அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (310)

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் பிப்ரவரி 16-28, 2023

தஞ்சை இளைஞரணி மண்டல மாநாடு
கி.வீரமணி

ஆந்திர மாநிலத்தில் செயல்துடிப்புடன் இயங்கிவரும் அம்பேத்கர் தர்ம போராட்ட சமிதியின் இரண்டாவது மாநில மகாசபை மாநாடு 25.12.2002 அன்று திருப்பதியில் நடைபெற்றது. கொடியேற்றம் பிரதிநிதிகள் மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டம் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். மாலை 6.00 மணியளவில் திருமலை – திருப்பதி பேருந்து நிலையத்தில் எதிரில் அமைந்துள்ள பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலத்தினைத் தொடங்கி வைத்தோம். மாநாட்டின் முத்தாய்ப்பு அம்சமான பொதுக்கூட்டத்தில் எமது உரை தெலுங்கு மொழியில் பெயர்க்கப்பட்டது.

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி தருமபுரி பி.கே. ராமமூர்த்தி அவர்களின் பெயரனும் மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ். பிறைநுதல் செல்வி – டாக்டர் கவுதமன் ஆகியோரின் மகனுமான டாக்டர் ஜி.பி. இனியன், கேரள மாநிலம் வடக்கன்பாரூரைச் சேர்ந்த டாக்டர்சி.வி. சீனிவாசன் – டாக்டர் யமுனா சீனிவாசன் ஆகியோரின் மகள் டாக்டர் எஸ். பாவானா ஆகிய இருவருக்கும் 29.12.2002 அன்று ஆவாரம்பாளையம் இராமகிருட்டிணா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு விழாவை தலைமையேற்று சிறப்பாக நடத்திவைத்து, நிறைவாகக் கழகக் கொள்கைகளை எடுத்துக்கூறி உரையாற்றினேன்.

30.12.2002இல் கழகத்தின் பாடி வீடான தஞ்சை நகரில் திராவிடர் கழக இளைஞரணி மண்டல மாநாடு சிறப்புடன் நடைபெற்றது.
உலகத் தமிழ் மாநாட்டையொட்டி தஞ்சை நகரம் புதுப்பொலிவு பெற்றது. மேம்பாலங்களும், பூங்காக்களும், மணி மண்டபங்களும், வளைவுகளும், நினைவுச் சின்னங்களும் உருவாக்கப்பட்டு, புது எழிற்கோலமாகக் காட்சி அளித்தது.
மணிமண்டபத்தின் எதிரில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் மாநாடு துவங்கியது. காலை முதற்கொண்டே கழகக் குடும்பத்தினர்  குறிப்பாக இளைஞர்கள் பேருந்துகள், வாகனங்கள் மூலம் மாநாட்டை நோக்கி வந்த வண்ணமே இருந்தனர்.

நகரில் எப்பக்கம் நோக்கினும் மாநாட்டின் சுவரெழுத்து விளம்பரங்கள் – சுவரொட்டிகள் பார்த்தவர்களை மலைக்கத் வைத்தன. தமிழ்நாட்டில் சுவர் எழுத்து இயக்கம் என்பது திராவிடர் கழகத்துக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

சுவர் எழுத்தாளர் சுப்பையா என்றால் எந்தக் கட்சிக்காரர்களுக்கும் அறிமுகமான பெயர். கழகத்தின் சுவர் எழுத்து மக்களுக்கு மனப் புரட்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். அரசுகளின் கவனத்துக்குப் பல கோரிக்கைகளையும், அரிய திட்டங்களையும் எடுத்துரைப்பதாகும்.
ஆடம்பரச் சுவரொட்டிகளைவிட இந்தச் சுவர் எழுத்தின் பலன் பெரிது என்பது கழகம் கண்ட அனுபவம். அந்த யுக்தியைத்தான் தஞ்சையிலும் கழகத் தோழர்கள் கையாண்டிருந்தனர்.

பள்ளத்தூர் நாவலரசன், திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் இயக்க இன்னிசை நிகழ்ச்சி தேனாகப் பாய்ந்தது- _ எதிரிகளுக்கோ தேளாகக் கொட்டக்கூடியது. அது வெறும் இசையல்ல _ இயக்கத்தின் இலட்சியத்தை எடுத்துரைக்கும் ஒரு சாதனம். பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் அ. உத்திராபதி கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
மாநாட்டுக்கு மாநில இளைஞரணிச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் தலைமை வகித்தார்.
தந்தை பெரியார் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை தமிழர் தலைவர் தலைமையில் உருவாக்குவோம் என்று அவர் தலைமை உரையில் குறிப்பிட்டார்.

மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடைசித் தீர்மானத்தை கழகப் பொதுச் செயலாளரே முன்மொழிந்து விளக்கவுரை ஆற்றினார். மற்ற தீர்மானங்களை இளைஞரணித் தோழர்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் பேசினார்கள்.
கழகம் நடத்தும் பட்டிமன்றங்கள் பொருள் பொதிந்தவை; பொழுது போக்குக்காக நடத்தப்படும் வெட்டி-மன்றங்கள் அல்ல இவை. அதேபோல, மாநாட்டில் நல்லதோர் பொருளில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.

 

கழகச் சொற்பொழிவாளர் அதிரடி அன்பழகன் நடுவராகப் பொறுப்பேற்றார். ‘‘இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவை பண்பாட்டு உணர்ச்சியே!”” எனும் அணியில் தோழர்கள் மதுரை வழக்குரைஞர் கி. மகேந்திரன், இரா. பெரியார்செல்வன், சு. விஜயகுமார் ஆகியோரும், “இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் தேவை பகுத்தறிவு எழுச்சியே!” எனும் அணியில் தோழர்கள் வழக்குரைஞர் பூவை புலிகேசி, இராம.அன்பழகன், சீனி. விடுதலையரசு ஆகியோரும் ஆழமாக வாதிட்டனர்.

 

தந்தை பெரியார் விரும்பிய பண்பாட்டு உணர்ச்சி, பகுத்தறிவு துணையோடு உருவாகவேண்டும் என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

பண்பாட்டு உணர்ச்சி என்பது தமிழரின் பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் இவை ஆரியத்தால் எப்படி சூறையாடப்பட்டன என்ற தன்மையிலும், பகுத்தறிவு எழுச்சி என்பது மூடநம்பிக்கைகளால் சூழப்பட்ட தமிழ்நாட்டின் அவல நிலையையும் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தன.

 

இவற்றை மாற்றியமைக்க பண்பாட்டு உணர்ச்சியும், பகுத்தறிவு எழுச்சியும் தேவை என்பதுதான் பட்டிமன்றத்தின் மய்யப் புள்ளியாக இருந்தது. நல்ல தகவல்களையும், ஆய்வுகளையும் தோழர்கள் எடுத்துரைத்தனர்.
பெரியார் பன்னாட்டு மய்யத் தலைவர் சிகாகோ (அமெரிக்கா) டாக்டர் சோம. இளங்கோவன் மாநாட்டைத் திறந்து வைத்து அரிய உரை நிகழ்த்தினார்.

எமது உரையில்,தமிழர்கள் கல்வி பெற்றதற்கும், பெரிய பதவிகளில் வந்ததற்கும் தந்தை பெரியாரின் தன்னலங் கருதா அளப்பரிய தொண்டுதான் காரணம் என்கிற நன்றி உணர்ச்சி அவரின் ஒவ்வொரு அசைவிலும் ப

 

ளிச்சிடும் -_ தனிப்பட்ட உரையாடல்களிலும்கூட அந்தத் திசையில்தான் பேசக்கூடியவர் -_ சிகாகோவில் இருந்து கொண்டு இந்த இனநலத்தொண்டைச் செய்துகொண்டு இருக்கக்கூடியவர்.
எமக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட-பொழுது, அதற்கான ஆக்க ரீதியான அனைத்துப் பணிகளையும் உடனிருந்து கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டவர். அவருக்கு நாம்’ மிகவும் கடமைப்பட்டுள்ளதை மாநாட்டு நிறைவு உரையில் குறிப்பிட்டோம்.

“பெரியார் பிஞ்சுகள்” என்ற நிகழ்ச்சி புதுமையானதாகவும், எல்லோரையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்து இருந்தது. பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த மழலைகள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர் இதில் பங்கேற்றனர். காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வீர.சுப்பையா அவர்களின் மகள் சுப. பொற்கிழி 24 பத்து ரூபாய் நோட்டுகளைக் கொண்ட மாலையை எமக்கு அணிவித்தது கலகலப்பை ஏற்படுத்தியது.

பிள்ளைகள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவரவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் அவர்கள் பேசினார்கள். கதைகள் சொன்னார்கள்; சில நிகழ்ச்சிகளையும், தகவல்களையும் மழலைத் தன்மையுடன் எடுத்துரைத்தனர்.

இடைஇடையே நாம் குழந்தைகளிடம் கேள்விகளைக் கேட்டோம். குழந்தைகளும், எம்மிடம் பல கேள்விக் கணைகளை வீசினார்கள். தலைமுறை இடைவெளியின்றி பெரியார் கொள்கைக் குடும்பங்கள் வாழையடி வாழையாகத் தழைத்து வரக்கூடியவை-_ அவை பட்டு விடாது; மேலும் மேலும் தழைக்கும் என்பதை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. பெரியார் பிஞ்சுகளுக்கென்றே ஒரு மாநாட்டை நடத்தலாமா என்று பிஞ்சுகளைப் பார்த்து கேட்டோம். ‘நடத்தலாம் நடத்தலாம்’ என்று ஒரே குரலில்

 

பிஞ்சுகள் மிக்க ஆர்வமுடன் தெரிவித்தன.
“பள்ளி விடுமுறைக் காலமான மே மாதத்தில் நடத்துங்கள் அய்யா” என்று பிள்ளைகளே ஆலோசனை கூறினார்கள். அப்படியே செய்வோம்_ உங்கள் ஆலோசனைக்கு நன்றி என்றோம். அரங்கமே அதிரும் அளவுக்குக் கரவொலி எழுந்தது.

இந்நிகழ்விலே வி. வினோதினி (தஞ்சை), பி. வெண்பா (வல்லம்), ஏ.கவின் (தஞ்சை), அ. கபிலன் (சென்னை), ஆனி, ஆலன் (சென்னை), பிரபாகரன், எஸ்.ஆர். நெடுஞ்செழியன் (விக்கிரவாண்டி), தமிழரசி, பிரபாகரன் (மதுரை), திருச்சியைச் சேர்ந்த அ. சதீஷ்குமார், சி. சுரேந்திரன், பெ. கிருட்டிணன், அ. தேன்மெழி, சி. பீட்டர், ராகேசு, நிவேதா, திவ்வியதாரணி, பிரியதர்சினி, சுவாதி, நாராயணன், புயல் (சென்னை), அருள்மொழி (சென்னை), பிரபாகரன் (உரத்தநாடு), திராவிடமணி (தஞ்சை), சிவராமகிருட்டிணன் (தஞ்சை), ஊ. ஈழவேங்கை (மன்னார்குடி), அ. மணியம்மை (மேலவாசல்), ஊ. சோழவேங்கை (மன்னார்குடி), இரா. திலீபன் (மன்னார்குடி), இரா. இலக்கியமதி (வடசேரி), வீ. வீரமணி (அத்திவெட்டி), மா. அல்பேனியா (இராயபுரம்), வீ. வினோதினி (நீடாமங்கலம்) ஆகிய பிஞ்சுகள் கலந்துகொண்டனர்.

நூல் வெளியீடு

கீழ்க்கண்ட நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.

நூல்: “சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்” (ஆசிரியர்: கி. வீரமணி)
வெளியிட்டவர்: டாக்டர் சோம. இளங்கோவன்.
பெற்றுக்கொண்டவர்கள்: ராசகிரி கோ. தங்கராசு, புலவர் கண்ணையன் (அருப்புக்கோட்டை), சொர்ணா ரெங்கநாதன் (பெங்களூர்), திருமகள் இறையன், (சென்னை.)
தொகுப்பு நூல்: “பெரியாரியல்” (ஆசிரியர்: கி. வீரமணி)
வெளியிட்டவர்: டாக்டர் சோம. இளங்கோவன்
பெற்றுக்கொண்டோர்: மதுரை தே. எடிசன்ராசா, வழக்குரைஞர் கி. மகேந்திரன் (மதுரை), தஞ்சை கு. வடுகநாதன், இராமலெட்சுமி சண்முகநாதன் (சிவகங்கை), பி.வி. இராமச்சந்திரன் (பிச்சாண்டார்கோவில்.)

எமது உரையில்,மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கியும், ஆறாவது தீர்மானத்தை முன்மொழிந்தும் (முற்பகல்) மாநாட்டில் உரையாற்றினோம்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கழகம் கூறி வந்தது. தமிழர்கள் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காக அல்ல.
அதன்மூலம் ஜாதியை, தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிபதிகள் வழங்கியுள்ளனர். அதன்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்தவிதமான தடையும் கிடையாது. இதனை நிறைவேற்றிக் கொடுக்குமாறு, திராவிடர் கழகத்தின் சார்பில் தூதுக்குழு ஒன்று சென்று முதலமைச்சரை விரைவில் சந்திக்கும் என்று கூறினோம்.

2003-ஆம் ஆண்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தை அறிவித்து, அது பற்றிய விளக்கத்தையும் எடுத்துரைத்தோம். (திட்டம் தனியே வெளியிடப்பட்டுள்ளது).
திராவிடர் கழக உதவிப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் தலைமையில் சிறப்பான கருத்தரங்கம் நடைபெற்றது. வழக்குரைஞர் குடந்தை கீதாலயன் கருத்தரங்கத் துவக்கவுரையை நிகழ்த்தினார். “தந்தை பெரியாரின் தன்மானப் பார்வையில் பெண்ணுரிமைக் களம்” என்னும் தலைப்பில் வழக்குரைஞர் வீரமர்த்தினி தென்றல், “சிந்தனையும் _ பகுத்தறிவும்” என்னும் தலைப்பில் கடலூர் மாவட்டக் கழகத் தலைவர் துரை. சந்திரசேகரன், நீதி கெட்டது யாரால்?” என்னும் தலைப்பில் பெரியார் இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் பெரியார் பேருரையாளர் அ. இறையன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

தொடர்ந்து பாப்பா நாடு எஸ்.பி. பாஸ்கரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. பார்ப்பனர்களின் இசை, தமிழர் இசை இவற்றிற்குள்ள வேறுபாடுகளைப் பாடிக் காட்டி இடை இடையே கருத்துகளை எடுத்து வைத்து சிரிப்போடு, சிந்தனையைத் தூண்டுவதாக அவரது நிகழ்ச்சி அமைந்திருந்தது.

தஞ்சையைக் குலுக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணி பிற்பகல் 4:30 மணிக்கு கீழவீதி பெரியார் இல்லத்திலிருந்து புறப்பட்டது.
தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் மதுரை தே. எடிசன்ராஜா பேரணியைத் தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா. வில்வநாதன் தலைமை வகித்தார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்கள் இருவருக்கும் சால்வைகள் அணிவித்துச் சிறப்பித்தார்.

பேரணி கீழவீதி, தொண்டி ராசபாளையம், கீழவாசல், அரசினர் சுற்றுலா மாளிகை, மேரீஸ் கார்னர் வழியாக மாநாட்டு அரங்கத்தை அடைந்தது.வடசென்னை, தென் சென்னை, தாம்பரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மதுரை மாநகர், புறநகர், காரைக்குடி, பழனி, இராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருச்சி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை பெரம்பலூர், புதுவை மாநிலம், காரைக்கால் பகுதி, அரியலூர், திருவாரூர் மாவட்டம் (விளக்குடி கிராமத்திலிருந்து மட்டும் இளைஞரணியினர் சீருடையுடன் 30 இளைஞர்கள் தனியே அணிவகுத்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்) லால்குடி, சேலம் மாநகர், கிருட்டினகிரி, தருமபுரி ஆகிய மாவட்டக் கழகத் தோழர்கள், இளைஞரணியினர் தனித்தனி பதாகைகளுடன் அச்சிட்டு வழங்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட முழக்கங்களை மட்டும் முழங்கினர். பொதுமக்களுக்குக் கொள்கை விளக்கம் சென்றடையும் வண்ணம் சிறப்பாக முழங்கி வந்தனர்.

மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, சமூகநீதி, வேலைவாய்ப்பு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு இவற்றை முன்னிறுத்தி முழக்கங்கள் முழங்கப்பட்டன.
பேரணியில் அத்திவெட்டி வீரையன் குழுவினரின் அலகுக் காவடிகள் அனைவரையும் கவர்ந்தன. கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்ற அவர்களின் முழக்கங்கள் மூடநம்பிக்கைகளைச் சுட்டெரித்தன.

“தமிழர் தலைவர் இசைக்குழு” என்று தனியே கழக மாணவர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தி கிளாரிநெட் வாசித்து வந்தனர்.
தஞ்சாவூர் மேளம் கிடுகிடுக்க வைத்தது. அந்தக் குழுவில் பெண்களும் பங்கேற்றிருந்தது ஒரு புதுமையாகவே இருந்தது.
பெரியார் பெருந்தொண்டர் 80 வயதையும் தாண்டிய சீகூர் ஆறுமுகம் சிலம்பம் ஆடி வந்து அதிசயத்தை ஏற்படுத்தினார். தீப்பந்தம் சுழற்றி இந்த வயதிலும் வீர விளையாட்டு ஆடி வந்தது ஒரு வியப்பான காட்சியே!

 

தஞ்சை மேரீஸ் கார்னரில் அமைக்கப்பட்ட தனி மேடையிலிருந்து நானும் சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன், கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை ஆகியோரும்மேடையில் இருந்துபேரணியைப் பார்வையிட்டோம்.
இளைஞரணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டோம். தீச்சட்டியைக் கொண்டு வரச்சொல்லி எம் கையால் ஏந்திக் காட்டி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினோம். பொதுமக்களே ஆரவாரித்தனர்.
இரவு 7:00 மணியளவில் பேரணி, மாநாட்டுப் பந்தலை அடைந்தது.பேரணியின் முடிவில் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் நின்று, கழக இளைஞரணியினரின் அணிவகுப்பு மரியாதையை நாம் ஏற்றுக்கொண்டோம்.
மாநாட்டு நிறைவுரையில் குஜராத்மதக்கலவரம், அது திட்டமிட்டு எப்படியெல்லாம் உருவாக்கப்பட்டது- தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் நலிந்த மக்களையெல்லாம் எப்படி சிறுபான்மையினருக்கு எதிராகஇந்துத்துவாவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை விளக்கி உரையாற்றினேன்.மாநாட்டின் பேரணியில் கலந்துகொண்ட மாவட்டங்களில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் சிறப்புப் பரிசுகளைப் பெற்றன.

 

 

கழக மாநாட்டுக்கே உரித்தான வகையில் மாநாட்டு மேடையில் விதவை திருமணம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நிண்ணியூர் சாமிநாதன் தையல்நாயகி ஆகியோரின் செல்வன் வழக்குரைஞர் சா. பகுத்தறிவாளன், அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் பொன் பரப்பி கிராமம் வரதராசன் மாரிமுத்து ஆகியோரின் மகள் வ. தவமணி இவர்களின் இணையேற்பு நிகழ்வைச் சிறப்பாக நடத்தி வைத்தோம். மணமகள் கணவனை இழந்தவர். இரு குழந்தைகளும் உண்டு.

அரியலூர் நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
24.6.2002 அன்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் செய்துகொண்ட மன்னார்குடி வட்டம் சேரன்குளம் கே.ஆர். முருகன் –
இந்திரா தம்பதியினர் மாநாட்டு மேடையில்தோன்றினர். முருகன் தனது துணைவியார் இந்திராவின் தாலியை பலத்த கரவொலிக்கிடையே அகற்றினார். வடுவூர் இராமச்சந்திரன் – சீதாலட்சுமி ஆகியோரின் பெண் குழந்தைக்கு மணியம்மை என்று பெயர் சூட்டினோம். நிறைவாக மாநாட்டுச் சிறப்புரையாற்றினேன்.

(நினைவுகள் நீளும்…)