கடவுள் தொல்லை!

அக்டோபர் 01-15

முதுகலைப் பட்டப்படிப்பு முடித்து ஓராண்டாகிவிட்டது. மதன் எங்கெங்கோ வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறான். ஆனால், நிலையான எந்த வேலையும் கிடைத்த பாடில்லை.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அவன் படித்த பள்ளியிலேயே அவனுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவன் பெயரை பதிவு செய்து பதிவெண் அட்டையும் வாங்கிக் கொடுத்தார்கள். பிறகு மேல்நிலைக் கல்வி முடித்தபின் மீண்டும் அந்தப் படிப்பையும் பள்ளியிலேயே பதிவு செய்து கொடுத்தார்கள். அதையெல்லாம் அவன் அவனது பாட்டியிடம் சொன்னபோது பேரனுக்கு சீக்கிரம் வேலை கிடைத்துவிடும் என நம்பினார். ஆனால், பட்டம் படித்து முதுகலைப் பட்டம் பெற்ற பின்பும் வேலை கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் முறையாக மேற்படிப்பைப் பதிவு செய்திருந்தான்.

மதனுக்கு தாய் தந்தை இல்லை. இவன் சிறுவனாக இருந்தபோதே இறந்துவிட்டார்கள். பாட்டிதான் அவனை வளர்த்து ஆளாக்கி படிக்கவும் வைத்தார்.

பேரனுக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை பாட்டியை வாட்டி வதைத்தது. எண்பது வயதைக் கடந்துவிட்ட பாட்டிக்கு தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என நாள்தோறும் வருத்தப்பட்டான் மதன். எப்படியாவது வேலை கிடைத்துவிட்டால் பாட்டிக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து அவரை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று மதன் விரும்பினாலும் அவனுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பாணை எதுவுமே வரவில்லை.

கூரைவீடு ஒன்றைத் தவிர அவனுக்கு வேறு சொத்துக்கள் எதுவுமே இல்லை. சில நிறுவனங்களுக்குச் சென்று அவர்கள் சொல்லும் சில வேலைகளைச் செய்தும் மாலைவேளைகளில் அவன் தெருவில் வசிக்கும் சில பிள்ளைகளுக்கு தனிப்பாடம் சொல்லிக் கொடுத்தும் கிடைக்கும் சிறிய வருமானத்தைக் கொண்டு பாட்டியைக் காப்பாற்றி வந்தான்.

போட்டித் தேர்வுகள் எழுதவும் முற்பட்டான். ஆனால், கட்டணம் செலுத்தி விண்ணப்பம் அனுப்பக்கூட அவனிடம் பணம் இல்லாமல் இருந்தது. உதவி செய்வதற்கும் பெரிய அளவில் பெரிய அளவில் யாரும் இல்லை.

“உன் அப்பனும் ஆத்தாளும் நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி உன்னை என்கிட்ட கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டாங்க. நானும் நாலு வூட்ல பாத்திரம் தேய்ச்சி உன்னைப் படிக்க வைச்சுட்டேன். எனக்கும் வயசாயிடுச்சி. இனிமே என்னால ஒண்ணுமே செய்ய முடியல. உனக்கு வேலை கிடைச்சதுன்னா அத என் காதால கேட்டுட்டு நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்’’ என்று ஒரு நாள் பாட்டி புலம்பித் தீர்த்தார்.

அவனது நட்பு வட்டாரமும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. வேலை செய்யும் நேரம் போக மீதியுள்ள நேரங்களில் மதன் நூல் நிலையம் சென்று புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். ஏங்கெல்ஸ், இங்கர்சால், சாக்ரட்டீஸ், பெரியார் பற்றிய நூல்களையெல்லாம் படித்து சிறந்த பகுத்தறிவாதியாகவும் விளங்கினான்.

ஒரு நாள் நூல் நிலையத்தில் செய்தித் தாள்களை புரட்டிக் கொண்டிருந்தான்.

“ஒரே நாளில் ஏழுமலையானுக்கு எட்டுக்கோடி ரூபாய் வசூல்’’ என்ற செய்தியைப் படித்து முகம் சுழித்தான்.

“படித்துவிட்டு வேலையின்றி வாழ வழியின்றி கிடக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் செத்துக் கொண்டிருக்கும் ஏழைகளுக்கும் உதவ யாரும் தயாராக இல்லாத நாட்டில் இல்லாத கடவுளுக்கு காணிக்கை ஒரு கேடா?’’ என நினைத்தவாறே வேறு செய்திகளைத் தேடினான்.

ஒரு பக்கத்தில் மதுரையில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பம் கேட்டிருந்தார்கள். அதற்கு விண்ணப்பிக்க அதன் முகவரியைக் குறித்துக்கொண்டு அன்றே அந்தப் பதவிக்கு விண்ணப்பித்தான். அந்த வேலை கிடைத்தால் நல்லது என நினைத்தான்.

ஒரு சில நாட்களில் அவனே எதிர்பாராதவண்ணம் அவன் விண்ணப்பித்த நிறுவனத்திலிருந்து நேர்முகத் தேர்விற்கு வருமாறு கடிதம் வந்தது. அன்றைய தினம் திங்கட்கிழமை. வெள்ளிக்கிழமை நேர்முகத் தேர்வு. வியாழன் (இரவு கிளம்பினால் நல்லது என நினைத்தான். மதுரை சென்றுவர குறைந்தது ஆயிரம் ரூபாயாவது வேண்டும். தற்போது அவன் சட்டைப் பையில் சில சில்லரைக் காசுகளே கிடந்தன. இரண்டு நாட்களுக்குள் கூலி வேலை செய்தாவது பணம் சம்பாதித்து மதுரைக்குச் சென்று வந்துவிட முடிவு செய்தான்.

தனக்குத் தெரிந்த காய்கறிக் கடைக்காரரிடம் சென்று அதிகாலை வேளைகளில் காய்கறி வரவு செலவு கணக்குகளை எழுதினான். மதிய வேளைகளில் வேறு சில கடைகளுக்குச் சென்று சில வேலைகளைச் செய்து கொடுத்தான். இரண்டு நாட்களில் கடுமையாக உழைத்து ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிட்டான்.

“இன்டர்வியூவில் ஏதேனும் கேள்வி கேட்பார்களோ?’’ என சிந்திக்கத் தொடங்கினான். அந்த நிறுவனத்தின் வியாபாரம் சம்பந்தப்பட்ட செய்திகளைத் தெரிந்துகொள்ள விரும்பினான். நூல் நிலையம் சென்று அது சம்பந்தமான புத்தகங்களைத் தேடி எடுத்தான். ஆனால், படிக்கத்தான் நேரமில்லை. எனினும் பேருந்தில் பயணம் செய்யும்போது படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்துகொண்டான்.

வெள்ளி மாலை மூன்று மணிக்கு இன்டர்வியூ. வியாழன் இரவு கிளம்ப முடிவு செய்திருந்தான். ஆனால், அன்று பாட்டிக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. கடும் சுரம். இரவோடு இரவாக மருத்துவரிடம் காட்டி மாத்திரைகள் வாங்கிக்கொடுத்தான். கண்விழித்து அருகில் இருந்து கவனித்துக் கொண்டான்.

“என்னைப் பத்தி கவலைப்படாதே. நீ கிளம்பு’’ எனப் பாட்டி வற்புறுத்தினாலும் மதன் மனம் ஒப்பவில்லை.

ஆனால், பாட்டி மிகவும் வற்புறுத்தியதால் பக்கத்து வீட்டு அம்மையாரிடம் பாட்டியைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்.

அப்போது பொழுதும் விடிந்துவிட்டது. நீண்ட நேரம் கழித்தே மதுரை செல்லும் பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறி அமர்ந்தான். அதிகக் கூட்டமில்லை. மாலை குறைந்தபட்சம் இரண்டரை மணிக்காவது மதுரையை அடைந்தால்தான் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியும். இல்லையேல் எல்லாமே வீணாகிவிடும். நடத்துனரும் இரண்டரை மணிக்கு மதுரை சென்றுவிடலாம் எனக் கூறினார்.

பேருந்து புறப்பட்டது. பயணச்சீட்டு வாங்கிய பின் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். பேருந்து ஊர் எல்லையைத் தாண்டியதும் திடீரென, “மதுரைக்குப் போகாதீங்க’’ என்ற சினிமாப் பாட்டு பெருத்த ஓசையுடன் ஒலித்தது. திடுக்கிட்டுப் பார்த்தான் மதன். பேருந்தில் இருந்த ஸ்பீக்கர்கள்தான் அலறியது. மதனால் எதுவும் படிக்க முடியவில்லை. காதே செவிடாகிப் போய்விடும் என்பதைப் போன்ற இரைச்சல். மிகவும் கோபப்பட்ட மதன் நடத்துனர் அருகில் வந்தபோது தான் படிக்க வேண்டும் எனக் கூறி பாட்டை நிறுத்தச் சொன்னான்.

நடத்துனர் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு ஓட்டுநரிடம் சென்றார். பாட்டை நிறுத்தப் போவதாக மதன் நினைத்தான். ஆனால், ஓட்டுநரோ முன்பைவிட அதிக இரைச்சலுடன் பாட்டை ஒலிக்கச் செய்தார்.

“ஏன் சார் இப்படி பண்றீங்க? என்னைப் படிக்கவும் சிந்திக்கவும் விடமாட்டீங்களா?’’ எனக் கத்தினான் மதன். ஆனால் பயனேதும் இல்லை. சற்று நேரத்தில் ஓரிடத்தில் ஓரங்கட்டி நின்றது பேருந்து. மதன் என்னவென்று எட்டிப் பார்த்தான். முன்னால் நிறைய வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.

“என்ன ஆயிற்று?’’ என்று முன்னால் உட்கார்ந்திருந்த பயணியிடம் கேட்டான் மதன்.

“இங்கு வழிகாத்த விநாயகர் கோயில் இருக்கு. அந்தக் கோயில் உண்டியலில் காசுபோட டிரைவர் இறங்கிப் போறார் பாருங்க’’ என்றார் அவர்.

பத்து நிமிட தாமதத்திற்குப் பின் பேருந்து கிளம்பியது. இப்படியெல்லாம் தாமதம் செய்தால் சரியான நேரத்திற்குச் செல்ல முடியுமா? என்ற சிந்தனையில் ஆழ்ந்தான் மதன்.

“கண்டக்டர் சார், நான் மூணு மணிக்கு மதுரையில் ஒரு வேலைக்கான இன்டர்வியூக்கு போகணும். சரியான நேரத்துக்கு பஸ் போயிடுமா?’’ என நடத்துனரிடம் கேட்டான் மதன்.

“இன்னைக்கு திருவிழா நடக்கும் நாள். சரியான நேரத்துக்கு போய் சேர்ந்தால்தான் உண்டு. நிச்சயமா எதுவும் சொல்ல முடியாது’’ என்றார் நடத்துனர்.

செலவு செய்துகொண்டு வந்தது வீணாகி விடுமோ என அஞ்சினான் மதன்.

நீண்டதூரம் சென்றதும் மீண்டும் திடீரென ஓரிடத்தில் நின்றது பேருந்து. வெளியே எட்டிப் பார்த்தான் மதன். வாகனங்கள் நிறைய நின்று கொண்டிருந்தன. பெண்கள் பலர் ஒரே நிறத்தில் புடவை கட்டிக்கொண்டு தலையில் பானையைச் சுமந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.

“என்ன நடக்குது?’’ என்று அருகில் இருந்தவரிடம் கேட்டான் மதன்.

“தம்பி, சாமிக்கு கூழ் ஊத்தும் திருவிழா நடக்குது. எப்படியும் ரோடு கிளியர் ஆக இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும்’’ என்றார் அவர்.

அதே நேரத்தில் திபுதிபுவென பலர் பேருந்தில் ஏறினர். அவர்கள் கைகளில் பெரிய உண்டியல் இருந்தது. அதைக் குலுக்கிக் கொண்டே பயணிகளை பணம்போட வற்புறுத்தினர். பணம் போடாதவர்களையும், கொஞ்சமாகப் போட்டவர்களையும் முறைத்துப் பார்த்துத் திட்டினர். சிலர் பேருந்துக்கு முன்னும் பின்னும் விழா சம்பந்தப்பட்ட போஸ்டர்களை ஒட்டினர். ஓட்டுநருக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியிலும் சிலர் போஸ்டர்களை ஒட்ட முற்பட்டனர். ஓட்டுநர் அவர்களைத் தடுத்து ஓரமாக ஒட்டுமாறு கூறினார். இதனால் ஓட்டுநருக்கும் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஒன்று நடுவில் சிக்கிக் கொண்டது. உள்ளே அழுகுரல் கேட்டது. ஆனால், அதை யாரும் பொருட்படுத்தவில்லை.

சாலையில் பல சிறுவர்கள் வலிப்பு வந்தவர்களைப் போல் ஆடிப்பாடி குத்தாட்டம் போட்டனர்.

இதையெல்லாம் கண்ட மதன் இன்னமும் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடவில்லையே என வருந்தினான். படித்து வேலைக்குச் செல்லவேண்டிய இந்த சிறுவர்களை கோமாளிகளைப் போல் ஆடவிட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் காட்டுமிராண்டிகள்தானே என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

நீண்ட நேரத்திற்குப் பின் பேருந்து கிளம்பியது. மதுரை செல்லும் வழிநெடுகிலும் இதுபோன்று பல இடையூறுகளைக் கடந்து பல மணி நேரம் தாமதமாகச் சென்றடைந்தது.

மதன் செல்ல வேண்டிய நிறுவனத்தின் இன்டர்வியூ நடக்கும் அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

கடவுளும் மதமும் படித்த பல இளைஞர்களின் வாழ்க்கையோடு இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றனவே என நினைத்து வருந்தினான் மதன்.

வீட்டிற்குத் திரும்பிய மதன் சும்மா இருக்கவில்லை. தன்னால் குறித்த நேரத்திற்கு இன்டர்வியூக்கு வர இயலாமல் போனதற்கான காரணத்தையும், கடவுள், மத ஊர்வலத்தால் அல்லல் பட்டதையும் பகுத்தறிவுக் கருத்துகள் மேலும் பரவ வேண்டியதன் அவசியம் பற்றியும்  அதில் தானும் ஈடுபடப் போவதாகவும் விரிவாக எழுதி அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பினான்.

உடன் அங்கிருந்து பதில் வந்தது.

“உங்கள் நிலை எங்களுக்குப் புரிந்தது. உங்களைப் போன்ற பகுத்தறிவாதிகள் எங்களுக்குத் தேவை. விரைவில் உங்கள் ஊரில் எங்கள் நிறுவனத்தின் கிளை திறக்கப்பட உள்ளது. அதில் உங்களுக்கு முக்கிய பதவி உண்டு’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பகுத்தறிவு என்றும் வீண்போவதில்லை என எண்ணி மன நிறைவடைந்தான் மதன்.  

– ஆறு. கலைச்செலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *