நூல் மதிப்புரை : இவர்தான் பெரியார்

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

பொ. நாகராஜன்
பெரியாரிய ஆய்வாளர்
நூல்: இவர்தான் பெரியார்
ஆசிரியர்: மஞ்சை வசந்தன்
பக்கங்கள்: 284 நன்கொடை: ரூ.180/-

வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு, பெரியார் புத்தக நிலையம், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7. தொலைபேசி: 044-26618163.
பெரியார் என்று சொன்னால், ‘கடவுள் இல்லையென்று சொன்னவர் என்றும்’ ‘பார்ப்பனர்களை எதிர்த்தவர்’ என்று மட்டுமே அவரை மக்களிடம் தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறது ஒரு கூட்டம்! அதற்கு பின்னணியாக சதியும் உண்டு _ சாதியும் உண்டு!
பெரியாரோ – சுய சிந்தனையாளர்; சமத்துவப் போராளி; மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்; பெண்ணுரிமைவாதி; “கடவுளை மற; மனிதனை நினை’’ என்று சொன்னவர்; எல்லா வயதினருக்கும் மரியாதையையும் முக்கியத்துவத்-தையும் ஒரே அளவில் தந்தவர்; ஜாதி, மத, இன, மொழி, நாடு இவற்றின் மீதெல்லாம் பற்றுக் கொள்ளாமல், மானிடப் பற்று ஒன்றே பெரிதென வாழ்ந்து காட்டியவர்! இப்படி பல பரிமாணங்களைக் கொண்ட பகுத்தறிவுப் பகலவன் பெரியார்!
பெரியாரின் வாழ்க்கையையும், சிந்தனை-களையும், உரைகளையும், எழுத்துகளையும் நன்கு அறிந்தவர்கள் சிலரே! அவர் கூறிய கருத்துகள் சுமார் பத்தாயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும் என்பதால், பெரியாரியத்தை ஆய்வு செய்ய ஒருவருக்கு வாழ்நாள் போதாது! ஆகவே பெரியாரின் வாழ்வையும் சிந்தனைகளையும் சுருக்கமான முறையில் எல்லோரும் அறியும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாய-மாகும்! அந்தத் தேவையை நிறைவு செய்யத்தான் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது!
எடுத்துக்காட்டாக, பெண்ணுரிமை பற்றி பெரியார் 750 பக்கங்களில் சொன்ன சிந்தனை-களை 25 பக்கங்களில் பிழிவு செய்துள்ளேன். இந்நூலினைப் படித்தால் பெரியாரின் வாழ்வையும், சிந்தனைகளையும் முழுமையாக அறியும் வகையிலே பெரிதும் முயன்று இப்பிழிவைச் செய்துள்ளேன். தந்தை பெரியாரின் சிந்தனையில் எத்திரிபும் இன்றி இப்பிழிவு செய்யப்பட்டிருப்பது, இந்நூலின் சிறப்பிற்கும், செம்மைக்கும் பயன்பாட்டிற்கும் துணை நிற்கிறது.
‘இவர்தான் பெரியார்’ என்ற இந்நூலின் மூலம், அறிவுலக ஆசான், நம் அனைவர்க்கும் விழி திறந்த வித்தகர், தொண்டு செய்து பழுத்த பழம் அய்யாவைப் பற்றி மிகவும் அருமையாக எழுதியுள்ளார். எவரும் எளிதில் தந்தை பெரியாரின் வாழ்க்கை, தத்துவங்கள், ஆய்வுகள், பிரச்சாரங்கள், போராட்டங்கள் என்று அனைத்தையும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பாக இந்நூலை எழுதியுள்ளார்.
‘அர்த்தமற்ற இந்துமதம்’ என்ற புகழ் பெற்ற நூலை எழுதியது மூலம் மக்களுக்கு அறிமுகமானவர், தோழர் மஞ்சை வசந்தன். பெரியாரிய சிந்தனையாளரும் எழுத்தாளரு-மான இவர் பல நூல்களைப் படைத்துள்ளார். இந்த நூலை மஞ்சை வசந்தன் போன்ற பெரியாரிய ஆய்வாளர் மட்டுமே எல்லா விவரங்களையும் கொண்ட, சுருக்கமான ஆனால், தகவல்கள் விடப்படாத வண்ணம் சிறப்பாகப் படைக்க முடியும்!
இந்த நூலின் முன்னுரையில் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள், “மிகவும் சுருக்கமான குளிகைகள் (சிணீஜீsuறீமீs) மூலம் பல முக்கிய நிகழ்வுகளையும், தத்துவங்களையும் அருமை-யாகத் தந்துள்ளார்” என மனமாரப் பாராட்டியுள்ளார்!
நூலை அறிந்து கொள்ள, நூலின் பொருளடக்கமே மிகவும் உதவியாக உள்ளது! 39 தலைப்புகளில் பெரியாரின் வாழ்வையும் சிந்தனைகளையும் கேப்சூல்களாக, சுருங்கச் சொன்ன குறள்களாக, வெகு தொலைவி-லிருக்கும் சூரியனை சிறிய துவாரத்தின் மூலம் பார்த்து நாம் அறிந்து கொள்வதுபோல – சுருக்கமாகவும் சுவையாகவும் படைக்கப்பட்ட சீரிய படைப்பின் பொருளடக்கம் இதோ :
பிறப்பும் பிள்ளை வெறுப்பும் _ துறவும் மீண்ட உறவும் _ பெரியார் போராட்டக் களத்தை பிறர் அமைத்தல் _ காங்கிரஸ் ஈர்ப்பும் காந்தி எதிர்பார்ப்பும் _ முதல் வகுப்புவாரி உத்தரவு _ வைக்கம் சென்றார் வழி திறந்து வென்றார் _ குருகுலத்தில் ஜாதி! கொதித்துக் கேட்டார் நீதி _ காங்கிரசை வெறுத்ததும் துறந்ததும்.
துவக்கம் – சுயமரியாதை இயக்கம் _ அயல் நாட்டுப் பயணங்களும் அவற்றின் விளைவுகளும் _ நாகம்மையார் மறைவு – நன்மைக்கே _ ஆறுமாத கடுங்காவலும் அரசின் நெருக்கடியும் _ மொழிப் போர் சிறையும் நீதிக்கட்சித் தலைமையும் _ ‘பெரியார்’ பெயர் தந்த பெண்கள் மாநாடு _ திணித்த இந்தியால் திராவிட நாடு எழுந்தது _ அண்ணா வருகையும் திராவிடர் கழக உருவாக்கமும்.
அண்ணா -பெரியார் கருத்து வேறுபாடும் கழகக் கூறுபாடும் _ கடவுள் மறுப்பு _ புராண ஆய்வில் புகழ் பெற்ற பெரியார் _ மதமா? மடமையின் சதமா? _ ஜாதியின் வேர் களைந்த சமத்துவ பெரியார் _ வாதிட முடியாத ஜோதிட ஆராய்ச்சி _ திருக்குறளைப் போற்றலும் அச்சேற்றலும் _ தமிழ் எழுத்தை மாற்றலும் தமிழ்ப் பண்டிதரை தூற்றலும் _ பிடித்த கம்யூனிசமும் பிடிக்காத காம்ரேடுகளும்.
யுனெஸ்கோ தந்த உயரிய சிறப்பு _ சுயமரியாதைத் திருமணம் _ வகுப்புரிமைக்கு வழிவகுத்த பகுத்தறிவுப் பெரியார் _ போராடு! புரட்சிப் பாதை ஈரோடு _ திருக்குறளில் திருத்தம் சொன்ன தந்தை பெரியார் _ தந்தை பெரியாரின் ஒப்பில்லா உவமை நயம் _ தொலை நோக்கு சிந்தனையில் தலை சிறந்த தந்தை பெரியார்.
இன்னல்களுக்கிடையே இறுதி வரை உறுதி _ பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் _ பெரியார் திரைப்படம் _ பெரியார் உலகம் (சிறுகனூர், திருச்சி) _ உலக மயமாகும் பெரியார் _ பெரியார் விருதுகள் _ உலகத் தலைவர் பெரியார்.
ஆசிரியர் மஞ்சை வசந்தனின் அயராத உழைப்பும் ஆர்வமும் இந்த நூலைச் சிறப்பான முறையில் அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய, ஒரே நூலாகக் கொண்டு வரக் காரணமாக அமைந்துவிட்டது!
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா மொழிகளிலும் இந்நூல் மொழியாக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களில் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.
இந்த நூலை, தமிழ்நாடு அரசு ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழி பெயர்த்து, பெரியாரை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்! இன்று பெரியார் உலகமயமாகின்றார்! உலகம் பெரியார் மயமாகின்றது! அந்த மாற்றத்தைச் செய்வதற்கு இந்த நூல் மிகவும் பொருத்தமான தேர்வாகும்!
இந்த நூலை மிகச் சிறப்பாக எழுதி நம்மிடம் ஒப்படைத்த ஆசிரியர் மஞ்சை வசந்தன் அய்யாவுக்கு, ஒரு பெரியாரிய ஆய்வாளர் என்ற முறையில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ஒவ்வொரு பகுத்தறிவுவாதியும், திராவிட சிந்தனையாளரும், பெரியாரியவாதியும், முற்போக்காளரும் கட்டாயம் படித்தறிய வேண்டிய நூல்!ஸீ