கபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை!

செப்டம்பர் 01-15

ஒலிம்பிக்கை நோக்கி நகர்கிறதா கபாடி?

– சிந்து அறிவழகன்

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் போலவே நம் மண்ணின் விளையாட்டான கபாடி(சடுகுடு)க்கு பன்னாட்டு அளவிலான ஒரு போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் போட்டியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருகிறது.

கிரிக்கெட்டைப் போல சோம்பேறி விளையாட்டாக இல்லாமல் உடல் உழைப்பைத் தரவேண்டிய விளையாட்டாக கபாடி இருப்பதால், தொடக்கம் முதலே இந்த விளையாட்டைப் பணம் படைத்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கிராமங்கள்தோறும் இளைஞர்களால் தொடர்ந்து கபாடி விளையாடப்பட்டு வந்தது. இந்த விளையாட்டுக்கு எந்தவித கருவிகளும் தேவையில்லை என்பதால், ஏழை இளைஞர்கள், கிராமப்புறப் பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியில் கபாடி விருப்பமான விளையாட்டாகத் திகழ்கிறது.

கிரிக்கெட் என்று பணம்கொழிக்கும் விளையாட்டுப் போதையில் இருந்து இளைஞர்களை மீட்டெடுத்து அவர்களை கபாடியின் பக்கம் அழைத்துவர பல்வேறு முன்னெடுப்புகள் பல்வேறு அமைப்புகளால் அவ்வபோது செய்யப்பட்டு வந்தன. பெரியார் வீரவிளையாட்டுக் கழகமும் அந்த முயற்சியில் பெரும் பங்காற்றியது. தமிழ்நாட்டில் முதல்முறையாக முதல் பரிசு 1 லட்ச ரூபாய் என்று அறிவித்து கபாடிப் போட்டிக்குப் புத்துயிர் அளித்தது மட்டுமல்லாமல், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அதே 1 லட்ச ரூபாய் பரிசாக வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டி நடத்தியது.

இப்படிப்பட்ட முயற்சி களுக்கு நடுவில் மாஷல் ஸ்போர்ட்ஸ் என்னும் விளையாட்டு மேலாண்மை நிறுவனம் ப்ரோ கபாடி லீக் என்று போட்டியை புதிய வகையில் திட்ட மிட்டு வெற்றிகரமாக நடத்த தொடங்கியிருக்கிறது.. ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய இப் போட்டிகள் ஆகஸ்டு 31 அன்று மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறுகின்றன.

அய்.பி.எல். கிரிக்கெட் அணிகள் போலவே ப்ரோ கபாடி லீக்-கும் இந்திய நகரங்களின் பெயரில் அணி களைக் கொண்டுள்ளது. பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், பூனேரி பால்டான், தெலுகு டைட்டன்ஸ், யூ மும்பா என மொத்தம் 8 அணிகள் இந்த கபாடி லீக்கில் விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியையும் பெரும் பணக்காரர்கள் வாங்கி அந்தந்த அணிக்கான வீரர்களை (பன்னாட்டு வீரர்கள் உட்பட) ஏலம் எடுத்துள்ளனர். ஜெய்ப்பூர் அணியை பிரபல இந்தித் திரைப்பட நடிகர் அபிஷேக் பச்சன் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு கபாடி கூட்ட மைப்பு (IKF), ஆசிய கபாடி கூட்ட மைப்பு (AAKF),, அமெச்சூர் கபாடி இந்திய கூட்டமைப்பு (AKFI) ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்போடு இந்தக் கபாடிப் போட்டி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தரை விரிப்பில் (MAT) இந்தப் போட்டிகள் முக்கிய நகரங்களின் உள்விளையாட்டரங்கு களில் நடைபெற்று வருகின்றன. நேரடி யாக பல ஆயிரம் பேர் டிக்கெட் வாங்கிக்கொண்டு கண்டுகளிக்கின் றனர். கண்கவர் வண்ண விளக்குகள், டிஜிட்டல் போர்டுகள் என ஜொலிக்கும் அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் ஏராளமானோர் பார்த்து வருகின் றனர். ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் போட்டிகளின் மீதான தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகின்றனர்.

பன்னாட்டு கபாடி கூட்ட மைப்பின் தலைவர் ஜனார்த்தன் சிங் கெல்லாட், இந்தப் போட்டி குறித்துக் கூறியபோது கபாடி விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பாக இந்தப் போட்டியை நான் பார்க்கிறேன். கபாடியை ஒலிம்பிக் விளையாட்டாக ஆக்கும் திசையை நோக்கி மேலும் ஓர் அடியை எடுத்துள்ளோம் என்றார்.

இந்த லீக்கி-ன் மூலம் கபாடி விளையாட்டும் அதன் விளையாட்டு வீரர்களும் பன்னாட்டு அளவிலான கவனத்தைப் பெறும் வாய்ப்பு இருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

இந்தியாவில் 4000 அங்கீகரிக்கப்பட்ட கபாடி கிளப்புகள் இருப்பதாகவும், அதில் 700 கிளப்புகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கபாடி தென் கொரியா, ஈரான், ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற 32 நாடுகளில் விளையாடப்படுகிறது.

இவ்வளவு சிறப்பைப் பெற்றுவரும் கபாடிக்கு தமிழ்நாட்டு இளைஞர்களும் அரசும் போதிய முக்கியத்துவம் தராத நிலையே உள்ளது. மாவட்டங்களில் உள்ள அரசு விளையாட்டு மைதானங்களில் கபாடிக்கென்று மைதானமும் கிடையாது, பயிற்சியாளர்களும் இருப்பதில்லை. இதுதான் நிலை.

பல்வேறு விளம்பர விளையாட்டுகளின் ஆதிக்கத்தையும் மீறி தமிழக இளைஞர்கள் கபாடியை விளையாடியே வருகின்றனர். பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் கிராமங்கள்தோறும் பெரும்பாலும் கபாடி போட்டி நடைபெற்றுதான் வருகிறது. ஆனால், கிராமத்து இளைஞர்களும் இப்போதெல்லாம் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தொடங்கியிருப்பது கவலைதருவதுதான்.

ப்ரோ கபாடி லீக் போன்ற விளையாட்டுப் போட்டிகள் இந்த இளைஞர்களின் ஆர்வத்தை மீண்டும் கபாடியின் மீது திருப்பினால் மகிழ்ச்சியே! நம் மண்ணின் பொக்கிஷமான இந்த வீரமிக்க விளையாட்டை ஊர்தோறும் அமைப்புகள் ஏற்படுத்தி விளையாட வேண்டும். நம் விளையாட்டை நாம் விளையாடி ஊக்கப்படுத்தினால்தான், பன்னாட்டுக் கவனத்தை கபாடி பெறும். ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பும் கிட்டும்!

அய்.பி.எல். சூத்திரத்தைப் பயன்படுத்தி,  கபாடிக்கு இப்போட்டி புத்துயிர் கொடுக்குமா? இல்லை, எளிய மக்களின் விளையாட்டான கபாடியையும் பணக்காரர்களின் கையில் கொண்டு சேர்க்க மட்டும் பயன்படுமா என்பதெல்லாம் அடுத்தடுத்த ஆண்டுகளில் தெரியவரும். உடல் உழைப்பைக் கோருகிற இந்த விளையாட்டை அவ்வளவு எளிதில் யாரும் கடத்திவிட முடியாது என்பதுதான் சடுகுடுவின் சிறப்பு.

 


 

ப்ரோ கபாடியில் தமிழகம் புறக்கணிப்பா?

ஊடகங்களின் இருட்டிப்பை வெளிச்சமாக மாற்றிக்காட்டியிருக்கிறது ப்ரோ கபடி. இதிலும் பின்னணியில் இருப்பது முக்கியப் பிரமுகர்கள்தான்.

தங்களின் விளம்பரத்திற்காகவும், வணிக நோக்கத்திலும் விளையாட்டுக் குழுவினரை ஏலம் எடுக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. அபிஷேக் பச்சன், ஷாருக்கான் போன்றவர்கள் பல கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருக்கின்றனர். அதே போல பெங்களூர் குழுவை மும்பைக்காரர் ஒருவர் ஏலம் எடுத்திருக்கிறார். ஆனால், வழக்கம் போல தமிழ்நாடு புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. கல்பாத்தி அகோரம் தமிழ்நாட்டுக் குழுவை ஏலம் எடுக்க முன்வந்து பின்வங்கியிருக்கிறார். ஏன் இந்த நிலை?

இது பற்றி சென்னை மாவட்ட கபாடிக் கழகச் செயலாளர் கோல்டு ராஜேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தமிழ்நாட்டிலுள்ள பிரபலமான கபாடி வீரர்கள் இந்த றிஸிளி ரிகிஙிகிஞிமி இல் வேறு வேறு குழுக்களில் விளையாடுகின்றனர். தஞ்சாவூர் சேரலாதன் மற்றும் பாஸ்கரன் ஜெய்ப்பூர் குழுவிலும், அதேபோல தஞ்சாவூர் சேரலாதனின் தம்பி கோபு விசாகபட்டினம் குழுவிலும் இருகிறார்கள். அதையும்தாண்டி தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜகுரு சுப்பிரமணியன் விசாகப்பட்டினம் குழுவின் கேப்டனாகவே இருக்கிறார். கன்னியாகுமரியைச் சேர்ந்த சிறந்த கபாடி வீரர் சுரேசும் வேறு குழுவுக்காக விளையாடுகின்றார் என்றார். இவ்வளவு சிறந்த வீரர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஏன் ஒரு குழு அமையவில்லை. அப்படி அமையும் வாய்ப்பு உருவாகியும், எந்தப் பிரபலங்களும் ஏன் அதை ஆதரிக்கவில்லை என்பது பல கபாடி வீரர்கள், ரசிகர்களுக்கு வருத்தமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *