் காட்சிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். நகரத்தில் இருந்து மட்டுமல்லாமல் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெருமளவில் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
பகுத்தறிவு நூல்கள் பலவும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தீ பரவட்டும், பெண் ஏன் அடிமையானாள், கீதையின் மறுபக்கம், அர்த்தமற்ற இந்துமதம், பகுத்தறிவு சிறுகதைத் தொகுப்பான புயல் போன்ற பல நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் பலரும் அவற்றைப் பெருமளவில் விரும்பி வாங்கிச் சென்றனர்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட சாந்த சாமியார் கோபத்தின் விளிம்பிற்கே சென்றார். எப்படியாவது புத்தகக் காட்சிக்கு ஊறு விளைவிக்க எண்ணினார். தனது கையாட்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். முடிவில் அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். மதப்பிரச்சனையைக் கிளப்ப வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்.

உடனே நம் மதத்திற்கு எதிராக இலட்சுமி திருமண மண்டபத்தில் புத்தகக் காட்சி நடப்பதாகவும், அதை ஏற்பாடு செய்தவர்கள் மத வெறுப்பாளர்கள், நாத்திகர்கள் எனவும் பிரச்சாரம் செய்ய ஆட்களை ஏவிவிட்டார். மக்களின் மதஉணர்வுகளை வெகுவாகத் தூண்டிவிட்டார். மத எதிர்ப்பு நூல்கள் மட்டுமே உள்ளதாகப் பொய்யுரை பரப்பினர்.

அவர்கள் பரப்பிய வதந்தி நகரம் முழுவதும் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவியது.

ஒரு மத அமைப்பு மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்தது. அவர்கள் பேச்சை நம்பிய அப்பாவி பாமர மக்கள் சிலர் தங்கள் மதத்திற்கும் சாமிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கருதி மண்டபத்திற்குமுன் திரண்டனர். விவரம் கேள்விப்பட்டு அழகரசனும் அங்கு வந்தார்.
அதையடுத்து மாவட்ட ஆட்சியரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர் நெடுஞ்செழியன் அவர்களுக்கு உரிய விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து குழுமியிருந்த பொதுமக்களிடமும் பேசினார்.
“இது புத்தகக் காட்சி; இங்கு அனைத்து விதமான புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு கீதையும் கிடைக்கும்; கீதையின் மறுபக்கமும் கிடைக்கும். இராமாயணமும் கிடைக்கும், தீ பரவட்டும் புத்தகமும் கிடைக்கும். ஆன்மிக நூல்கள் பலவும் கிடைக்கும், ஆரிய மாயையும் கிடைக்கும். அர்த்தமுள்ள இந்து மதமும் கிடைக்கும், அர்த்தமற்ற இந்துமதமும் கிடைக்கும். யார் யாருக்கு எது பிடிக்குமோ அந்தப் புத்தகங்களை வாங்கிச் செல்லலாம். படித்துப் பார்த்து உங்கள் பகுத்தறிவின் துணைகொண்டு எது நல்லது, எது கெட்டது என நீங்க தீர்மானம் செய்து கொள்ளலாம்.

புத்தகங்கள் அறிவின் திறவுகோல். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘நான் ஒரு நூல் நிலையம் கட்டுவேன்’ என்றாராம் மகாத்மா காந்தி. ‘கரண்டியைப் பிடுங்கிவிட்டு பெண்கள் கையில் புத்தகம் கொடுக்க வேண்டும்’ என்றார் தந்தை பெரியார். ‘தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் புத்தகங்களுடன் மகிழ்வுடன் வாழ்வேன்’ என்றார் ஜவஹர்லால் நேரு. ‘போராட்ட ஆயுதங்கள் புத்தகங்களே’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.
நாங்கள் இங்கு பெருத்த வருமானத்தை நம்பி புத்தகக் காட்சி நடத்தவில்லை. உங்களுக்காக, உங்கள் பிள்ளைகளுக்காக, பெண்கள் முன்னேற்றத்திற்காக பல நூல்களை பல்வேறு பதிப்பாளர்கள் வைத்துள்ளார்கள். எல்லோரும் உள்ளே சென்று பார்க்கலாம். இங்கு எதையும் நிந்தனை செய்யப்படவில்லை” என்றார்.
மக்கள் அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்டுத் தெளிவு பெற்றனர். புத்தக விரும்பிகள் பலரும் அப்போது அங்கே வந்துவிட்டனர். பலரும் புத்தகக் காட்சிக்கு ஆதரவாகப் பேசவே சாமியாரின் ஆட்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

அப்போது நெடுஞ்செழியன் அழகரசனை அழைத்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
மண்டபத்தின் உரிமையாளர் என்ற முறையில் அவருக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

“புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர் நெடுஞ்செழியன் அவர்கள் ஒரு மாதம்தான் மண்டபத்திற்கு அனுமதி கேட்டார். அவர் ஒரு வருடம் வேண்டுமானாலும் புத்தகக் காட்சியை நடத்திக் கொள்ளலாம். அனுமதி தருகிறேன். மக்களுக்கு அறிவுப் பெருக்கம் ஏற்பட்டால் போதும். சாந்த சாமியாரிடமிருந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அவர்தான் காரணம். புத்தகம் என்ற அறிவாயுதத்தால் நாம் எதையும் வெல்வோம். அறிவாயுதம் ஏந்துவோம்”, என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் அழகரசன்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பகுத்தறிவு நூல்கள் முன்பைவிட அதிக அளவில் பரபரப்பாக விற்பனையாயின. ♦