பெரியார் அறிவுரை – பெண்களுக்கு…

ஜூன் 16-30

நூல்: பெரியார் அறிவுரை – பெண்களுக்கு…
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, திராவிடர் திடல், 84/1(50). ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.

பக்கங்கள்: 48  விலை: ரூ.30/-

தமிழர்கள் அன்போடு காதலோடு வாழ்ந்திருக்கின்றனர்

பொதுவாக ஒரு ஜீவன் தன் உணர்ச்சிக் காகவும், இனவிருத்திக்காகவும் ஒன்றோடு ஒன்று கூடியதே ஒழிய, இரண்டும் கூடி வாழ்ந்தது என்பது கிடையாது. மனிதனும் முன்பு அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றான். கணவன் மனைவியாகக் கூடி வாழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது.

இச்சைப்பட்ட போது ஒருவருடன் ஒருவர் கூடி பிரிந்தார்களே ஒழிய, குடும்பம், இல்லறம், கணவன், மனைவி என்று வாழ்ந்தார்கள் என்பது கிடையாது. இவையெல்லாம் இடைக்காலத்தில் அதுவும் மற்றவர்களால் நம்மிடையே புகுத்தப்பட்டவை-யேயாகும். இன்னும் சொல்லப் போனால் கொஞ்ச நாளில் நாங்கள், புருஷன் – மனைவியாக வாழ்வது தப்பு என்று சொல்லப் போகிறோம்.

உலகத்தில் ஓர் ஆணும், பெண்ணும் பிறந்தது, கணவன் மனைவியாக வாழ்வதற்காக அல்ல. மனிதன் பிறந்தான்; அவன் அறிவு ஆற்றல் எதற்குப் பயன்பட்டது என்றால், பிள்ளை பெறுவதற்கும், அதைக் காப்பாற்று-வதற்கும் தானே திருமணம் செய்தால் பிள்ளை பெற வேண்டும்; அதைக் காப்பாற்ற வேண்டும், படிக்க வைக்க வேண்டும்; அதற்கு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

கல்யாணம் செய்து வைக்க வேண்டும். பிறகு அவன் பிள்ளை பெற வேண்டும். அதைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தால், மனிதன் என்றைக்குக் கவலையற்று வாழ முடியும்? மனித ஜீவன் மட்டும்தான் உலகத்தில் தான் போட்ட குட்டிகளைக் காப்பாற்றுவதி-லேயே வாழ்வு பூராவும் செலவிடுகிறது.

மற்ற ஜீவன்கள் – குட்டி தானாக இரை தேடுகிறவரை தங்களுடன் வைத்திருக்கும். பிறகு துரத்தி விட்டு விடும். திருமணம், குடும்பம், இல்லறம் என்று ஏற்பட்ட பின் மனிதன் சுதந்திரமானவன் – பகுத்தறிவுள்ளவன் மனித சமுதாயத்திற்காகப் பாடுபடப் பிறந்தவன் என்பது மாறி விட்டது.

முன்காலத்தில் மனிதன் கணவன் – மனைவியாக வாழ்ந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும், சான்றும் கிடையாது. அப்படி ஒரு முறை இருந்தது என்றால், மனித சமுதாயத்திற்கு ஒருமைப்பட்ட ஒன்றான இதற்காகப் பொதுவான ஒரு முறை இருக்க வேண்டுமா இல்லையா? அப்படிப்பட்ட பொதுவான ஒரு முறையில்லை.

ஒவ்வொரு மதக்காரரும் ஒவ்வொரு முறைப்படி நடந்து கொள்கின்றனர். புராணங்களில் தாயைத் திருமணம் செய்து கொண்டதைப் பார்க்கின்றோம். சரித்திரப்படிப் பார்த்தால் அக்காள் தங்கையைத் திருமணம் செய்து கொண்டிருக் கின்றார்கள். இராமாயணத்தில் இராமன் தன் தங்கையாகிய சீதையைத் திருமணம் செய்து கொண்டிருக்-கின்றான்.

இராமனுடைய தந்தை தசரதன் தனது தங்கையைத் திருமணம் செய்து கொண்டிருக்-கின்றான் என்பது பல இராமாயணங்களில்  இருக்கின்றன. இப்போது எனக்குத் தெரிய 100 வருஷங்களுக்கு முன் வரை சயாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டு மன்னர் பரம்பரையினர் தம் தங்கைகளையே திருமணம் செய்து கொண்டு வந்திருக்கின்றனர். இப்போது அது மாறி விட்டது.

கடவுள் கதைகளைப் பார்த்தால்  பிர்மா தன் மகளைத் திருமணம் செய்து கொண்டிருக்-கின்றான். இப்போது நாம் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்கிறோம். அண்ணன் மகளைத் திருமணம் செய்து கொள்வதில்லை.  தகப்பனோடு பிறந்த தங்கையின் (அத்தையின்) மகளைத் திருமணம் செய்து கொள்கின்றோம்.

தந்தையோடு பிறந்த தம்பியின் (சித்தப்பன்) மகளைத் திருமணம் செய்து கொள்வது கிடையாது. ஆனால்  முஸ்லிம்கள் இதற்கு நேர் மாறாகத் தந்தையோடு பிறந்த அண்ணன், தம்பியின் மகளைத் திருமணம் செய்து கொள்வார்கள். தந்தையோடு பிறந்த அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். கொஞ்சம் நாளைக்கு முன் குடிஅரசு பத்திரிகையில் கூட அவர்கள் படத்தைப் போட்டிருந்தேன். அண்ணனும், தங்கையும் திருமணம் செய்து கொண்டனர்.

அதாவது கிருஷ்ண நாயர், கோவிந்த நாயர் இருவரும் அண்ணன் தம்பி. கிருஷ்ண நாயர் மகன் கோவிந்த நாயர் மகளைத் திருமணம் செய்து கொண்டான். ஆகவே மனித ஜீவன் அனைத்திற்கும் பொதுவானது என்று சொல்லும், திருமணம் என்பதற்குப் பொதுவான ஒரு முறை இல்லை.

திருமணம், கல்யாணம், விவாகம் என்கின்ற இப்படிப்பட்ட காரியம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றால், அதற்கென ஒரு முறையில்லை. இப்படித்தான் நடைபெற வேண்டுமென்பதற்காக மனித சமுதாயத்திற்குப் பொதுவான சடங்குகள் இல்லை. மதத்திற்கு மதம், இனத்திற்கு இனம், ஜாதிக்கு ஜாதி மாறுபட்டிருக்கிறது. பெரிய அறிஞர்கள் என்பவர்களாலும், பெரும் புலவர்களாலும் இதற்கு ஒரு குறிப்பிட்ட முறை இது தான் என்று குறிப்பிட்டுக் கூற முடியவில்லை.

தொல்காப்பியத்திலேயே இம்முறையானது பார்ப்பனரால் புகுத்தப்பட்டது என்பதற்கும், இந்தச் சடங்குகள் பார்ப்பனாரால் அவர்-களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, பிறகு நம்மிடையே அவர்களால் புகுத்தப்பட்டது என்பதற்கும் ஆதாரங்கள் (சூத்திரங்கள்) இருக்கின்றன.

பின் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றால் அன்பால், காதலால் அன்போடு – காதலோடு வாழ்ந்திருக்கின்றனர். தமிழனுக்கு இப்படி ஒரு முறையோ, அமைப்போ கிடையாது. பார்ப்பனரால் புகுத்தப்பட்ட-தேயாகும்.

நாளாக நாளாக இதையே நாகரிகமாகக் கருதி, பார்ப்பானால் புகுத்தப் பட்டதைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டான். அதோடு மட்டுமல்ல, ஒருத்தன் ஒருத்தியோடு வாழ வேண்டுமென்று நிபந்தனையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டான். இந்த நிபந்தனையானது இவனால் ஏற்பாடு செய்து கொண்டதே யாகும்.

கல்யாணம் ஆனால் அதோடு பெண்களின் தனி உரிமை (இண்டிவிஜுவலிசம்) ஒழிக்கப்-பட்டு விடுகின்றது. ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சாகிற வரை அவனோடேயே வாழ்ந்து தீரவேண்டு-மென்றிருக்கின்றது.

ஆனால், நாகரிகமுள்ளவர்-களிடையே – இன்றைக்கும் கீழ் ஜாதி மக்கள் என்று கருதப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட மக்களிடையே – திருமணம் செய்து கொண்ட பின் இஷ்டப்பட்டால் கணவன், மனைவி பிரிந்து செல்வதற்கு உரிமை இருக்கின்றது.

இது எல்லா மக்களிடமும் இருந்து வந்த முறையேயாகும். இடைக் காலத்தில் தான் அதுவும் தங்களை உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களிடையே ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால் அவள் தன் உயிர் போகிறவரை அவனுடன் இருந்து தீர வேண்டும். கணவன் அவளுக்கு முன் இறந்து விட்டால் கடைசி வரை விதவையாக வேறு எவனையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டியது என்பது முறையாகிவிட்டது. இப்படிப் பெண்கள் சமுதாயத்தை எதற்கும் பயன்படாமல் தங்களின் அடிமைகளாக, உரிமைப் பொருளாக ஆக்கிக் கொண்டு விட்டனர்.

நம் புலவர்கள் என்பவர்கள் மூட நம்பிக்கையைப் பரப்புகின்றவர்களாக இருக்கின்றார்களே தவிர, புதுமையைப் பரப்பக் கூடியவர்களாக இல்லை. நம் புலவர்கள் எல்லாம் குறையில்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடிய பெரும் அறிவாளி புலவர் வள்ளுவர்.

அவர் முதற்கொண்டு அத்தனை புலவர்களும் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றவர்களாக இருக்கின்றார்களே ஒழிய, ஒருவன் கூட பெண்கள் உரிமையோடு, சுதந்திரத்தோடு, சமத்துவத்தோடு வாழ வேண்டுமென்று சொல்லவில்லை.

இந்த வள்ளுவர் தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொல்லியிருக்-கின்றார். மனு தர்மத்தில் எப்படிச் சூத்திரன் பார்ப்பானைத் தொழ வேண்டும், கடவுளைத் தொழக் கூடாது என்று சொல்லியிருக்கின்றானோ, அதுபோன்றது தான் பெண் தன் கணவனைத் தொழ வேண்டுமென்று சொன்னது மாகும்.

வள்ளுவன் பெண்களைத் தான் கற்போடிருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண்கள் இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை என்று ஒரு திருமணத்தில் இதுபோன்று குறிப்பிட்டேன்.

அந்தத் திருமணத்தில் திருக்குறள் முனுசாமி அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நான் அவரிடம் சொன்னது தவறாகக் கூட இருக்கலாம்; வள்ளுவர் ஆண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினால் நான் எனது தவறை மாற்றிக் கொள்கிறேன் என்று சொன்னேன்.

அதற்கு அவர் திருக்குறளி லிருந்து பிறன் இல்விழையாமை என்ற அதிகாரத்தைக் காட்டி வள்ளுவர் ஆண்களுக்கும் அறிவுரை கூறி இருக்கிறார் என்று சொன்னார்.

நான் உடனே பிறன் மனைவியிடம் போக வேண்டாமென்று சொன்னாரே ஒழிய, கல்யாணம் ஆகாத பெண்களிடமோ, கணவன் இல்லாத பெண்களிடமோ போகக் கூடாது என சொல்லவில்லையே. கல்யாணம் ஆன பெண் இன்னொருவனுடைய சொத்து என்பதால் பிறர் சொத்தைத் திருடக் கூடாது என்று சொல்லியிருக்கிறானே தவிர, மற்றப்படி பெண்களுக்குச் சொன்னது போல எந்த ஆணிடமும் செல்லக் கூடாது என்று சொல்லவில்லையே என்று சொன்னதும் அவரால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. (சிக்கல் என்ற ஊரில் நடைபெற்ற திருமணத்தின் போது – ஆர்)

மனிதன் என்றைக்குக் காட்டுமிராண்டித் தன்மையில் இருந்து விடுபடுவானோ தெரியவில்லை. தன் மனைவி பெற்ற பிள்ளையைத் தனது பிள்ளையென்று உரிமை கொண்டாடுகின்ற மனிதன், தனது காதலியின் (ஆசை நாயகியின்) பிள்ளையைத் தனது பிள்ளையென்று ஒத்துக் கொள்வது கிடையாது. அதற்குத் தன் சொத்தில் பங்கு கொடுக்க முன்வருவது கிடையாது.

மனிதன் காட்டுமிராண்டியாக இருந்தபோது – பொறுப் பற்றிருந்த போது ஏற்பாடு செய்யப்பட்டதே இத்திருமண முறை. கணவன் மனைவியாக வாழ வேண்டுமென்கின்ற முறையாகும்.

பெண்களுக்குப் படிப்புக் கொடுக்காமல் அவர்கள் வாழ்விற்கு, உணவிற்கு இன்னொரு-வரை எதிர்பார்க்க வேண்டியவர்களாக வளர்த்துவிட்டதால் அவர்கள் ஓர் ஆணை ஒட்டி – அவனைக் காப்பாற்றி அவனுக்கு அடிமையாக இருந்து தொண்டு செய்து வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல படிப்புக் கொடுத்து அவர்கள். வாழ்விற்குத் தேவையான ஊதியம் கிடைக்கும்படியான ஒரு தொழிலையும் கற்றுக் கொடுத்து விட்டால் – அவர்கள் தாங்களாகவே வாழும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டால், எந்தப் பெண்ணும் ஒருவனுக்கு அடிமையாக இருக்க விரும்ப மாட்டாள்.

மனிதனுக்குக் குடும்பம், இல்லறம் என்கின்ற கட்டுப்பாடும், கல்யாணமும் இல்லாமலிருந்தால் நமது ஆயுள் 100-ஆக உயர்ந்து விடும். மனிதனுக்கு மனைவி, குழந்தைக் குட்டி, குடும்பம், இல்லறம் என்கின்ற கவலையும், தொல்லையும் இருப்பதால் மனிதனின் ஆயுள் குறைகின்றது. மனிதன் கவலையற்றவனாக இருந்தால் அவன் ஆயுள் தானாகவே உயரும்.

ஆண்கள் 25 வயதுக்கு மேல் தான் திருமணத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பெண்களும் 22 வயது வரைப் படிக்க வேண்டும். பிறகு தாங்களாகவே தங்களுக்கு விருப்பமான ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் தாய் தகப்பன் பார்த்துத் திருமணம் செய்வது என்பது காட்டுமிராண்டித் தன்மையேயாகும். மேல் நாட்டில் இப்போது ஆண்களும், பெண்களும் தாங்களாகவே தங்கள் துணைவர்களைத் தேடிக் கொள்கின்றனர்.

இந்த நாட்டில் பொதுத் தொண்டு செய்கிற ஆள் காமராஜர் ஒருவர் தான் என் கண்ணுக்குத் தென்படுகின்றார். வேறு ஒருவரைச் சொல்ல முடியாதே! அவனவன் தன் குடும்பம், பிள்ளைக் குட்டி ஒன்று. அதைக் காப்பாற்றுவதில் தன் வாழ்நாள் பூராவையும் பயன்படுத்திகின்றானே தவிர, மனித சமுதாயத்தைப்  பற்றியே சிந்திப்பதுகிடையாது. நம் குடும்பம் என்பதை விட நம் இனம் என்கின்ற எண்ணமும், உணர்ச்சியும் நமக்கு வரவேண்டும்.

மற்ற மக்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வரவேண்டும். குடும்பம் என்பது ஏற்பட்டால் மனிதன் கவனம் முழுவதும் தன் குடும்பம் பக்கம் திரும்புகிறதே ஒழிய, மற்ற மக்கள் பக்கம் திரும்புவது கிடையாது. மனிதன் அறிவை – ஆராய்ச்சியைக் கொண்டு வாழ வேண்டும். மாறுதல் ஏற்பட்டால் திருந்த முடியும். மாறுதல் ஏற்படத் தைரியம் வேண்டும். தைரியம் ஏற்பட அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும்.

(18.5.1969 அன்று இரும்புலிக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) ‘விடுதலை’ 27.5.1969.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *