உணவே மருந்து! : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க…

2022 ஜூன் 16-30 2022

நோயின்றி வாழ்வதே இன்று மிகப் பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில், நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவில் நோய் எதிர்ப்புச் சக்திக்கான உணவைச் சரிவர எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்கான உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் பார்ப்போம்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தூங்குவது, மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியை வலிமையாக்கும் வழிகளாகும். நம்முடைய உடலுக்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். தீட்டப்படாத அரிசி, சிறு தானியங்கள், பருப்பு வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள், கோஸ் போன்றவற்றில் இது அதிகம் உள்ளது.
வைட்டமின் பி6, பி12 இவை தானியங்கள், பயறுவகைகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகள், சோயா பால், பால் பொருள்கள், மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் உள்ளன.
நோய் எதிர்ப்புச் சக்தி முழுமையாகச் செயல்பட இரும்புச்சத்து அவசியம். உலர் பழங்கள், பசலைக் கீரை, ஆப்பிள், வாழைப்பழம், பருப்பு வகைகள் ஆகியவற்றில் இரும்புச் சத்து மிகுந்துள்ளது.
துத்தநாகச் சத்து மீன், கடல் உணவுகள், இறைச்சி, பூசணி விதை, முந்திரி கொட்டைகள், தயிர், காளான், பிரக்கோலி போன்றவற்றில் உள்ளது. ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ள மஞ்சள், மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, க்ரீன் டீ சேர்த்துக் கொள்வது அவசியம்.
நோய் எதிர்ப்புச் சக்திக்கு வைட்டமின் ‘சி’ இன்றியமையாதது ஆகும். இது ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, கிவி, நெல்லிக்காய், காலிஃபிளவர், தக்காளி, குடைமிளகாய், புதினா இவற்றிலிருந்து கிடைக்கிறது. வைட்டமின் ‘ஈ’ தாவர எண்ணெய்கள், பச்சை இலைக் காய்கறிகள், பாதாம் போன்றவற்றில் உள்ளது.
முட்டை, மீன், பால் பொருள்கள் சாப்பிடுவதாலும், சிறிது நேரம் வெயிலில் நிற்பதாலும் நம் உடலின் வைட்டமின் ‘டி’ அளவை அதிகரிக்கலாம். உணவைப்போல மனமும் ஆரோக்கியமாக இருக்க, புத்தகம் வாசிப்பது, யோகா பயிற்சி, இசை கேட்பது ஆகியவற்றால் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கலாம்.ஸீ