சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : எருமைத் தேசியம்

ஜுலை 16-31,2021

நூல்:  ‘‘எருமைத் தேசியம்’

ஆசிரியர்:    ‘காஞ்ச அய்லய்யா’

தமிழில்:  கவின் மலர்

                     இணைந்த வெளியீடு: கருப்புப் பிரதிகள், தலித் முரசு,

                                                                                         பி55, பப்பு மஸ்தான் தர்கா,                                                                                                            லாயிட்ஸ் சாலை,சென்னை – 600 005.

தொலைபேசி:   94442 72500

மின்னஞ்சல்:  karuppupradhigal@gmail.co

‘எருமைத் தேசியம்’ என்னும் இந்நூலின் ஆசிரியர் காஞ்ச அய்லய்யா உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது பணிக்காலம் முதல் இப்போது வரையும் ஜாதி ஒழிப்பு, இந்து மத பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளை தன் எழுத்துகள் மூலம் சமூகத்திற்கு எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்பாட்டாளர். அதனால், பல்வேறு தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டார்.

இந்தக் கட்டுரை தொகுப்பு அவர் பல்வேறு காலக்கட்டத்தில், பல மாநிலத்திலிருந்து வெளிவரும் முக்கிய ஆங்கில நாளேட்டில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாகும். நூலில் உள்ள ஒன்பது பகுதிகளிலும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைத் தடத்தினில் நாட்டில் ஏற்பட்டு வரும் மோதல் சூழலையும், அதனையொட்டி மனிதர்களை அவர்களின் நிறம், ஜாதி, மதம் என்னும் குறியீடுகளைக் கொண்டு அவர்களால் கட்டமைக்கப்படும் பார்ப்பன தன்மையும், அதனை எக்காலத்திற்கும் சாதித்துக் கொள்ள முயலும் ஆரிய உணர்வை ஆய்வியல் நோக்கிலும் எளிய மனிதர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் நம்முடைய அறிவினை விரிவாக்கும் கருத்துகளுடன் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.

பண்டைய சமூகத்தில் ஆதிவாசிகளுக்கும் சண்டாளர்களுக்கும் சூத்திரர்களுக்கும் கல்வி உரிமை கிடையாது. ஆகவே, சுயதேசியம் குறித்த அறிவும் இல்லை. பார்ப்பனர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் தனியுடைமையாகவே கல்வி இருந்தது. காலனியாதிக்கத்தின் நவீனத் தன்மை எல்லோருக்கும் கல்வியை வழங்கியது. ஒடுக்கப்பட்டோர் எழுதவும் படிக்கவும் வாய்ப்புக் கிடைத்து முன்னேறிவரும் சூழலில், அய்.அய்.டி என்னும் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பாகுபாடு கூறி, பிற்படுத்தப்பட்ட _ தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உயர்ஜாதியினரால் இழிவுபடுத்தப்பட்டும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டும் வரும் இந்தக் காலகட்டத்தில்  இதுபோன்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கையை  நாட்டின் கொள்கையாக மாற்றத் துடிக்கும் பார்ப்பனர்களின் முகத்திரையைத் தோலுரித்துக் காட்டும் நூல்கள் மிக மிக அவசியம்.

மனிதர்கள் முதற்கொண்டு விலங்குகள் வரை பல்வேறு பாகுபாட்டினைக் காட்டி அடிமைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை எளிமையாகத் தன் எழுத்தில் கொண்டு வந்துள்ளார்.

காலத்தின் தேவையான இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ள கவின் மலர், நூலினை எளிமையாகவும் விரிவாகவும் தந்துள்ளது வாசகர்களை ஆர்வத்தோடு படிக்கத் தூண்டுகிறது. இனி “எருமைத் தேசியம்’ நூலின் ஒரு பகுதி உங்களுக்காக…

– மகிழ்

பசு, எருமை மற்றும் தேசியம்

நாக்பூரில் அண்மையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் தீர்மானங்களில் ஒன்று _ ‘பசுவையும் கன்றையும் வதை செய்வதைத் தடைசெய்ய வேண்டும்’ என்றது. மொத்தமுள்ள பத்தொன்பது தீர்மானங்களில் அய்ந்தாவது தீர்மானம் இது. இந்திய அரசு ‘இந்தத் தடையை செம்மையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று கோருகிறது. ஏன் பசுவதையை மட்டும் தடை செய்ய வேண்டுமென பா.ஜ.க. கேட்கிறது? ஏன் எருமை வதையையும் தடை செய்யச் சொல்லி கேட்கவில்லை? எருமையும் பசுவும் பால் தரும் விலங்குகள்தாம். நம் தலித் பெரும்பான்மை மக்கள் இவை இரண்டின் மீதும் காண்பிக்கும் அன்பை வைத்துப் பார்த்தால் இரண்டு விலங்குகளுக்கும் ஒன்று போல மரியாதை அளிக்க வேண்டும். ஆனால், இந்துத்துவ வேலைத் திட்டத்தில் இதுவரை எருமைக்கு இடமே இருந்ததில்லை. நிச்சயமாக, ஆதிக்க ஜாதிகள் தேநீர், காபி, யோகர்ட், மோர், நெய் என்று விதவிதமான வடிவங்களில் அதன் பாலை பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளன. எருமையின் பால் பார்ப்பனிய ஆன்மிகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால், ஒரு விலங்காக எருமைக்கு இந்து இலக்கியத்தில் எந்த விதத்திலும் மதிக்கத்தகுந்த இடமில்லை.

தேசத்தை ஆளுகின்ற கட்சியின் வேலைத் திட்டத்தில் தனிப்பட்ட முறையிலும் மொத்தமாகவும் பசுவுக்கு இருப்பதைப் போல ஏன் எருமைக்கு அதேபோன்ற இடம் கிடைக்கவில்லை? இந்துத்துவ தேசியவாதத்தில் இது ஒரு தீவிரமான பிரச்சனை. இன்றைக்கு ஒரு பொருளாதார ஆய்வு நடத்தினால் இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான மூலதனமாக எருமைதான் இருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் பசுவைவிட எருமைதான் இவர்களின் பெரும் அன்புக்குரியது. இந்து பார்ப்பனிய ஆன்மிகத்திற்கு சூத்திரர்களோ சண்டாளர்களோ பழங்குடியினரோ மதிப்புக்குரியவர்கள் அல்லர்; அவர்கள் தீண்டத்தகாதவர்கள், புனிதமற்றவர்கள். ஏனெனில், அவர்கள் புலால் உண்ணுகிறார்கள். ஆனால், ஒரே புல்லைத்தான் எருமையும் பசுவும் உண்ணுகின்றன. ஏன் எருமை ஆன்மிகத்திலும் அரசியலிலும் தீண்டத்தகாததாக இருக்கிறது? ஏன் பசு முன்னுரிமைக்குரியதாக இருக்கிறது?

வரலாற்று உண்மை என்னவெனில், இந்த இரு விலங்குகளுமே சமமாக விரும்பப்பட்டன, வளர்க்கப்பட்டன, இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால், தலித் பெரும்பான்மை மக்கள் அவற்றை வீட்டில் வளர்க்கத் தொடங்கியவுடன் அவ்விலங்குகள் அம்மக்களுக்கு பால், தயிர் போன்ற ஏராளமான பொருள்களைத் தந்தன. தலித் பெரும்பான்மை மக்கள் அவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பி, குளிப்பாட்டி, அவற்றின் சாணத்தை சுத்தம் செய்தனர். பசுக்களின் புனிதத்தைப் பற்றிய கதைகளைச் சொல்வதன் மூலம் ஆன்மிக மனநிறைவு கொள்ளும் அத்தனை சாதுக்களும் சந்நியாசிகளும் அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறார்களா என பா.ஜ.க.தான் கேட்டுச் சொல்ல வேண்டும்.

பசுக்கள் ‘புனிதமானவை’ என்பதால் எத்தனை சங்பரிவார் தலைவர்களின் குழந்தைகள் அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துப் போக பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்? ஆனால், முரண்பாடாக, நூற்றுக்கணக்கான தலித் _ பெரும்பான்மை மக்களின் குழந்தைகள் அவற்றுக்கு உணவளிப்பதும் வளர்ப்பதுமாக இருப்பதை மட்டுமே காண முடிகிறது. காலங்காலமாக அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் வாழ்க்கையை கால்நடைகளை கவனித்துக் கொள்வதற்கென்றே அர்ப்பணிக்கின்றனர். இத்தகைய வேலைக்காக அவர்கள் எப்படி அவமானப்படுத்தப் படுகின்றனர் என்பது, பொருளாதார ரீதியாக அவர்களின் நிலை என்ன என்பதும் நமக்குத் தெரியும். ஜனநாயகத்தில் எந்த விலங்குக்கு தேசிய அளவில் முக்கிய இடம் கொடுக்க வேண்டும் என்பதை இத்தகையோர் தான் முடிவு செய்ய வேண்டும். நம் தேசிய விலங்கு எது என்று இவ்விலங்குகள் மீது அன்பு செய்து அவர்களோட வாழ்ந்த இந்த மக்கள் முடிவு செய்ய வேண்டுமா? அல்லது பார்ப்பன மதிப்பீடுகள் நிலைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் கட்சியொன்று முடிவு செய்ய வேண்டுமா?

ஒரு குறிப்பிட்ட விலங்கை தேசிய அளவில் மதிக்கத் தகுந்தது என்றும், பாதுகாக்கத் தகுந்தது என்றும் முடிவு செய்தால் பிற விலங்குகள், அவை பொருளாதார ரீதியாக எவ்வளவு பயன்பாடுடையதாக இருந்தாலும் அவை முக்கியமில்லாதவை என்று பொருளாகிறது. அவ்விலங்கின் இனப் பெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதோ அல்லது அந்த இனத்தின் அழிவோ ஆளும் வர்க்கத்தின் கவலையாக மாறுகிறது. விலங்குகளை வழிபடுவது என்பது பழமையான சடங்குகளில் ஒன்று. விலங்கையும் சிலையையும் வழிபடுவது குறித்த முதல் எதிர்ப்பு வந்தது கி.மு.850இல் ஆசிய பண்டைய இறைத் தூதர் ஈசாவிடமிருந்துதான். இரண்டாவது எதிர்ப்பு கி.மு.600 புத்தரிடமிருந்து வந்தது. உண்மையில் விலங்குகளை வழிபடுவது நின்ற பின்னர்தான் அவற்றை உற்பத்திக்காகப் பயன்படுத்துவது அதிகரித்தது. உணவுக்கான முக்கிய மூலதனமாக விலங்குகள் இருந்தவரை விலங்கு வழிபாடு தொடர்ந்ததாகத் தெரிகிறது. சிந்து சமவெளி பொருளாதாரத்தில் எருமையும் பசுவும் உணவுக்கான ஆதாரமாக இருந்தன. அவை இரண்டும் சமமான மரியாதையும் மனிதர்களின் அன்பையும் பெற்றிருந்தன.

இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் குதிரையை போக்குவரத்துக்காகவும், ஒருவகை பசுக்களை உணவுக்கான ஆதாரமாகவும் கூடவே அழைத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. பசுக்கள் அவர்களின் முக்கிய உணவு என்பதால் அவற்றை வழிபட்டதாகத் தெரிகிறது. இப்படித்தான் ரிக் வேத ஆரியர்கள் காலத்தில் பசுவைப் பலியிடுவது முக்கிய இடத்தைப் பிடித்தது. இந்நிலத்துக்குச் சொந்தக்காரர்களான திராவிடர்களுக்கும் இடம்பெயர்ந்து வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்கும் இடையே நடந்த இனப்போரில் ஆரியர்கள் திராவிடர்களை வென்றார்கள். இதற்கு முக்கியக் காரணம் ஆரியர்கள் தங்களுடன் வேகமாக ஓடக்கூடிய குதிரைகளை அழைத்து வந்ததும் அவர்களிடமிருந்த முன்னேறிய போர் தொழில்நுட்பமும்தான். (இந்தியா மீதான முஸ்லிம்களின் வெற்றிக்கும் ஆங்கிலேயரின் வெற்றிக்கும் இதுபோன்ற காரணங்களே சொல்லப்பட்டன.) ஆரியர்கள் தங்களுடையது எல்லாமே சிறந்தவை என்றும் திராவிடர்களுடையது அனைத்தும் அசிங்கமானதும் அரக்கத்தன்மையுடையதும் என்றும் கட்டமைத்தனர்.

மனிதர்களாக இருந்தாலும் விலங்குகளாக இருந்தாலும் வெள்ளை நிறவெறியால் இவ்வுலகில் பாதிக்கப்பட்டது கருப்புதான். இந்தியாவில் ஹிட்லரின் கற்பனையான ஆரிய நிறவெறி உயர்வு மனப்பான்மையில் –  கருப்பு மனிதர்களும் அன்புக்குரிய கருப்பு விலங்குகளான எருமை போன்றவையும் _ தங்கள் அடையாளங்களை இழந்தனர். ஆரியர்களின் அட்டூழியங்களின் ஒரு பகுதியாக, திராவிடர்களைப் போலவே கருப்பு நிறம் கொண்ட எருமை அவமதிப்புக்குள்ளானது. ஆரியர்கள் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் அவர்கள் எப்படி மரியாதைக்குரியவர்களாகவும் அழகானவர்களாகவும் ஆனார்களோ அதுபோலவே வெள்ளை நிறமான பசுவும் மரியாதைக்குரியதாக மாறியது.

பசுவின் மாமிசம் ஆரியர்களுக்குப் பிடித்ததற்குக் காரணம் அது அனைவரும் விரும்பக்கூடிய ‘யக்ன பசு’வாக (பலியிடக்கூடிய விலங்கு) மாறியதுதான் என்று நம் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். யக்ன பலியிடுதலில் எருமை (மஹிஷி) பயன்படுத்தப்பட்டது குறித்து சமஸ்கிருத மொழியிலும் கூட எந்தச் சான்றும் இல்லை. ஆனால், பசுவைப் பலியிட்டது குறித்த ஏராளமான சான்றுகள் உள்ளன. முதலில் சடங்குகளில் அனுமதிக்கக்கூடிய விலங்காக பசு இருந்தது என்பதற்கும் தொடக்கத்தில் பலியிடவும் பின்னாளில் வழிபட்டதற்கும் ஆரியர்களின் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட விருப்பம்தான் காரணம்.

ஆக, இந்திய ஆரியர்கள் மனிதர்களை ஜாதியாகப் பிரிதது வைத்து (நம் சமூகத்தில் அனைத்து சூத்திரர்கள், சண்டாளர்கள் மற்றும் பழங்குடியினர் அனைவரும் திராவிட வேர் கொண்டவர்கள் என்பது நன்கறிந்ததே) தங்கள் நிறவெறியை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், அதை விலங்குகளுக்கும் நீட்டித்தனர். இதனாலேயே கருப்பான எருமை ஒருபோதும் பார்ப்பன இந்து புராணங்களில் ஆன்மிக இடத்தைப் பெறவே இல்லை.

ஜனநாயகத்தில் பார்ப்பனர்களுக்குப் பாதுகாப்பு என்று கேட்பது அபத்தமாக இருக்குமென்பதால் பா.ஜ.க. அதை விட்டுவிட்டு, ஆரிய பார்ப்பனக் கோரிக்கையான பசுவைப் பாதுகாப்பதை கோரிக்கையாக வைக்கிறது. நாக்பூரில் ஒரு ‘கருப்பு திராவிடரான’ பங்காரு லட்சுமணன் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். அந்தக் கூட்டத்தில்தான் பார்ப்பனக் கோரிக்கையான எருமைகள் தவிர்த்த பசு பாதுகாப்புத் தீர்மானம் நிறைவேறியது.

பசுக்கள் மட்டும் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும், எருமைகள் ஏன் பாதுகாக்கப்படத் தேவையில்லை என லட்சுமணன் இந்தியாவின் தலித்துகளுக்குச் சொல்வாரா?

– ‘மிட் டே’, அக்டோபர் 4, 2003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *