சிறுகதை

ஜூலை 16-31

தவத்திரு முருகானந்த சுவாமிகளின் மருத்துவம்

– மே.அ.கிருஷ்ணன்

தவத்திரு சுத்தானந்த சுவாமிகளின் கலை அறிவியல் கல்லூரியில், மாணவர்களின் முற்றுகைப் போராட்டம் மூன்றாம் நாளாக நீடித்தது! கல்லூரியின் பரந்த வளாகத்திலும் அதையொட்டிய நான்கு வழிப்பாதைகளிலும் மாணவர் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல் துறையினர் பெரும் சிரமப்பட்டனர்.

முதல் நாள் இன்ஸ்பெக்டரின் சமாதானத்தையோ, இரண்டாம் நாள் டி.எஸ்.பி.யின் வேண்டுகோளையோ, ஏற்காமல் மாணவர்கள் ஓயாமல் ஒலி முழக்கத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அய்நூறுக்கு மேற்பட்ட மாணவியரும் பங்கேற்றதால் போராட்டம் வலுத்தது.

எம்.எஸ்ஸி., இரண்டாம் ஆண்டு படிக்கும் சித்ரகலா என்ற மாணவி, இரவு 8.30 மணிக்கு விடுதியிலிருந்து கேன்டினுக்கு செல்பேசியில் பேசிக் கொண்டே சென்றதால், அருகே லிப்ட்டுக்காக வெட்டப்பட்ட நூறடி பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு பலர் ஓடி வந்து பள்ளத்திலிருந்து மீட்டபோது அவர் உயிர் நீங்கிவிட்டது. அருகில் செல்பேசி கிடந்தது இவ்வாறு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன.

சித்ரகலா படிப்பில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் கவனமாக இருப்பவள், எதையும் சிந்தித்துச் செய்யக்கூடிய பொறுப்பான பெண். அவள் செல்பேசி பேசிக் கொண்டே கவனக்குறைவாக லிப்டு பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கவே முடியாது.

இது விபத்து அல்ல, பெரும் சதி! சதிகாரர்கள் கல்லூரிக்குள்ளேயே இருக்க வேண்டும். அதை உடனே கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும். இதுதான் மாணவர்களின் மகத்தான கோரிக்கை.

மூன்றாம் நாள் காலை காவல்துறை ஜீப் வந்தது. எஸ்.பி. தரணி பாஸ்கர் கம்பீரமாக இறங்கினார். அவர் கல்லூரி மேல்திட்டில் நின்றவுடன் மாணவர்களின் ஆரவாரம்  அடங்கியது, அவர் பேசுவதைக் கவனமாகக் கேட்க முனைந்தனர்.

படிக்க வந்த இடத்தில் சித்ரகலா பரிதாபமாக இறந்தது உங்களை மட்டுமல்ல, என்னையும் மிகவும் பாதித்து விட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் ஒரு பெண்
இது விபத்தா? அல்லது சதியா? என்பதை ரெண்டு நாளில் கண்டுபிடித்துவிடுவேன். சதியாக இருக்குமானால் உங்கள் கண் முன்னாலேயே குற்றவாளிகளைக் கொண்டு  வந்து நிறுத்துவேன் இவ்வாறு சொன்னபோது மாணவர்கள் அத்தனை பேரும் கைதட்டி ஆரவாரித்தனர். கூட்டம் கலையத் தொடங்கியது.

கல்லூரி முதல்வர் ரங்கபாஸ்கர், தாளாளர் தவத்திரு. சிற்றம்பல அடிகளார் ஆகியோருடன் அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாணவியர் விடுதிக்குச் சென்றார் எஸ்.பி.
சித்ரகலா விபத்துக்குள்ளான லிப்டு பள்ளம், அவர் தங்கியிருந்த 12ஆம் அறை, விடுதியை அடுத்த முருகன் கோயில், கோயிலை ஒட்டியுள்ள சித்த வைத்திய இலவச மருத்துவமனை ஆகியவற்றையும் மிக கவனமாகப் பார்த்தார்.

என் ஃபிரண்ட் சித்ரா, டெய்லி நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியையும் தவறாம டைரியில் எழுதும் பழக்கம் உள்ளவள் என்று அவளது அறைத்தோழி அனிதா சொன்னவுடன் அவளது அறையிலிருந்த 2010, 2011 டைரியை எடுத்துக் கொண்டார் தரணி.

ஒரு தனி அறையில் மாணவர்கள் தனித்தனியாக தந்த தகவல்களை முறையாக பதிவு செய்து கொண்டார். விடுதி வார்டன் மாலதி, விடுதிக் காவலர் ஆபிரகாம், முருகன் கோயில் அறக்கட்டளைத் தலைவரும், இலவச சித்த வைத்திய மருத்துவமனை மருத்துவருமான முருகன் அடிமை தவத்திரு முருகானந்த சுவாமிகள், அவரது உதவியாளர் அமுதா, ஆகியோரிடம் விசாரனை நடத்தியவுடன் கல்லூரி வளாகத்தை மீண்டும் நோக்கினார்.

ஜீப்பில் ஏறும்முன் செய்தியாளர் ஒருவர், மேடம் எங்களுக்கு ஏதாவது செய்தி உண்டா?

உங்களுக்காகவே செய்தியைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

சித்ரகலா மரணம் சதிதான் என்பதற்கு, ஏதாவது தடயங்கள் கிடைத்ததா? என்று மற்றொரு நிருபர் கேட்டவுடன், தடயங்கள் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கான தகவல்கள் கிடைத்துவிட்டன என்று கூறிவிட்டு மெல்லச் சிரித்தவாறே ஜீப்பில் பறந்தார் எஸ்.பி.

ஹார்லிக்ஸ் கொண்டு வந்து வச்சு அரைமணி நேரமாச்சு… அதைக் கூட கவனிக்காம அப்படி அந்த டைரியில் என்னம்மா படிச்சிட்டிருக்கே அம்மா சொன்ன பிறகுதான் தரணி, சித்ரா டைரியிலிருந்து மீண்டார்.

அம்மா மூனு நாளைக்கு முந்தி சித்ராங்கிற பொண்ணு லிப்டு பள்ளத்தில் விழுந்து இறந்ததை டி.வியில் நாம பார்த்தோம் அல்லவா

ஆமா அந்தச் சம்பவத்தை நினைக்கவே கஷ்டமாயிருக்கு

அந்தப் பொண்ணு சாவதற்கு முன்னால் டைரியில் எழுதி வைத்த சில குறிப்புகள் இப்ப என் விசாரணைக்கு ரொம்ப உதவியாயிருக்கு அம்மா!

அப்போ அந்தப் பொண்ணு தவறுதலா லிப்டு பள்ளத்தில் விழலையா

அப்படித்தான் நினைக்கிறேன்… எல்லாத்துக்கும் நாளை விடிவு கிடைக்கும்  என்றார். ஹாஸ்டல் தனியறையில் விசாரணைக்குரிய ஏற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். வெளியில் செய்தியாளர்களும் மாணவர்களும் திரளாகக் கூடியிருந்தனர்.

சரியாக 11.00 மணிக்கு ஜீப் வந்தது. அறைக்குள் நுழைந்த தரணி முதலில் இலவச மருத்துவமனை உதவியாளர் திருமதி. அமுதாவை அழைத்தார். விதவைக்குரிய பழுப்புநிற ஆடை அணிந்த அந்தப் பெண்ணுக்கு வயசு முப்பது முப்பத்திரண்டு இருக்கலாம். பதட்டம் இல்லாம பவ்யமாக உள்ளே நுழைந்தார். ஆனால், அரைமணி நேரம் கழித்து வெளியே வரும்போது சோகமே உருக்கொண்டிருந்தார்.

அடுத்து விடுதி வாட்ச்மேன் ஆபிரகாமைக் கூப்பிட்டார்கள். ஒரு மணி நேரத்திற்குப் பின் வெளியே வந்தவரின் முகம் குப்பென வியர்த்தது!

கடைசியாக முருகன் அடிமை தவத்திரு முருகானந்த சுவாமிகள் உள்ளே போனார். முருக பக்தர்களுக்கே உரிய பச்சை வேட்டி கட்டி உடலை பச்சைத் துண்டால் போர்த்தியிருந்தார். அவர் நெற்றியில் திருநீற்றுப் பட்டை, பெரிய குங்குமம், நீண்டதாடி! வயது அறுபது இருக்கலாம். முருகா! என்று சொன்னவாறே எஸ்.பி. முன் அமர்ந்தார்.

நேத்து உங்களிடம் முருகன் கோயில் விபரத்தைக் கேட்டேன். இன்னிக்கு உங்க இலவச சித்த வைத்திய மருத்துவமனை பற்றி கேட்கப் போறேன்.

இந்தக் கேசுக்கும் அந்த மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் இருப்பதாலதான் கேட்கிறேன் என்றதும் சுவாமிகள் சற்று அதிர்ந்தார்.
மருத்துவமனைக்கு யார் யார் வருவாங்க.

சித்த வைத்தியத்தில் நம்பிக்கையுடைய தாய்மார்கள் குழந்தையுடன் வருவார்கள். கல்லூரி மாணவியர் சிலரும் வருவார்கள்.

வைத்தியம் பார்க்க வரும் மாணவியர் பெயரெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

வருகிற மாணவியர் அனைவரையும் என் மகள் போல் பாவித்து மருத்துவம் பார்ப்பேன். அவர்கள் பெயரைப் பதிவு செய்வதும், அவர்களுக்கு மாத்திரை கொடுப்பதும் என் உதவியாளர் அமுதாவின் வேலை…!

அந்த அமுதாவும் உங்களுக்கு மகள் மாதிரியா அல்லது வேறு மாதிரியா?

உங்க கேள்வி உங்களுடைய உயர் பதவிக்கு ஏற்ற மாதிரி இல்லையே! ஒரு துறவியிடம் கேட்கும் கேள்வியா இது

சுவாமி மன்னிக்கணும். காவி உடையில் கயமைத்தனம் பண்ணும் எத்தனையோ சாமியார்களை நானும் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்திருப்பீங்க.

அந்த போலித் துறவியர் வரிசையில் என்னையும் சேர்த்தது அருவருக்கத்தக்க விஷயம்! நாங்க முருக பக்தர்கள். முக்காலமும் அவனைச் சேவிக்கும் தவசிகள். சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றில் எங்க உணர்வுகளைப் பொசுக்கி வாழும் சந்நியாசிகள் என்று முருகானந்த சுவாமிகள் ஆத்திரத்தைக் கொட்டினார். அவர் முகத்தில் அனல் வீசியது.

நான் புடம் போட்ட தங்கம்  என நீங்க சொன்னால் போதுமா? மற்றவர்களும் சொல்ல வேண்டாமா?

மற்றவர்கள் சொல்வதும் சொல்லாததும் உங்களுக்கு எப்படி மேடம் தெரியும்? சரி அதை விடுங்கள், உங்க உதவியாளர் அமுதாவுக்கு நீங்கள் தரும் மாதச் சம்பளம்
அய்யாயிரம். இது தவிர வேறு ஏதாவது தருவீர்களா?
எதுக்குத் தரணும்

அந்தம்மா ஒரு விதவை! அவர்களது பெண் 10ஆம் வகுப்புப் படிக்கிறா. அந்தப் பெண்ணின் படிப்புச் செலவுக்கு, பிற செலவுக்கு நீங்கள் மேலும் அய்யாயிரம் கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன் உண்மையா?

இது சுத்தப் பொய்! யாரோ என் மீது பழி போடுவதற்காகச் சொன்ன கட்டுக்கதை! சுவாமி! நீங்க இப்பச் சொல்வதுதான் பொய்!

பெரியவர்களிடம் சலுகை பெறுவோரெல்லாம் ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய உரிமை இழந்து விடுவது வழிவழியாக இருந்து வருகிற நிலை என்பது உங்களுக்குத் தெரியும்! அமுதா உங்களிடம் கூடுதலாக தொகை பெற்று வருவதால், தேவைப்படும் போதெல்லாம் உங்களுக்குச் சுகம் தரும் கருவியாகவும் இருந்திருக்கிறாள். அதை முதலில் மறுத்தாள். நான் போட்ட கிடுக்குப் பிடியில் உண்மையைச் சொல்லிவிட்டாள்.

சாமியார் சொல்வதறியாது திகைத்தார். அவரது கண்கள் மிரண்டன.

வயிற்றுப் போக்கால் அவதிப்பட்ட சித்ரகலா உங்கள் மருத்துவமனையை நோக்கி ஓடி வந்தார். கதவு அடைக்கப்பட்டிருந்தது. மின்சாரத் தடையால் காலிங்பெல் ஒலிக்கவில்லை. உங்கள் அறையின் பின்புற ஜன்னல் திறந்திருந்தது. ஓடிப்போய் அமுதாக்கா! அமுதாக்கா! என்று நோயின் அவதியால் அலறி அழைத்தாள்! அப்போது நீங்களும் அமுதாவும் படுக்கையில்….

மேடம் இது அநியாயம்! அக்கிரமம்! இந்த மாதிரி பழி போடுவோரை முருகன் சும்மா விடமாட்டான்!

சுவாமி… கொஞ்சம் பொறுங்க நா சொல்லி முடிச்சிக்கிறேன்.

பயந்துபோன சித்ரா பயந்து செருப்பையும் போடாமல் ஓடிப்போய் விட்டாள்! அடுத்தநாள் அமுதாக்கா அமுதாக்கா என்று பின்புற ஜன்னலில் கூப்பிட்ட பெண் யார் என்று நீங்களும் அமுதாவும் கலந்து பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ஏதும் பேசாமல் சித்ரகலா செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்பியிருக்கிறாள்…

சித்ரகலா ஜன்னலில் கண்ட விஷயத்தை யாரிடமாவது சொல்லிட்டா நா உயிரோட இருக்க மாட்டேன் என்று கண்ணீர் விட்டு அமுதா அழுதபோது அவமானம் உனக்கு மட்டுமா! எனக்கில்லையா? கவலைப்படாதே! நா அதற்கு உடனே தீர்வு காண்கிறேன் என்று சொல்லி வாட்ச்மேன் ஆபிரகாமுக்கு போன் பண்ணி வரச் சொன்னீர்கள்.

யாருக்கும் சந்தேகம் ஏற்படாத முறையில் லிப்ட் பள்ளத்தில் இன்று இரவே சித்ரகலாவைத் தள்ளிவிட வேண்டும். அதற்கு உனக்கு நான் கொடுப்பது ரெண்டு லட்சம்!… இந்தா அட்வான்ஸ் அய்ம்பதாயிரம் என்று செக் எழுதிக் கொடுத்திருக்கீங்க, இத பாருங்க நீங்க கொடுத்த செக் என்று பேசி முடித்தார் தரணி பாஸ்கர்.

தவத்திரு முருகானந்தம் தலை தாழ்த்தி நின்றார். அவர் கையில் விலங்கு மாட்டப்பட்டது. ஆபிரகாம் வேறொரு வண்டியில் ஏற்றப்பட்டார்.

மேடம் நீங்க இதுவரைக்கும் காவியிலதான் போலியைக் கண்டுபிடிச்சீங்க, இப்ப பச்சையிலும் போலியைக் கண்டுபிடிச்சிட்டீங்களே என்று சொல்லி சிரிப்பை உண்டாக்கினார் ஒரு பெண் நிருபர்!

பச்சையா இருப்பதெல்லாம் கொடியல்ல. அதிலே பச்சைப் பாம்பும் இருக்கும் என்பதை மக்கள் எப்போது அறியப் போகிறார்களோ தெரியவில்லை என்று தரணி சொல்ல ஜீப் கிளம்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *