தி.மு.க.வின் வாக்களிப்பு நியாயமானது

டிசம்பர் 16-31

கேள்வி : தமிழக முதல்வர் தற்பொழுது பல திட்டங் களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவ்வப்பொழுது அறிவித்து வருகிறார். இந்தப் போக்கு நீடிக்குமாகில் சட்டமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிப்பது என்பது அர்த்தமற்றதாகி விடாதா?
_ எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர்

பதில் : ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு நிதியமைச்சர் படித்து, பல மானியக் கோரிக்கைகளில் ஏற்கப்பட்டதை நாள் ஒரு அறிவிப்பாக அறிவித்து சட்டமன்ற வரலாற்றில் ஒரு புரட்சி செய்து வருகிறார் நம் முதல்வர்!

சமர்பித்ததைத்தான் கூறுகிறார். இனி சமர்ப்பிக்கப்போவதை அல்ல!

கேள்வி : தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அடிக்கடி உறுப்பினர்களை மார்ஷல் மூலம்  வெளியில் தள்ளுவதுபோல் நாடாளுமன்ற சபாநாயகர் ஏன் அப்படி செய்வதில்லை? – ஜி. சாந்தி, பெரம்பலூர்

பதில் : நாடாளுமன்ற சபாநாயகர்க்-கு சரியாக வேலை பார்க்கத் தெரியவில்லை என்று தங்கள் கேள்வி மூலம் புரிகிறது எங்களுக்கு!

கேள்வி : சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில் தி-.மு.க.வின் இரட்டை நிலை சரிதானா? – எஸ். அருள், உளுந்தூர்பேட்டை

பதில் : இரட்டை நிலை அல்ல; இது திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்.

வாக்கெடுப்பில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் கவிழ்ப்பது, 5 ஆண்டுகளுக்கு என வாக்காளர் ஆணை பிறப்பித்த நிலையில், இடையில் தள்ளுவது ஜனநாயக விரோத, மதவெறி சக்திகளைப் பலப்படுத்தும் செயல் என்பதால், தி–.மு.க.வின் வாக்களிப்பு நியாயமானது. மதவாத வெறியர்களுக்குச் சரியான ஆப்பு.

முன்பும் சரி பின்பும், தி.மு.க. தனது எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லையே! ஊடகங்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் இது!

கேள்வி : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஊழல் என வருணித்த ஊடகங்கள், தற்போது பா.ஜ.க. வின் உண்மை தோற்றம் அம்பலம் ஆகும் போது இவற்றின் உண்மை நிலவரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லையே ஏன்? – வெங்கட. இராசா, ம. பொடையூர்

பதில் : திருடனுக்குத் தேள் கொட்டினால் அவனால் சத்தம் போட்டுக் கத்த முடியுமா? -_ கோயபல்ஸ்களுக்கு உண்மை பற்றி ஏதும் தெரியாதே!

கேள்வி : மீண்டும் ஒபாமா அமெரிக்க அதிபராகியிருப்பது எதைக் காட்டுகிறது?
_ கு. ஷிவானி, திருநாகேஸ்வரம்

பதில் : அமெரிக்க வாக்காளர்களின் தெளிவான சிந்தனையைக் காட்டுகிறது!

கேள்வி : ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறினால்தான் தீர்வு ஏற்படும் என்கிறார் என் பத்திரிகை துறை நண்பர். தங்களின் கருத்து? _ எம். அருமைநாயகம், மேட்டூர்

பதில் : நூற்றுக்கு நூறு உண்மையே!

கேள்வி : தந்தை பெரியார் சினிமா பார்த்ததுண்டா? – கீதாமுரளி, கரூர்

பதில் : ஆம். பார்த்திருக்கிறார்கள். நண்பர்கள் தங்களுடைய நவீன திரையரங்குகளைக் காட்ட அழைத்தனர். தேவி தியேட்டர் உரிமையாளர் ராஜகோபால் (செட்டியார்) தியேட்டரில் ஒரு ஆங்கிலப் படம்.

அதுபோலவே ஆனந்த் தியேட்டர் உமாபதி அவர்கள் அழைத்து, அங்கே சென்று ஒரு ஆங்கிலப் படம் பார்த்துள்ளார்கள். (அம்மாவும் நானும் உடன் சென்றோம்!)

கேள்வி :பாரதிதாசன் போல நாத்திகக் கருத்துகளை கவிதையில் எழுதிய ஆங்கிலக் கவிஞர்கள் உண்டா? – மு. சச்சிதானந்தம், பேரையூர்

பதில் : (பிரிட்டிஷ்) ஷெல்லி  _ ஒரு நாத்திகக் கவிஞர். (அமெரிக்க) வால்ட் விட்மென் ஆகியவர்கள் நாத்திகக் கவிஞர்களே!

கேள்வி : ஜாதிக்கட்சிகள், சங்கங்கள் இருப்பதால்தானே ஜாதிச் சண்டைகள் உருவாகின்றன. இவைகளைத் தடை செய்தால் என்ன? – கே. குணாளன், நாகர்கோவில்

பதில் : துணிச்சல் உள்ள அரசுகள் இனிதான் வரவேண்டும்? நிச்சயம் தடுக்க வேண்டும்.

கேள்வி : போலீஸ் என்கவுண்ட்டர்கள் சட்டத்துக்கு சவால்விடும் செயல்தானே…?
_ சே. கிருஷ்ணன், மணிமங்கலம்

பதில் : ஆம்; அதில் என்ன தவறு? சட்டம் நிதானத் தீர்வு. இது அப்போதே பிரச்சினையை முடித்து விடும் அவசரக் கோலம்! ஜனநாயக உணர்வாளர்களால் ஏற்க முடியாதது இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *