அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (309

2023 Uncategorized அய்யாவின் அடிச்சுவட்டில் பிப்ரவரி 1-15, 2023

புதுடில்லியில் சமூக நீதிக்கான வழக்கறிஞர் மாநாடு!

– கி.வீரமணி

சிங்கப்பூரில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,  முன்னாள் பிரதமர் லீக்வான்யூ ஆயோரது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள 16.11.2002 சனிக்கிழமை காலை 7:45 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்தோம்.மாலை 7:00 மணியளவில் சிங்கப்பூர் தமிழ்ச் சான்றோர் வள்ளல் கோவிந்தசாமிப் பிள்ளை அவர்கள் பெயரால், சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள கோயில் மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் முப்பெரும் விழாவாகவும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சிங்கப்பூர் திராவிடர் கழகத்தின் தலைவராக 1957 முதல் 1964 வரை தொடர்ந்து பணியாற்றிய வருமான சிங்கப்பூர் மானமிகு க.ரா. தங்கவேலு அவர்களுக்கு பெரியார் விருது வழங்கும் விழாவும், திரு. ‘சு.தெ. மூர்த்தியும், சிங்கப்பூர் திராவிடர் கழகமும்’ என்ற தலைப்பில் -வெளியாகியுள்ள நூல் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக அய்ம்பெரும் நிகழ்ச்சிகளாக நற்தொகுப்பாக நடைபெற்றது.

அரங்கத்தில் சிங்கப்பூர் பிரமுகர்களும், ஏராளமான தமிழ்ப்பெருமக்களும், கழகக் குடும்பத்தினரும் நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தனர்.
மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவரும், பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு ரெ.சு. முத்தையா, மலேசியாவின் முன்னணித் தொழிலதிபரும், சீரிய பெரியார் பற்றாளரும், மலேசிய இந்திய காங்கிரசின் தேசிய செயலவை உறுப்பினரும், ஜோகூர் பாரு மாநில ம.இ.கா. பொருளாளருமான டத்தோ எஸ். பாலகிருஷ்ணன், மலேசிய திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் 80 வயது தாண்டிய முதுபெரும் பெரியார் பெருந்தொதண்டர் ‘திராவிடமணி’ நல்லதம்பி அவர்களும், மலேசியா பெரியார் பற்றாளரும், ஜோகூர்பாரு மாநில கழகப் பொறுப்பாளர்களில் ஒருவருமான பெரியார் பெருந்தொண்டர் சின்னப்பன், அவரது துணைவியார் திருமதி சின்னப்பன் மற்றும் பல மலேசிய திராவிடர் கழகக் குடும்பத்தினர்களும் விழாவில் பங்கேற்றனர்.

விழாத் தொடக்கத்தில், வந்திருந்த அனைவரையும் சிறப்பான முறையில் வரவேற்றார் விழாக் குழுவின் முக்கியப் பொறுப்பாளரான நண்பர் இலியாஸ் அவர்கள்.விழாவிற்குத் தலைமை தாங்கிய தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியரும், சீரிய தமிழறிஞருமான டாக்டர் சுப.திண்ணப்பன் அவர்கள், சுமார் அரை மணி நேரத்திற்குமேல், ஓர் அற்புதமான முறையில் தலைமையுரை நிகழ்த்தினார்.

சிங்கப்பூரில் திராவிடர் கழகம், பெரியார் இயக்கம் வளர்ந்த வரலாறாகவும் அது அமைந்துள்ளது என்றார்.
அடுத்து சிறப்புரையாற்றிய நல்லாசிரியர் மாணிக்கம் அவர்கள், அழகு தமிழில் ஆணித்தரமான முறையில் தமது கருத்துகளை அடுக்கினார். மிடுக்குடன் பேசினார். நானறிந்த வரையில் யாருக்கும், எதற்காகவும், பயப்படாது துணிவுடன் கருத்துகளை கூறிய ஒரே தலைவர் தந்தை பெரியாரே! பொது வாழ்வில் சொல்லும், செயலும் ஒத்து செயல்பட்டவர் பெரியார் அவர்தான் என்றும், பல அரிய மாணவர்கள் இயக்கக் குடும்பத்தினரின் பலரது பிள்ளைகள் என்னிடத்தில் படித்தவர்கள் எனக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரான 88 வயதான முதியவர் மானமிகு க.ரா. தங்கவேலு அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் சிங்கப்பூரில் முதல் முறையாக ஏற்படுத்திய பெரியார் விருது வழங்கப்பட்டது.அவர் நிகழ்ச்சிக்கு வந்து, விருதினைப் பெற இயலாத அளவுக்கு அவரது உடல் நிலை இடந்தராததால், அவரது சார்பில் அவரது துணைவியாரும், கழக ஆர்வலருமான மூதாட்டியார் (80 வயது) திருமதி. தங்கவேலு அவர்களும், அவரது மகளும் விழாவிற்கு வருகை தந்து, அவரது சார்பில் பெரியார் விருதினை நன்றி கூறிப் பெற்றுக்கொண்டனர்.அவருக்குப் பொன்னாடை போர்த்தி அந்த தகுதிமிக்க பெரியார் விருதினை, அரங்கத்தின் பலத்த கைத்தட்டலுக்கிடையில் அளித்தேன். உண்மையாக உணர்ச்சி, மகிழ்ச்சி பொங்கிய நிகழ்ச்சியாக இருந்தது அந்த நிகழ்ச்சி.சு.தெ. மூர்த்தியும், சிங்கப்பூர் திராவிடர் கழகமும்’ என்னும் நூலை தலைமை விருந்தினர் என்கிற முறையில் நான் வெளியிட, மலேசிய திராவிடர் கழக தேசியத் தலைவர் ரெ.சு. முத்தையா, மலேசியா ம.இ.கா. முக்கிய பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள், திருமதி. தங்கவேலு, மன்னை அப்பாராஜ் அவர்களது தங்கையார், சிங்கப்பூர் தொழிலதிபர் காசிநாதனின் சகோதரரும் சீரிய இலக்கியச் சிந்தனையாளருமான நண்பர் மா. அன்பழகன், மலேசிய கழகத் தோழர் சின்னப்பன், சிங்கப்பூர் கழக ஆதரவாளர் பெரியார் பற்றாளர் கே.இராமசாமி மற்றும் பலரும் மேடையில் வரிசையாக வந்து மூர்த்தி அவர்களின் நூலைப் பெற்றுக்கொண்டனர்.

பெரியார் தொண்டினையும், சிங்கப்பூர் மூர்த்தி அவர்களைப் பற்றியும், கழகம் பற்றியும் சிங்கப்பூர் இனமான நடிகர் ஆரூர் சபாபதி நகைச்சுவை குலுங்கப் பேசினார்.இரவு 8:30 மணிக்கு துவங்கிய எமது உரையை 10:00 மணிக்குத்தான் முடித்தோம்.
‘பெற்றுப் போக அல்ல; கற்றுப்போகவே வந்துள்ளேன்’ என்று எனது உரையைத் தொடங்கி பெரியார் தொண்டு நம்மின மக்களின் மூச்சுக் காற்றாகியது என்பதையும், லீக்வான்யூ அவர்களது சாதனை எப்படி வரலாறு படைத்தது என்பதையும் அவரது ஆங்கில நூலின் முன்னுரை யாத்த அமெரிக்கப் பேராசிரியரும், அரசியல் ஞானியுமான ஹென்சி கிசிங்கர் எழுதியதைச் சுட்டிக்காட்டி, பன் மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் என்று பிரிந்துள்ள மக்களை ஒன்றுபடுத்தி, சமத்துவ சமவாய்ப்பை அவர் எப்படிச் செய்தார் என்பதையும், சிங்கப்பூரர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் 1953_-54இல் வந்தபோது கூறிய அறிவுரை: “நீங்கள் சிங்கப்பூரின் குடியுரிமை பெற்று இந்நாட்டுக் குடிமக்களாகவே வாழ்வதே சிறப்பு” என்று கூறியதையும், அதையே பிறகு வந்த அறிஞர் அண்ணா கூறியதையும், அந்த குடியுரிமையில் பேதம் காட்டாது, பெரும்பான்மை_ சிறுபான்மை என்று வேற்றுமைப்படுத்தாது, சம வாய்ப்பளித்த முன்னாள் பிரதமரும், புதுமை சிங்கப்பூரின் புத்தாக்கத் தந்தையுமான லீக் வான்யூ என்றெல்லாம் கூறி, நமது ஆய்வு நூலான ‘கீதையின் மறுபக்கம்’ என்ற நூலின் இரண்டாம் பதிப்பில் லீக் வான்யூ அவர்கள் தமக்கு மதப்பற்று கிடையாது; ஆத்மாவில் நம்பிக்கை கிடையாது என்று குறிப்பிட்ட துணிச்சல் மிகுந்த கருத்தை இணைத்துள்ளோம் என்று கூறினேன்.

விழாக்குழு செயலாளரும், சீரிய தமிழ்ப் பற்றாளருமான தமிழ்மறையான் அவர்கள் நன்றி கூறினார்.
28.11.2002 அன்று சென்னை திரும்பினேன். தோழர்களும் பொறுப்பாளர்களும் வரவேற்றனர்.பேராவூரணியில் 8.12.2002 ஞாயிறு காலை 10:00 மணிக்கு நடேசகுணசேகரன் திருமண மண்டபத்தில் அம்மையாண்டி மு.ந. வைத்தியநாதன்  வை. முனியம்மாள் ஆகியோரின் செல்வன் வை. சிதம்பரம் (பேராவூரணி நகரத் தலைவர் தி.க.) அம்மையாண்டி மு.சி. கருப்பையா  கனகம்பாள் ஆகியோரின் செல்வி க. முத்துலட்சுமி ஆகிய இருவரின் இணையேற்பு விழாவை நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.

அன்று மாலை 6:00 மணிக்கு பேராவூரணி சுயமரியாதைச் சுடரொளிகள் வி.எஸ். குழந்தை, அ. சாமுவேல் நினைவரங்கத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பக வளர்ச்சிக்காக எமது எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. எடைக்கு எடை நாணயம் பெற்றுக்கொண்டும் அரு. நல்லதம்பி அவர்களின் ‘மனநோய்’ எனும் நூலை வெளியிட்டும் சிறப்புரையாற்றினோம்.

உரத்தநாட்டில் 9.12.2002 திங்கள் முற்பகல் 11:00 மணிக்கு உரத்தநாடு ராயர் தெருவில் உள்ள எல்ஜி.வி.கே. திருமண அரங்கத்தில் பாளம்புத்தூர் எம். ரெங்கசாமி  – தனலட்சுமி ஆகியோரின் செல்வன் எம்.ஆர். சரவணன், பூவத்தூர் கோ. அரங்கசாமி – வாசம்பாள் ஆகியோரின் மகள் அரங்க ராதிகா இவர்களின் இணையேற்பு ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம்.

திருச்சியில் 9.12.2002 திங்கள் அன்று மாலை 6:30 மணிக்கு ஜென்னிஸ் ரெசிடென்சி ஓட்டலில் அமைந்துள்ள கிறிஸ்டல் அரங்கத்தில் திருச்சிராப்பள்ளி லயன்ஸ் சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்திய நிகழ்வில் ‘‘உயர்நோக்கு உன்னதப்பணி’’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினோம்.

விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளரும் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியுமான திண்டிவனம் து. வாசுதேவன் (73) அவர்கள் (12.12.2002) அன்று மறைவுற்றார். மாலை 4:00 மணியளவில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.

டில்லியில் டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் வழக்குரைஞர்கள் மாநாட்டில் பங்கேற்ற மதுரை வழக்குரைஞர் கி. மகேந்திரன் தலைமையில் 19.12.2002 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் டில்லி புறப்பட்டனர். அவர்களை நாம் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தோம்.இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மாவ்லங்கர் அரங்கில், (2002) டிசம்பர் 21, 22 சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நடைபெற்ற சமூகநீதிக்கான வழக்குரைஞர்கள் கருத்தரங்கு, செறிவான எண்ணங்களை உணர்வுப்பூர்வமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் பகிர்ந்துகொண்ட ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக வழக்குரைஞர்கள் மதுரை கி. மகேந்திரன், சென்னை த. வீரசேகரன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டோம். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து சுமார் 30 பேரும் மற்றும் தென்நாடு, வடநாடு முதலிய பகுதிகளிலிருந்து 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
முதல்நாள் முற்பகலில், கருத்தரங்கை மத்திய சமூகநீதி அமைச்சர் சத்தியநாராயண் ஜாட்டியா தொடங்கி வைத்து, நலிந்த பிரிவினரின் உயர்வுக்கு, அமைப்பு முறையில் வழக்குரைஞர்கள் உழைக்க
முன்வந்ததை வரவேற்றார். சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றத்திற்கு ஓர் அத்தியாவசியத் தேவை என வற்புறுத்தினார்.
முன்னதாக, வந்திருந்தோர் அனைவரையும், சமூகநீதிக்கான வழக்குரைஞர் பேரவையின் செயலாளரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான ஏ. சுப்பராவ் வரவேற்றுப் பேசினார்.

முதல்நாள் நிகழ்விற்கு, பெங்களூர் மூத்த வழக்குரைஞரும், கருநாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு அமைந்த முதல் ஆணையத்தின் தலைவருமான எல்ஜி. ஹாவனூர் தலைமை தாங்கினார். ஜாதி, சமூக முறையில் பிரிந்திருக்கும் சமுதாயத்தில், சமூகநீதியின் தேவையை அறிந்து ஆட்சி நடக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் மேல் ஜாதியாரின் ஆதிக்கம் நிலவுகிறது. ஆங்கிலேயரின் அரசி
யல் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் எவ்வாறு வழக்குரைஞர்கள் விடுதலைப் போரில் முன்னின்றார்களோ அதைப்
போன்றே, சமூக அநீதியை எதிர்த்து, அதிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிக்க வழக்குரைஞர்கள் முன்னணியில் நிற்கவேண்டும் என ஹாவனூர் அழைப்பு விடுத்தார். உச்சநீதிமன்றத்தின் முடிவுகள் நாட்டின் சட்டங்களாகின்றன. அப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஊழலும், வகுப்பு உணர்வும் அற்றதாக இருக்கவேண்டும். நீதிமன்றம் இப்பொழுது, சட்டசபைக்கும், நிருவாகத்திற்கும் உள்ள அதிகாரங்களைத் தன்னிடம் எடுத்துக்கொள்ளும் போக்கு நிலவுகிறது. அது நல்லதல்ல. நிருவாகச் செயல்களையும், சட்டங்களையும் மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு வலிமையும், அதிகாரமும் பெற்ற மேல்மட்ட நீதிமன்றங்கள், நம்முடைய உரிமைகளையும்,தகுதிகளையும் மதிக்கவேண்டும்; இல்லையெனில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் நம்பிக்கையை அவை பெறமுடியாது என ஹாவனூர் தெரிவித்தார்.


எனது உரையில், உயர்ஜாதியார் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஹாவனூர் அவர்களின் கருத்தை வரவேற்றோம். சார்புநிலை நீதித்துறையில் இடஒதுக்கீடு உள்ளது போன்றே, உயர்நிலை நீதிமன்றங்களிலும் அந்த முறையைப் பின்பற்றினால்தான் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயம் கிடைக்கும். இதுவரை இடஒதுக்கீடு இல்லை; மேல் ஜாதியினரே மிகப் பெரும்பாலான நீதிபதிகளாக உயர்மட்டத்தில் இருந்தனர். ஆனால், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி கே. ராமசாமி அவர்கள் அளித்த ஒளிமிக்க தீர்ப்புகளைப் போன்று அளித்தவர்கள் எத்தனை பேர் எனக் கேட்டோம். தம்பிக்கு, 60 ஆண்டு நிறைவைக் குறிக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடந்தபொழுது, தமது வயதை 60க்குக் குறைவாகக் காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திர அய்யரின் தகுதியும், திறமையும் என்ன என வினவினோம். சமூகநீதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பது, இரக்கத்தின்பாற்பட்டது அன்று, சமஉரிமையின்பாற்பட்டது(not charity, but parity) என விளக்கினோம். முன்னாள் நீதிபதி ஓ. சின்னப்ப ரெட்டி ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டது போன்று, ஏகலைவர்களின் கட்டை விரலைத் துரோணாச்சாரிகள் வாங்கிய காலம் மாறிவிட்டது; புது உலகில் அனைவருக்கும் வாய்ப்புகள் சமஅளவில் வேண்டும் என வற்புறுத்தினோம்.

சமூகநீதியைக் கோருவது, அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோருவதாகும். அரசியல் சட்ட முகப்புரை
யிலும், 38ஆம் சரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதிப் பாதையில் எவ்வளவு தொலைவு பயணம் செய்துள்ளோம் என்பதைப் பொறுப்புடன் கவனிக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்குச் சரியாக விளக்கம் அளித்து அதை நடைமுறைப் படுத்துவதற்கு மாறாக, அதற்குத் தவறான விளக்கம் தந்து, நமது உரிமைகளைப் பறிக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியும், இந்நிலையை மாற்றியமைக்கும் பொறுப்பு வழக்குரைஞர்களுக்கு உண்டு என்பதையும் நினைவுபடுத்தினோம்.சிறந்த பகுத்தறிவாளரும், தேர்ந்த திராவிடஇயக்கத்தவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான இரா. செழியன் பேசுகையில்,இந்தியச் சமூக அமைப்பில், ஒருவன் எந்தளவிற்கு உழைக்கிறானோ அந்தளவிற்குச் சமூக அந்தஸ்தில் தாழ்த்தப்படுகிறான் என்றார். டாக்டர் அம்பேத்கர் மாமேதையாக இருந்தும், அவர் காலத்தில், இந்திய மேல் ஜாதியார் அவரைப் பொருட்படுத்தாமலேயே நடத்தினர் என்பதை நினைவு கூர்ந்தார். மக்களை முன்நடத்திச் செல்வதில் வழக்குரைஞர்களுக்கு முக்கியப் பங்குண்டு. மக்களை மதியாத நீதிமன்றத்தை மக்கள் மதிக்க மாட்டார்கள். மேல் மட்டத்தாரின் சார்பாக நீதிமன்றத்தின் பரிவு இருக்கக்கூடாது; மனித உரிமைகளைக் காக்கும் உணர்வுடன் அது செயல்பட வேண்டும் என செழியன் கேட்டுக்கொண்டார்.

மாற்றத்தை விரும்பாத பிற்போக்குவாதிகள், மக்கள் நாயக மரபுகளை மாற்றும் சதி வேலையில் ஈடுபட்டிருப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் எச்சரித்தார். வளர்ச்சியைத் தடுக்கவும், நாட்டின் நிலைத்த தன்மையைச் சிதைக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த மத்திய அரசுப் பதவிகளுக்கான இடஒதுக்கீடு, நீதிமன்றத்தின் முயற்சியால் நடைமுறைக்கு வரவில்லை; மக்களின் எழுச்சியினால் நடைமுறைக்கு வந்தது என்பதை எடுத்துக்காட்டினார். புதிய சமுதாயம் உருவாகும் வகையில் முறைப்படியான மாற்றம் தேவை. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிந்து நிற்கிறார்கள். அதுவே அவர்களின் நலிவுக்குக் காரணம். இந்தியா விடுதலை பெற்ற பின்பும் அதன் தலைமை மேல்ஜாதியாரிடமே இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கவேண்டியது உடனடித் தேவையாகும். அதே நேரத்தில், அந்த ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகப் பிரிவினருக்கும் உரிய பங்கு தந்தே ஆகவேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடு என்பது இன்றைய போக்கில் இன்றியமையாத் தேவை என்பதை நினைவுபடுத்தினார் சந்திரஜித்.

கருநாடக மாநிலத்தில் அமைக்கப் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்றின் தலைவரும், மூத்த வழக்குரைஞரும், பெரியார் பற்றாளரும், பேராசிரியருமான ரவிவர்ம குமார், எஸ்.சி., எஸ்.டி., பி.சி. ஆகிய நலிந்த பிரிவைச் சார்ந்த வெகுஜன மக்கள் 80 சதவிகிதத்திற்கு மேலாக இந்திய மக்கள் தொகையில் இருக்கிறார்கள் எனத் தமது உரையைத் தொடங்கினார். சமூகநீதிக்கான கடமைகளைச் செய்ய வழிவகுக்கும்(Enabloing)  அரசியல் சட்டக் கூறுகளை வீரமணி அவர்கள் கூறினார். அத்துடன், 335ஆம் சட்டப் பிரிவின்படி, சமூகநீதிக் கடமையைக் கட்டாயம் ஆற்றவேண்டியதும் (mandatory)அரசின் பொறுப்பு ஆகும். இவ்வாறு வழிவகுக்கும் சட்டப் பிரிவுகளையும், கட்டாயப்படுத்தும் பிரிவுகளையும் பொருட்படுத்தும் வகையில் உயர்மட்ட நீதிமன்றம் செயல்பட்டால் மட்டுமே பங்குபெறு மக்களாட்சி (Participatory democracy)  மலருமென்றார்.

இரண்டாம் நாள் நிழ்ச்சியிலும் கலந்துகொண்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைக் குறித்து உரையாற்றிய ரவிவர்ம குமார், மேல்மட்ட நீதிமன்ற முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பது ரகசியமானதாகவே இருக்கிறதென்றார்.
மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எஸ். மிஸ்ரா, நீதிபதிகளை நியமிப்பதில் நீதிபதிகளே முதன்மை அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்; ஆனால், அவர்கள் முதன்மையை நாடவேண்டியது, நேர்மையான, நியாயமான, நடுநிலையான,சார்பு நிலையற்ற வகையில், ஈடுபாட்டுடன் சமூகநீதியை நிலைநாட்டவேண்டிய காரியம்
ஆகும். 1993இல் உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதிகளின் மாநாடு நடந்தது. அதில், சமுதாயத்தின் வெவ்வேறு பிரிவினரும் இடம்பெறும் வகையில் மேல்பட்ட நீதிமன்ற நியமனம் அமையவேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு ஏற்பட்டது. நீதிபதிகளின் நியமனத்தில் செல்வாக்கு வாய்ந்தவர்களின் அழுத்தம் (செல்வாக்கு) முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் ஆகியோரிடையே அப்படிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் இல்லை. நீதிபதிகளை நியமிக்கும் பொறுப்பில் முதன்மையிடத்தைப் பெற முயல்வதற்கு மாறாக, அந்தப் பொறுப்பில் இருந்து முதன்மை நீதிபதிகள் விலகியிருக்கவேண்டும். நீதிபதி எவரும் தனக்குத்
தானே நீதிபதியாக இருக்கக்கூடாது. நீதியைஅளிக்கும் முறையில், பொதுமக்களுக்குப்பதில் கூறும் (Public accountability) தன்மை இடம்பெறவேண்டும். நீதிபதிகளாக நியமனம் பெற இருப்பவர்களின் வாழ்க்கைக் குறிப்பை வெளியிட வேண்டும். நீதிபதிகளின் நியமனத்தில் பிரதமரோ, முதலமைச்சரோ, முதன்மை நீதிபதிகளோ முன்னுரிமை பெறக்கூடாது; விரிவான அளவில் ஆலோசனை நடத்தி அவர்களை நியமிக்கவேண்டும் என்றார்.’’

https://unmaionline.com/images/magazine/2023/feb/1-15/23.jpg

கேரளம், மகாராட்டிரம் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவரும், உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருப்பவருமான கே. சுகுமாரன் உரையாற்றுகையில், சமூகநீதியைத் தருவதில் பிரிட்டிஷ் ஆட்சியின்பொழுது காட்டிய ஆர்வம், இப்பொழுது இல்லை என்றார். அரசியல் சட்டப்படி, நீதிபதிகளை நியமிக்கும்பொழுது, தலைமை நிருவாகி (பிரதமர் அல்லது முதல்வர்) முதன்மை நீதிபதிகளைக் கலந்து ஆலோசிக்கவேண்டும் (Consult). இந்த விதியை, இரண்டாம் நீதிபதிகள் வழக்கு (Second Judges Case)மாற்றிவிட்டது. அதில், ‘‘கலந்தாலோசித்தல்’’ என்பதற்கு, ‘‘ஒத்திசைவு’’ (Concurrence)என்ற தவறான விளக்கத்தைத் தந்ததுதான் அதற்குக் காரணம். தகுதியான (qualified) ஒருவர் இருக்கும்பொழுது, அவரை நியமிக்க மறுத்து, இந்தியச் சமுதாயத்தில் பெருமளவில் இருப்பவர்களை உயர்நிலை நீதிமன்ற நியமனத்திலிருந்து விலக்குவது முறையன்று. வாய்ப்பு இல்லாமையைத் திறமை (merit) இன்மையாகக் காட்டுகிறார்கள் என்றார் சுகுமாரன்.


ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சிங், சரியான நேரத்தில்,சரியான பாதையைக் காட்டுவதற்கு, சமூக நீதிக்கான வழக்குரைஞர்கள் பேரவை நடத்தும் கருத்தரங்கைப் பாராட்டினார். அமைப்பு முறையும், செயல்முறையும் சரியாக இருந்தாலும், சுயநல மரபைக் கட்டிக் காப்பவர்கள் அவற்றைக் கெடுத்து விடுகிறார்கள். இடஒதுக்கீட்டு இடங்கள், அவை அல்லாமல் அனைவருக்குமான
இடங்கள் என்ற இரு பிரிவுகள் இருக்-கின்றன. தேர்வில் அனைவருக்குமானபொதுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை, இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கும் முயற்சி அத்தகைய சுயநலமிகளால் கையாளப்படுகிறது. சிறந்த இலக்குகளைப் பெறுவதற்கான நல்ல அமைப்புகள் இருந்தாலும் சுயநலமிகள் உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அந்த இலக்குகளைத் தோல்வியடையச் செய்துவிடுவார்கள்.


மூத்த வழக்குரைஞர் கேசரி சிங் குஜ்ஜர், சமூகநீதி இலக்கை நிலைநிறுத்தப் பொதுமக்களின் விழிப்புணர்வு தேவை என்றார்.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் டாக்டர் கே.எஸ். சவான் கருத்தறிவிக்கையில், வெவ்வேறு வகையாகப் பிரிந்து கிடக்கும் சமுதாய வாய்ப்புக் கேடுகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்களிடையே ஒற்றுமையும், நல்லெண்ணமும், நம்பிக்கையும் தேவையென்றார். அடுத்து நடைபெறவிருக்கும் கருத்தரங்கில் மேலும் அதிக வழக்குரைஞர்கள் பங்கேற்கும் வகையில் முயலப் போவதாக அறிவித்தார்.
முன்னாள் கருநாடக மாநிலக் கல்வியமைச்சர் சிவமூர்த்தி பேசுகையில், சமுதாயத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களை ஒதுக்கித் தள்ளுவதிலேயே பார்ப்பன மேல்ஜாதியார் கருத்தாக இருப்பதாகக் கூறினார். சமூகநீதிப் போராட்டத்தில் எந்நேரத்திலும் சிறை செல்லத் தயாராக இருந்த பெரியாரைப் போல் சேவை செய்வோர் தேவை என்றார். நீதிமன்றத்தின் அநீதியைக் கண்டிப்பதில் அவரைப்போல் துணிவு காட்டவேண்டும் என உரைத்தார்.
முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த ரயில்வே இணையமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா, ஆந்திர மாநிலத்தில் நடந்துவிட்ட விபத்தின் காரணமாக அங்கு சென்றுவிட்டார். அவருடைய உரை வாசிக்கப்பட்டது. எஸ்.சி., எஸ்.டி., ஆகியோர் இடஒதுக்கீடு பெற அண்ணல் அம்பேத்கர் செய்த சேவையைப் போற்றினார். சட்டசபைகளிலும், நிருவாகத்திலும் சிறிது சமூகநீதி கிடைத்தாலும், நீதிமன்றங்களில் அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதைத் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
(நினைவுகள் நீளும்…)