முந்திரிக்காட்டில் முகிழ்த்த அய்.ஏ.எஸ்!

ஜூன் 16-30

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள வடக்கு மேலூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். மணிகண்டனின் பெற்றோர் ஆறுமுகம்_வள்ளி. உடல்நிலை சரியில்லாத ஆறுமுகம் வேலைக்குப் போகமுடியாத நிலையில் அம்மா வள்ளிதான் ஒப்பந்தத் தொழிலாளராக என்.எல்.சி.யில் கஷ்டப்பட்டு வேலை செய்து மகனைப் படிக்க வைத்தார்.

“ககன் தீப்சிங் பேடி கடலூருக்கு கலெக்டராக வந்தவுடன் முதல் நிகழ்ச்சியா நெய்வேலி என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் தான் வந்தார்.

அந்த நிகழ்ச்சியில் தமிழில்தான் பேசினார். அந்தப் பேச்சு என்னை பாதித்தது. என் மனதில் அய்.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவை விதைத்தது. பள்ளியில் படிக்கும்போதே  இறையன்பு, சைலேந்திரபாபு இருவரும் மி.கி.ஷி. தேர்வுபற்றி எழுதிய புத்தகங்களை வாங்கிப் படித்து மேலும் என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன்.

கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பிஃபார்ம் யூ.ஜி. முடித்துவிட்டு சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் எம்.ஃபார்ம் _ பி.ஜி. படிப்பதற்காக வந்தேன். அப்பொழுது ஏதாவது இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிக்கணும்னு ஆசை.

ஆனால், கையில் பணமில்லை. இருந்தாலும் படிக்கணும் என்று முடிவெடுத்து இலவசப் பயிற்சி கொடுத்த பெரியார் அகாடமியில் போய்ச் சேர்ந்தேன். அப்பொழுது சென்னையில் அடிஷனல் கமிஷனராக பணியாற்றிக் கொண்டிருந்த விவேகானந்தன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஒருவேளை நான் அவரைச் சந்திக்காமல் இருந்திருந்தால், அய்.ஏ.எஸ். ஆகியிருக்க மாட்டேன் என்றுகூட சொல்லலாம்.

சென்னையில் எம்.ஃபார்ம், படித்துக் கொண்டிருந்த எனக்கு ஸ்டைஃபண்ட்டாக மாதம் 6 ஆயிரம் கொடுத்தார்கள். அப்பொழுது வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்பதால் அதை வைத்து அய்.ஏ.எஸ்.க்கான முயற்சியைத் தொடங்கினேன். பி.ஜி. ரிசல்ட் வருவதற்குள்ளாகவே டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய ரிசல்ட் வந்து மருந்து ஆய்வாளராக (டி.அய்.) பணியில் சேர்ந்தேன். அந்த நேரத்தில்தான் குடும்பத்திற்கும் என்னால் கொஞ்சம் உதவ முடிந்தது.

இந்திய அளவில் மொத்தம் 1099 பேர் தேர்வில் செலக்ஷன் ஆகியிருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 120 பேர். ஆக 10 சதவீதம்தான் நம் மாநில மாணவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். இன்னும் நிறையப் பேர் இங்கிருந்து வரவேண்டும்’’ என்று சொல்லும் மணி-கண்டனின் இளமை கொடிய வறுமையில்தான் இருந்திருக்கிறது.

“நான் அய்ந்தாவது, ஆறாவது படிக்கும் காலத்திலேயே மே மாத லீவில் முந்திரிக் காட்டில் முந்திரி எடுக்க அம்மாவோடு வேலைக்குப் போனேன். எட்டாவது, ஒன்பதாவது படிக்கும்போது நெய்வேலி இந்திரா நகரில் புதியதாக ஒரு கட்டடம் கட்டிக்கொண்டு இருந்தபோது அம்மாவுடன் நானும் சித்தாள் வேலைக்குப் போனேன்.

அதன்பிறகு டென்த் லீவில் டவுன்ஷிப்பில் மெயின் பஜாரில் பழக்கடையில் வேலை பார்த்தேன். அப்பொழுது தான் ரிசல்ட் வந்தது. 445 மார்க் எடுத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன்.

படிப்பதுதான் நம்மை உயர்த்தும் என்பதால் எல்லா காலத்திலும் விடாமுயற்சியுடன் படித்தேன். அய்.ஏ.எஸ். தேர்வுகூட, ஆறுமுறை முயற்சி செய்து இப்பொழுதுதான் வெற்றி பெற்றிருக்கிறேன்.

வசதி வாய்ப்புகள் நன்றாக இருந்தால் முதல் முயற்சியில் நாம் ஜெயிக்கலாம். அப்படி இல்லாதபோது வெற்றியை போராடித்தான் பெறவேண்டும்’’ என்று உறுதியுடனும் நம்பிக்கையுடனும் பேசினார் மணிகண்டன்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *