சர்வ சாதாரண சரடுகள்!

செப்டம்பர் 01-15

கேள்வி : ராமர் பாலத்தை உடைக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பா.ஜ.க. அரசு முயற்சிக்கும் என நிதின்கட்கரி கூறியுள்ளது திட்டத்தினை முழுமையாக முடக்கும் சதித்திட்டம் இல்லையா? – நாத்திகன், பெரம்பலூர்

பதில் : இராமன் பாலம் என்பது கற்பனையான கட்டுக்கதை. ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற மணல் திட்டுகள். இந்த ஆறாம் வழித்தடத்தை -_ அதாவது இராமன் பாலம் என்று கூறப்படும் மணல் திட்டு _ பாறைகள் உள்ள வழித்தடத்தை-, வாஜ்பேயி அரசினால் நியமிக்கப்பட்ட ஆய்வில்(நாகபுரி நீரி ழிமீமீக்ஷீவீ) தான் தேர்வு செய்து, அருண் ஜெட்லி போன்றவர்கள் கையொப்பமிட்ட கோப்பின் செயலாக்கம்தான் தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பாலுவுடையது. அந்தப் பெருமை தி.மு.க.வுக்கு வந்துவிடக் கூடாது என்ற அரசியல் உள்நோக்கத்தோடு நுழைக்கப்பட்டதுதான் இராமன் பாலக் கற்பனையும்- மிரட்டலும்! இப்போது இந்த விசித்திர நடவடிக்கை.

கேள்வி : அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலையிடுவது, கும்பிடுவது ஒரு வகையில் உருவ வழிபாட்டுக்கு இட்டுச் செல்லும் காரியம் இல்லையா? – ச.கலையரசி, பெரம்பூர்

பதில் : கும்பிடுவது தேவையில்லை; மாலையிடுவது ஒருவகைப் பிரச்சாரம் அவ்வளவுதான்!  அதையும்கூட தவிர்க்கும் துணிவும் பக்குவமும் வந்தால் நாம் வரவேற்கவே செய்வோம்.

கேள்வி :தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை நியமனம் பற்றி? _ கோவிந்தசாமி, பெரம்பூர்

பதில் : தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் ஆரிய – திராவிடப் போராட்டத்தில் திராவிடத் தமிழச்சி பெற்ற வெற்றி அது! (அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும்).

கேள்வி :பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பழைமை வாய்ந்த நதியை சரசுவதி நதி என பெயர் சூட்டி அதை விஞ்ஞான முறையில் கண்டுபிடிக்கப் போவதாகக் கூறும் உமா பாரதியின் பித்தலாட்டம் பற்றி?

– மோ.தமிழ்ச்செல்வன், கயத்தாறு

பதில் : உங்கள் கேள்வியிலேயே பதில் அடங்கியுள்ளதே! பித்தலாட்டம் எவர் செய்தாலும் பித்தலாட்டமே! மோட்சத்திற்கு வழிகாட்டுவதும் அழைத்துச் செல்ல கட்டணம் வசூலிப்பதுமான பித்தலாட்டம்.

கேள்வி :மதச்சார்பற்ற அரசின் பிரதிநிதியாக, பிரதமராக நேபாளம் சென்ற பா.ஜ.க.வின் மோடி காவி உடை அணிந்து தன்னை இந்துத்வாவின் முழு அங்கமாகக் காட்டிக் கொண்டதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையைத் திட்டமிட்டுச் சிதைக்க முயன்றிருக்கிறார் என கருதலாமா?
_ மு.செல்வம், ஆரணி

பதில் : ஹிந்துஸ்தானத்தில் -_ இந்தியாவில் _- இருப்பவர்கள் அனைவரையும் ஹிந்துக்கள் என்றே அழைக்க வேண்டும் என்று பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் _- மோடியின் வழிகாட்டி கூறிடும் நிலையில் இப்படி நடப்பது அதிசயம் அல்லவே! கொஞ்ச காலத்திற்கு இந்தக் காவிதான் அரசியல் முத்திரையாக இருக்கும்!

கேள்வி :இந்திய ஆட்சிப் பணியாளர்களில் (அய்.ஏ.எஸ்.) இரு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு அறிவிக்காதவர்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தகு நேர்மையற்ற உயர்நிலை அலுவலர்களால் மக்கள் சேவை சிறக்குமா? – வே.சொர்ணம், ஊற்றங்கரை

பதில் : இவர்கள்மீது நடவடிக்கை பாய்தலே சரியானது, வேலிகள் பயிரை மேயக் கூடாது அல்லவா?

கேள்வி : டெசோ என்ற இரண்டெழுத்தின் விரிவாக்கம் என்ன? எழுத்து தமிழாக இருந்தாலும், அதன் உச்சரிப்பு வேறு மாதிரியாகத் தெரிகிறதே… என் போன்ற சிறு வாசகர்களின் அய்யத்தைப் போக்குவீர்களா? –  தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : ”Tamil Eelam supporters Organisation ‘  தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு TESO  என்பதே ஆங்கிலத்தின் சுருக்கமே அது!

கேள்வி : தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றால், வடநாட்டவருக்கு மட்டும் வெறுப்புத் தோன்றுவது ஏன்? இதற்குத் தீர்வு என்ன?-  நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : எண்ணெயும் பாலும் எப்படி ஒன்று சேரும்? என்னதான் கூட்டினாலும், பெருக்கினாலும், கலக்கினாலும்!

கேள்வி : இஸ்ரேல் நாட்டில் பிறந்த ஏசுவுக்கு தமிழில் ஜெபம் செய்தால் புரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் கடவுள்களுக்கு மட்டும் தமிழ் புரியாமல் போவது ஏன்? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி -_ நெற்றியடிக் கேள்வி. தமிழ் தெரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேட்டார் தந்தை பெரியார்!

கேள்வி : சிறிய கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை பாலியல் புகாரில் சிக்கி வருகிறார்களே? புகாரைத் தெரிவிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவிகளாகவும், நீதிபதியுடன் பணியாற்றிய சக நீதிபதிகள், பெண் வழக்குரைஞர்களாகவும் உள்ளனரே?
_ மன்னை சித்து, மன்னார்குடி

பதில் : நாடும் சமூகமும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? என்பதற்கு இது ஓர் அளவுகோல். ஒழுக்கச்சிதைவின் வெளிப்பாடு. இத்தனை ஆயிரம் கடவுள்களும், மதங்களும், மத குருமார்களும் இருந்து நாளுக்கு நாள் கீழிறக்கம் எதைக் காட்டுகிறது? அவைகளால் எவ்விதப் பயனும் இல்லை; இல்லவே இல்லை என்பதைத்தானே!

கேள்வி : தமிழர் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டதால் கொலை செய்யப்பட்டார், மந்திரி சபையுடன் ஆலோசிக்காமல் இலங்கைக்குப் படைகளை அனுப்பினார் – ராஜீவ் காந்தி மீது நட்வர்சிங் உண்மையான குற்றச்சாட்டை உடைத்த பிறகாவது, மத்திய அரசோ, உச்ச நீதிமன்றமோ இதை உணர்ந்து தெரிந்து, ஆய்வு செய்து பேரரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்யும் வாய்ப்பு விரைவில் வெளிவருமா? _பெ.கூத்தன், வாழப்பாடி

பதில் : நியாயம், நீதி என்பதில் முழுநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டவர்கள் நடந்தால் நீங்கள் கேட்டபடிதான் நடக்க வேண்டும். ஆனால்….? பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி :உச்ச நீதிமன்ற ஆணையையே, புரட்டிப் போடும் மாந்தநேயமற்ற, ஓரவஞ்சக உயர்நிலை அதிகாரிகள், மக்கள்நல ஆட்சிக்குத் துணை நிற்க வழி காண்பது எப்போது? எப்படி?
_தே.எழில்.சொர்ணம், ஊற்றங்கரை

பதில் : மக்கள் தேர்தலில் சரியான ஆட்சியையும் தலைமையையும் தேர்ந்தெடுக்கும்போது!

கேள்வி :முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் ஆய்வு இல்லாமல் பழங்குடியினர் பூர்வீக குடிமக்கள் என்றும், ஆரியர்களும் திராவிடர்களும் குடியேறியவர்கள் என்றும் கூறியுள்ளது பற்றிய தங்களின் கருத்து? _பெ.கூத்தன், சேலம்

பதில் : அறிவு ஜீவிகளான பூணூல் திருமேனிகள் உளறுவதையெல்லாம் போட ஏராளமான ஏடுகள் இருப்பதால் இப்படிப்பட்ட சரடுகள் சர்வ சாதாரணமான சங்கீதங்களாகி வருகின்றன! அவ்வளவுதான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *