ஆசிரியர் பதில்கள்! பார்ப்பனத் தனத்தின் வெளிப்பாடு!

2022 ஆசிரியர் பதில்கள் நவம்பர் 1-15 2022

கே: பட்டியலின மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு என்று 21 அமைப்பினர் கூடி, திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதே இலக்கு என்று கூறியுள்ளது – அவர்கள் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் என்பதைத் தானே காட்டுகிறது?
– கி.மாசிலாமணி, காஞ்சி
ப: உங்கள் கேள்வியில் ஒரு சிறு திருத்தம் செய்தாலே சரியான விடை கிடைக்கும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகள் என்பதோடு ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்த கூலிப்படைகள் என்பதே சரி! (தோழர் ப.திருமாவேலன் நூலில் விரிவான பதில்)

கே: வயதான நிலையில் வாஜ்பேயி தலைமைப் பொறுப்பிற்கு வந்தபோது வரவேற்ற ஆர்.எஸ்.எஸ். ஆட்கள், காங்கிரஸ் தலைவராய் கார்கே வந்ததை, அவரது வயதைக் காட்டி வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார்களே?
– வே.சீனுவாசன், தாம்பரம்
ப: ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எத்தனை பேர் இளைஞர்கள்? இளமை _ முதுமை என்பது வயதைப் பொறுத்தல்ல; மன உறுதியும், உடல் திடகாத்திரத்தையும், உறுதியையும் உழைப்பையும் பொருத்தது என்பது தெரிந்தும் இப்படிப் பேசுகிறார்கள் அவர்கள்!

கே: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமானவர்கள் மற்றும் ரயில்முன் பெண்ணைத் தள்ளிக் கொன்றவன் போன்றோருக்கு மரண தண்டனை கட்டாயம்தானே?
– த.ஆறுமுகம், வேளச்சேரி
ப: தத்துவப்படி மரண தண்டனையை நாம் ஒழிக்கப் போராடினாலும், இந்த அநாகரிகத்தை அடக்க அது தேவைதானோ என்ற எண்ணத்தை நம்முள் அது விதைக்கவே செய்கிறது!

கே: சனாதன தர்மத்தைப் போற்றி ஏற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ஜாதி பேதத்தை, தீண்டாமையைக் கண்டிப்பது முரண்பட்ட நிலைப்பாடமல்லவா?
– மா.விஷ்ணு, வேலூர்
ப: தீண்டாமை க்ஷேமகரமானது என்பது சங்கராச்சாரியாரின் அருள் வாக்கு _ ‘ஆக்ஞை’. சனாதனிகள் அண்ணல் காந்தியை இதற்காகவே கண்டித்து திரும்பிப் போ என்று சொன்ன வரலாறு பாவம் இந்த ஆளுநருக்குத் தெரிந்திருக்காது! அவர் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான (மனு) தர்மயுத்தம் நடத்தவே டில்லியிலிருந்து அனுப்பப்பட்டிருப்பது போலிருக்கிறது.

கே: நரபலிகள் கோரமாக நடைபெறுவது, பகுத்தறிவுப் பிரச்சாரம் இன்னும் பாமர மக்களிடம் தீவிரப்படுத்தப்யபட வேண்டும் என்பதை வலியுறுத்துவதால், கிராமப்புறப் பிரச்சாரத்திற்குத் திட்டமிடுவீர்களா?
– க.பரமேஸ்வரி திருச்சி
ப: ஏற்கெனவே திட்டமிட்டு நடத்தியும் உள்ளோம். (புதுக்கோட்டை மாவட்டம்; மேலும் தீவிரப்படுத்த ஏற்பாடுகள் ஆகியுள்ளன.)

கே: நாடாளுமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க. மாதச் சம்பளத்தில் முழு நேர ஊழியர்களை நியமிக்கும் நிலையில், நமது எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும்?
– தி.மதுரைவீரன், திண்டுக்கல்
ப: அதை எதிர்கொள்ள பல்முனைகளிலும் தி.க., தி.மு.க. முதலிய அமைப்புகள் ஒருங்கிணைந்த பலமான எதிர் வினைகளைத் திட்டமிட்டுச் செயலாற்றிட முந்த வேண்டும்.

கே: வள்ளுவரைப் பாராட்டிக் கொண்டே, அவரைக் காவி மயமாக்க முயலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆள்கள், கருநாடகாவில் வள்ளுவர் சிலை தாக்குதலை நடத்தியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– மா.முனியசாமி, மாமல்லபுரம்
ப: அங்கே அது; இங்கே இது _ வித்தைக்காரர்களின் வேஷம் இடத்திற்கு தகுந்தபடி இருக்கும்.

கே: நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பில்தான் உள்ளார். எதிர்காலத்தில் கூட்டு சேருவார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதன் உள்நோக்கம் என்ன?
– பெ.குமரவேல், வியாசர்பாடி
ப: பிரசாந்த் கிஷோரின் ‘பார்ப்பனத் தனத்தின் வெளிப்பாடு இது! சிண்டுமுடிந்திடுவாய் போற்றி! போற்றியின் வெளிப்பாடு இது! அவ்வளவுதான்.