அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (272)

ஜுலை 16-31,2021

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பங்கு வேண்டும்

கி.வீரமணி

நாகை காயிதே மில்லத் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம் அவர்களின் மகன் எஸ்.செயபாலன் 13.10.1996 அன்று  மாரடைப்பால் மரணமுற்றார் என்னும் செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். மறைந்த செயபாலன் அவர்கள் சிறந்த பகுத்தறிவுவாதி யாவார். அவரது இறுதி நிகழ்ச்சியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை, எனது துணைவியார் வீ.மோகனா, தலைமை நிலையச் செயலாளர் கலி.பூங்குன்றன் முதலியோர் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்ச்சிகள் எந்தவித சடங்குகளுமின்றி நடைபெற்றது. அவரது குடும்பத்தாருக்கும் எனது சார்பில் ஆழ்ந்த இரங்கலை கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம்.ஜக்கிரியா அவர்களின் குடும்பத்தின் திருமணம் 19.10.1996 அன்று சென்னை எழும்பூர் ஓட்டல் இம்பீரியல் சிராஜ் கல்யாண மண்டபத்தில், திருச்சி எம்.அப்துல் மஜித் அவர்களின் மகன் எம்.ஏ.மாலிக் முகம்மது _ சென்னை ர.அசிப் ரப்பாவின் மகள் ஏ.ஆர்.பாத்திமா பதூல் ஆகியோரது திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு ஏராளமான பிரமுகர்களும், உறவினர்களும் வந்திருந்தனர். நானும் எனது துணைவியார் மோகனா மற்றும் கழகப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டோம். அனைவரையும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம்.ஜக்கிரியா அன்புடன் வரவேற்றார்.

மணமக்க¬ளை வாழ்த்தி உரை ஆற்றுகையில், “பெரியார் பெருந்தொண்டர் அய்யா எஸ்.எம்.ஜக்கிரியா தமது 85ஆம் வயதிலும் கருஞ்சட்டை அணிந்து அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். அவர்கள் இயக்கத்தில் மூன்று தலைமுறைகளைக் கண்டவர். தந்தை பெரியாரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்; இயக்கத்தில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்களுக்கெல்லாம் சாட்சியாக இருக்கக் கூடியவர்கள். இந்த வயதிலும் ஆர்வம் சிறிதும் குன்றாத இயக்க உணர்வாளர். அவர்களின் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் நாங்கள் எல்லாம் கலந்துகொள்வது எங்களின் நீங்காக் கடமையாகும்.

மணமக்கள் இருவரும் ஜக்கிரியா அவர்களைப் பின்பற்றி, எல்லா நலன்களும் நிறையப் பெற்று நீடு வாழ வாழ்த்துகிறேன்’’ என உரையாற்றினேன்.

சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவரும் “அறிவுவழி’’ இதழின் ஆசிரியரும், சுயமரியாதை சமதர்ம வீரருமான மானமிகு தோழர் ‘செஞ்சட்டை’ கே.பஞ்சாட்சரம் அவர்கள் ஒரு விபத்தின் காரணமாக திடீரென்று 25.10.1996 அன்று காலமானார் என்ற செய்தி நமக்குப் பேரிடியாய் அமைந்தது.

திராவிடர் கழகம் நடத்தும் அத்தனை அறப்போர்களிலும் தவறாது ஈடுபடும் தோழர் பஞ்சாட்சரம் ஒரு தீவிர சுயமரியாதை கொள்கைக்காரர்; 24 மணி நேரத்தில் பெரும்பகுதியை பெரியார் திடலில்தான் செலவழிக்கக் கூடியவர்.

அவரது மறைவு நமது இயக்கத்திற்கு மிகப் பெரும் ஈடு செய்ய இயலாத இழப்பு ஆகும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ‘அறிவுவழி’ தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, மறைந்த மாவீரருக்கு நமது வீர வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.

என்.ஜி.ஓ. சங்கத் தலைவரும், மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவருமான கடலூர் சு.அறிவுக்கரசு, இரஞ்சிதம் ஆகியோரின் செல்வன் அ.மணிநிலவன் அவர்களுக்கும், புதுச்சேரி வழக்குரைஞர் ஜெகதீசன், வசந்தா ஆகியோரின் செல்வி பிரேமா அவர்களுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா நிகழ்ச்சியை 30.10.1996 அன்று கடலூர் சுப்புராயலு (ரெட்டியார்) திருமண மண்டபத்தில்  தலைமையேற்று நடத்தி வைத்தேன்.

மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தையார் அறிவுக்கரசு  வரவேற்றுப் பேசினார்.

மணமக்களைப் பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தனசேகரன், கதர் குப்புசாமி, நெல்லிக்குப்பம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி மிசா மணி, கோவை ப.க. தலைவர் புலவர் மருதவாணன், கடலூர் நகர் மன்றத் தலைவர் தங்கராசு, கழகப் பிரச்சாரச் செயலாளர் துரை.சந்திரசேகரன், ஓய்வு பெற்ற மாவட்ட அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் இராசேந்திரன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் வந்தியத்தேவன், வழக்கறிஞர் தயாநிதி, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பழமலை ஆகியோரும் உரையாற்றினர். இறுதியாக, மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறச் செய்து மணமக்களை மாலை மாற்றிக் கொள்ளச் செய்து, மணவிழாவினை நடத்தி வைத்துச் சிறப்புரை ஆற்றினேன்.

இறுதியாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தைச் சேர்ந்த கண்ணப்பன் நன்றி கூறினார். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து அரசு அலுவலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மணவிழா மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தருமபுரி மாவட்டத்தின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரூர் தேசாய் டி.சி.வேணுகோபால் அவர்கள் 1.11.1996 அன்று மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும் துன்பமும் அடைந்தேன்.

93 ஆண்டுகளைக் கடந்த அவர் (பிறப்பு 6.7.1904) நீதிக்கட்சி காலந்தொட்டு இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு உழைத்த ஒரு சீரிய சுயமரியாதை வீரர் ஆவார். கருப்புச் சட்டையும், கட்டுப்பாடும் அவர் கடைசிவரை காத்தார்.

பல போராட்டங்களில் சிறையேகி மீண்ட போராட்ட வீரர் அவர். ‘மிசா’வில் அவர் சேலம் சிறையில் இருந்து கொடுமைகளை அனுபவித்தவர். எந்த நிலையிலும் நெஞ்சுரமிக்க சுயமரியாதை வீரர்! தருமபுரி மாவட்டம் இன்று கழகக் கோட்டையாவதற்கு, அன்று ஓடோடி உழைத்த உத்தமத் தோழர்களில் ஒருவர்.

அறிவு ஆசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரது அன்புக்கு மிகுதியும் பாத்திரமானவர். நம்மிடம் அதே அளவுக்கு பாசத்தையும், மதிப்பையும் கொட்டிய பெருந்தகை! அவரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, இயக்கத்திற்கே ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு ஆகும்!

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும் கூறி ‘விடுதலை’யில் வருத்தத்தோடு வீரவணக்கம் செலுத்தி அறிக்கை வெளியிட்டோம்.

இந்திய வெளியுறவு அமைச்சர் குஜ்ராலுக்கு ஈழத் தமிழர்கள் உரிமைகள் நிலைநாட்டும் வகையில் கடிதம் ஒன்றை திராவிடர் கழகம் சார்பில் நானும், முன்னாள் அமைச்சர் க.இராசாராம், பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ் அமைப்பின் தலைவர்கள், ஈழ உணர்வாளர்கள் என 58 பேர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை 2.11.1996 அன்று அனுப்பினோம். அதில்,

“40 ஆண்டுகளாக ஈழத்தமிழ்த் தலைவர்களுடன் சிங்கள அரசு செய்த ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றப்படாததோடு புத்த குருமார்களின் விட்டுக் கொடுக்காத வெறிப் போக்கும் காரணங்களாய் அமைந்தன. இவை அனைத்திற்கும் மேலாக இந்திய அரசோடு இலங்கை அரசு செய்த எந்த ஒப்பந்தமும் நிறைவேற்றப்படவில்லை. அதே வேளையில் விரும்பத்தகாத நிலையில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் காரணமாக தமிழர்களைப் பாதிக்கின்ற அளவுக்கு இலங்கை அரசுக்கு அனுதாபம் காட்டுகின்ற முறையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது மாற்றத்திற்கு உள்ளாகியதை நாம் மறக்கவில்லை. எனினும் இச்சூழ்நிலையில் ஈழத் தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் அழிவின் விளிம்பிற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை நாம் இங்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

துன்பங்கள் பலவற்றிற்கு ஆளாகி தம் வதிவிடங்களில் இருந்தே வலிந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றுள்ள ஒரே ஓர் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற  உண்மையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. சிங்கள அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி துன்பமுறும் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அரவணைப்பை நாடுவது இயற்கை. காரணம் அவர்களே அவர்களின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்கள்.

தமிழீழ மண்ணின் ஒரு பகுதியை படைபலம் கொண்டு கைப்பற்றி இருக்கும் சிங்களப் படையை வெளியேற்ற சிங்கள வெறியர்களும், பவுத்தமத குருமார்களும் முற்றாக மறுக்கிறார்கள். அத்தோடு இந்துமதம் தழுவிய தமிழர்களையும், இஸ்லாம் மதம் தழுவிய தமிழர்களையும் பிரித்தழிக்கும் சதி முயற்சியில் இதே சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு உடன்பிறப்பு உறவு உணர்வு இருப்பதை சிங்கள அரசியல்வாதிகள் என்றுமே ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரை மொழி, பண்பாடு, நாகரிகம், சமயம், இனத் தொடர்புகள் என்று எத்துறையை எடுத்தாலும் இந்தியாவை விட வேறு எந்த ஒரு நாட்டோடும் தொடர்பு கொள்ளவோ ஆறுதல் பெறவோ ஆதரவை நாடவோ முடியாத நிலை உண்டு.

விரைவில் இலங்கைக்கு செல்ல இருக்கும் இந்திய அரசின் வெளியுறவு அமைச்சர் இவற்றையெல்லாம் நினைவு கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற பொழுது இலங்கை அரசின் செயல்பாட்டை உற்றுக் கவனித்து ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம். ஈழத் தமிழர்கள் உரிமை பெற்ற நிலையில்தான் இலங்கையிலும் இந்தியாவிலும் உண்மையான அமைதி நிலவ முடியும்.

திராவிட இயக்கத்தின் சீரிய செயல்வீரரும், சுயமரியாதை வீரரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகிய நமது திராவிட இயக்க முன்னோடிகளின் பாதையில் சீரிய நடைபோட்டவரும், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. சட்டப் பேரவை ஏவுநருமான (கொறடா) அருமை நண்பர் பெரியண்ணன் அவர்கள் 15.11.1996 அனறு மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். துன்பமும், துயரமும் அடைகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்தபோதிலும், திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிடமும் மிகுந்த அன்போடு பழகிய பண்பாளர் அவர்!

அவர் இலங்கை தலைநகரம் கொழும்பில் இருந்த போதே சீரிய திராவிடர் கழகக் கொள்கையாளர். சுயமரியாதை வீரர். அரசியலில் அவர் எப்படியிருந்தாலும் சமுதாயப் பார்வையில் சுயமரியாதை வீரர்தான்.

அப்படிப்பட்டவர் மேலும் பல பெரிய அரசியல் பதவி பெற்று அப்பகுதி மக்களுக்கு சீரிய பொது நலப் பணிகளையும் அதன்மூலம் செய்வார் என்ற நம்பிக்கையை இந்த மரணம் பாழடித்தது என்றே கூற வேண்டும்.

அவரது இழப்பு புதுக்கோட்டை மக்களுக்கும், அவரது குடும்பத்திற்கும், அவர் சார்ந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்ல; தமிழகப் பொது வாழ்க்கைக்கே ஒரு ஈடுசெய்ய இயலாத இழப்பு என்பதை மிகுந்த வேதனையுடன் தெரிவிப்பதோடு திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரது குடும்பத்திற்கும், அவர் சார்ந்திருந்த கழகக் குடும்பமாம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் குறிப்பாக அதன் தலைமைக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என அறிக்கை வெளியிட்டோம்.

பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகரில் 20.11.1996 அன்று சிறப்பானதொரு பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பேரணியில் கலந்துகொள்ள பல்வேறு பகுதியிலிருந்து மகளிர் காலை முதலே வரத் தொடங்கினர். பிற்பகல் 3:00 மணிக்கு பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என எழுதிய பெரிய பதாகைகளைக் கையில் பிடித்தபடி, “வேடிக்கை பார்க்கும் பெண்ணினமே வீதிக்கு வந்து போராடு!’’“We demand parity, not charity’’, “Reservation is our birth right”என்பன போன்ற கருத்துகள் தாங்கிய அட்டைகளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு உணர்ச்சிகரமான ஒலி முழக்கங்களை எழுப்பிக் கொண்டு வந்தனர். திருச்சி மாநகரமே மலைக்கும் வகையில் மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்தது. இந்தியப் பெண்களுக்கு வழிகாட்ட புறப்பட்டுவிட்டார்கள். திராவிடர் கழக மகளிர் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பேரணி அமைந்திருந்தது. பின்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில்,

“இந்திய அரசியலில் எத்துணை பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற புள்ளி விவரத்தைப் படிக்கின்றேன் கேளுங்கள்.

நாடாளுமன்றத்திலே 1962லே 33 பெண்கள் இருந்தனர். அதற்குப்பின் அவ்வெண்ணிக்கை குறைந்து வரும் அவலத்தைப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரம் கிடைத்து நமக்கு 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டுமா என்பதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இது வெறும் அதிகாரப் பங்கீடு _ அவ்வளவுதானே ஒழிய அதற்கு மேல் இதில் ஒன்றுமில்லை.

மக்கள் தொகையில் 50 விழுக்காடு பெண்ககள் இருக்கின்றார்கள். நாம் ஏற்கெனவே 30 விழுக்காடுதான் கேட்கின்றோம். 20 விழுக்காடு குறைத்துதான் கேட்கின்றோம்.

எனவே, நாம் கேட்பது பிச்சை அல்ல. நாம் கேட்பது நமது உரிமையை. இந்த 30 விழுக்காடு இடஒதுக்கீட்டைத் தர ஆண் ஆதிக்க வர்க்கம் மறுத்தால் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டைக் கேட்போம் என்பதை வலியுறுத்திப் போராட வேகமாக நீங்கள் முன்வரவேண்டும்.

பெண்களுடைய உரிமைக்குரிய போர்க் குரல் இந்த மாமன்றத்திலிருந்தே தொடங்கட்டும். நீங்கள் வீதிக்குச் சென்று மக்களை சந்தியுங்கள். மக்கள் சக்தியை ஒன்று திரட்டுங்கள்.

மக்கள் சக்தியை நாம் திரட்டிக் காட்டினால் சட்டம் தானே நொண்டிக் கொண்டு பின்னால் வரும். இது உங்களால் முடியும். மக்கள் சக்தியைத் திரட்டுவதன் மூலம் வெற்றி உங்களை, தானே தேடி வந்து சேரும்’’ என பல கருத்தினை எடுத்துக் கூறினேன்.

பழனி மாவட்டத்தில் இயக்கத்தின் தொடர் சுற்றுப் பயணமாக ஒரு நாள் முழுவதுமாக 23.11.1996 அன்று பல்வேறு இயக்க நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். கழகத் தோழர்களுடன் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு, காலை 11:00 மணியளவில் அத்திக்கோம்பையில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையை கழகத் தோழர்களின் வாழ்த்தொலியோடு திறந்து வைத்தேன். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. பிரமுகர் நா.ரெங்கசாமி தலைமை வகித்தார். பல கட்சியினரும் கலந்து கொண்டு பெரியாரின் கொள்கையைக் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துக் கூறினர்.

இதனை அடுத்து மன்னர் திருமலை மாவட்டம் பழனியில் புகைவண்டி நிலைய சாலையில் பிரம்மாண்டாக அமைக்கப்பட்ட தந்தை பெரியார் முழு உருவச் சிலையை இரவு 7:00 மணியளவில் தோழர்களின் வாழ்த் தொலியோடு திறந்து வைத்தேன். அப்பொழுது அந்தப் பகுதி முழுவதும் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காண முடிந்தது. அய்யாவின் சிலை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் மிகச் சிறப்பான அளவுக்கு அலங்கரிக்கப் பட்டிருந்தது. பின்னர் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் ‘விடுதலை’ வையாபுரி திடலில் நடைபெற்றது. பொதுமக்களும் கழகத்தினரும் ஆர்வத்தோடு கலந்துகொண்டனர். கழகத்தில் புதிதாக அய்ம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்தனர். மேடையில், 69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற சிறை சென்ற வீரர்களுக்கு கைத்தறி ஆடையும், சான்றிதழ்களையும் வழங்கி பெருமைப் படுத்தினோம். கூட்டத்தில்  நிறைவுரை யாற்றுகையில், இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தி பல கருத்துகளைக் கூறினேன்.

தூத்துக்குடியில் வடநாட்டு மார்வாடிகளால் ‘’ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை தொடங்கப் படவிருக்கும் நிலையில், அந்தத் தொழிற்சாலை அமைவதால் சுற்றுச் சூழல் மாசுபடும் என்று பல மாதங்களாக தூத்துக்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதனையொட்டி 30.11.1996 அன்று அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலை அமைவதற்கு முந்தைய அரசாங்கம்தான் அனுமதி கொடுத்தது என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பது தேவையற்றது. இதற்கு எந்த அரசாங்கம் அனுமதி கொடுத்தது என்பது முக்கியமல்ல. வடநாட்டுக்காரர்கள் வெளிநாட்டு மூலதனத்தோடு ரூ.1,300 கோடி ரூபாய் பணம்  போட்டு இந்தத் தொழிற்சாலையை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

பல வெளிநாட்டு முதலாளிகள் இந்தத் தொழிற்சாலையின் பங்குதாரர்களாக உள்ளனர். அனில் சந்த் என்ற ஒரு இந்தியத் தரகர்தான் இந்தத் தொழிற்சாலையை தூத்துக்குடிக்குக் கொண்டு வந்திருக்கின்றார். இந்தத் தொழிற்சாலையினால் எல்லோருக்கும் தொல்லைகளை அனுபவிக்கக் கூடிய சூழல் உள்ளது. ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுகளால் மக்களுக்கு மூச்சடைப்பு, புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகள் வரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடலில் கலக்கும் கழிவுகளால் கடல் நச்சுத்தன்மை அடையும்.

‘சிலி’ நாட்டில் கொண்டு வர முயற்சித்தபோது அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விரட்டியடித் திருக்கிறார்கள். நல்ல விவரம் தெரிந்த சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எல்லாம் இந்தத் தொழிற்சாலையினால் மக்களுக்கு ஆபத்து என்று சொல்லுகின்றார்கள். மக்களின் நலனைக் கவனத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதிலே தீவிரக் கவனம் செலுத்தி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்’’ என பொதுக்கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொண்டோம்.

ஈழத் தமிழர் பிரச்சினையை இலங்கை அரசு இராணுவப் பிரச்சினையாகக் கருதுவதைத் தவிர்த்து, அரசியல் தீர்வு காண முன்வர வேண்டும் என வலியுறுத்தி 1.12.1996 அன்று ‘விடுதலை’யில் அறிக்கையொன்றை வெளியிட்டோம். அதில், மனிதநேய அடிப்படையிலும், பண்பாட்டு, இன, மொழி அடிப்படையிலும் அங்கு நடைபெறும் தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண நமது தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் தமது பங்களிப்பைச் செய்தாக வேண்டும். குண்டு வீச்சால் காயமுற்ற சிவிலியன் _ குடிமக்களுக்கு இங்கே இருந்து மனிதாபிமானத்துடன் அளிக்கப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் பல உதவிகள் கூட அவர்களுக்குச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் போய்ச் சேர முடியாத வண்ணம் சிங்கள அரசும், இராணுவமும், ‘தடுத்தாட்கொள்ளும் நிலையை’த் தடுத்திட உடனே மத்திய அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இதற்கு ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டோம்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *