சிறார்களைச் சீர்ழிக்கும் போதைப் பொருட்கள்!

ஜூன் 16-30

புகையிலை, மது, கஞ்சா, ஒப்பியம் இப்படிப் பலவகையான போதைப் பொருள்களால் சமூகம் சீரழிந்து கொண்டிருப்பது நம் கண் முன்னால் காணும் காட்சி. இதற்கு ஏதும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டிய தேவையில்லை.

ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் போதைக்கு அடிமையாகிச் சீரழிவது மிகவும் கவலை தரக் கூடியதாகும். ஆனால், அதைவிடக் கொடுமை என்னவென்றால் நாளுக்கு நாள் சிறார்கள் இந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ((National Commission for protection of Child rights) தரும் புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளன.

முன்பெல்லாம் சற்று வயதான மாணவர்களே அதாவது கல்லூரி மாணவர்களே போதைப் பொருள்களை நுகரும் நிலையிருந்தது. ஆனால் தற்போதோ 5ஆம், 6ஆம் வகுப்பு மாணவர்களிடையே இந்தப் பழக்கம் பரவி வருகிறது. எனவே, சிறுவர்களுக்கென தனியே போதை விடுவிப்புச் சேவை மய்யங்கள்

(De-addiction Centres for Kids) அதிக அளவில் தேவைப்படுகின்றன.
தற்போது தமிழ்நாட்டில் 26 போதை விடுவிப்புச் சேவை மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தனியார்களால் நடத்தப்படும் மய்யங்களானாலும் மத்திய அரசின் நிதி உதவியும் அவைகளுக்குக் கிடைக்கிறது. இவை தவிர மற்றும் பல மய்யங்களும் செயல்பட்டு வருகின்றன என்றாலும், இவை அனைத்திலும் வயதில் மூத்தவர்களோடு சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவற்றில் சிறார்களை அனுமதித்துச் சிகிச்சை அளிக்கும் போது சிறார்கள் அதுவரை அறியா,  போதைப் பொருள்களைப் பற்றிய தகவல்களையும் அம்முதியவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு வருகிறது. இதன் மூலம் சிறுவர்கள் விடுவிக்கப்படுவதற்கு மாறாய் மேலும் கெடுகின்றனர்.

தற்போது தமிழகத்தில் தடுக்கிவிழும் இடமெல்லாம் மதுக்கடைகள் (டாஸ்மாக்)  தமிழக அரசாலேயே நடத்தப்படுவதாலும், வீதிகளெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெட்டிக் கடைகள் அனைத்துவிதமான புகையிலை, போதையூட்டுப் பொருள்களையும் சிறியவர், பெரியவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் விற்பனை செய்வதாலும் சிறுவர்கள் பெரிதும் சீரழிகின்றனர்.

18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு புகையிலைப் பொருள்களையும், மது வகைகளையும் விற்பனை செய்யக் கூடாது எனச் சட்டம் இருந்தாலும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்தாததால் அதனால் பயன் இல்லை.

போதைப் பழக்கத்திற்கு ஆளான சிறார்கள் தன் வயதுக்கொவ்வாத பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதால் கைது செய்யப்படுகின்ற அவலமும் அதிகரித்து வருகிறது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வீட்டில் பெற்றோர் கண்காணிப்பில் உள்ள பிள்ளைகள் என்றும், வீடுகளின்றி தெருவில் வசிப்போர் பிள்ளைகள் என்றும்,  பிரித்துக் கணக்கெடுத்துப் புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. அப்புள்ளி விவரப்படி பார்க்கும்போது இரண்டு பிரிவினருக்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்றும் காணப்படவில்லை. ஏறக்குறைய அனைவருமே 10 வயது முதல் 15 வயதுவரை உள்ளவர்களாகவே இரு பிரிவுகளிலும் காணப்படுகின்றனர். 15 வயதுப் பிரிவில் உள்ளவர்கள் ஊசிமூலம் போதைப் பொருள் ஏற்றிக் கொள்பவர்களாக உள்ளனர்.

எனவே, இப்பாதகத்திலிருந்து இன்றைய இளைஞர்களை, வருங்கால சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டுமெனில் போதைப் பொருட்களை முற்றாக ஒழிப்பதும், சிறுவர்களுக்கென தனியே போதை விடுவிப்புச் சேவை மய்யங்கள் அமைக்க வேண்டியதும் அவசர அவசியமாகும். இதை சேவை நிறுவனங்களும் அரசும் செய்ய வேண்டும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *