செஞ்சி ப.க. மாநாடு

2022 கட்டுரைகள் ஜுலை 16-31 2022

செஞ்சி ப.க. மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமையுரை

செஞ்சியில் 19.6.2022 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய நிறைவுரையிலிருந்து…
தந்தை பெரியார் அவர்கள் உரையைத் தொடங்கும்பொழுதும், கடைசியாக உரையை முடிக்கும்பொழுதும், “நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள்!’’ என்று சொல்வார். இப்படிச் சொல்கிற தலைவர் உலகத்தில் வேறு எங்காவது உண்டா?
நான் சொல்வதை நம்பாதீர்கள்; என் அறிவுக்குச் சரி என்று பட்டதைச் சொன்னேன்; உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்.
பெரியார் அவர்கள், குடியாத்தத்தில் உரையாற்றும்பொழுது, ஒரு கல்லூரி மாணவன் கேட்டார், “யார் சொல்வதையும் நம்பாதீர்கள் என்று சொல்கிறீர்களே, நீங்கள் சொல்வதை நம்புவதா? இல்லையா?’’ என்று!
பெரியார் அவர்கள், “நான் சொல்வதையும் நம்பாதே!’’ என்றார்.
“பிறகு யார் சொல்வதை நம்புவது?’’ என்று அந்த மாணவன் கேட்டார்.
“உன் அறிவு என்ன சொல்லுகிறதோ, உன் பகுத்தறிவு என்ன சொல்லுகிறதோ, அதைக் கேள்!’’ என்றார்.
அந்தச் சிந்தனையினால்தான், இங்கே திருமாவளவன்,
அந்தச் சிந்தனையினால்தான், முத்தரசன்,
அந்தச் சிந்தனையினால்தான், மனிதநேயர் மஸ்தான்
அந்தச் சிந்தனையினால்தான் நாமெல்லாம் ஒன்று பட்டு வருகிறோம்.
ஏனென்று கேட்டதினால்தானே, ஒலிபெருக்கி!
ரிஷி முறைத்துப் பார்த்ததும், பொத்தென்று கீழே விழுந்ததா, இது?
இங்கே மாநாட்டு நிகழ்வுகளை வீடியோவில் பதிவு எடுக்கிறார்களே, இது எந்த முனிவர் கண்டுபிடித்தது?
கல்யாண மந்திரத்தில் சொல்வார்களே, முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கின்னரர்கள் சாட்சியாக என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள்.

வீடியோ சாட்சி ஏற்றுக்கொள்ளப்படும்!
ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்றால், இந்தச் சாட்சிகள் கண்டிப்பாக நிற்காது. எந்த ரிஷியும் சாட்சிக்கு வரமாட்டார்.
வீடியோ சாட்சியாக என்று சொன்னால், அது கண்டிப்பாக சாட்சியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
காரணம், இது அறிவியல்; அது மூடநம்பிக்கை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவேதான், பகுத்தறிவு என்பது ஒவ்வொரு வருக்கும் வாழ்க்கையில் தேவை.
பகுத்தறிவுதான் நம்மை வளர்ச்சியடையச் செய்கிறது. பகுத்தறிவினால்தான், நாம் வேட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம்.
யானை பெரிய உருவம்தான் –
சிங்கம் பெரிய விலங்குதான் –
ஏன் யானை பிறந்த மேனியாக இருக்கிறது?
மனிதர்களாகிய நாம் ஏன் வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறோம்? அம்மணமாக யாராவது வெளியே வருகிறார்களா? வருவதில்லையே!
அப்படி வடநாட்டில் இருப்பார்கள் – யோகி, முனிவர், ரிஷி என்று சொல்லப்படுகின்றவர்கள். ஒருவர் அரை சட்டை போட்டிருப்பார்; இன்னும் டிகிரி உச்சத்தில் போன முனிவராக இருந்தால், கோவணம் மட்டும் கட்டிக் கொண்டிருப்பார். மகாபெரிய ரிஷி என்றால், அந்தக் கோவணமும் இருக்காது.
இந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, மனிதனை நாகரிகப்படுத்துவதற்கு, வளர்ச்சியடைய வேண்டும் என்று சொல்வதற்குத்தான் பகுத்தறிவாளர் கழகம்.

மனிதகுலம் வளரவேண்டும்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்!
அதுதான் ‘திராவிட மாடல்.’
எனவே, மனிதகுலம் வளரவேண்டும். அனை வருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும்.
“எல்லாருக்கும் எல்லாமும் இருப்பதான
இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம்”
என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”
என்று வள்ளுவர் சொன்னார்.
இதுதான் இந்த இயக்கம். இதுதான் பகுத்தறிவாளர் கழகம்.
தந்தை பெரியார்தான் மிக அழகாகச் சொன்னார், நீ எதையாவது அடையாளம் காணவேண்டும் என்றால், அந்தப் பெயரைப் பார் என்பார். எப்பொழுதும் அவர் மிக எளிமையாகச் சொல்லிக் கொடுப்பார் அந்தப் பாடத்தை.
ஒரு பண்டிகையின் பெயரா? அந்தப் பண்டிகை நம்முடைய பண்டிகையா? பிறருக்கு உரியதா? இறக்குமதி செய்யப்பட்டதா? நமக்குச் சொந்தமா? என்று கேட்டால்,
தீபாவளி – ஆயுத பூஜை, இராமநவமி, அட்சய திருதியை என்று சொன்னால், வாயில் நுழையாது. அதன்படியே, அது நமக்குச் சம்பந்தமில்லை. தமிழுக்கும், தமிழருக்கும், திராவிடருக்கும் சம்பந்தமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல், திருநாள் என்றால், மிகத் தெளிவாகத் தெரியும், அது நம்முடையது என்று. மிகச் சுருக்கமான அடையாளம் இது. இதற்காகப் பெரிய ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.
அதுபோன்று ஆத்மா என்று வரும்பொழுது, அது நம் சொல் அல்ல. ஆத்மா என்ற சொல்லை, ஆன்மா என்று ஆக்கினார்கள் நம்முடைய புலவர்கள். சொல்லை மாற்றாமலிருந்தால்தான் மூலகர்த்தா யார் என்பது தெரியும்.

மன்னிப்பதற்குத் தயாராக இல்லை என்றார் பெரியார்!
“கடவுளை நம்பச் செய்து, பிரச்சாரம் செய்து அவர்தான் ஜாதியை உண்டாக்கினார், அவர்தான் பேதத்தை உண்டாக்கினார் என்று சொன்ன வனைக்கூட நான் மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்; அவனை குழப்பவாதி என்று விட்டுவிடலாம். ஆனால், ஆத்மா என்ற ஒன்றைக் கண்டுபிடித்தான் பாருங்கள், அவனை நான் மன்னிப்பதற்குத் தயாராக இல்லை” என்று சொன்னார் பெரியார்.
ஏனென்று கேட்டால், கற்பனையிலேயே மோசமான கற்பனை அது.
ஆத்மா என்றால் என்னவென்று கேட்டால், அதற்குச் சாவே கிடையாது.
கைலாசத்திற்குப் போனார் நித்தியானந்தா – அவரைக் காவல்துறையினரும், அவருடைய பக்தர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘எல்லோரும் வாங்க, கைலாசத்திற்கு, விசா கொடுக்கிறேன்’’ என்கிறார்.
ஆத்மா என்பது மாறாததாம்; ஒவ்வொருவருக்கும் ஆத்மா இருக்கிறதாம்.
ஆத்மாவிற்கு அழிவில்லை என்கிறீர்கள்; உடலுக்குத்தான் அழிவு என்று சொல்கிறீர்கள், சரி.

ஆத்மா அழியவே அழியாது என்று சொல்கிறார்கள்
ஒருவர் இறந்து போனவுடன் அந்த உடலை எரிக்கிறோம் அல்லது புதைத்துவிடுகிறோம்.
ஸ்கைபுரியர்கள் இறந்தால் அவர்களுடைய உடலை கழுகுக்கு வைத்துவிடுகிறார்கள்.
எரிப்பதும், புதைப்பதும்தான் நம்முடைய நாட்டில் பெரும்பாலும்.
உடல் நம் கண் முன்னால் எரிக்கப்படுகிறது – எலும்புகளை எடுத்து நீரில் கரைத்துவிடுகிறார்கள். புதைத்தால், அது அப்படியே மண்ணுக்கடியில் மக்கிப் போகிறது.
ஆனால், ஆத்மா என்பது அங்கிருந்து கிளம்பி, இன்னொரு கூட்டிற்குள் போய் புகுந்து-கொள்கிறதாம். அதுதான் திரும்பி ரொட்டேஷனில் வருகிறதாம். ஆகவே, ஆத்மா அழியவே அழியாது என்று சொல்கிறார்கள்.

தந்தை பெரியாரின் கேள்வி
பெரியார் ஒரு கேள்வி கேட்டார், அதுதான் பகுத்தறிவு.
“சரி, அப்படியொன்று இருப்பதாக நான் ஒப்புக் கொள்கிறேன்; நான் மறுக்கவில்லை. ஆரம்பத்தில் 20 கோடி ஜனத்தொகை இருந்தால், அதே ஜனத்தொகை தானே இன்றைக்கும் இருக்க வேண்டும்; அது எப்படி 130 கோடியாக ஆனது?’’ என்று கேட்டார்.
அது என்ன கட்டிப் போட்டால், குட்டி போடுகிற செடியா? என்று.
ஆத்மா என்றால், அது ரொட்டேஷன் – ஒரு உடலை விட்டு இறங்கினால், இன்னொரு கூட்டிற்குள் போய் புகுந்துவிட்டது என்று சொன்னால், அதை நம்ப முடியுமா?
ஆத்மாவிற்கு அழிவில்லை என்கிறார்கள்.
சனாதன தர்மம் என்று சொல்லிக்கொண்டு இன்றைக்கு அலைகிறார்களே, நம் மக்களின் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கிக்கொண்டு, திராவிட மாடல் ஆட்சிக்கு விரோதமாக இருக்கக்கூடிய ஓர் ஆளுநர், அவர் மீண்டும் மீண்டும் சனாதன தர்மா என்று சொல்கிறார்.
சனாதன தர்மம் என்பது ஆரியர்களுக்கு – முழுக்க முழுக்க மனுதர்மத்திற்காக இருக்கக் கூடியது.
மனுக்குலத்தினுடைய ஒரு நீதி அது.

காசி பல்கலைக் கழகத்தில், 106 ஆண்டுகளுக்கு முன்பு…
இது காசி பல்கலைக் கழகத்தில், 106 ஆண்டுகளுக்கு முன்பு, பாடப் புத்தகமாக வைத்திருக்கின்ற அதிகாரபூர்வமான சனாதன விளக்கம்.
அத்தனை ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. மற்றவர்கள் போன்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போகிறவர்கள் அல்ல நாங்கள். எதையும் ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப் பட்டவர்கள்.
ஆரியர்களுடைய தர்மம்தான் சனாதன தர்மம். 106 ஆண்டுகளுக்கு முன்பு பாடத் திட்டமாக வைத்திருந்தார்கள். இன்றைக்கு அதைக் கொண்டு வந்து நம்முடைய தலையில் கட்டினால் என்ன அர்த்தம்?
ஆரிய தர்மத்திற்கு என்ன அடிப்படை என்றால், குலதர்மம்.
குலதர்மம் என்றால் என்ன?
தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்பதுதான்.

போன ஜென்மத்தில் செய்த பாவம் என்கிறார்கள்
ஏன் அப்படிப் பிறந்தார்கள் என்று கேட்டால், அவரவர்களுடைய ஆத்மாவினுடைய பூர்வ ஜென்ம கர்ம பலன் என்று சொல்கிறார்கள்.
ஏன் கீழ்ஜாதியாகப் பிறந்தான் என்று கேட்டால், அவன் போன ஜென்மத்தில் செய்த பாவம் என்கிறார்கள்.
நான் ஒரு பாவமும் செய்யவில்லையே, என்றால்,
உன் கர்மா அப்படிச் செய்தது என்கிறார்கள்.
இப்படி ஒன்றும் புரியாததைச் சொல்லி, உளறிக் கொட்டுகிறார்கள். எதைப்பற்றியும் கேள்வி கேட்காதே, நம்பு, நம்பு என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது அதை வைத்துத்தான் நம்மை, கீழ் ஜாதியாக்குகிறார்கள்.
சகோதரர் முத்தரசன் அவர்கள் அருமையான ஒரு கருத்தைச் சொன்னார். புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றிச் சொல்லும்பொழுது, ‘‘ஒருவன் அடிமையாகவே இருந்தால், அது அவனுக்குப் புரியவேண்டும். புரியாமல் அடிமையாக இருந்தால், அவனால் எதிர்த்துப் பேச முடியாது; அந்த அடிமை விலங்கை உடைக்க முடியாது’’ என்று சொன்னார்.
அதனால்தான் நாம் சொல்கிறோம், அடிமையாக இருக்காதே என்று.
“நாங்கள் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டோம்; எங்களுக்குக் கீழே யாரையும் அடிமையாக்க மாட்டோம்’’ என்று அம்பேத்கர் சொன்னார்.

முனிவர்களின் பிறப்பைப் பாருங்கள்!
ரிஷிகளின்மூலம் பிறப்பெல்லாம் இயற்கைக்கு மாறானதும், ஆபாசமும், அசிங்கமும் நிறைந்தவையாக, அறிவுக்குப் பொருந்தாதவையாக இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக,
கலைக்கோட்டு ரிஷி மானுக்குப் பிறந்தார்
ஜம்புக ரிஷி நரிக்குப் பிறந்தார்
அகஸ்தியர் குடத்திற்குப் பிறந்தார்
வசிஷ்டர் ஊர்வசிக்குப் பிறந்தார்
சாதன்யவர் விதவைக்குப் பிறந்தார்
மாண்டவியர் தவளைக்குப் பிறந்தார்
சுகர் கிளிக்குப் பிறந்தார்
ஜாம்புவந்த ரிஷி கரடிக்குப் பிறந்தார்
அஸ்வத்தாமன் குதிரைக்குப் பிறந்தார்
“ஏன்டா, மனுஷனுக்குப் பிறந்தவன் ஒரு ஆள்கூட இல்லாதவனை வைத்துக்கொண்டு, இதுதான் தத்துவம் என்று சொல்லி, இதுதான் இந்த நாட்டை வளர்ச்சியடையச் செய்யும் என்று சொல்கிறீர்களே, நியாயமா?’’ என்று கேட்டார்.
அந்த வளர்ச்சி போய்க் கொண்டிருக்கின்ற நேரத்தில், முன்னோக்கிப் போகவேண்டிய இடத்தில், பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக் கிறார்கள்.

நம்முடைய வேலை என்ன?
பகுத்தறிவாளர் கழகங்கள் நாடுதோறும், ஊர்தோறும், வீதி தோறும் உருவாக்கப்படல் வேண்டும்.
அரசியலை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்; நம்முடைய வேலை என்ன?
கோட்டைக்குள்ளே போவது இல்லை.
கோட்டைக்கு வெளியே இருந்து, கோட்டையில் எவரும் ஓட்டை போடாமல் பார்த்துக் கொள்வது தான் நம்முடைய வேலை.
ஆகவே, பகுத்தறிவாளர் கழக மாநாட்டினை ஏன் நடத்துகிறோம்?
பகுத்தறிவாளர் கழக மாநாட்டில், இப்படிப்பட்ட அறிஞர்களை அழைத்து மக்களுக்கு அறிவுரை சொல்கிறோம்!

‘சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்’
பகுத்தறிவு இயக்கம் – பின்னால் வரக்கூடிய பட்டாளத்திற்கு, முன்னால் சென்று, பாதை – பாலம் அமைத்துத் தருகின்ற தூசிப் படை – சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்.
முன்னால் நாங்கள் சென்று கொண்டே இருப்போம் – எங்கெங்கே என்ன இருக்கின்றன? எங்கெங்கே கண்ணி வெடி வைத்திருக்கிறார்கள்? என்று பார்த்து, அதை அகற்றிக் கொண்டு செல்வது எங்களுடைய வேலை.
பின்னால், ஆட்சி அமைப்பது, சட்டம் கொண்டு வருவது அவர்களின் – அரசின் வேலை.
இன்றைக்கு அந்த இணைப்பை உருவாக்குவது தான், பகுத்தறிவாளர் கழகம்.
எனவே, சிறப்பாக இந்த மாநாட்டினை நடத்திய அமைச்சருக்கும், ஒத்துழைத்த அத்துணை பேருக்கும், இறுதி வரையில் இருந்தவர்களுக்கும், மாநாட்டில் பங்கேற்று அற்புதமாக உரையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக் கின்றோம்.
மீண்டும் சந்திப்போம்!
பகுத்தறிவு என்பது ஒரு பொதுக் காரியம் – பொதுப் பண்பு. அதைப் பயன்படுத்தத் தவறாதீர்கள் என்று கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
நன்றி, வணக்கம்!