ஜாதியைத் தகர்க்கும் மரபணு அறிவியல்

டிசம்பர் 16-31

உங்கள் ஜாதிய பெருமைகளை தகர்த்தெறியக் கூடிய மரபியல் ஆய்வுகள் வந்த பின்னர் உயிர்களில் மறைந்துக் கிடக்கும் பல ரகசியங்களை வெளிக் கொணர முடிகின்றது. ஒரு குழந்தையின் மெய்யான பெற்றோர் யார் என்பதையும், வழக்கு விசாரணைகளில் குற்றவாளி யார் என்பதையும், உயிர்கள் தோற்றத்தையும், உயிரினங்களுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கவும், பல பரம்பரை நோய்கள் தோற்றம் பெறுவது எப்படி என்பதையும், அவற்றை குணப்படுத்துவது முதல் பல துறைகளில் இன்று மரபியல் உதவுகின்றது.

 

மனிதர்கள் இன்று இனம், மதம், ஜாதி எனப் பிரிந்து முரண்பட்டுக் கொண்டாலும் கூட ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்புகளை விளக்குவதற்கும் மரபியல் உதவுகின்றது.

வடக்கு ஐரோப்பியரும், அமெரிக்க பழங்குடிகளும் நெருங்கிய இனம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க மரபியல் சமூகம் வெளியிடும் ஜெனடிக்கஸ் என்ற இதழின் நவம்பர் மாத பதிப்பில் வெளியான ஒருக் கட்டுரையில் வடக்கு ஐரோப்பிய மக்களுக்கும் அமெரிக்க பழங்குடிகளுக்கும் தொடர்புகள் இருப்பதை கூறியுள்ளனர். பழைய கற்கால ஐரோப்பிய மக்களுக்கும், தற்கால அமெரிக்க பழங்குடிகளுக்கும் பல தொடர்புகள் இருந்துள்ளன என ப்ராட் படிப்பகத்தின் நிக் பாட்டர்சன் கூறுகின்றார்.

குறிப்பாக 15, 000 ஆண்டுகளுக்கு முன் ஆசியாவின் சைபீரியாவில் இருந்து பெரிங்க் கணவாய் ஊடாக வடக்கு அமெரிக்காவுக்கு நுழைந்தனர் இன்றைய அமெரிக்க பழங்குடிகள் என்றழைக்கப்படும் எஸ்கிமோக்கள், செவ்விந்தியர்கள் ஆவார்கள். அவர்கள் அமெரிக்க கண்டத்தை மட்டும் நிரப்பவில்லை மாறாக வடக்கு ஐரோப்பா வரை அவர்கள் சென்றே உள்ளனர்.

ஹார்வார்ட்டின் மருத்துவ துறையின் மரபியல் பேராசியர் டேவிட் ரெய்க், நிக் பாட்டர்சன் ஆகியோர் இணைந்து நடத்திய DNA ஆய்வினை நடத்தினார்கள். இவற்றில் இரு விதமான மக்களை கணக்கில் எடுத்துக் கொண்டார்கள், ஒரு பிரிவினர் பழங்கால வேட்டை சமூகத்தினரில் இருந்து கிளைத்தவர்கள், மற்றவர்கள் கலப்பில்லாமல் வாழ்ந்து வரும் பழங்கால வேளாண் சமூகத்தினரில் இருந்து வந்தவர்கள். இவற்றில் வேட்டை சமூகத்தினராக இருந்த ஐரோப்பியர்களுக்கும் வடகிழக்கு சைப்பீரியர்கள், அமெரிக்க பழங்குடிகளுக்கும் தொடர்புகள் மிகுதியாக இருந்துள்ளதாம். குறிப்பாக வடக்கு ஐரோப்பாவில் வாழும் இன்றைய பிரித்தானியர்கள், ஸ்காண்டினேவியர்கள், பிரஞ்சினர்கள், மற்றும் சில கிழக்கு ஐரோப்பியர்கள் ஆகியோருக்கும் அமெரிக்க பழங்குடியினருக்கும் தொடர்புகள் பல இருந்துள்ளன என தெரிய வருகின்றது.

“மனித மரபணு பல இரகசியங்களை கொண்டுள்ளது. அது மனித நோய்களை குணப்படுத்துவதற்கு முக்கியமான ரகசியங்களை திறப்பதோடு மட்டுமில்லாமல்,  நம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தினைப் பற்றிய பல தடயங்களையும் வெளிப்படுத்துகிறது” என ஜெனடிக்ஸ் ( Genetics ) சஞ்சிகையின் முதன்மை ஆசிரியர் மார்க் ஜோன்ஸ்டன்கூறுகின்றார். மனிதர்களை பெருங்கடல்கள் பிரித்திருந்த போதும், நம் முன்னோர்களின் பல இடப்பெயர்வுகளை ஆராயும் போதும், அவற்றின் அம்சங்களை அறியும் போதும் அனைத்து மனிதர்களும் மிக நெருக்கமானவர்கள் என்ற உண்மை வலுவூட்டுவதாக உள்ளது என அவர் மேலும் கூறினார்.

உடைபடும் ஜாதிய தூய்மைவாதம்

இது போன்ற மரபியல் ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை என்பேன். இவ்வாறான ஆய்வுகள் ஊடாக இனப் பெருமைகள் தகர்த்தெறியப்படலாம், அனைத்து மனிதர்களும் தொடர்புடையவர்கள் என்பதையும், தனித்த தூய இனம் என்ற ஒன்று உலகில் இல்லை என்பதையும் உணர வைக்க முடியும். இவ்வாறான ஆய்வுகள் பலவற்றை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடத்த வேண்டும். ஏனெனில் இன வித்தியாசமில்லாத நிலையில் கூட கற்பனை சாதியக் கோட்பாடுகளால் திருமணங்கள், வாழ்க்கை முறைகளில் சாதியத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால் உண்மையில் இன மரபியல் ரீதியாக ஒவ்வொரு இனக் குழுக்களும், சாதியக் குழுக்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புப் பட்டே பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளது என்பதை உணர்ந்தாலே பாதி சிக்கல்கள் தீரும் அல்லவா. குறிப்பாக தாம் சத்திரியர், தாம் சூத்திரர், தாம் பார்ப்பனர் என்ற பெருமிதத்தில் ஜாதியங்களை போற்றி புகழ்ந்து சமூக ஊடகங்களில் பலரும் பேச ஆரம்பித்து-விட்டார்கள். உங்களுக்குத் தெரியுமா உங்களால் அறிவியல் ரீதியாக நீங்கள் இன்ன ஜாதி என நிரூபிக்கவே முடியாது.

நிற்க, நேசனல் ஜியோகிராபிக்கின் மனித ஜீனோம் ( National Geographic Human Genome) திட்டத்தின் படி, உங்களின் முன்னோர்கள் யார் யார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

http://shop.nationalgeographic.com/ngs/browse/productDetail.jsp? productId=2001246&gsk&code=MR20944  சென்று ஒரு பாக்கெட்டை ஆர்டர் செய்துக் கொள்ளுங்கள்.

அவற்றில் உள்ளவாறு உங்களின் உடல் மரபணு மாதிரிகளை அனுப்பி வையுங்கள். சில தினங்களில் உங்களின் குலம், கோத்திரம் எல்லாவற்றையும் பிட்டு பிட்டு வைத்து ஒரு பொதி வந்து சேரும். பலர் இதனை பரிசோதிக்க அஞ்சுகின்றார்கள், ஏனெனில் இதுவரை தாம் பார்ப்பனர், சத்திரியர், ஆரியர், அரபியர் வெள்ளை இன மேன்மையர் என புகழ்ந்த பலருக்கு தமது மூதாதை கருப்பின நெக்ரிடோ என்பதாக கூட இருந்தது கண்டு அதிர்ந்தார்கள். ஜாதி, இன பெருமைகளை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு இன்று சமத்துவம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

– இக்பால் செல்வன்
நன்றி: கோடங்கி இணையதளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *