குடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

ஜூலை 16-31

போலி பக்தரின் புரட்டு வேலை

(எளிதாக ஏமாறும் நம் பக்த கோடிகள் காசி, ராமேஸ்வரம் போனால் கர்மம் தீரும் என்று கூறுவர்.  வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்  ஆலங்காயத்தைச் சேர்ந்த ஒரு கனவான் அம்மன் கோவில் கட்டுவதாகக் கூறி மக்களிடம் பணம் திரட்டி – காசி, ராமேஸ்வரம் சென்று வந்தார். ஆனால், இறுதிவரை கோவிலைக் கட்டி முடிக்கவே இல்லை.  பக்தர்கள் இப்படிப்பட்ட போலி பக்தர்களை நம்பாமல் நன்னெறியில் நடக்கச் செய்யும் நிகழ்ச்சி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. நகைச்சுவை மிகுந்த அந்நிகழ்ச்சியைப் படித்து மகிழுங்கள்.)

வட ஆற்காடு ஜில்லா திருப்பத்தூர் தாலூகா ஆலங்காயத்திலுள்ள ஒரு கனவான் தான் முன் ஜென்மத்திலும், இச்ஜென்மத்திலும் செய்தவினை தீரும் பொருட்டு காசி, இராமேஸ்வரம் முதலிய புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று சில நாட்களுக்கு முன்புதான் தன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். இப்பொழுது அவர் பரிசுத்தமானவரென்று அவருடைய மனப்பூர்வமான அபிப்ராயம்.  ஆனால், அவருடைய குலதேவதைக்குக் கோவில் கட்டும் நிமித்தம் தன்னுடைய சமூகத்தாரான ஏழைக்குடிகள் தங்களுடைய வீடு, நிலம் முதலியவைகளையும் அடகு வைத்து சேகரித்துக்கொடுத்த சுமார் 3,000 (மூன்று ஆயிரம்) ரூபாயும், மற்றும் இந்தக் கோவிலுக்காக சம்பந்தப்பட்ட வெளியூர் கனவான்களிடமிருந்து வசூலித்து வந்து சுமார் 2,000 (இரண்டு ஆயிரம்) ரூபாயும் தன் வசப்படுத்திக் கொண்டு அந்த அம்மனுக்குத் திருநாமத்தைச் சாத்திவிட்டு தன்னுடைய சொந்த லேவாதேவியில் அம்மன் கோவில் பணத்தை ஏழைக் குடியானவர்களுக்கு உதவிபுரியும் பொருட்டு சகாய வட்டிக்காக நூற்றுக்கு மாதம் ஒன்றுக்கு வட்டி ரூபாய் 3_00 (மூன்று ரூபாய்) வீதமும் அல்லது நூற்றுக்கு வருஷம் ஒன்றுக்கு லாபம் மதராஸ் படியில் 480 படி வீதம் நவதானியங்களுமாய் வசூலித்து பணத்தைச் சேகரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.

இந்தப் பண விஷயமாய் தன்னுடைய ஏழை சமூகத்தார்கள் கோவிலைக் கட்டும்படியாகக் கேட்டால் நான் இராமேஸ்வரம் போகவேண்டும், காசிக்குப் போகவேண்டும் என்பதான சாக்குப் போக்குகள் சொல்லிக்கொண்டு வந்தவர் மேற்படி புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு யாத்திரைசெய்து ஊர் வந்து சேர்ந்தும் தன்னுடைய சமூகத்தார்கள் கோவிலை மறுபடியும் கட்டும்படிக்குக் கேட்க அவர் தன்னுடைய பௌத்திரர்களுக்கு விவாஹம் செய்தபின் கோவிலைக்கட்டி முடிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.  கனவான் அவர்கள் தன் வாக்குறுதியின்படி இம்மண்ணுலகில் அம்மன் கோவிலைக் கட்டி தன்னுடைய சமூகத்தாருக்கு மனதைச் சந்தோஷம் அடையுமாறு செய்வாரோ?  அல்லது விண்ணுலகிற்கு ஏகியபின் அங்கே கட்டி முடித்து அம்மனை ஆனந்திக்குமாறு செய்குவாரோ?  என்பது அச்சமூகத்தாருக்கு நன்கு விளங்கவில்லை.

குடிஅரசு – 29.03.1931 – பக்கம் 16,17

தகவல் – மு.நீ.சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *