சிறுகதை :பகுத்தறிவைப் பயன்படுத்து!

நவம்பர் 1-15,2021

ஆறு. கலைச்செல்வன்

இளங்குமரன் மெத்தப் படித்தவர் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். தாவரவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். எந்தத் தாவரத்தைப் பற்றிக் கேட்டாலும் அதன் குடும்பவகை, குணங்கள், மருத்துவப் பயன்கள் அனைத்தையும் தெளிவாக விளக்குவார். அந்தப் பாடத்தில் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் அனைத்துச் செய்திகளையும் அறிந்து வைத்திருப்பவர். தமிழில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் அதில் பல ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார்.

கலையரசன் அவரது மிக நெருங்கிய நண்பர். அவரும் ஆசிரியர் பணி செய்பவர். இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள்.

மேலும், பல நண்பர்களும் இளங்குமரனுடன் பேசுவதையும், உடன் இருப்பதையும் பெருமையாக நினைப்பார்கள். நடமாடும் கலைக் களஞ்சியமாகத் திகழும் அவரிடம் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவரது நண்பர்கள் அனைவரும் அவரிடம் கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.

இளங்குமரன் அறிவியல் துறையில் சிறந்து விளங்கினாலும் பல மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவர். விதியை மிகவும் நம்புபவர். படிப்புக்கும் அவரது செய்கைகளுக்கும் சில நேரங்களில் சம்பந்தமே இருக்காது. வெகுளித்தனமாகவும் பேசுவார். தலைவிதியை மாற்ற முடியாது என்பார்.

ஆனால், அவரது நண்பர் கலையரசன் பகுத்தறிவுச் சிந்தனை உடையவர். இளங்குமரனுடன் பல நேரங்களில் பகுத்தறிவு சம்பந்தமான விவாதங்களில் ஈடுபடுவார். இருப்பினும் அவரது அறிவாற்றலை மிகவும் மதிப்பார்.

கலையரசன் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பேசுவார். ஆனால், பேசுவதற்கு முன் இளங்குமரனைப் பார்த்து என்ன பேசவேண்டும் என்பது பற்றி விவாதிப்பார். அவர் சொல்லும் கருத்துகளை அப்படியே பேசி அனைவர் பாராட்டையும் பெறுவார்.

ஒருமுறை கலையரசனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதாவது கோழி முட்டையை பச்சையாகச் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் தான் அது. அது குறித்து ஒரு நாள் இளங்குமரனிடம் கேட்டார்.

“சார், சிலர் கோழி முட்டையை உடைத்து பச்சையாகவே குடிக்கிறார்களே! அது சரியா? பச்சை முட்டை சாப்பிடலாமா?’’ என்று கேட்டார். இளங்குமரன் உடனே பதில் சொன்னார்.

“பச்சை முட்டையின் வெள்ளைக் கருவில் அவிடின் என்ற புரதம் உள்ளது. இது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் இருக்கும் பயோட்டின் என்ற உடலுக்கு மிகவும் தேவையான சத்துடன் இணைந்து, செரிக்க முடியாத கூட்டுப் பொருளாக மாறிவிடும். இதனால் உடலில் பயோட்டின் குறைபாடு ஏற்படும். பயோட்டின் குறைபாட்டால் தோல் நோய்கள், உடல் வலி போன்ற பல வகைப்பட்ட நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது. மேலும் பச்சை முட்டையில் ‘சால்மோனல்லா’ வகை பாக்டீரியா இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. இந்த வகை பாக்டீரியா வயிற்றுப் போக்கு, தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்களையும் உண்டாக்கும். இப்ப நீங்களே சொல்லுங்க _ பச்சை முட்டை சாப்பிடலாமா?’’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார் இளங்குமரன்.

ஊகூம்… சாப்பிடக்கூடாது என்றார் கலையரசன். அதுவரை அவரும் முட்டையை பல நேரங்களில் பச்சையாகக் குடித்து வந்தார். அப்போதெல்லாம் இளங்குமரன் சொன்ன நோய்களும் வந்துள்ளன.

செரிமானமின்மையாலும், வயிற்றுப் போக்காலும் அவதிப்பட்டிருக்கிறார். அதன் காரணம் இப்போதுதான் அவருக்குப் புரிந்தது. இனி பச்சையாக முட்டையை உண்ணக் கூடாது என முடிவு செய்து கொண்டார்.

யாரும் சொல்லிடாத, வித்தியாசமான தகவல்கள் பலவற்றையும் இளங்குமரன் நண்பர்களிடம் தெரிவிப்பார். பேலியோ உணவு முறை பற்றி விரிவாகப் பேசுவார். நாள் முழுக்க அவர் சொன்னதையெல்லாம் உறங்கச் செல்லுமுன் நினைத்துப் பார்ப்பது கலையரசனின் வழக்கம். வாரியர்ஸ் உணவு முறை பற்றி அவர் ஒரு நாள் கூறியதை நினைத்துப் பார்த்தார்.

‘வாரியர்ஸ்’ என்றால் போர் வீரர்கள் அல்லவா? அவர்கள் நம்மைப் போல் மூன்று வேளையும் உட்கார்ந்து சாப்பிட முடியாது. அதனால் எப்போது உணவு கிடைக்கிறதோ அப்போது மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டு விடுவார்கள். அது அவர்களுக்கு நீண்ட நேரம் தாங்கும். போர் செய்யும் போது சாப்பாட்டுக்கு விதி இருக்காதல்லவா! அதனால் கிடைத்த போது நிறைய சாப்பிட்டு விடுவார்கள். அதுதான் வாரியர்ஸ் உணவுமுறை. இவ்வாறு அவர் சொன்னதை நினைத்துப் பார்த்தார் கலையரசன். இந்தத் தகவல் அவருக்கு வித்தியாசமாகப் பட்டது.

ஒருநாள் கலையரசனின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டன. உடலில் அரிப்பு, அதிகப் பசி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற தொல்லைகள் ஏற்பட்டன. அதுபற்றி இளங்குமரனிடம் கேட்டார் கலையரசன்.

“உடனே நீங்கள் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடலில் சர்க்கரையின் அளவைப் பார்க்கவேண்டும்’’ என்றார்.

“எனக்கு சர்க்கரை நோய் இருக்கலாம்னு சந்தேகப்படுகிறீங்களா? எங்க குடும்பத்தில் அம்மா, அப்பாவுக்கு சர்க்கரை நோய் இல்லையே’’ என்றார் கலையரசன்.

“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. அம்மா, அப்பா இருவருக்கும் இருந்தால் நீரிழிவு நோய்வர அதிக வாய்ப்புண்டு. யாரேனும் ஒருவருக்கு மட்டும் இருந்தால் அதில் பாதியளவு வாய்ப்புண்டு. இருவருக்கும் இல்லாவிட்டாலும் குறைவான வாய்ப்புகளும் உண்டு. உடல்பருமன், உணவுப் பழக்கம், அதிக பதற்றம் போன்ற காரணங்களாலும் வரலாம். அதனால் நீங்க உடனே இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது’’ என்று அறிவுரை கூறினார்.

“நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மூன்று செயல்பாடுகள் மிகவும் முக்கியம்’’ என்றார் இளங்குமரன் _ ஒரு நாள் கலையரசனிடம்.

“என்ன சார் அந்தச் செயல்பாடுகள்?’’ என வினவினார் கலையரசன்.

“உடற்பயிற்சி, மருந்து, உணவுக் கட்டுப்பாடு மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் நீரிழிவு பற்றிய அறிவும் நமக்கு வேண்டும்’’ என்றார், இளங்குமரன்.

“நீரிழிவு ஒரு நோய் தானே?’’ எனக் கேட்டார் கலையரசன்.

“இல்லை சார், அது ஒரு நோய் அல்ல; ஒரு குறைபாடு, அவ்வளவுதான். அதனால்தான் சொன்னேன் நீரிழிவு குறைபாடு பற்றிய அறிவுத் தெளிவு வேண்டும். வீணாகப் பதற்றப்-படக்கூடாது.’’

“எப்படிப்பட்ட அறிவுத் தெளிவு வேண்டும் சார்?’’

“அந்தக் குறைபாடு ஏன் என்பதை எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் கணையம் என்னும் உறுப்பில் லாங்கர்ஹான்ஸ் என்னும் திட்டுகள் உள்ளன. அவை இன்சுலின் என்னும் ஹார்மோனை சுரக்கின்றன. இந்த ஹார்மோன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்-பாட்டுக்குள் வைத்திருக்கும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து விடும். இந்த நிலையையே சர்க்கரை நோய் என்கிறார்கள். இதை ஒரு நோய் என்பதைவிட ஒருவித குறைபாடு என்றுதான் கூறவேண்டும்’’ என்று விளக்கமளித்தார் இளங்குமரன்.

அவர் கூறியபடியே இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. பிறகு மருத்துவரிடம் சென்று அவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்தார் கலையரசன்.

ஒரு நாள் இளங்குமரன் கலையரசனை நீண்ட தூர நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார். இருபது கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என இலக்கு வைத்து காடு மலைகள் நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் சென்ற வழியில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன.

“சார், இதுதான் ஆவாரம்பூ’’ என்றார் இங்குமரன்.

“நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால், அதன் பயன்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது’’ என்றார் கலையரசன்.

இளங்குமரன் அதன் பயன்களைக் கூற ஆரம்பித்தார்.

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் காண்போமா’’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்தப் பூக்களைப் பறித்து நிழலில் காயவைத்து பொடி செய்து அதில் நாள்தோறும் சிறிதளவு எடுத்து கொதிக்கவைத்து வடிக்கட்டி குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

அவர் கூறியதை வியப்புடன் கேட்டார் கலையரசன். இளங்குமரன் மேலும் சொன்னார்.

“இது உடல் சூடு, பித்தம், நீர்க்கடுப்பு போன்றவற்றுக்கும் அருமருந்தாகும். இன்னும் எவ்வளவோ பயன்கள் இருக்கு. உங்களுக்கு சர்க்கரை குறைபாடு இருப்பதால் இதைப் பறித்துக் கொள்ளுங்கள்.’’

இவ்வாறு அவர் சொன்னவுடன் கலையரசன் ஆவாரம் பூக்களை பறிக்கத் தொடங்கினார். இளங்குமரனும் சேர்ந்து பறித்துக் கொடுத்தார்.

அதோடு மட்டுமல்லாமல் பெரியா நங்கை, சிறியா நங்கை செடிகள் எவ்வாறு நீரிழிவைக் குறைக்க வல்லன என்பதையும் எடுத்துக் கூறினார்.

“அப்படீன்னா மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை நிறுத்திவிட்டு இந்த மூலிகைகளை மட்டும் சாப்பிடலாமா சார்?’’ எனக் கேட்டார் கலையரசன்.

“நோ, நோ! அப்படியெல்லாம் செய்யக் கூடாது. இவற்றை ‘சப்போர்டிங் மெடிசின்’ களாக மட்டுமே கருதவேண்டும். இவை நமக்கு உதவியாக இருக்கும். மாத்திரைகளை நிறுத்தவே கூடாது’’ என்று கண்டிப்புடன் கூறினார் இளங்குமரன்.

இளங்குமரனுக்கும் சில உடல் உபாதைகள் இருந்தன. அவருக்கு அளவற்ற உடல் பருமன். தூக்கமின்மையால் அடிக்கடி அவதிப்படுவார். கொரோனா தீவிரமாக இருந்த போதிலும் ஏனோ அவர் முகக் கவசம் அணிய-வேமாட்டார்.

“சார், நீங்க கண்டிப்பா முகக்கவசம் அணிய வேண்டும்’’ என்று ஒருநாள் சற்று கடுமையாகவே கூறினார் கலையரசன்.

“ம்.. அணிஞ்சிப்போம்… கொரோனா வரணும்னு தலைவிதி இருந்தா வந்துதான் தீரும்’’ என்றார்.

“சார், நீங்க ரொம்ப அலட்சியமா இருக்கீங்க. தலைவிதியாவது மண்ணாவது. நீங்க சில மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கணும். அதோடு இல்லாமல் நீங்க தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவே இல்லை. ஏன் இப்படிச் செய்றீங்க’’ என்று மீண்டும் ஒருநாள் கடுமையாகக் கேட்டார் கலையரசன்.

“அடுத்தவாரம் நான் சென்னை செல்ல உள்ளேன். போயிட்டு வந்து போட்டுக்கிறேன்’’ என்று பதில் கூறினார் இளங்குமரன்.

“என்னது? சென்னைக்கா? இந்தக் கொரோனா காலத்தில் நீண்ட தூரப்பயணம் ஏன்?’’ எனக்கேட்டார் கலையரசன்.

“என் சொந்தக்காரப் பொண்ணுக்கு மஞ்சள் நீராட்டு விழா. நான் மட்டும் போய் வந்திடலாம்னு இருக்கேன்’’ என்றார் இளங்குமரன்.

இதைக்கேட்டு எரிச்சல் அடைந்தார் கலையரசன்.

மஞ்சள் நீராட்டு விழா என்பது பெண்களை இழிவுபடுத்தும் ஒரு விழா. அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் பருவமடைதலும், இரத்தப்போக்கும், இயற்கையான உடலியல் மாற்றங்கள் என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது பெண்கள் மீதான ஒதுக்குதல் தேவையில்லையே. இதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத விழாக்களுக்கு நீங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு இது கொரோனா காலம். பயணத்தைத் தவிருங்கள். எங்களுக்கெல்லாம் அறிவுரை சொல்லும் நீங்களும் சற்றே பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும்’’ என்று கவலையுடனேயே கூறினார். கலையரசன்.

ஆனாலும் இளங்குமரன் சென்னைக்கு பேருந்தில் கிளம்பிவிட்டார் முகக்கவசமும் அணியவில்லை.

ஏற்கெனவே தூக்கமின்மையால் அவதிப்-படும் அவர், ஒரே நாளில் சென்னை சென்று திரும்பிய மறுநாளே சுரத்தினால் அவதிப்-பட்டார். கடையில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டார்.

செய்தியறிந்த கலையரசன் அவரை மருத்துவரிடம் காட்ட அழைத்தார். ஆனால் இளங்குமரன் வரவில்லை.

என்னை கொரோனா தாக்காது. சாதாரண சுரம்தான், சரியாகிவிடும் என்று அலட்சியமாகக் கூறிவிட்டார்.

அப்போது தமிழில் முதுகலைப் பட்டம்பெற வேண்டும் என்ற ஆவலில் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தார் கலையரசன். இதனால் நேரில் இளங்குமரனைச் சந்திக்க இயலாமல் இருந்தார் கலையரசன்.

ஒருவாரம் கடந்தது. நாள்தோறும் சுரம் வரவும் மாத்திரை சாப்பிடுவதுமாக இருந்துள்ளார் இளங்குமரன். யார் சொல்லியும் அவர் மருத்துவரிடம் வரவில்லை.

திடீரென ஒரு நாள் அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் செய்தியறிந்து பதறியடித்து ஓடிய கலையரசன் இளங்குமரனை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார். அவரது குடும்பத்தினரும் உடன் வந்தனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதை எடுத்துக் கூறினர். உடனடியாக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதை அறிந்தார் கலையரசன். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் சென்று கொரோனா பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்திருந்தால் இந்த மோசமான நிலை வந்திருக்காது என எண்ணினார்.

எவ்வளவுதான் படித்திருந்தாலும், அறிவு ஜீவியாக இருந்தாலும் பகுத்தறிவு இல்லாமல் இருந்தால் எல்லாமே பாழ்தான். இதை மக்கள் அனைவரும் உணரவேண்டும் என்று எண்ணிய படியே மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அவர், இளங்குமரனுக்கு அவரால் நேசிக்கப்பட்ட இயற்கை உறுதுணையாக இருக்கும் என நம்பினார்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *