ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் டிசம்பர் 16-31, 2023
கிள்ளிக்கூட தராத கொடுமை!
1. கே : கல்விக்கடனைக் கட்டாயமாக வசூலிப்பதும், கார்ப்பரேட்டுகளின் லட்சக்கணக்கான கோடிக்கடனைத் தள்ளுபடி செய்வதும் எவ்வகையில் சரி? உச்சநீதிமன்றம் தலையிட முடியாதா?
– சுனில்குமார், செங்கல்பட்டு.
ப : உச்சநீதிமன்றமோ, உயர்-நீதிமன்றமோ அரசுகளின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்பது சட்டமரபு. மக்கள் மன்றத்திடம் பரப்புரை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும்.
மக்கள் போராட்டத்திற்குத் தலைவணங்காத அரசுகள் வரலாற்றில் நிலைத்தது இல்லை; நீடித்தது இல்லை.
2. கே :  உச்சநீதிமன்றம் சொன்ன பின்னரும் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை ஆளுநர் ரவி அனுப்பிவைத்தது அவமதிப்புக் குற்றமாகாதா?
– ராஜன், திருச்சி.
ப : அடுத்த வாய்தாவிற்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் முடிவுக்காக_ தீர்வுக்காகக் காத்திருப்பதே உரிய முறை. வழி பிறக்கும். ஏற்கெனவே முந்தைய தீர்ப்பில் குறிப்பிட்ட கருத்துகள் இருக்கின்றன.
3. கே :  இந்தியா கூட்டணி ‘பணால்’ என்று தலைப்புச் செய்தி போட்டு, அற்ப மகிழ்ச்சி அடையும் பார்ப்பனப் பத்திரிகை பற்றித் தங்கள் கருத்து என்ன?
_ பார்வதி, வேலூர்.
ப : அவற்றுக்குக் கண்டனம் தெரிவிப்பதைவிட, உதைத்த காலுக்கு முத்தம் தரும் சிலர் இருப்பதால் இப்படி ஒரு ஆரிய ஆணவம். காலமும் மக்களும் புத்தி புகட்டுவார்கள்_ தேர்தல் மூலம்.
4. கே :  அண்மையில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் பி.ஜே.பியைவிட காங்கிரஸ்தான் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. வென்ற இடங்களைவிட வாக்கு சதவிகிதம் தானே நாடாளுமன்றத் தேர்தலுக்கு உதவும்?
– வெள்ளையன், ராணிப்பேட்டை
ப : இது போன்று இன்னும் கூடுதல் பிரச்சாரச் சரக்குகளும் கைவசம் உள்ளன-! பதுங்கிப் பாயும் மக்கள் ‘இந்தியா’ முழுவதிலும் உள்ளனர்!
5. கே : கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம் குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்று தீர்ப்புக் கூறியுள்ளது ஏற்புடையதா?
– ஜானகிராமன், வண்ணாரப்பேட்டை.
ப : அங்குள்ள சட்டம் மாற்றப்பட-வில்லை என்பதால் இப்படி ஒரு ‘சட்டபூர்வ’ தீர்ப்பினைத் தந்துள்ளது போலும்!
6. கே : மாநிலங்களில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களுக்குத் தீர்வும் நிவாரணமும் தரும் பெரும் பொறுப்பு ஒன்றிய அரசுக்கு சட்டப்படியுள்ள நிலையில், தன் கடமையைத் தட்டிக்கழிப்பது சரியா?
– வெண்ணிலா, குரோம்பேட்டை.
ப : பச்சையான ஓரவஞ்சனை. வஞ்சிக்கப்படுகிறது தமிழ்நாடு. அதன் பதில் தேர்தலில் தெளி-வாகக் காட்டும். அள்ளித் தரவேண்டாம்; சரியாக கிள்ளிக்கூடத் தரவில்லையே! கொடுமை அல்லவா?
7. கே : பிற்படுத்தப்பட்டோருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உரிய சதவிகிதம் இடஒதுக்கீடு பெறவும், உயர் வகுப்பு ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவிகிதத்திலிருந்து குறைக்கவும் தனியே சட்டப் போராட்டமும், மக்கள் போராட்டமும் உடனடித் தேவையல்லவா?
– இளங்கோவன், வேளச்சேரி.
ப : பொதுத் தேர்தலை ஒழுங்கான விழிப்புணர்வு மேடையாக்குவதே இனி நமது ஒற்றை அஜெண்டாவாக இருக்க வேண்டும்! ♦