அய்யாவின் அடிச்சுவட்டில்…. – கி. வீரமணி

ஜூலை 16-31

திருவில்லிபுத்தூர் நகரமன்றத்தில் 27.7.1973 அன்று தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி…

இடிந்துபோன கட்டிடத்திற்கு சிமெண்ட் மேல் பூச்சுப் பூசியதால் மாத்திரம் பலனில்லை.  இடிக்க வேண்டியதை இடித்து, எரிக்க வேண்டியதை எரிக்க வேண்டும். சமுதாயத்தில் படிந்துள்ள மாசுகளைத் துடைத்தெறிய வேண்டும்.

சமுதாய வளர்ச்சிக்குப் பெரியாரின் தொண்டு அவசியம்.  மனிதன் மனிதனாக வாழ வேண்டும்-, மதிக்கப்பட வேண்டும் என்பதே பெரியாரின் கொள்கை. மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதே அவரது லட்சியம்.  தன்மான உணர்ச்சி மனிதனுக்குத் தான் இருக்கிறது- – சுயமரியாதை ஆறறிவு படைத்த மனிதனுக்குத்தான் இருக்கிறது.  மனித உரிமையை இழந்து,  புழுக்கள் போல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் லட்சோப லட்சம் மக்களின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.  அவரது போராட்டத்தில் ஓய்வில்லை – ஒழிவில்லை.

பெரியார் ஒரு தனி மனிதரல்ல, அவர் ஒரு சகாப்தம் என பேரறிஞர் அண்ணா கூறியது போல் தந்தை பெரியார் ஒரு நிறுவனம் – சரித்திரம் படைத்த தலைவர்- பொது வாழ்வில் சலிப்படையாமல் உழைக்கும் தீரர். எந்தத் தத்துவவாதியும் அவர் உயிரோடிருந்த காலத்தில் அவரது தத்துவங்களை உலகம் ஏற்றுக் கொண்டதில்லை.  ஆனால், பெரியார் விதைத்த விதைகள் – அவர் தூவிய கருத்துகள் அவரது கண் முன்னாடியே பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.  பெரியாரின் உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான் இன்றைய தமிழக ஆட்சி – பகுத்தறிவு ஆட்சி.

படிப்பறிவு வேறு – பகுத்தறிவு வேறு.  விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியர், தன் வீடுபோனதும் விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத மூட நம்பிக்கை கொண்ட சம்பிரதாயங்களை அனுஷ்டானம் பண்ணும் போக்கினைக் காண்கிறோம்.  இந்தச் சமுதாயப் புரட்டர்கள் நிறைந்த உலகிலே தனக்குச் சரியென்று பட்டதை தன்னந்தனியே நின்று உரக்கக் கூவியவர் பெரியார். பெரியாரின் கருத்துகள் உலகத்தின் எந்த மக்களுக்கும் பொருந்தியவை யாகும்- – ஏற்றுக் கொள்ளத்தக்கவையாகும்.  தனது உள்ளத்தில் உதிக்கும் கருத்தைத்தான் சொல்வாரே தவிர அவர் சொன்னார் இவர் சொன்னார் என மேற்கோள் காட்டிப் பேசமாட்டார்.

பெரியாரின் தத்துவங்களை பல அமெரிக்கப் பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.  இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் சமுதாயச் சீர்திருத்தத்தில் பெரியார் கொண்டுள்ள கருத்துகள் போல்- – புரட்சிகரமான செயல் திட்டங்கள் போல் வேறு எவரும் செய்ததில்லை என்பதை உலக வரலாற்றைப் படிக்குங்கால் காண நேரிடுகிறது.

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் அவரது கருத்தை எதிர்த்தவர்கள் இன்று ஏற்றுக்கொள்கிறார்கள்.  கடலூரிலே 50 ஆண்டுகளுக்கு முன் பெரியார் பேசிய கூட்டத்தில் கல் வீசப்பட்டது – செருப்பு எறியப்பட்டது.  பாம்புகளைத் தூக்கி வீசினர்.  இன்று அதே கடலூரில் தந்தை பெரியாருக்குச் சிலை எழுப்பப்பட்டிருக்கிறது.  அன்று எந்த இடத்தில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசினார்களோ, – சாணம் அடித்தார்களோ அதே இடத்தில் பெரியாருக்குச் சிலை அமைத்து,- தமிழக முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்கள். அன்று பாம்பை எறிந்த குற்றத்திற்குப் பரிகாரமாக 10 ஆயிரம் ரூபாயை அந்த மக்கள் அளித்தார்கள்.

திருச்சியில் பத்திரிகையாளர் நடத்திய வரவேற்பில் தான் எழுத்தாளனுமில்லை,  பேச்சாளனுமில்லை;  ஆனால், ஒரு கருத்தாளன் என்றார்;  95ஆவது பிராயத்தில் நாள்தோறும் இடையறாது பேசி வருபவர், தான் பேச்சாளனில்லை என்கிறார்; ஓய்வின்றி எழுதி வருபவர், எழுத்தாளனில்லை என்கிறார்.  ஆம்.  அவர் ஒரு கருத்தாளன்!  புரட்சிக்கரு பெறும் கருத்தாளர்.  அவரது கருத்துகளை இன்றைய பத்திரிகைகள் மூடி மறைத்து வருகின்றன.

பத்திரிகைகளை வகுப்புவாத அடிப்படையில் நடத்துகின்றனர்.  மேல்நாட்டு அறிஞன் பெர்ட்ரண்ட் ரசல் போல் தீவிரமான கருத்துகளைக் கீழை நாட்டில் சொல்லும் தலைவர் பெரியார் – மனிதாபிமானம் கொண்ட ஒரே தலைவர் பெரியார்.  தேசிய ஒருமைப்பாடு ஒருமைப்பாடு என்று கூக்குரலிடுபவர்கள் மக்களுக்குள் ஒருமைப்பாட்டைக் கொண்டுவர முயலுகிறார்களா? மண்ணுக்கு ஒருமைப் பாட்டை விரும்புபவர்கள் மனிதனுக்குள் ஒருமைப்பாட்டைக் கொண்டுவரவில்லையே.  அடிமைப்பட்ட மக்களின் பிரதிநிதியாக – ஒடுக்கப்பட்ட மக்களின் ஜீவநாடியாக- – தமிழக மக்களின் தானைத் தலைவனாக விளங்கும் தலைவர் தந்தை பெரியார்.  பெரியாரின் ஆயுள் நீண்டால்தான் தமிழர் சமுதாயத்தில் மறுமலர்ச்சி கிடைக்கும் என்று எடுத்துரைத்தேன்.

மாண்புமிகு ப. உ. சண்முகம் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது:  தந்தை பெரியார் அவர்களைப்பற்றி நான் சொல்லும் நிலையிலோ நீங்கள் கேட்கும் நிலையிலோ இல்லை.  வேண்டுமானால் அவர் யாரையாவது தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வைக்கலாம்.  வருங்காலத்தில், தமிழகத்தின் வரலாற்றை எழுதுகிறவர்கள் தந்தை பெரியார் அவர்களை யும், அறிஞர் அண்ணா அவர்களையும் மறந்துவிட முடியாது.

இந்த நாட்டில் அறிவுத் தாகம் எழுப்புவதற்காக பெரியார் அவர்களும் அண்ணா அவர்களும் பாடுபட்டார்கள்.  அந்தப் பணியை இந்த நூலகங்கள் செய்யவேண்டும்.  படிக்க வேண்டிய நூல்களைப் படிக்க வேண்டிய முறையில் சீர்தூக்கிப் படிக்க வேண்டும். அண்ணா அவர்களோடு சிறைச்சாலையில் 62 நாட்கள் கழித்து இருக்கிறேன்.  அந்த நேரத்தில்கூட அண்ணா சிறைச்சாலை நூலகத்தை இரவு பகல் என்று பயன்படுத்திக் கொள்வார்.

நூலகங்கள் தோன்றினால் மட்டும் போதாது;  இந்த நாட்டில் ஏழை எளியவனின் ஒவ்வொரு வீட்டிலும் படி ஏறி நூல்கள் சேர்ந்தாக வேண்டும் – அதற்கு இந்த நூலகங்கள் பெரிதும் பயன்பட வேண்டும்.  நூலகத்தில் இருக்க வேண்டிய நூல்கள் அலமாரியில் அழகாக அடுக்கப்பட மட்டும் பயன்படுவதாக இருக்கக் கூடாது.  கையில் எடுத்தால் அதைப் படிக்கத் தூண்ட வேண்டும். அத்தகைய நூல்கள் நூலகங்களில் இடம்பெற வேண்டும்.  அந்த வகையில் நூலக ஆணைக்குழு சட்டங்கள் திருத்தப்பட இருக்கின்றன.

தமிழகத்திலே ஒரு குறை, யாரும் தமிழகத்தின் வரலாற்றைத் தொடர்புபடுத்தி எழுதி முடிக்கவில்லை.  ஏதோ இங்கொன்று அங்கொன்றாக எழுதுகிறார்கள்.  வெளிநாட்டு வரலாற்றை எல்லாம் மொழிபெயர்க்கிறார்களே தவிர, சார்ந்த நாட்டின் வரலாற்றினை எழுதி முடிப்பதில் இந்நாட்டு ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை.

தமிழக அரசுதான் அதற்கும் முயற்சி எடுத்து இருக்கிறது- அது வெளியில் வரவும் இருக்கிறது என்பதாகக் குறிப்பிட்டார்கள். நான் என்னுடைய உரையில், குழந்தைப் பருவம் ஒரு சீரிய பருவம். அந்தப் பருவத்தைச் சேர்ந்தவர்களுக்கு  நூலகம் அமைப்பதில் அதிக கவனம் தேவை.  அவர்களுக்கு மூடநம்பிக்கை தரும் புத்தகங்களைக் கொடுத்து அவர்களைக் கெடுப்பதைவிட இத்தகைய நூலகங்கள் திறக்கப்படாமல் இருப்பதே மேல்.  குழந்தைகளுக்குச் சிறு வயதில் எதை ஊட்டுகிறோமோ அதுதான் பிற்காலத்தில் அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கும்.

ஜெர்மனியிலே இட்லர், குழந்தைகளின் கணக்குப் புத்தகத்தில் ஒன்றைப் புகுத்தினார். ஜெர்மனியரை அப்போது யூதர்கள் சுரண்டிக் கொழுத்துக் கொண்டு இருந்தார்கள்.  ஜெர்மனியர்களை அந்த யூதர்களுக்கு எதிராகத் தூண்ட வேண்டும் என்று கருதிய இட்லர், கணக்குப் புத்தகத்திலே ஒரு முறையைப் புகுத்தினார். ஒரு யூதன் ஒரு பொருளைப் பத்து ரூபாய்க்கு வாங்கி, அதைப் பதினைந்து ரூபாய்க்கு விற்றால் யூதன் அடித்த கொள்ளை எவ்வளவு? என்று மாற்றினார்.  கணக்குப்போடும் மாணவன் யூதன் அடித்த கொள்ளை அய்ந்து ரூபாய் என்று விடை எழுதுவான்.

இப்படி இளைஞர்கள் உள்ளத்தில் உணர்வை ஊட்டியதால்தான், ஜெர்மனியிலே யூதர்களின் சுரண்டல் முறியடிக்கப்பட்டது.  அதைப்போல்தான் இங்கும் இளைஞர்களுக்குத் தேவையான பகுத்தறிவு ஊட்டும் நூல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

ஏ.பி. ஜனார்த்தனம் எம்.எல்.சி. தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

நம் நாட்டில் குழந்தை எழுத்தாளர்கள் அதிகம் உருவாக வேண்டும். இந்த அரசுக்கு வலுவுள்ள நல்ல அதிகாரிகள் கிடைத்து இருக்கிறார்கள்.  அவர்களுள் ஒருவர்தான் நமது தில்லைநாயகம். எங்களிடத்திலே ஆற்றல் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டத்தான் இதைப் போன்ற இடங்களில் அவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

பெரியார் அவர்களின் கருத்துகள் வெள்ளோட்டம் போல பீறிட்டுக் கொண்டு கிளம்பும்.  அவற்றை முறைப்படுத்தி நம் மக்களுக்குத் தந்திட அண்ணா அவர்கள் நூல்களைத் தேடித் தேடிப் படித்துக் குறிப்பு எடுத்து நூல்களாக _- பேச்சுகளாக நமக்குத் தந்தார் என்று குறிப்பிட்டார்.  விழாவில் கழகத் தோழர்கள், தோழியர், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தோழர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆதரவு தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  30.8.73 வியாழன் இரவு 7.30 மணிக்கு கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாபெரும் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம் என்னுடைய தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.  கூட்டத்தில் அமைச்சர் ப. உ. சண்முகம் அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார்கள், ஏ.பி. ஜனார்த்தனம்  எம். எல். சி. தமது உரையில் தந்தை பெரியார் அவர்களது ஆதரவு இந்த ஆட்சிக்குக் கிடைத்து இருப்பது ஒரு பெரிய நல்வாய்ப்பாகும்.  இந்த ஆட்சி பெரியார் அவர்களின் கொள்கையில் நடைபோடும் ஆட்சி  என்று குறிப்பிட்டார்.  மழை காரணமாக அய்யா அவர்கள் பேச இயலவில்லை. கூட்டத்தில் நான் குறிப்பிட்டதாவது: தி.மு.க கூட்டத்திற்கு நான் தலைமை வகிக்கிறேன் என்றதும் சிலருக்கு ஆச்சரியம்!  சிலருக்கு வேதனை !!  வரலாறு தெரியாதவர்கள்தான் அப்படிக் கருதுவார்களே தவிர, தெரிந்தவர்கள் அப்படிக் கருதமாட்டார்கள்.

காரணம்,  அறிஞர் அண்ணா அவர்கள் தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று சொன்னதோடு மட்டுமல்ல – என் தலைவர் பெரியார் என்றும் குறிப்பிட்டார்கள். ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன்கூட அண்ணா அவர்கள் சந்தித்து மரியாதை தெரிவிக்கப்பட்ட தலைவர் பெரியார் அவர்கள் தான்.  ஆகவே, எந்த வழியில் பார்த்தாலும் தி.க.வும், தி.மு.கவும் இரண்டு நிலைகளில் இருந்து ஒரே இலட்சியத்திற்காகப் பாடுபடுகின்றன.  அவர்கள் அரசியலில் இருந்து கொண்டு பாடுபடுகின்றார்கள்.  நாங்களோ ஓட்டை எதிர்பார்க்காமல் தீவிரமான சமுதாயத் தொண்டு செய்பவர்கள்.

ஆட்சியிலே இருந்து கொண்டு தி.மு.க. பாடுபடுகிறது என்பது உண்மைதான் என்றாலும், ஆட்சியே அவர்களது இலட்சிய மல்ல!  ஆட்சியிலே இருந்து கொண்டு ஏதோ பல காரியங்களைச் செய்ய லாம் என்ற எண்ணத் தில்தான் ஆட்சிமன்றம் ஏறி இருக்கிறார்களே தவிர ஆட்சியே அவர்க ளுக்குச் சதமல்ல!  அண்ணா அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமது சாதனை யாக மூன்றைக் குறிப்பிட் டார்கள்.  ஒன்று, தாய் நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டி னோம்.  இரண்டா வது, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட சம்மதம் கொடுத்தோம்!  மூன்றாவது, இந்திக்கு இந்நாட்டில் இடம் இல்லை என்பதாகும் என்று குறிப்பிட்டார்கள்.  குறைந்த ஆட்சிக் காலத்திலேயே அண்ணா அவர்கள் இந்த மூன்று சரித்திரச் சாதனையைச் செய்து காட்டினார்கள்.  இந்தச் சாதனைகளை வேறு எந்தக் கட்சிக்காரர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் வேண்டாம் என்று ஒழித்துக்கட்ட முடியுமா?  அப்படி ஒழித்துக் கட்டிவிட்டு அவர்கள் இந்த நாட்டில் ஒரு நாளாவது ஆளமுடியுமா?

டாக்டர் கலைஞர் அவர்களும் தமது ஆட்சிக் காலத்தில் 114 வருடமாக உயர் நீதிமன்றத்தில் இல்லாத ஒரு சாதனையைச் செய்து காட்டினார்.  முதன் முதலாக ஜஸ்டிஸ் வரதராசன் என்ற தாழ்த்தப்பட்ட ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆக்கிக்காட்டி இருக்கிறார்.

அண்மையில் அளிக்கப்பட்ட குரூப் ஒன் சர்வீஸில் 22 பதவிகள்.  அனைத்தும் மிகவும் பின்தங்கிய வகுப்பாளருக்கே அளிக்கப்பட்ட சாதனையைக் கலைஞர் செய்து காட்டி இருக்கிறார்.

கூட்டத்தில், கடலூர் சண்முகம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் இராசாங்கம், கழகத் தோழர்கள், தி.மு.க தோழர்கள் உள்பட ஏராளமான பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள். 30.8.1973 – வியாழன் காலை 9.45 மணி அளவில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆயிரம் வைசியர் திருமண மண்டபத்தில் என்னுடைய அண்ணன் கி. தண்டபாணி எம்.சி. அவர்களின் மகள் தேன்மொழியின் திருமணம் நடைபெற்றது. விழாவில் தந்தை பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.  விழா சிறப்புடன் நடைபெற்றது.  விழாவிற்கு மாநில முழுவதிலுமிருந்து கழகத் தோழர்களும், நண்பர்களும் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

விழாவில் எனது மூத்த அண்ணன் கி.கோவிந்தராசன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்கள்.  விழாவில் அய்யா அவர்கள் அறிவுரை கூறுகையில், இதுவரை நடைபெற்று வந்த திருமணங்கள் எல்லாம் பெண் அடிமையை முக்கியமாக வைத்து நடைபெற்ற திருமணங்க ளாகும்.  இப்பொழுதுதான் நமது முயற்சியில் மாற்றம் பெற்று வருகின்றது.  இதுவரை தமிழரல்லாத ஆட்சி நாட்டில் நடைபெற்று வந்ததால் இந்தத் திருமணத்தை சட்டப்படி செல்லாத திருமணமாக ஆக்கி வைத்தார்கள்.  நமது நல்ல வாய்ப்பாக இப்பொழுது நடைபெறும் ஆட்சி பகுத்தறிவு ஆட்சி ஆனதினாலே – தமிழர் ஆட்சி ஆனதினாலே இதைச் சட்டப்படி செல்லுபடியுள்ளதாக சட்டம் செய்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள்.  மனிதனின் வளர்ச்சிக்கு இந்தத் திருமண முறை வெறும் கேடாக இருக்கிறது.  அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.

பெண்கள் பகுத்தறிவுவாதிகளாக வாழ்ந்தால்தான் பிள்ளைகள் கொஞ்சம் பகுத்தறிவோடு வளர முடியும் என்று கூறி முடித்தார்கள்.

– நினைவுகள் நீளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *