ஆசிரியர் பதில்கள் : ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாகும் ஆளுநர் மாளிகை!

2022 ஆசிரியர் பதில்கள் மே 16-31 2022


கே: தருமபுர ஆதீனம் பல்லக்கில் வைத்து தூக்கப்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதைப் பற்றி தங்கள் கருத்து என்ன? இதைத் தடுக்க தீர்வு என்ன?
– மூர்த்தி, திண்டிவனம்
ப: ‘விடுதலை’யில் 10.5.2022 அன்று வெளிவந்த ‘எனது அறிக்கை’ உண்மையின் பிறிதோர் பக்கத்தில் வெளிவந்துள்ளது. அதைப் படியுங்கள் _ தெளிவான விளக்கம் _ பதில் கிடைக்கும்.
கே: திராவிட அரசு என்று நாம் பெருமைப்படும் நிலையில், ஆன்மிக அரசு என்று பாராட்டப்பட்டுள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– பாலா, செங்கல்பட்டு

ப: மேற்கண்ட பதிலே இதற்கும்.
கே: இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதை ‘தினமணி’ பெரிய அளவில் வெளியிட்டுள்ளதே! நோக்கம் என்ன?
– மகிழ், சைதை
ப: தமிழ்நாடு ஆளுநர் திருவாளர் ரவி, முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைப் பிரதிபலித்த பேச்சு _ நடவடிக்கைகளில் ஈடுபட்டு ‘ராஜ்பவனை’ ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி வருகிறார் என்பதற்கான ஆதாரம் இது!
கே: மதுக்கடையால் மனிதர்கள் தள்ளாடு கிறார்கள்! மதுக்கடைகள் விலக்கப்பட்டால் அரசு தள்ளாடும்! தாங்கள் கூறும் தீர்வு என்ன?
– சிவகிரி, வேலூர்

ப: இன்றைய சூழலில் மதுவிலக்கு தமிழ்நாட்டில் சாத்தியமே இல்லை என்பதே யதார்த்தமாகும். காரணங்கள்:
1. தமிழ்நாட்டு வருமானம் இதுதான். காலி கஜானாவை ஓரளவுக்காவது நிரப்புகிறது!
2. கள்ளச் சாராயம் வெள்ள-மாகப் பெருக்கெடுத்தோடும்.
3. கஞ்சா _ குட்காவை கட்டுப்படுத்த முடியாது திணறும் நிலை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
4. தீர்வு: தொடர்ந்து இளைஞர்கள், புதிய குடிகாரர் உருவாகாமல் தடுக்க தீவிரப் பிரச்சாரம்.
5. அகில இந்தியாவுக்கும், மதுவிலக்கு இழப்பு மான்யத்தை ஒன்றிய அரசு தருவதுதான் தடுப்புக்கான மற்றொரு சரியான வழிமுறையாகும்.

கே: திராவிடர் கழகம் நடத்திய இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் பற்றி, திராவிட ஊடகங்கள் செய்தி வெளியிடாமைக்குக் காரணம் உண்டா?
– அருண்குமார், தாம்பரம்
ப: திராவிடர் கழகத்திற்கு மரியாதை வந்துவிடக் கூடாது என்ற பார்ப்பனிய மனப்பான்மை நோயால் இப்படி ஊடகங்கள் _ செய்தித்தாள்கள் பெரிதும் பீடிக்கப்பட்டுள்ளன. நமக்கு விளம்பரம் தர மறுக்கிறார்கள். இவர்களையும் மீறி வடபுல தொலைக்காட்சிகள் _ ஆங்கில, ஹிந்தி செய்தியை விளம்பரப்படுத்தின. நம் மீதுள்ள எரிச்சலால் அவாளுக்கு, ‘அவாளாக’ முயற்சிக்கும் இவாள்கள்!
பூக்கடைக்கு விளம்பரம் வேண்டுமா!

கே: திருச்சி சிவா மகன் பி.ஜே.பி.யில் சேர்ந்தார் என்ற செய்தியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ராமதாஸ், குன்றத்தூர்
ப: இரண்யன் _ பிரகலாதன், இராவணன் _ விபீஷணன் புராணக் கதையை ஏன் பார்ப்பனர்கள் பரப்புகின்றனர் என்பதும், ஏன் பெரியார் எதிர்க்கிறார் என்பதும் இப்போதாவது புரிகிறதா? நாற்காலிகள் காலியாக உள்ளதால் ‘போனால்’ ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புதான். உண்மையான கொள்கைவாதிகளாய் இருக்கிற எவரும் அங்கே செல்ல மாட்டார்கள்.
கே: சுதந்திரம் பெறுவதற்கு முன் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பதே தேசத் துரோகம் என்ற பார்வையில் உருவான இ.த.ச.124(அ) பிரிவை இன்றும் பயன்படுத்துவது சரியா?
– குமரன், மதுரை

ப: இதுபற்றி உச்சநீதிமன்றத்தில் பல மூத்த வழக்குரைஞர்கள் வழக்குத் தொடுத்து விசாரணையில் உள்ளதே!
கே: தாஜ்மகாலில் இந்துக் கடவுள்களின் சிலைகள் உள்ளது எனக் கூறி பா.ஜ.க. பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் வழக்குத் தொடுத்திருப்பது, அயோத்திக்கு அடுத்த இலக்கா?
– பவித்ரன், சேலம்
ப: திட்டமிட்ட வீண் வம்புச் சண்டையை எப்படி காவிகள் இழுக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற செய்திகளே சரியான எடுத்துக்காட்டுகளாகும்!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *