பெண்ணால் முடியும்!

நவம்பர் 1-15,2021

முதல்வர் கையால் விருது!

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் வளர்ச்சிக்காக மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் பல திட்டங்களை அறிவித்து, அவர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  தலைவர் கலைஞரின் வழியில் திருநங்கைக்கான புதிய விருதினை சுதந்திர தின நாளில் வழங்கி அவர்களை மேன்மேலும் வளர ஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவித்து, முதல் விருதாளராக சிறந்த திருநர் என ‘கிரேஸ் பானு’ என்பவரைத் தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தினார். இவர் தூத்துக்குடியின் புதூர் பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பணி திருநங்கையர் வாழ்க்கையை மேம்படுத்தும் ‘திருநர் உரிமை கூட்டியக்கம்’ சார்பில் இவர் நடத்தியிருக்கும் சட்டப் போராட்டங்களால் திருநர் சமூகமும் தனிப்பட்ட திருநங்கைகளின் வாழ்வும் செழித்திருக்கின்றன. திருநங்கைகளுக்கு அவர்கள் படிக்க விரும்பிய படிப்பும் பணியும் கிடைப்பதற்கு கிரேஸ் பானுவின் சட்டப் போராட்டங்களே பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன.

இவரது சட்டப் போராட்டத்தின் மூலமாகவே டி.என்.பி.எஸ்.சி. தேர்வை மாற்றுப் பாலினத்தவர் எழுதலாம் என்னும் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.  மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா, இந்தியாவின் முதல் திருநங்கையாக அந்தத் தேர்வை எழுதினார். தான் செய்துவரும் பணியைப் பற்றிக் கூறுகையில்,

“சிறந்த திருநருக்காக தமிழ்நாடு அரசு விருது அறிவித்த முதல் ஆண்டே நான் தேர்வு செய்யப்பட்டு முதல்வரின் கைகளால் விருதைப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் தலைவி மோகனாம்பாள் அவர்களின் உழைப்பும் பங்களிப்பும் நிறைய இருக்கிறது. அதோடு எண்ணற்ற சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பு காரணமாகவே, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசு இந்த உயரிய விருதைத் திருநர் சமூகத்தினருக்கு அறிவித்திருப்பதன் மூலம் திருநர் சமூக மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நேர்மறைச் சிந்தனைகளுடன் செயல்படுவார்கள்’’ என்கிறார் கிரேஸ் பானு.

விடா முயற்சியால் அய்.ஏ.எஸ் தேர்வில் வெற்றியாளர்!

2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடிமைப் பணிக்கான (யுபிஎஸ்சி) தேர்வில்  ஜோலார்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த சூர்யா என்ற இளம்பெண் சிவில் சர்வீஸ் தேர்வில் 576 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தாயார் (தி.மு.க.வைச் சேர்ந்த) உமா கண்ணுரங்கம். இந்தியாவின் சிறந்த பெண்மணி என்னும் தேசிய விருதும் ஊழலற்ற சிறந்த நிருவாகம் செய்ததற்காக சிறந்த ஊராட்சி மன்றத் தலைவி என்கிற விருதினை முன்னாள் பிரதமர் வாஜ்பேயிடமும் இவர் பெற்றுள்ளார்.

இளைய மகள் சூர்யா. பள்ளிப் பருவத்தில் இருந்தே அய்.ஏ.எஸ். அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவுடன் தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை முடித்தார். தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாலும், அய்.ஏ.எஸ். ஆவதற்கான பயிற்சிகளை அவர் எடுத்து வந்தார். தொடர் முயற்சியால் வெற்றியும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து சூர்யா கூறுகையில், “அய்.ஏ.எஸ். என்பது எனது லட்சியம், சிறு வயது முதல் கனவு. அதற்கான முயற்சியும், பயிற்சியும் நான் தொடர்ந்து எடுத்து வந்தேன். யுபிஎஸ்சி தேர்வில் ஏற்கெனவே மூன்று முறை தேர்வு எழுதியுள்ளேன். தொடர்ந்து நான்காவது முறை எழுதி தற்போது தேர்ச்சி பெற்றுள்ளேன்.

அய்-.ஏ.எஸ் தேர்வில் பெற்றி பெற வேண்டும் என்பதற்காக முழு கவனமும் படிப்பில் செலுத்தினேன். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டேன்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். மட்டும் அல்ல; எந்தத் தேர்வாக இருந்தாலும், விடா முயற்சியுடன் கவனத்துடன் படித்தால் எவ்வளவு கடினமான கேள்வி கேட்டாலும் நம்மால் எளிதில் பதிலளிக்க முடியும். எனக்குக் கிடைத்துள்ள இப்பணியின் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பான பணியைச் செய்வேன். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்’’ என்கிறார் இளம் அய்.ஏ.எஸ்.சூர்யா.

தகவல் : சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *