சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது காவல்துறையா? கருப்பண்ணசாமியா?

2023 கட்டுரைகள் பிப்ரவரி 1-15, 2023

– கெ.நா. சாமி

நம் சிந்தனையில் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது 18.1.2023 தேதியிட்ட ஆனந்த விகடனில் ‘இன்பாக்ஸ்’ பகுதியில் வந்துள்ள ஒரு செய்தியே. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் ‘வண்டிக் கருப்பண்ணசாமி’ கோயில் உள்ளதாகவும், வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனங்கள் ஓட வேண்டும் என்பதற்காக நேர்த்திக் கடனாக ஆடுகள் பலியிடப்பட்டு வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது என்றும் கூறுகிறது.
அதேமுறையில் திண்டுக்கல் காவல்துறை வாகன ஓட்டிகள் ஒன்று சேர்ந்து 20 ஆடுகள் வெட்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனராம். வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றால் ஆண்டு தோறும் இதைச் செய்கின்றனர் என்றாகிறது அல்லவா?. அப்படியானால் அங்கு வாகன விபத்துகளே நடப்பதில்லையா? அப்படி நடக்குமானால் கருப்பண்ணசாமி இவர்களின் பலியிடுதலிலும், வழிபாட்டிலும் திருப்தியடையவில்லை என்று பொருளா? அந்தப் பகுதி காவல்துறை வாகன ஓட்டிகளில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற மதத்தினர் யாரும் இல்லையா? இருந்தால் அவர்களும் இவர்களின் வழிபாட்டில் கலந்து கொள்கின்றனரா? அல்லது அவர்கள் தனியாக தங்கள் கடவுள்களுக்கு இதே கோரிக்கையை வைத்து வழிபாடு நடத்துகின்றனரா என்பன போன்ற கேள்விகள் எழுவது இயல்புதானே!

ஓட்டுநர்கள் தாங்கள் கவனமாக வாகனங்களைச் செலுத்தும் திறமையில் நம்பிக்கை வைக்காமல் கருப்பண்ணசாமியைத் துணைக்கழைப்பது கேவலமாக இல்லையா? கருப்பண்ணசாமி என்ன விபத்துகளைத் தவிர்க்கும் வித்தையில் தேர்ந்த வித்தகரா? சில ஆன்மிகப் பத்திரிகைகளில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு கடவுள் என்று செய்தி வெளியிட்டு மக்களை மூடநம்பிக்கையினின்று விடுபட முடியாமல் செய்து, தங்கள் வியாபார உத்தியால் பணம் பண்ணுகின்றனவே அதைப்போல் கருப்பண்ணசாமிக்கு வாகன விபத்து காப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதா என்றும் கேட்கத் தோன்றுகிறதே! ஏதோ ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் லாரிகளின் முன் தொங்கவிடப் பட்டிருக்கும் எலுமிச்சைப் பழங்கள் குறித்து கேலியாகவும் பகுத்தறிவுச் சிந்தனையுடனும் “அடப்பாவிகளா! லாரியில் உள்ள ஆயிரம் என்ஜின் (இயந்திரம்) பாகங்களால் வண்டி ஓடுகிறதா? இல்லை எலுமிச்சை பழங்களால் ஓடுகிறதா’’ எனக் கேட்டதுதான் நமது நினைவுக்கு வருகிறது.

மேலும் வடமதுரை காவல்நிலையம் சார்பில்
புத்தாண்டையொட்டி இந்த ஆண்டு கொலை, கொள்ளை திருட்டுச் சம்பவங்கள் ஏதும் நடக்காமலிருக்க வேண்டி அதே கருப்பண்ண சாமிக்கு கிடா வெட்டி வழிபாடு நடத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. நாடெங்கும் உள்ள கோயில்களில் அன்றாடம் சிலை திருட்டுகளும், உண்டியல் உடைப்புச் சம்பவங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளனவே!

அந்தக் கடவுள்களால் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை, தங்கள் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லையே! திருப்பதி வெங்கடாசலபதியின் உண்டியலுக்கே சிறப்பு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறதே! ஆக, கடவுளின் உண்டியலுக்கே காவல்துறையின் காவல் தேவைப்படும்போது, அந்தக் கடவுளைத் தங்கள் காவல்நிலைய எல்லைக்குள் களவு நடக்காமலிருக்க வேண்டுவது அறியாமையா? ஆன்மிகமா? அல்லது ஆன்மிகம் என்பதே அறியாமைதான் என்பதைப் பறை சாற்றுகின்றனரா?
ஆண்டு முழுதும் கொலை நடக்காமலிருக்க கருப்பண்ணசாமியை வேண்டி கிடா வெட்டியவர்களுக்கு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் என்பவர் அந்தக் கோயிலில் வைத்தே கொலை செய்யப்பட்டபோது வரதராஜப்பெருமாள் அவரைக் காப்பாற்ற முடியவில்லையே! அவரைவிட பெரிய கடவுளோ இந்தக் கருப்பண்ணசாமி?

காஞ்சி தேவநாதன் கருவறையையே தன் காமக் களியாட்டக் கூடமாக்கிக் கொண்டிருந்தானே, அவனை அந்தக் கடவுள் தடுத்ததா? மக்கள் காவல்துறையை நம்பியிருக்கின்றனர். அந்தக் காவல்துறை கடவுளை நம்பியிருந்தால் மக்கள்பாதுகாப்பு என்னாவது? தனிப்பட்ட நம்பிக்கைகள் அரசு ஊழியர்களின் செயல்பாட்டில் கலப்பது கண்டிக்கத்தக்கது; களையப்படவேண்டியது. அரசு இத்தகைய செயல்பாடுகளைத் தடுத்திட, உடன் கவனம் செலுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் அந்தக் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு, அவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து,மதம் கடந்து, ஜாதி கடந்து சிறிதளவேனும் பகுத்தறிவுச் சிந்தனையோடு செயல்பட வேண்டுமென வேண்டு
கோள் வைப்பது நம் கடமையாகிறது.