சிந்தனை : கேள்விகளும் குழந்தைகளும்

நவம்பர் 1-15,2021

முனைவர் வா.நேரு

நவம்பர் 14 _ குழந்தைகள் நாள். குழந்தைகள் அனைவர்க்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துகள்.

குழந்தை வளர்ப்பு என்பது நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. குழந்தைகள் என்பவர்கள் பெற்றோர்க்கு உரியவர்களா? சமூகத்திற்கு உரியவர்களா? என்னும் கேள்வி எழுகிறபோது, குழந்தைகள் பெற்றோர்க்கு உரியவர்கள் என்றாலும் எதிர்காலச் சமூகம் அவர்கள்தான் என்னும் நிலையில் குழந்தை வளர்ப்பில் சமூகத்திற்கும் ஒரு பெரும்பங்கு இருக்கிறது.

பகுத்தறிவாளர்களைப் பொறுத்த அளவில் குழந்தை வளர்ப்பில், கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு மிக முக்கியம் எனக் கருதுகிறார்கள்.  குழந்தைகள் மழலையாக இருக்கும்போது அவர்கள் எதைப் பற்றியும் கேள்வி கேட்கும்போது பொறுமையாகப் பதில் அளிப்பது, குழந்தைகள் கேள்வி கேட்பதற்கான அடித் தளத்தை கல்வி நிலையங்களிலும் வீடுகளிலும் அளிப்பது மிகவும் தேவையானது.

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அவரிடத்தில் கேட்கப்பட்ட, எழுப்பப்பட்ட, எழுதிக் கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டே இருந்திருக்கிறார். அதைப் போலவே இன்றைய திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் கேள்விகளுக்குப் பதில் அளித்துக்கொண்டே இருக்கிறார். ‘நீரால் அமைவது உலகு’ என்பது போல ‘கேள்விகளால் அமைவது நல்உலகு’ என்னும் நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

சாக்ரடீஸ் போன்ற கிரேக்க அறிஞர்கள் கேள்வி கேட்பதுதான் மானுட வளர்ச்சிக்கான அடிப்படை என்பதைத் தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் கிரேக்கத்தில் கல்வி என்பதே, ஆசிரியர் கற்றுத்தருவதை உள்வாங்கிக் கொண்டு, அதில் கேள்விகள் எழுப்பி, ஆசிரியர் கற்றுத் தந்தது தவறு என்று மெய்ப்பிப்பவன்தான் நல்ல மாணவன் என்று கருதப்பட்டிருக்கிறான். ஒருவர் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. அவர் சொன்ன கருத்தை தனது அறிவால் கேள்விகள் எழுப்பி, தவறு என்பதை ஆதாரத்தோடு எண்பிப்பது என்பதுதான் பழம் கிரேக்க கல்விக் கோட்பாடு என்று அறிகின்றபோது வியப்பு ஏற்படுகிறது. இன்றைய நமது பள்ளிக் கூடங்கள், இன்றைய நமது வீடுகள் அதற்கான வாய்ப்பை வழங்குகின்றனவா? என்னும் கேள்வி எழும் போது, பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில்.

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு’

என்கிறார் திருவள்ளுவர். ஆனால், குழந்தைகளுக்கு ‘மூத்தவங்க சொல்றதைக் கேளு’ என்பதுதான் அறிவுரையாக இருக்கிறது. சிறுவர்களிடம் பாலியில் ரீதியாக தவறாக நடந்து கொள்பவர்களைப் பற்றிப் பேசும் ரிச்சர்டு டாக்கின்ஸ், “அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுக்க வேண்டுமெனத் தொட்டிலில் இருக்கும் பொழுதிருந்தே குழந்தையைப் பழக்குகிறார்கள். இந்தப் பழக்கத்தின் காரணமாகத் தங்களிடம் நம்பிக்கை வைக்கும் சிறுவர்களை மதகுருக்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். (கடவுள் ஒரு பொய் நம்பிக்கை,  கு.வெ.கி.ஆசான், பக்கம் 490). எத்தனை சிறுவர், சிறுமியர் உடல்ரீதியாக, மனரீதியாக மூத்தவர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள்… மூத்தவங்க சொல்வது எல்லாம் சரியா? என்னும் கேள்வியை எழுப்பு, சொல்கிறவர்கள் மூத்தவங்க என்றாலும் அவர்கள் சொல்வது சரியா என்று யோசித்துப் பார் என்று நமது குழந்தைகளிடம் நாம் சொல்கிறோமா? தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார். மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் கூட்டத்திலே உரையாற்றிவிட்டு, “நான் சொல்கிறேன் என்று நம்பாதீர்கள், உங்கள் அறிவைக் கொண்டு நான் சொன்னதை யோசித்துப் பாருங்கள், சரி என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள்; தவறு என்றால் விட்டு விடுங்கள்’’ என்று சொன்ன துணிவுதான் தந்தை பெரியார்.

மத நம்பிக்கை அடிப்படையில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு முதலில் கற்பிக்கப்படுவது பயம். பயமுறுத்துதல் மூலம் மட்டுமே குழந்தைகள் நன்றாக வளர்வார்கள் என்று மத நம்பிக்கை உள்ளவர்கள்  நினைக்கிறார்கள். அதற்காக பேய், பிசாசு, நரகம் என்று சொல்லி குழந்தைகளாக இருக்கும் போதே பயமுறுத்துகிறார்கள். அந்தப் பயமுறுத்தல் குழந்தைகள் மனதை வெகுவாகப் பாதிக்கிறது. எதையும் கேள்வி கேட்கும் மனப்பான்மைக்குப் பதிலாக, அஞ்சி ஒடுங்கி, ஓரமாக நிற்கும் குழந்தையாக மாற்றி விடுகிறார்கள். இது எதிர்காலச் சமூகத்தைப் பாழ்படுத்தும் ஒரு செயல் என்பதனை எத்தனை பேர் உணர்கிறார்கள்? இந்த அச்சம் எவ்வளவு கொடுமையானது!

ரிச்சர்டு டாக்கின்ஸ், “இந்த நரகம் பற்றிய பயமுறுத்துதல் எவ்வளவு தூரத்திற்கு குழந்தைகளைப் பாதிக்கிறது? பெரியவர்களாக ஆன பின்னும் எப்படி அவர்களை அந்தப் பயமுறுத்துதல் துரத்துகிறது?’’ என்பதனை மிக விரிவாகத் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

“மற்ற விசயங்களில் பகுத்தறிவைப் பயன்படுத்தும் மக்களிடையே கூட நரகத்தின் நெருப்பைப் பற்றிய அச்சம் மெய்யானதாக இருக்க முடியும்” என்று குறிப்பிடும் ரிச்சர்டு டாக்கின்ஸ் தனக்கு ஒரு பெண்ணிடம் இருந்து வந்த கடிதத்தைக் குறிப்பிடுகிறார். “அய்ந்தாவது வயதிலிருந்து கத்தோலிக்கப் பள்ளி ஒன்றுக்குச் சென்றேன். கன்னித் துறவிகள் தங்கள் மதக் கொள்கைகளை என்னுள் ஏற்றினர். தோல்வார் (கச்சை), குச்சி, பிரம்பு ஆகியவற்றால் அடித்தனர். வளரிளம் பெண்ணாக இருந்த பொழுது டார்வினுடைய கோட்பாட்டைப் படித்தேன்; பரிணாம வளர்ச்சியைப் பற்றி சொன்னது என் சிந்தனைக்கு ஏற்றதாக இருந்தது. இருப்பினும், வாழ்க்கையில் மனப் போராட்டங்களை  நிறையச் சந்தித்தி ருக்கிறேன். என்னுடைய ஆழ்மனத்தில் நரகத்தின் நெருப்பைப் பற்றிய அச்சம் இருக்கிறது; அடிக்கடி அது தூண்டப் பெறுகிறது. மன மருத்துவம் செய்து கொண்டதால், என்னுடைய தொடக்கக் காலப் பிரச்சனைகள் சில தீர்ந்துள்ளன. ஆனால் (நரகத்தைப் பற்றிய) இந்த ஆழ்ந்த அச்சத்தை வெல்ல முடியவில்லை.’’ (கடவுள் ஒரு பொய் நம்பிக்கை, கு.வெ.கி.ஆசான், பக்கம் 497). என்ன கொடுமை பாருங்கள். குழந்தைப் பருவத்தில் ஏற்படுத்தப்பட்ட இல்லாத நரகத்தைச் சொல்லி ஏற்படுத்தப்பட்ட பயம், ஒரு குழந்தையை வளரிளம் பருவம் வரும்போது அதை ஒரு மன நோயாளியாக்கி விடுகின்ற அளவுக்குக் கொடுமையாக இருக்கிறது.

“ஆராய்ச்சியாளருக்கு இவ்வுலகத்திலோ மறுவுலகத்திலோ தண்டனையளிப்பதாகப் பயமுறுத்துகிறவர்கள் மனித சமூகத்தின் விரோதிகள் ஆவார்கள். வீடுபேறு வாங்கிக் கொடுப்பதாக ஆராய்ச்சியாளருக்கு ஆசை வார்த்தை கூறி, அவர்களைத் தப்பு வழியில் செலுத்துகிறவர்கள் தேசத்துக்கும் மக்களுக்கும் எதிரிகள் ஆவர். பகுத்தறிவை முன் நிறுத்தியே எல்லா ஆய்வுகளும் நடைபெற வேண்டும். ஒவ்வொருவனும் தனக்கும், மனச்சாட்சிக்கும் உண்மை உடையவனாக இருக்கவேண்டும்’’ என்று இங்கர்சால் குறிப்பிடுகின்றார்.

ஒரு குழந்தை நரகம் என்பதை, சொல்வதை வைத்து மட்டுமே புரிந்து கொள்கிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி நரகம் என்பது எப்படி இருக்கும் என்பதை மதப் புத்தகங்களை அடிப்படையாக வைத்து கிராபிக்ஸ் மூலமாக கணினியில் உருவாக்கி அதனைக் குழந்தைகளுக்குக் காட்டுகிறார்கள். கடவுளைக் கேள்வி கேட்டால், சந்தேகித்தால் நீ நரகத்திற்குப் போவாய் எனக் குழந்தையை அச்சுறுத்துவதில் தான் குறியாக இருக்கிறார்கள்.

சில மாணவர்கள் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் படித்த பாடம் பற்றிய சரியான புரிதல் இல்லை. அந்தப் பாடத்தின் அடிப்படையே தெரியவில்லை. ஏனென்றால், அது மனப்பாடக் கல்வி. எந்தவித புரிதலும் இல்லாமல், பாடத்தை வெறுமனே மனப்பாடம் செய்து, மனப்பாடம் செய்து ஒப்பித்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கு வந்து விடுகிறார்கள். நேர்முகத் தேர்வு போன்ற இடங்களில், அவர்கள் படித்த பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே, கேள்விகள் கேட்கப்படும்போது திணறுகிறார்கள். இதற்கான காரணம் அவர்கள், கேள்வி கேட்டு, கேள்வி கேட்டுப் படித்து வந்தவர்களில்லை. குழந்தையாக இருக்கும்போதே, கேள்விகள் கேட்பதை ஊக்கப்படுத்துவதற்கான வகுப்புகள் இருக்குமானால், அவர்களுக்கு பாடத்தைப் புரிந்து கொள்வது என்பது மிக எளிதாக இருக்கக் கூடும்.

குழந்தைகள் தந்தை பெரியாரைத் தெரிந்து கொள்வது என்பது _ கேள்வி கேட்கத் தெரிந்து கொள்வது, பயத்தைப் போக்கத் தெரிந்து கொள்வது, எதையும் ஆதாரமில்லாமல் நம்பக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது.

நமது பரம்பரை எதிரிகள் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பயத்தைக் கற்பிக்கிறார்கள். நாம் பகுத்தறிவைக் கற்பிக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பாக நடத்தப்பட்ட விழாவில், பெரியார் பிஞ்சு சித்தார்த்தன் பேசினான். அவனுடைய பேச்சு என்பதே கேள்விகளால் அமைந்ததுதான். அப்படி என்ன  செய்து விட்டார் பெரியார்? என்று அந்தக் கேள்வியோடு ஆரம்பித்த சித்தார்த்தனின் சென்ற ஆண்டு உரை சமூக ஊடகங்கள் மூலமாக பல இலட்சம் பேரைச் சென்று அடைந்துள்ளது. அதனைப்போலவே இந்த ஆண்டும் அந்தப் பெரியார் பிஞ்சுவின் உரை அமைந்தது. நிறையக் குழந்தைகள் தமிழில், ஆங்கிலத்தில் தந்தை பெரியாரைப் பற்றிப் பேசினார்கள். இந்த வயதில் தந்தை பெரியாரைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? என்றால், கட்டாயம் இந்த வயதில்தான் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மதவாதிகள், குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே தங்கள் மதத்தைப் பற்றியும் தங்கள் கடவுள் பற்றியும் கற்றுக் கொடுக்கிறார்கள். அதோடு பயத்தையும் கற்றுக் கொடுக்கிறார்கள். பயம் அறிவை வளர்க்காது. ஆனால், பயமுறுத்துவதன் மூலமாகத்தான் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும் என்று பெற்றோரும், மூத்தவர்களும் நினைக்கின்றார்கள். இல்லை, பயமுறுத்துவதால் நல்ல எதிர்காலச் சமுதாயம் அமையாது. தீமை செய்யாதே, அதனால் தீமை விளையும் என்று பிள்ளைகளைத் தெளிவு-படுத்தலாம். ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் திராவிட மாடல். சூழல் அமையும் போதுதான் ‘எதிர்காலச் சமுதாயம் மிக நன்றாக அமையும். கேள்விகளும் பதில்களுமாக அமையும் சூழலில் வளரும் குழந்தைகள்தான் புதிய உலகம் அமையத் துணை நிற்பார்கள். அறிவியல் ஆராய்ச்சி மூலமாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவார்கள்.  இனிவரும் உலகம் பெரியார் உலகமாக அமைய, பயமற்ற சூழலில் குழந்தைகளை வளர்ப்போம்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *