(இயக்க வரலாறான தன்வரலாறு – 211)

அக்டோபர் 01-15

உயிருக்குக் குறிவைக்கப்பட்ட மம்சாபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது!

01.08.1984 அன்று காயிதே மில்லத் சொற்பொழிவு மன்றத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற காயிதே மில்லத் அவர்கள் பிறந்த நாள் விழாவில் நான் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழாவில் “மதக் கலவரங்களுக்கு வித்திடுகின்றனர் காந்தியைக் கொன்ற ‘கோட்சே’ பரம்பரையினர். எனவே, தமிழர் இனமான உணர்வோடு ஒன்றுபட்டு அந்த விஷப் பூண்டுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’’ என்று கூறினேன். விழாவில், தி.மு.க தலைவர் கலைஞர், மதுரை ஆதினகர்த்தர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

                                   

05.08.1984 அன்று நாகூர் திராவிடர் கழகச் செயலாளர் ஆர்.சின்னதம்பி_ருக்மணி ஆகியோரின் செல்வன் சித்தார்த்தனுக்கும், திருலோக்சக்தி ஆசிரியர் ஆர்.வேலாயுதம்_ மங்கலம் ஆகியோரின் செல்வி சாந்திக்கும் வாழ்க்கை துணை நல ஒப்பந்தம் நாகூர் மணமகன் இல்லத்தில் என்னுடைய தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

09.08.1984 அன்று மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி புதுடெல்லியில் பிரதமர் இந்திராகாந்தி வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தினை ஜனவாடி கட்சித் தலைவர் சந்திரஜித் யாதவ் அவர்களும் நானும் தலைமை தாங்கி நடத்தினோம். ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தோழர்களும் ஏராளமானோர்  பங்கேற்றனர். டெல்லி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தைத் தொடர்ந்து பிரதமர் இந்திராகாந்தி இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது. ஏராளமான வடநாட்டுத் தலைவர்களும் பிற்படுத்தப்பட்ட தோழர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆகஸ்ட்_15 சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரித்து _ கறுப்புக் கொடிகளை ஏற்றுமாறு 11.08.1984 அன்று ‘விடுதலை’யின் முதல் பக்கத்தில் கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டிருந்தேன்.

வடஆற்காடு மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் திருப்பத்தூர் ஏ.டி.கோபால்_ சந்திரா ஆகியோரது மகள் வாலண்டினா _ நாட்டறம்பள்ளி எஸ்.பசுபதி தனலட்சுமி ஆகியோரின் மகன் புகழேந்தி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 12.08.1984 அன்று திருப்பத்தூர் டி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் என் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.

20.08.1984 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்த என்னை திருமதி சந்திரபிரபா அர்ஸ் (அர்ஸ் மகள்), அவர்களது கணவர், அவரது செயலாளர் கோபிநாத், கருநாடக திராவிடர் கழகத் தலைவர் பெரியப்பா, செயலாளர் பாண்டியன், மகளிரணி அமைப்பாளர் சுவர்ணா ரங்கநாதன் போன்றோர் வரவேற்றனர். பின்பு நான், பெங்களூரு திரு.தேவராஜ் அர்ஸ் இல்லம் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

24.8.1984 அன்று பழைய வண்ணையில் நடந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியின் வாலாட்டம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அவர்கள் வடநாட்டிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இங்கே பவனி வருகின்றார்கள். எனவே, பாதுகாப்புக்கு அரசையோ, காவலரையோ, நம்பாதீர். சட்டத்திற்கு உட்பட்டு கத்தி வைத்துக் கொள்க! என்று கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

ஆந்திரத்தில் திரு.என்.டி.ராமாராவ் அவர்களுக்கு இருதய நோய் ஏற்பட்டு அதற்காக ஒரு சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றதைப் பயன்படுத்தி, என்.டி.ராமாராவ் ஆட்சியை அதற்குரிய பெரும்பான்மை இருந்தும்கூட முற்றிலும் முறைகேடான முறைகளைக் கையாண்டு கவிழ்த்துவிட இந்திராவை எதிர்த்து 25.08.1984 ‘விடுதலை’யில் அறிக்கை வெளியிட்டேன்.

31.08.1984 அன்று “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் இனமான உணர்வின் ஏந்தலுமாகிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் அன்னையார் திருமதி சொர்ணம்மாள் அம்மையார் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து இரங்கல் அறிக்கை வெளியிட்டதோடு, இறுதி ஊர்வலத்திலும்  கலந்துகொண்டு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். தி.மு.க தலைவர் கலைஞர், சாதிக்பாட்சா, காமராசர் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறன், கிள்ளிவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

02.09.1984 அன்று தஞ்சை மாவட்ட இளைஞரணித் தலைவர் மோகன், மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் ஆகியோரது சீரிய முயற்சியால் வைத்தீஸ்வரன் கோயிலிலும், சீர்காழியிலும் கலந்துகொண்டு கழக கொள்கைக் கல்வெட்டுகளைத் திறந்து வைத்தேன்.

தந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் அணைக்கரை ‘டேப்’ தங்கராசு அவர்களின் முழு உருவச் சிலை திறப்பு விழா 05.09.1984 அன்று அணைக்கரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளி ‘டேப்’ தங்கராசு அவர்களது சிலையை நான் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களுக்கு இடையே திறந்து வைத்து உரையாற்றினேன்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்து துணைக் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

திருச்சியில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற மத்திய நிர்வாகக் குழுவில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானம் இதோ: “தமிழர்கள் ஈழத் தீவிலே ஜெயர்வர்த்தனே என்ற கொடுங்கோலன் ஆட்சியிலே சிங்கள இராணுவத்தாலும், வெறியர்களாலும் நரவேட்டைக்கு இளக்காயினர். மனிதகுலம் கேட்டிராத வகையிலே சிறைச்சாலைக்குள்ளேயே சித்திரவதை செய்து தமிழின  இளைஞர்கள் சாகடிக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் துடிக்கத் துடிக்கக் கற்பழிக்கப்பட்டனர். தமிழினத்தைச் சேர்ந்த பச்சிளம் சிசுக்கள்கூட கொடுமையான முயற்சிகளில் கொல்லப்பட்டனர்.

இவ்வளவு கொடுமைகளும் நடைபெற்ற காலகட்டத்திலேயே, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.ஆர்.வெங்கட்ராமன்தான் மத்திய ஆட்சியிலே ராணுவ அமைச்சராக இருந்தார்.

ஈழத்திலே தமிழர் கொல்லப்படுவதைக் குறித்து அவர் ஒரு கண்டனம்கூட தெரிவிக்கவில்லை. தமிழினத்துக்காக அவர்களிடம் ஓட்டு வாங்கினாலும்கூட _ ஒரு ஆறுதல் மொழிகூட தெரிவிக்கவில்லை. மாறாக, இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பச் சொல்லி மத்திய அரசைக் கேட்டுக்கொண்ட தமிழ்த் தலைவர்களைப் பார்த்து, ‘அப்படிச் சொல்வது முட்டாள்தனம்’ என்று ஆணவமான முறையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் பதில் சொன்னார்.

உணர்வில் ஜெயவர்த்தனேவுக்கு இணையான தமிழின விரோதியாதியாகிய திரு.வெங்கட்ராமன்தான் இப்பொழுது இந்திய துணைக் கண்டத்து துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்ற செய்தி உலகெங்குமுள்ள கோடானு கோடி உண்மைத் தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈழத் தமிழரின் மிகத் துயரமான காலகட்டத்தில் தமிழின விரோதியாக நடந்துகொண்ட திரு.வெங்கட்ராமன் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ததைக் கண்டிக்கும் வகையில் உலகெங்குமுள்ள தமிழர்களின் அதிருப்தியைத் தெரிவிக்கம் வகையிலும், அவர் துணைக் குடியரசுத் தலைவர் பதவி ஏற்று முதன்முதலாக தமிழகம் வரும்போது, திராவிடர் கழக பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் கறுப்புக் கொடி காட்டுவது என இச்செயற்குழு ஒரு மனதாக முடிவு எடுக்கிறது.

அந்தக் கறுப்புக் கொடி காட்டும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்பும் தோழர்கள் உடனடியாகப் பெயர்ப் பட்டியலைக் குவிக்குமாறும் இச்செயற்குழு ஒரு மனதாகக் கேட்டுக்கொள்ளுகிறது.’’

_ இவ்வாறு அத்தீர்மானம் கூறுகிறது.

அந்தத் தீர்மானத்தின்படி, அறப்போராட்டமாக நமது போராட்டம் கட்டுப்பாட்டுடன் 07.09.1984 அன்று அவர் வரும்போது நடைபெறும் என்பதை விளக்கி,  “வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி ஏன்?’’ என்று தலைப்பிட்டு 1.9.1984 அன்று விடுத்த அறிக்கை மூலம் விளக்கியிருந்தேன்.

“மக்களாட்சியின் மகத்தான உரிமைகளில் ஒன்று கறுப்புக் கொடி காட்டுவது ஆகும். திராவிடர் கழகம் போராட்டம் எதுவானாலும் கட்டுப்பாடு குலையாமல் நடத்தப்படும்’’ என்று கூறியிருந்தேன்.

அதன்படி 07.09.1984 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஆர்.வெங்கட்ராமன் செல்ல இருந்த பாதையில் கிண்டி புகைவண்டி நிலையம் அருகே கழகத் தோழர்கள் குவிய ஆரம்பித்தனர். சாலையின் ஓரத்தில் நீண்ட வரிசையில் அணிவகுத்து கருப்புக் கொடிகளை உயர்த்திப் பிடித்து உணர்ச்சி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, “தமிழனைப் பழித்தவரை தாய் தடுத்தலாம் விடோம்’’, “தமிழினத் தலைவர்களை அவமதித்த வெங்கட்ராமனே திரும்பிப் போ!’’ என்ற முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே 1000க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் சாரைசாரையாக கைது செய்யப்பட்டனர். நானும் கைது ஆகி வண்டியில் ஏற்றப்பட்டேன். ஏராளமான போலீசாரும், ரிசர்வ் போலீசாரும் ஏற்பாடு செய்து எம்.ஜி.ஆர் அரசு அவசர அவசரமாக எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு கழகத் தோழர்களிடம் உரையாற்றும்போது, “துக்க நாள் என்று சொல்லும்போது நம்மைத் தேச துரோகக் கூட்டம் என்றார்கள். தேசபக்தி, தெய்வபக்தி, இரண்டும் இல்லாதவர்கள் என்ற சொல்லுகிறார்கள். உண்மைதான். ஏனென்றால், இந்த தேசம் யாருக்கு உரியதாக இருக்கிறது? பெரும்பான்மையினருக்கு சுதந்திரம் இல்லை. சிறுபான்மையினரோ ஆதிக்கவாதிகளாக இருக்க வேண்டும். பெரும்பான்மையினரை தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற நிலையிருந்தால் அது தேசமல்ல; அது நாசம்-. இது ஒரு நல்ல தேசமாக இருக்குமானால் அண்டைய இலங்கை நாட்டில் நம் இனத்தவர்கள் தேசத்தவர்கள் அடிக்கப்படும்போது நம் தேசத்தை ஆள்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த தேசத்துக்குரியவர்கள் என்ன செய்ய வேண்டும்?   நீ கண்ணீர்விட வேண்டும் என்று கூறிவிட்ட பிறகு உதவி உதவி என்று கேட்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? மனிதாபிமானத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டதால்தான் இலங்கையில் நம் தமிழ்ச் சகோதரர்கள் சுட்டு வீழ்த்தப்படும் போது, கற்பு சூரையாடப்படும்போது, சிறு குழந்தைகள் கொல்லப்படும்போது அது சுடுகாடாக ஆகிவிட்டது. கருப்புக் கொடி ஏற்றுவதன் மூலம் இது எங்களுக்கு கருப்பு நாள். துக்க நாள் என்பதை வெளிப்படுத்துகிறோம்.

ஏன் 14ஆம் தேதி இரவு 12 மணிக்க சுதந்திரத்தை வாங்கினோம் தெரியுமா? ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் என்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓய்வு பெற்றவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூலிலே அவர் சொல்லியிருக்கிறார். ஆகஸ்ட் 15ஆம் தேதியைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு சோதிடம் பார்த்தார்கள். கங்கைக் கரையிலே புரோகிதம் செய்பவர்களையெல்லாம் கலந்து ஆலோசித்தார்கள். அவர்கள் சொன்னார்கள், 15ஆம் நாள் இந்தியாவுக்கு நல்ல நாளல்ல, பொழுது விடிந்து சுதந்திரத்தைப் பெற்றால் இந்த தேசம் வளராது. அதற்கு முன்னர் 14இல் இரவிலேயே சுதந்திரத்தை வாங்க வேண்டும் என்ற அவர்கள் சொன்ன காரணத்தால்தான் 14ஆம் தேதி இரவு 12 மணிக்கு சுதந்திரம், ஆட்சி மாற்றம் என்று நிறுவப்பட்டது. இந்தத் தகவலை கிருஷ்ண அய்யர் எழுதியிருக்கிறார். எனவே, மூடநம்பிக்கையில் பிறந்த சுதந்திரம் இன்னமும் பார்ப்பன ஆதிக்கக் கொடி பறக்கின்ற காரணத்தால்தான் நம் இனம் அழிக்கப்படும் போது ஆட்சியாளர்கள் துடிப்பதற்குத் தயாராக இல்லை’’ என்று குறிப்பிட்டு உரையாற்றினேன்.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டார்கள். வழக்கறிஞர் கோ.சாமிதுரை, அமைப்புச் செயலாளர் சேதுபதி உள்ளிட்டோர் ஏராளமான தோழர்கள், தோழியர்கள் கைதாகி சிறை சென்றனர்.

08.09.1984 அன்று வடஆற்காடு மாவட்டம் ஆம்பூர் பெருமாள் அவர்கள் லாரி விபத்தில் மறைவுற்ற செய்தியை கேட்டு நான் மிகவும்  வேதனையடைந்து, ‘விடுதலை’யில் இரங்கல் அறிக்கை வெளியிட்டேன்.

தஞ்சையில் தர்மபுரி மாவட்ட தி.க. பொருளாளர் பெண்ணாகரம் இராமமூர்த்தி அவர்களது செல்வன் டாக்டர் புகழேந்திக்கும் செல்வி மீனாட்சிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 12.09.1984 அன்று கவிதா மன்றம் நீலாம்பரி மாளிகையில் என் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை முருகப்பா எஞ்சினியரிங் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக, மேலை நாடுகளுக்குச் சென்று திரும்பியமைக்காகப் பாராட்டு விழாக் கூட்டம் 12.09.1984 அன்று மாலை 5 மணிக்கு தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவு தஞ்சை கரந்தையில் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் சிவசண்முகசுந்தரனார் அவர்கள் மறைந்ததை யொட்டி அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினேன்.

13.09.1984 அன்று சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு க.சண்முகம் அவர்களின் மணி விழா நிகழ்ச்சியில் நானும் என்னுடைய துணைவியார் மோகனா அம்மையார் அவர்களும்,  உணர்ச்சிக் கவிஞர் ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டோம்.

சேலம் மாவட்டம் தொ.சேடர்பாளையத்தில் 14.09.1984 அன்று திராவிடர் கழகம் 36ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. நான் அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.

15.09.1984 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கோவை நகர மக்கள் சார்பில் 1,75,000 ரூபாய் நிதியை ஈழத்தில் தமிழ் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நான் இயக்கத்தின் சார்பில் வழங்கினேன். திராவிடர் கழக இளைஞரணி இந்த நிதி வசூலை முன்னின்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சார்பில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் வேலு என்னும் சுப்ரமணியம் அவர்கள் கழகத் தோழர்களின் பலத்த கரவொலிகளுக்கு இடையே பெற்றுக் கொண்டார்.

சென்னை அயன்புரத்தில் ஈஸ்வரன் கோவில் மாடவீதியில் 22.09.1984 அன்று 7.30 மணிக்கு நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விரிவாக உரையாற்றியதோடு,

அதேநாளில், சென்னை அயன்புரத்தில் தந்தை பெரியார் பிறந்த தின விழாவின்போது, அய்யா பொன்மொழிகள் அடங்கிய கல்வெட்டைத் திறந்துவைத்து கழகக் கொடியும் ஏற்றி வைத்தேன். மலேசிய திராவிடர் கழகத் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்களும் கலந்துகொண்டார்கள்.

திருப்பூர் மொய்தீன் புதல்வி எம்.காபிலா பேகம், முதுகுளத்தூர் அப்துல் ஜபார் புதல்வன் ஏ.ஜெ.செய்யது அபுதாஹீர் மணவிழாவும் திருப்பூர் மொய்தீன் புதல்வர் எம்.அபுதாஹீர்_ திருப்பூர் முகமது அனிபா புதல்வி எச்.ஜரினா பேகம் மணவிழாவும் 23.09.1984 அன்று காலை ‘சென்னை கம்யூனிட்டி சர்வீஸ் சென்டரில்’ நடைபெற்றது. மணவிழாவில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களும், நானும் கலந்துகொண்டு உரையாற்றினோம்.

23.09.1984 அன்று சென்னையில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அம்பாசங்கர் அறிக்கையை எடுத்துக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோருக்காக தமிழக அரசு வாதிட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

24.09.1984 அன்று மதுரை மேற்கு மாவட்டம் போடி நாயக்கனூரில் இளைஞரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் பயிற்சி முகாமில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். அன்று மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். அபாயம் குறித்து உரையாற்றினேன். கொட்டுகிற மழையிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.

25.09.1984 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற இளைஞரணி பயிற்சி முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். பயிற்சி முகாமில் நான் கலந்துகொண்டு கருத்து விளக்கமளித்தேன்.

26.09.1984 அன்று திருவில்லிபுத்தூரில் பகல் 12 மணி அளவில் கிருஷ்ணன் கோயில் என்ற ஊரில் எனக்கு எழுச்சிமிகுந்த வரவேற்பு அளித்தனர். அதன்பின் நடந்த நிகழ்வில் ஒன்றரை மணி நேரம் ஆர்.எஸ்.எஸ். அபாயத்தை விளக்கி உரையாற்றிய நான்,

என் உயிருக்கு குறி வைக்கப்பட்ட மம்சாபுரத்தில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி லெனின் அ.நா.பெரியசாமி அவர்கள் படத்திறப்பு நிகழ்ச்சியிலும், திருவில்லிபுத்தூர் இளைஞரணி பயிற்சி முகாமிலும் நான் கலந்துகொண்டு இயக்க வரலாறுபற்றி உரை நிகழ்த்தினேன்.

மறைந்த சுயமரியாதைச் சுடரொளி லெனின் அ.நா.பெரியசாமி அவர்கள் நினைவாகப் படிப்பகம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தேன். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு தூத்துக்குடி பயணமானேன். என்னுடன் மதுரை மாநகர மாவட்டத் தலைவர் பே.தேவசகாயம், செயலாளர் தமிழரசன் ஆகியோரும் உடன் வந்தனர். என்னுடைய தென் மாவட்டப் பயணம் எழுச்சியாக அமைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.  தலைதூக்கியதற்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டதன் விளைவாய், அங்கு பல இடங்களிலும் கழக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நானும் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டேன்.

 (நினைவுகள் நீளும்…)

– கி.வீரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *