பா.ஜ.க மூன்றாண்டுக் கால ஆட்சி ‘கல்கி’ ஏடே கண்டித்து, காழ்ப்பை உமிழ்கிறது!

ஜூன் 16-30

 

 

 

பாலம் கட்ட ரூ.2056 கோடி. அப்பாலத் திறப்பு விழாச் செலவு ரூ.1500 கோடி! பா.ஜ.க. ஆட்சியின் இலட்சணம் இதுதான்!

மத்திய பா.ஜ.க. அரசின் மூன்றாண்டுக் கால ஆட்சியைக் கொண்டாட, பா.ஜ.க. விழாவாக இல்லாமல் மோடி விழா என்று சொல்லியே நடத்தினார்கள். இது பா.-ஜ.க.வின் பலவீனத்தையே காட்டுகிறது.

தொடர் சர்ச்சைகளால் வருங்காலத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு சரியும். ஆனால், மோடி என்ற இமேஜுக்கு இருக்கும் வசீகரம் குறையாது. கொள்கைகள், திட்டங்கள் ரீதியாக இல்லாமல் தனிமனித செல்வாக்கை வைத்து கட்சிக்கு லாபம் சம்பாதிக்க நினைக்கிறார்கள். இது ஆரோக்கியமான அரசியல் கிடையாது.

19.5 கி.மீ. நீளமுள்ள பூபன் ஹஸாரிகா பாலம் கட்டி முடிக்கப் பெற்று திறந்து வைத்திருக்கிறார் மோடி. பாலத்தைக் கட்ட ரூ.2056 கோடி. மூன்று நாள் விழாவுக்கு ரூ.1500 கோடி செலவு!

1500 கோடியில் விழாவை நடத்தும் பா.ஜ.க. எத்தனை பெரிய பணக்காரக் கட்சியாக இருக்க வேண்டும்? இதன் சூட்சுமம் தொழில் நிறுவனங்கள் அள்ளிக் கொடுத்து தேவையான பயனடைகிறார்கள் என்று அர்த்தம். பா.ஜ.க.வினர் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.

மன்கி பாத் உரையை வரவேற்கலாம். மோடி சிறந்த பொதுஜனத் தொடர்பாளராக, நேர்மையான பெருந்தலைவராக இருக்கலாம். ஆனால், கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் இந்துத்வா ஆதரவாளர்கள், சங் பரிவார் சக்திகளால் மோடிக்கு உண்டாகும் தர்மசங்கடத்தை அவரும் உணர-வேண்டும்.

உதாரணங்கள் ஒன்றா, இரண்டா? பாகிஸ்தானுடன் நல்லுறவு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போயிற்று. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் _ உ.பி.யில் நடப்பனவற்றை எழுதவே கைகூசுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை சீர்குலைந்து இருக்கிறது. யோகி வருகிறார் என்று, தலித் கிராம மக்களிடம் போய் சோப்பு கொடுத்துக் குளித்து வரச் சொல்லி-யிருக்கின்றனர். இதைவிட தலித்துகளை அவமானப்-படுத்த முடியுமா?

காஷ்மீரில் பயங்கரவாதம் தலைவிரித் தாடுகிறது. மாநில உரிமைகள் பறிபோகும் சூழல். இதுமட்டுமா? வேலைவாய்ப்பில் கணிசமான சரிவு இருக்கிறது.

விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. கோதுமை கொள்முதலைக் குறைத்து, அயல்நாட்டி-லிருந்து கோதுமையை இறக்குமதி செய்கிறார்கள். விவசாயிகளிடம் 16,000 கோடி இன்சூரன்ஸ் பணம் வசூலித்துவிட்டு, திருப்பிக் கொடுத்தது 7000 கோடிதான். யாருக்கு லாபம்… விவசாயிகளுக்கா? காப்பீடு கம்பெனிகளுக்கா?

போதாக்குறைக்கு கால்நடைகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என்று தடை விதித்து, உணவுப் பழக்கத்தை மாற்றச் சொல்கிறார்கள்.

நாடு முழுவதும் இறைச்சி வியாபாரம் மட்டுமின்றி தோல் பதனிடும் ஏராளமான தொழிலகங்களும் பாதிக்கப் பட்டுள்ளன.

நன்றி: ‘கல்கி’ இதழ்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *