ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவலைகள்

அக்டோபர் 01-15

ஆசிரியர்: கவிஞர் தஞ்சை கூத்தரசன்

வெளியீடு: நந்திதா பதிப்பகம்,

                   ஜி3, சந்திரசேகர் பவுண்டேசன்,                                  

50/52, முத்து முதலி தெரு,  

இராயப்பேட்டை, சென்னை – 600 014.

 (தன் வரலாற்று நூல்)

தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளரும், முன்னணி சொற்பொழிவாளரும், தலைசிறந்த இன, மொழி உணர்வாளருமான தஞ்சை கூத்தரசன் அவர்களின் தன் வரலாற்று நூல் இது.

வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் சுயமரியாதைக் கோட்டையாய் விளங்கிய, விளங்கும் ஒரத்தநாடு வடச்சேரியில் பிறந்த தஞ்சை கூத்தரசன் 20 வயது வரையிலான அவரது இளமைப்பருவம், அதன்பின் அரசியல் களத்தில், தொழிற்சங்க பணிகளில், இலக்கிய உலகில் அவரது பணிகளை நினைவுகூர்ந்து இந்நூலைப் படைத்துள்ளார்.

தமது சிங்கப்பூர் பயண நிகழ்வுகளை சுவைபட வடித்துள்ளார். சில நெகிழ்ச்சியான நிகழ்வுகளைப் படிக்கும்போது நாமும் சம்பவத்தில் பங்கேற்றது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சிறப்பையும், புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வுகளையும் சிறப்பாக விவரித்துள்ளார்.

இந்நூலின் சிறப்பே, இது ஒரு நன்றி பாராட்டும் நூலாகும். ஒவ்வொருவர் செய்த சிறு உதவிகளையும் அவற்றை காலத்தினாற் செய்த உதவியாக பதிவு செய்கிறார். தலைவர்கள் பற்றிய பதிவில் தந்தை பெரியாரைப் பற்றி குறிப்பிடுகையில்,

“ஆழிசூழ் உலகின் அற்புதப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை எனது சொந்த ஊரான வடசேரி கிராமத்தில் என்னுடைய 23 வயதில் சந்திக்கும் பெரு வாய்ப்பைப் பெற்றேன். எங்கள் ஊரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக அய்யா அவர்கள் வந்தார்கள். பொதுக்கூட்டம் மாலை 6 மணிக்கு என்றாலும் மாலை 4 மணிக்கே அய்யா வந்துவிட்டார்.

எங்கள் ஊர் பொதுக்கூட்டத்தில் ஆச்சரியமான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அய்யா மேடைக்கு வந்து அமர்ந்துவிட்டார். எங்கள் ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் பு.க.இராமநாதன் அவர்கள் மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர். கடவுள் மறுப்பாளரான அய்யா அவர்கள் எங்கள் ஊருக்கு வந்து பேசுவதை அவர் விரும்பவில்லை. எனவே கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த ஒரு காரியத்தைச் செய்தார். எங்களூரில் குடியிருந்த தாழ்த்தப்பட்ட தோழர்களைக் கொண்டு தப்பு (பறை) அடிக்கச் செய்தார்; கொம்பும் ஊதச் செய்தார்.

அய்யா முன்னால் இந்த நிகழ்வு நடந்து கொண்டு இருந்தது. பு.க.இராமநாதன் கூட்டத்தின் அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் இருந்துகொண்டு பார்த்துக் கொண்டிருந்தார். அவரைத் தட்டிக் கேட்க யாரும் முன்வரவில்லை. அனைத்து பலமும் கொண்டவர் பு.க.இராமநாதன். அதனால் அவரை எதிர்க்க எவரும் துணியவில்லை. இந்நிலையில் ஒரு மணி நேரம் தப்படித்தும், கொம்பு ஊதியும் கொண்டிருந்தவர்கள் களைத்துப் போய் நிறுத்தி விட்டார்கள்’’ என்கிறார்.

மேலும் ஆசிரியர் அவர்களைப் பற்றி குறிப்பிடுகையில்,

“நான் சந்தித்த தலைவர்களில் கருஞ்சட்டைச் சிங்கமாகவும், கடலூர் தங்கமாகவும் விளங்கும் பெருந்தகை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார்கள். அறிவுத் தெளிவு, ஆழ்ந்த புலமை, பழுதறக் கற்ற பெருஞானம், அய்யா வழி நடக்கும் வீரத்தன்மை, கொடுமை கண்டு துடித்தெழும் தாயன்பு, எவருக்கும் எதற்கும் யாருக்கும் அஞ்சாத போர் வீரம் ஆகியவற்றின் பேரிலக்கணமே நமது ஆசிரியர்.சொற்பொழிவுத் துறையில் எங்களுக்கெல்லாம் ஒரு பல்கலைக்கழகமாக விளங்குபவர் நமது தமிழர் தலைவர். நானறிந்தவரை வேறு எந்த பேச்சாளரும் கையாளாத முறையை இவர் ஒருவரே கையாள்பவர். மேடையில் தான் பேச வரும்போதே பல புத்தகங்களை மேசையில் கொண்டு வந்து அடுக்குவார். பேசும்போது அப்புத்தங்களில் இருக்கும் கருத்துகளை மேற்கோளாக எடுத்துக் கூறி பேசிக் கொண்டு செல்வார்; ஒரு புத்தகத்தின் சில பக்கங்களில் எடுக்கும் கருத்துகள் கிடைப்பதற்கு காலந்தாழுகின்றபோது, சொற்பொழிவை நிறுத்தாது, தொய்வடையச் செய்யாது பேச்சின் வேகம் குறையாத வண்ணம் இணைப்பு வார்த்தைகளை மிக லாவகமாகக் கையாண்டு பேசுகின்ற அற்புதமான சொல்லேருழவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள்.

இந்த வண்ணக் கலவை மயிலைப் போலவே தாங்களும் இந்தப் பாணியை கையாள முயன்று கடைசியில் தோற்றுப் போன வான்கோழிப் பேச்சாளர்களையும் நான் கண்டிருக்கிறேன். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாக விளங்கும் அய்யா வீரமணி அவர்கள் தந்தை பெரியாரைப் போலவே தளராமல் தமிழகமெங்கும் மன்னிக்க வேண்டும், உலகெங்கும் சுழன்று பகுத்தறிவுப் பணியை ஆற்றி வருகிறார். பேரறிஞர் அண்ணா போன்ற உருவமும், அடக்கமும் கொண்ட பெருந்தகை அய்யா வீரமணி அவர்கள், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், மூதறிஞர் குழு ஆகிய அமைப்புகளை உருவாக்கி வாரந்தோறும் பேச்சாளர்களாகிய நாங்களெல்லாம் பயிற்சி பெறும் வகையில் சொற்பொழிவுக் கலையை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு நானொரு மாணவன் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன். அவரை நான் சந்திக்கச் போகும் போதெல்லாம் இனிமையோடு வரவேற்று அளவளாவி அறிவுசால் கருத்துகளைப் புகட்டி அன்பொழுக வழியனுப்பும் அய்யா வீரமணி வாழும் சகாப்தத்தில் நானும் வாழுகின்றேன் என்பதை எண்ணிப் பெருமிதம் கொள்ளுகின்றேன்.’’ என்கிறார்.

– வை.கலையரசன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *