பெரும்பான்மை மக்களின் வேலைவாய்ப்புகளை விழுங்கும் சிறுபான்மை பார்ப்பனர்கள்!

ஜூன் 16-30

“தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருந்தாலும், தற்போது அரசியல், வேலைவாய்ப்புகளில் பார்ப்பனர்கள் அதிகம் இல்லை’’ என்ற பத்திரி சேஷாத்திரிகளின் புலம்பல் ஒரு பக்கம்.

4 சதவீதம் உள்ள நாங்கள் 60 சதவீத பதவிகளை அனுபவித்து வருகிறோம் என்று இணையத்தில் ஒரு பார்ப்பனரின் திமிர் மிகுந்த பதிவு மறுபக்கம்.

எத்தனைக் காலத்திற்கு இடஒதுக்கீடு? இனி இடஒதுக்கீடே வேண்டாம் என்று சில அரைவேக்காடுகளின் கோரிக்கை இன்னொரு பக்கம்.

மத்தியில் மதவாத பா.ஜ.க. ஆட்சி பெரும்பான்மையுடன் அமைந்தது முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்விற்குக் காரணமான இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி மற்றொரு பக்கம்.

இப்படிப்பட்ட நிலையில், இடஒதுக்கீடு சார்ந்த உண்மை நிலை என்ன? இடஒதுக்கீடு 60 ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்ட பின்பும் வேலை வாய்ப்புகளில் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்ததா? இடஒதுக்கீடு இனி தேவை-யில்லையா? அல்லது இடஒதுக்கீட்டை இன்னும் விரிவுபடுத்த வேண்டுமா? போன்ற வினாக்களுக்கு விடைகளை நாம் கண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, சமூகநீதி வரலாறு அறிந்த முந்தைய தலைமுறை மறைந்து அவைபற்றி அறியாத ஒரு புதிய தலைமுறை வந்துள்ள நிலையில் அத்தலைமுறைக்கு இவற்றில் ஒரு தெளிவை ஏற்படுத்தி அவர்களை  சமூகநீதியை நிலைநாட்டும் போராளிகளாய் ஆக்க வேண்டிய அவசியம் தற்போது வந்துள்ளது.

ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கம்:

சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரிய பார்ப்பனர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, ஆட்சி, அதிகாரம் என்று எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்து தாங்களே எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தினர். அரசர்களை, ஆட்சியாளர்களை அண்டி, அவர்களின் ஆதரவைப் பெற்று, அவர்கள் வழியிலும் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு:

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சியின் மூலம் மிகப்பெரும் ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புக்கு அடிப்படை அமைக்கப்பட்டது.

அடிமைத் தொழிலும், கூலித் தொழிலும் மட்டும் ஆரிய பார்ப்பனர் அல்லாதாருக்கு கொடுக்கப்பட்டு, உயர்பதவிகள், வருவாய் அதிகம் உள்ள பதவிகள் எல்லாம் பார்ப்பனர்களால் அபகரிக்கப்பட்டன.

நீதிக்கட்சி ஆட்சிக்கு முன் நிலை:

நமது அரசாங்கத்தில் 35 ரூபாய் சம்பளத்திற்கு கீழ்ப்பட்ட உத்தியோகங்களில்,  பிராமண ரல்லாதவர் 37,125 பேர்கள் இருந்தார்கள். பிராமணர்கள் 1810 பேர் மாத்திரமே இருந்தார்கள்.
35-க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரை சம்பளம் உள்ள உத்தியோகத்தில் பிராமணரல்லாதார் 7003, பிராமணர்களோ 10,934 இருந்தார்கள்.

250 ரூபாய்க்கு மேல்பட்டு சம்பளம் உள்ள  உத்தியோகங்களில் பிராமணர்கள் 594, பிராமணரல்லாதார் 280 பேர்கள் இருந்தார்கள்.

ரெவின்யூ போர்டில் உள்ள ஒரு இந்திய மெம்பர் உத்தியோகத்தில் பிராமணர்தான் இருந்தார். இந்தியருக்குக் கொடுக்கப்பட்ட கைத்தொழில் டைரக்டர் வேலையில் பிராமணரே இருந்தார். அரசாங்கக் காரியதரிசி வேலையில் இருந்த இந்தியரும் பிராமணரே.

200 ஜில்லா முன்சீப்புகளில் 150 பேர் பிராமணர்கள்; 61 சப் ஜட்ஜுகளில் 45 பேர் பிராமணர்கள்; ஜில்லா ஜட்ஜுகளில் 7 பேர் பிராமணர்கள். அதாவது எடுபிடி உத்தியோகங்களில் பிராமணரல்லாதாரும் 100, 500, 1000, 2000, 3000 ரூபாய் சம்பளம் உள்ள உத்தியோகங்களில் பிராமணர்களும் இருந்தார்கள்.

தந்தை பெரியார் தந்த புள்ளிவிவரம் –
(‘குடி அரசு’ – 18.04.1926)

நீதிக்கட்சி ஆட்சியின் விளைவாய்

நீதிக்கட்சி ஆட்சியில் வகுப்புவாரி உரிமை கொண்டுவரப்பட்ட பிறகு இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அனைத்து சமுதாயத் தினருக்கும் அவரவர் மக்கள்தொகை விகிதத்திற் கேற்ப வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

1928-இல் கம்யூனல் ஜி.ஓ உத்தரவை வகுப்புவாரி உரிமையை முத்தையா முதலிலியார் அவர்கள் கொண்டு வந்தார்கள். அந்த வகுப்புவாரி உரிமையிலேயே பார்ப்பனர் களுக்கும் தனியே இடங்களைக் கொடுத்தார்கள். எனவே யாருக்கும் வாய்ப்புகள் மறுக்கப் படவில்லை.

அன்றைக்கு மொத்த இடங்கள் 12 என்று  சொன்னால், இந்து பார்ப்பனரல்லாதாருக்கு 5, பார்ப்பனர்களுக்கு 2, இஸ்லாமியர்களுக்கு 2, கிறிஸ்தவர் களுக்கு 2 ஆங்கிலோ இந்தியர்கள் உள்பட, ஆதி திராவிடர்கள் 1 மொத்தம் 12 இடங்கள்” வழங்கப்பட்டன.

தந்தை பெரியாரின் போராட்டத்திற்குப் பின்

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சிக் காரணமாக நடைமுறையில் இருந்துவந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் ஒழித்துவிட்ட நிலையில் பூகம்பம் வெடித்தெழுந்ததுபோல், பார்ப்பனர் அல்லாத மக்களை அணிவகுக்கச் செய்து, தந்தை பெரியார் ஆர்த்தெழுந்த காரணத்தால்தானே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. (1951_நாள் 18.06.1951)

அந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவராக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்தான் இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி. (14.08.1950)

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் முயற்சியால் பெற்ற சமூகநீதி

தந்தை பெரியாரால் கிடைத்த பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் தமிழக முதல்வராய் இருந்த திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள்,  பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக் கீட்டில் கைவைத்தார்.

ஆண்டுக்கு 9000 ரூபாய்க்கு மேல் வருமானமுள்ள பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் அந்த ஆணை (தமிழ்நாடு அரசு ஆணை எண் 1156 சமூக நலத்துறை நாள் 02.07.1979)

உடனே ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் தலையில் பேரிடி விழுந்தது என்று உடனடியாக அறிக்கை வெளியிட்டு (விடுதலை 03.07.1979) ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய-தோடு நிற்கவில்லை.

உடனடியாக அனைத்துக் கட்சிகள், அனைத்து சமூக அமைப்புகள், சமூக நீதியைக் கோரும் ஜாதி அமைப்புகள் அனைத்தையும் சென்னைப் பெரியார் திடலில் கூட்டினார். (04.07.1979)

சென்னை, சேலம் நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மாநாடுகள் நடத்தப்பட்டன.

தி.மு.க., காங்கிரஸ், ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (சி.பி.எம். அல்ல) ஒடுக்கப்பட்ட சமூக அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் மாநாட்டில் பங்கேற்று சமூகநீதிக்கு எதிரான ஆட்சி எம்.ஜி.ஆர். ஆட்சி என்று சங்கநாதம் செய்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் முடிவு செய்யப்பட்ட அந்த நவம்பர் 26ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாடெங்கும் ஆணை எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. (26.11.1979) சாம்பல் மூட்டைகள் கோட்டையில் குவிந்தன. இது முதற்கட்ட போராட்டம்தான். அடுத்து, தொடரும் என்றும் அறிவித்ததோடு மற்றுமொரு எச்சரிக்கையை முதல் அமைச்சருக்கு விடுத்தார் தலைவர் வீரமணி.

நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டில் 39 மக்களவை இடங்களில் 37 இடங்களில் மண்ணைக் கவ்வியது. அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர். தோல்விக்குக் காரணம் இடஒதுக்கீட்டில் கை வைத்ததே என்பதை உணர்ந்தார்.

உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். (21.01.1980). அக்கூட்டத்தில் தலைவர் வீரமணி அவர்கள் எடுத்து வைத்த கருத்துகள் விவாதங்-களில் வெற்றி பெற்றன.

உடனடியாக வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தார். (24.01.1980)

வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூக நீதிக் கொள்கை அப்பொழுதே பளிங்குச் சமாதிக்குப் போயிருக்கும் என்று சிங்கப்பூர் தமிழ்முரசு அப்படியே படம் பிடித்துக் காட்டியது.

69 சதவீத பாதுகாப்பு நடவடிக்கை

எம்.ஜி.ஆர் அவர்களின் புதிய ஆணை-யினால் தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு பிற்படுத்தப்–பட்ட மக்களுக்கு 50, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18, அதன்பின் உச்சநீதிமன்ற ஆணையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு தனியே ஒரு சதவீதம் என்று 69 சதவீத இடஒதுக்கீடு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒளி வீசியது.

மண்டல்குழு பரிந்துரையைச் சமூக நீதிக்காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் செயலுக்குக் கொண்டு வந்தார். (நாடாளு-மன்றத்தில் அறிவிப்பு 07.08.1990)

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஒன்பது நீதிபதி-களைக் கொண்ட அமர்வு பிற்படுத்தப்-பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் செல்லும் என்று கூறிய அந்த அமர்வு _ இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்று தேவையில்லாமல் அரசமைப்புச் சட்டத்தில் எங்குமே சொல்லப்படாத ஓர் அளவைத் திணித்தது. (16.11.1992)

நாடே திகைப்பில் மூழ்கியது. அரசாங்கமோ செய்வதறியாது கையைப் பிசைந்தது. அந்த நேரத்தில் அரிய ஆலோசனைகளைத் தந்து  சமூக நீதியைக் காப்பாற்றியவர் கி.வீரமணி அவர்கள்ஆவார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31_சி பிரிவின்கீழ் மாநில அரசே சட்டப் பேரவையில் சட்டமியற்றி நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெற்று 9ஆவது அட்டவணையில் சேர்த்தால், அந்தச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் நினைத்தாலும் கைவைக்க முடியாது என்ற ஒரு திட்டத்தை  சொன்னது மட்டுமன்றி, அதற்கான சட்ட நகலைத் தயாரித்தும் கொடுத்தார்.

ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்துக் கட்சிகளைக் கூட்டி அதற்கான ஒப்புதலையும் பெற்றார். அதன் பிறகே தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு 9ஆவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது. (76ஆவது திருத்தம் -25.08.1994)

மண்டல் குழுப் பரிந்துரையும் மத்திய அரசில் இடஒதுக்கீடும்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340ஆம் பிரிவு பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஆணையம் அமைக்க வழி செய்தது. காகாகலேல்கர் தலைமையில் குழு ஒன்று ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்டது (29.01.1953).

அக்குழு தன் அறிக்கையை மத்திய அரசிடம் 30.03.1955இல் அளித்தது. என்றாலும் அறிக்கை வெளியில் விடாமல் முடக்கப்பட்டது.

இரண்டாவது ஆணையம், பிகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) தலைமையில் குழு அமைக்கப்பட்டது. (20.12.1978) அக்குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.(31.12.1980) அந்தக் குழுவுக்குச் சென்னைப் பெரியார் திடலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. (30.06.1979)

அக்கூட்டத்தில் பி.பி.மண்டல் பேசினார் நாங்கள் அறிக்கையைக் கொடுப்போம். எங்களால் செய்ய முடிந்தது அது-தான்; அதனைச் செயல்பட வைப்பது பெரியார் பிறந்த தமிழ்நாடாகத்தான் இருக்க முடியும் என்றார்.  அந்நிகழ்வில் பேசிய தலைவர் வீரமணி அவர்கள் காகாகலேல்-கரின் முதல் அறிக்கையைப் போல இதனைத் தூங்க விட மாட்டோம். அதுவரை நாங்கள் தூங்கவும் மாட்டோம் என்ற எழுச்சியுரையை ஆற்றினார்.

பி.பி.மண்டல் அஞ்சியபடியே அறிக்கை அளிக்கப்பட்டதே தவிர _ நாடாளுமன்றத்தில்-கூட வைக்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியது.

தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் முழு முயற்சியின் வீரியம், திராவிடர் கழகத் தோழர்களின் அயராப் பணிகள் வீண்போக-வில்லை. காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து தேசிய முன்னணியின் சார்பில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) பிரதமராக வந்தபோது மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீத இடஒதுக்கீடு என்ற வரலாற்றுப் பிரகடனத்தை வெளியிட்டார். (07.08.1990)

இன்று மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்றால் அதற்கான ஆணிவேராக இருந்து அரும்பாடுபட்ட தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தாம்.

நுழைவுத் தேர்வு

பார்ப்பன ஆதிக்கக்காரர்கள் எந்த வழியிலாவது உள்ளே புகுந்து இடஒதுக்கீட்டின் பயன் கிட்டாது செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்றுதான் நுழைவுத் தேர்வு. நுழைவுத் தேர்வு என்ற கேட்டை நுழைய விட்டவர் எம்.ஜி.ஆர்தான்! (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 322 நாள்: 30.05.1984)

அதனை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டது திராவிடர் கழகம்தான். 23.06.1984 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் மாணவர் கழகம் இளைஞர்களின் நுழைவுத் தேர்வு ஆணையினை எரித்தனர்.

கலைஞர் ஆட்சியில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டது. இதனால் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மீண்டும் உயர்கல்வியில் உரிய இடங்களைப் பெற்றனர்.

இப்படியெல்லாம் போராடி இடஒதுக்கீடு பெற்று பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப் பட்டோரும் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற்றாலும்

ஆரிய பார்ப்பனர் ஆதிக்கம் இன்னும் உச்சநிலையில்தான் உள்ளது. இதனைப் பார்ப்பனர்களே வெளியிட்ட கீழ்க்கண்ட புள்ளிவிவரம் உறுதி செய்கிறது.


இடஒதுக்கீடு இருந்தும் பார்ப்பன ஆதிக்கம் பாரீர்!

மத்திய அரசில் 149 உயர் அரசு செயலாளர்களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை

கூடுதல் செயலாளர்கள்            108
தாழ்த்தப்பட்டவர்                2
இணைச் செயலாளர்கள்            477
தாழ்த்தப்பட்டவர்                31 (6.5%)
மலைவாழ் மக்கள்         15 (3.1%)
இயக்குநர்கள்                590
தாழ்த்தப்பட்டவர்                17 (2.9%)
மலைவாழ் மக்கள்            7 (1.2%)
அய்.ஏ.எஸ். அதிகாரிகள்            3251
தாழ்த்தப்பட்டவர்                13.9%
மலைவாழ் மக்கள்            7.3%
பிற்படுத்தப்பட்டோர்            12.9%
காலி இடங்கள் 73 துறைகளில் தாழ்த்தப் பட்டோருக்கான காலி இடங்கள்    25037
குருப் ஏ
தாழ்த்தப்பட்டோர்                13%
மலைவாழ் மக்கள்            3.8%
இதர பிற்படுத்தப்பட்டோர்            5.4%
குரூப் பி
தாழ்த்தப்பட்டோர்                14.5%
மலைவாழ் மக்கள்            5.2%
இதர பிற்படுத்தப்பட்டோர்            4.2%
சுத்திகரிப்பாளர் (ஷிகீணிணிறிணிஸி)
தாழ்த்தப்பட்டோர்                59.4%
((The Times of India 06.09.2012)———-

ஆகஸ்டு 2012 ஆண்டு EPW என்ற வாரப் பத்திரிக்கையில் வெளியான“Corporate Boards in India Blocked by Caste?” என்னும் தலைப்பில் எந்த சமூகம் இந்திய கார்பரேட்டுகளை ஜாதி கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.

தேசிய பங்கு சந்தை மற்றும் பம்பாய் பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் போர்டு உறுப்பினர்களில், முதல் 1000 நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்தது. இந்தியாவில் கடைசிப் பெயர் பொதுவாக சாதியைக் குறிக்கும்.

கடைசிப்பெயர் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு அவர்களின் சாதியினரைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் படி 1000 கார்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கல்வித் துறையையும் விட்டு வைக்காத மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள், இந்திய கல்வி நிறுவனங்களை வணிக நிறுவனங்களாக மாற்றியதில் வெற்றியடைந்தனர். இத்தகைய மாற்றங்களால் சாதிய கட்டமைப்பின் கடைக்கோடியிலுள்ளவர்களுக்கு கல்வி எட்டாக் கனியாகியது.

காங்கிரசுக்கு மாற்றாக ஊடகங்களும், காவிக் கும்பலும் முன்னிறுத்தும் பா.ஜ.க, ஊழல் மற்றும் வகுப்பு கலவரங்கள் என இரட்டை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய பா.ஜ.க அரசு மிகவும் மலிவு விலைக்கு தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கிறது. இத்தகைய கொள்கை மாற்றத்தால் தலித்துகள், பழங்குடியினர் மற்றும், பிற்படுத்தபட்ட மக்களின் வேலைவாய்ப்பு மேலும் சுருங்கிவிட்டது.

நவம்பர் 2008 ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களின் சமூக-பொருளாதார நிலை அறிக்கையிலிருந்து ஒவ்வொரு துறையிலும் எத்தனை தலித்துகள், பழங்குடியினர் மற்றும், பிற்படுத்தபட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதையும், மத்திய அரசுத் துறைகளில் எந்தச் சமூகம் ஆதிக்கம் செலுத்திவருகின்றது என்பதையும் அறிய முடிகிறது.
இடஒதுக்கீடுக்கு எதிராக தங்கள் வாதங்களை முன்வைக்கும் எவரும் தவறிக்கூட தரவுகளை கவனிப்பதில்லை.

இந்துத்துவவாதிகள் என்ன கூறுகின்றனவோ, அதையே மீண்டும் மீண்டும் ஒப்பிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் சுமார் 75% உள்ள பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மத்திய அரசில் துப்புரவு பணியைத் தவிர்த்து வெறும் 41.98% வேலைவாய்ப்பை மட்டுமே பெற்றுள்ளனர்.

குறிப்பாக அரசின் உயர்ந்த பதவிகளான நிலை மி  பணியில் தலித்துகள், பழங்குடியினர் மற்றும், இதர பிற்படுத்தபட்ட வகுப்பினர் முறையே 12.53%, 4.85%, 5.44% உள்ளனர். நிலை மிமி பணியில் முறையே 14.89%, 5.70% மற்றும் 3.60% உள்ளனர்.

தலித் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆகின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் படி பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளித்து சுமார் 20 ஆண்டுகளாகின்றன.

இவ்வாறு இடஒதுக்கீடு நடைமுறையிலிருந்தும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தபட்ட வகுப்பினரின் சமூக-பொருளாதார நிலை இன்னும் முன்னேற்றமடையாமலேயே உள்ளது.

மொத்த மக்கள் தொகையில் 10 முதல் 15% பேர் சுமார் 65 முதல் 80% அரசுப் பணிகளை அபகரித்து ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

உயர்நிலை அதிகாரிகளின் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 1% மட்டுமே கிடைத்துள்ளது. விவரம் இதோ:-

குறைந்தபட்ச அளவு

முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதர பிற்பட்ட வகுப்பினர்க்கு 27% இடஒதுக்கீடு என்றாலும் நடைமுறையில் 9.41 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோரோ, குரூப் ஏ அலுவலர்கள் உள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சகம் வழங்கிய புள்ளி விவரங்கள்:_

குருப் ஏ அலுவலர்கள் மொத்தம் – 61,566

அட்டவணைச் சாதி(எஸ்.சி)யைச் சேர்ந்த அலுவலர்கள்: 7,891 (-12.82%)
மலைச் சாதியினர் (எஸ்.டி): 3,464  (5.63%)
இதர பிற்பட்ட வகுப்பினர்: 5,794 (9.41%)
மற்றவர்கள் (உயர் ஜாதியினர்): 44,417 (71.15%)

சென்னை அய்.அய்.டி.யில் உள்ள பணியாளர்கள் விபரம்: (1.12.2014இல் உள்ளபடி)

மார்ச் 2011-இல் மய்ய அரசு வெளியிட்டுள்ள விவரப்படி, மய்ய அரசின் துறைச் செயலாளர்கள் 149 பேரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஒருவர்கூடக் கிடையாது. பழங்குடியினத்தவர் 2 பேர், கூடுதல் செயலர்கள் 108 பேரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இனத்தவர் தலா 2 பேர் மட்டும்தான்.

மண்டல் குழு அறிக்கைப்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு 20ஆண்டுகள் ஆகியும் மத்திய அரசுப் பணியில் 12% இடஒதுக்கீடே கிடைத்துள்ளது.

மத்திய அரசின் ஏ, பி, சி, டி பிரிவு பணியாளர்கள் இடங்கள் 79,483. இதில் 9,040 பணியிடங்களே ஓபிசி பிரிவுக்குக் கிடைத்துள்ளன.

தனிப்பட்ட மற்றும் பயிற்சித் துறையில் மொத்த இடங்கள்: 6,879.

இதில் எஸ்.சி.க்கு 12.91%

எஸ்.டி.க்கு 4%

ஓபிசி.க்கு 6.67%

அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுத் துறையில் ஏ பிரிவில் உள்ள 41 பணியிடங்களில் ஓபிசிக்கு ஒரு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆக, மீதமுள்ள பணியிடங்கள் ஆரிய பார்ப்பனர்களும், உயர் ஜாதியினருக்கும் அபகரித்து அனுபவிக்கின்றனர்.

உ.பி. ஆட்சியில்:

மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் காசி பகுதியைச் சேர்த்து மொத்தம் 23 காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் இருந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அனைத்துக் கண்காணிப் பாளர்களையும் எடுத்துவிட்டு எல்லா இடங்களிலும் பார்ப்பன மற்றும் உயர்ஜாதி அதிகாரிகளே தற்போது நியமிக்கப்-பட்டுள்ளனர்.

லக்னோவில் மொத்தமுள்ள 46 காவல் நிலையங்களிலும் 46 பார்ப்பன உயர்ஜாதி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

உ.பி. மக்கள் தொகையில் 21% மட்டுமே உள்ள முன்னேறிய சாதிகளைச் சேர்ந்த ஆண்கள்தான் 75% பதவிகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. இந்த 21% க்குள்ளும், வெறும் 12% மட்டுமே உள்ள பார்ப்பன, காயஸ்தா சாதியினர்தான் 50% பதவிகளில் அமர்ந்திருக்-கிறார்கள்.

அரசுப் பதவிகளில் மட்டுமல்லாது, அலகாபாத் நகரில் உள்ள தன்னார்வக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் 80%, பார் அசோசியேசனின் தலைமையில் 90% பேர் முன்னேறிய சாதியினர்தான் இருக்கின்றனர்.

பிரஸ் கிளப்பின் நிர்வாகிகளோ 100% பார்ப்பன மற்றும் காயஸ்தா சாதியினர் என்கிறது இந்த ஆய்வு. விளம்பர நிறுவன உரிமையாளர்கள் 55%, மருத்துவர்கள் 39%, மாணவர் சங்கத் தலைவர்கள் 54%, போலீசு அதிகாரிகள் 58%, ஐ.ஐ.டி. ஆசிரியர்கள் 56%, உயர்நீதிமன்ற நீதிபதிகள் 75%, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் 58% என்று நீள்கிறது இந்தப் பட்டியல்.

தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கட்டாயம் ஏன்?

அரசுத் துறையில் இடஒதுக்கீடு உள்ள நிலையிலே 60% வேலைவாய்ப்பை ஆரிய பார்ப்பனர்கள் அபகரிக்கின்றனர் என்றால் இடஒதுக்கீடு இல்லாத தனியார் துறையில் பெரும்பாலும் அவர்களே வேலைகளைப் பெறுவதால் தனியார் துறையில் இடஒதுக்கீடு கட்டாயம் ஆகிறது. அதனால்தான் திராவிடர் கழகம் 1982 முதல் அதை வலியுறுத்துகிறது.

தனியார்த் துறைகளில் உள்ள இயக்குநர்களில் முன்னேறிய ஜாதியினர் 8387 (92.8%)
இதில் பார்ப்பனர் 4037 (44.6%)
வைசியர் 4167 (46%)
சத்திரியர் 46 (0.05%)
பிற முன்னேறிய வகுப்பினர் 137 (1.5%)
பிற்படுத்தப்பட்டோர் 346 (3.8%)
தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினர் 319 (3.5%)
(Economic and Political Weekly 11.8.2012)

இந்தியாவின் 40 பெரிய ஊடக நிறுவனங்கள் ஒன்றில்கூட, குறிப்பிட்டு சொல்லத்தக்க பதவி எதிலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கூடக் கிடையாது. 71% பதவிகளில் இருப்பவர்கள் பார்ப்பனர் உள்ளிட்ட முன்னேறிய சாதியினர்தான் என்கிறது 2006இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

இந்திய கிரிக்கெட் அணியின் 11 உறுப்பினர்களில் 7 பேர் பார்ப்பனர்களாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியபோது, அது தற்செயலானது என்று அலட்சியமாகப் பதிலளித்தார் தேசிய கிரிக்ªட் அகாதமியின் தலைவர். அவரும் ஒரு பார்ப்பனர் என்பது இன்னொரு தற்செயல் நிகழ்வு.

தனியார்த்துறை, பொதுத்துறை ஆகிய இரண்டையும் சேர்ந்த முதல் 1000 இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுடைய மொத்த இயக்குநர்களின் (போர்டு உறுப்பினர்களின்) எண்ணிக்கை 9,052. இவர்களில் பார்ப்பனர்கள் 4037, வைசியர்கள் 4,167, சத்திரியர்கள் 43, பிறர் 137, பிற்படுத்தப்பட்டோர் 346, தாழ்த்தப்பட்டோர் 319 பேர். அதாவது 93% பேர் முன்னேறிய சாதியினர்.

எனவே, அரசுத் துறையில் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தவும், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தவும் இளைய சமுதாயம் போராட வேண்டும், உரிமைகளைப் பெற்றாக வேண்டும். அதுவே, ஆரிய பார்ப்பனக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி!

மஞ்சை வசந்தன்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *