சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

ஏப்ரல் 16-30
நூலின் பெயர்    :    கனவு இல்லம்
ஆசிரியர்          :    சா. நடராசன்
வெளியீடு         :    ஜீயே பப்ளிகேசன்ஸ்,
352, திருவல்லிக்கேணி                  நெடுஞ்சாலை, சென்னை\600 005.
பக்கங்கள்         :    240
விலை             :    ரூ.140/-

பகுத்தறிவுச் சிந்தனையாளரான இந்நூலாசிரியர் சா. நடராசன் கட்டடக்கலை வல்லுநர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இயங்கிவரும் இவர் ஒவ்வொருவருக்கும் உள்ள வீடு கட்டும் கனவை நனவாக்க சிறந்த ஆலோசனைகளை இந்நூலில் வழங்கியுள்ளார். தனது அனுபவத்தின் பாடங்களை வாசகர்களுக்குத் தந்துள்ள சா. நடராசன் பாராட்டிற்குரியவர். அவரது நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே.

வாழ்நாளில் பெரும்பகுதி சேமிப்பை வீட்டில் முதலீடு செய்வதால், யோசித்து நாம் செயலாற்ற வேண்டும். நம் நிம்மதியைக் கெடுக்கும் அளவில் இந்த முதலீடு இருக்கக்கூடாது. பெருமிதத்துடனும், நிம்மதியுடனும் சொந்த வீட்டில் வாழ வேண்டும். எலிவளையானாலும் தனிவளை வேண்டும் என்பது பழமொழி. அதற்கான வழிமுறைகளைக் காண்போம்.

1. சொந்த ஊர்

2. வாழும் ஊர்

3. ஓய்வுக் காலத்தில் வாழ விரும்பும் ஊர்

இம்மூன்றில் சொந்த (பிறந்த) ஊர் மாநகராட்சியாகவோ, நகராட்சியாகவோ இல்லாத பட்சத்தில் பெரியதாக முதலீடு செய்யக் கூடாது. இதற்காக நாம் அலுவலக, வங்கிக் கடனை உபயோகிக்கக்கூடாது. பொதுவீடு கிராமத்தில் இருந்தால், நம்மால் முடிந்த சிறு சிறு மாற்றங்கள், கழிப்பிடம், குளிக்குமிடம் அமைத்தல், கட்டிடத்தைப் புதுப்பித்தல், வண்ணம் பூசுதல் போன்றவற்றில் நம் சேமிப்பில் இருந்து செலவழிக்கலாம். மற்ற பங்குதாரர்களுடன் (பங்காளிகளுடன்) போட்டி போடாமல், நம்மால் முடிந்ததைச் செலவழித்து நாம் பிறந்த வீட்டுக்கு, ஊருக்கு நன்றி செலுத்தலாம். கடன் வாங்காமல் உங்களால் எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்யலாம். வருமானத்தை எதிர்பார்க்காமல் நம் முன்னோர்கள் வாழ்ந்த இல்லம் பாழடைந்து விடக்கூடாது. நம் இளமை ஞாபகங்கள் என்றென்றும் நினைவில் இருக்கவேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் இச்செலவு, நம் பங்காளிகளிடம் உறவு கொள்ளவும், மற்றும் தம் உறவினர்களைச் சந்திக்கவும், திருவிழாக் காலங்களிலும் விசேச நாட்களிலும் சென்று தங்குமளவிற்கும், நம் வாரிசுகளுக்குச் சொந்தங்களை அறிமுகம் செய்வதற்காகவும் மிகவும் பயன்படும்.

வாழும் ஊர் என்பது பணி காரணமாகவோ, செய்யும் தொழில் காரணமாகவோ வாழ்ந்து வரும் இடமாகும். இதுவும் நகராட்சிக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். நல்ல கல்வி வசதி, தண்ணீர் வசதி, சட்டம்_ஒழுங்கு சீராக இருக்குமிடம், வருங்காலத்தில் விலை உயர்வுக்கு வாய்ப்பு உள்ள ஊராக இருப்பின் முதலீடு செய்யலாம். இதுவும் குக்கிராமமாக இருப்பின், மேல்நிலைப்பள்ளி இருக்கும் அளவிலாவது அருகில் உள்ள ஊரைத் தேர்ந்தெடுத்து இடம் வாங்கி வீடு கட்டலாம். நடந்து சென்று பிளஸ் டூ வரை படிக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ரிடையர் ஆனவுடன், ஓய்வுக் காலத்தில் வாழ விரும்பும், வாழப் போகும் ஊரைத் தேர்வு செய்து வீடு கட்டலாம். மலைப் பிரதேசங்களை சிலர் விரும்பலாம். ஆனால், அவை ஓய்வுக் காலத்திற்கு உகந்தவையல்ல! வயதானவர்களுக்கு, சளித் தொந்தரவு, மூக்கடைப்பு, சைனஸ், ஈசனோ போலியோ, ஆஸ்துமா, கால், கை மரமரப்பு ஆகியவை சாதாரணமாக ஏற்படக்கூடியவை என்பதால் இச்சீதோஷ்ணத்துக்கு ஒத்து வராது. 15 டிகிரிக்கு மேல் 30 டிகிரிக்குள் உள்ள இடமாக இருப்பின் நல்லது. நம் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் வேலைவாய்ப்பு, தொழில் செய்ய ஏதுவான ஊராக இருப்பின் வசதியாக இருக்கும். ஓரளவு வைத்திய வசதி உள்ள ஊராகவும், 1 மணிநேரத்திற்குள் மாவட்டத் தலைநகரத்துக்குச் (பெரிய ஆஸ்பத்திரிக்கு) செல்லும் அளவிற்கும் இருக்க வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு வந்து உதவக்கூடியவர்கள் அருகில் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பும், வைத்திய வசதியும் ஓய்வுக் காலத்தில் அவசியம்.

எனவே, மூன்று இடங்களிலும் எது நல்லது என்று முடிவு செய்துகொள்ள வேண்டும். வாழும் ஊரில் கட்ட மட்டும்தான் அலுவலக, வங்கிக் கடனையும், வாழ்நாள் சேமிப்பையும் உபயோகிக்க வேண்டும். சொந்த ஊரிலும், ஓய்வுக் கால இருப்பிடத்திலும் தனது சேமிப்பிலிருந்துதான் வீடு கட்டவோ, மாற்றங்கள் செய்யவோ செலவு செய்ய வேண்டும். 24 வயதிலிருந்து 60 வயதுவரை வாழும் ஊரில் சொந்த வீடு அமைவதே நல்லது. ஊரைத் தேர்ந்தெடுத்துவிட்டோம். அடுத்து இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். வீடு கட்டுவது என்பது மலைபோன்ற பெரிய செயலாகத் தெரியும். ஆனால், அதைப் பற்றியே சிந்திப்பதும், பலரிடம் ஆவலைக் கூறுவதும், அதற்காக சிக்கனமாக வாழ்ந்து சேமிப்பதும் வெற்றியை அளிக்கவல்லது.  வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பது முதியோர் வாக்கு.

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணிய
திண்ணிய ராகப் பெறின்.

என்ற வள்ளுவர் வாக்குக்கேற்ப, இதைப்பற்றி மற்றவர்களிடம் நீங்கள் பேச ஆரம்பித்தீர்களென்றால், 2 வருடங்களுக்குள் வெற்றியடைந்து விடுவீர்கள்.

வீட்டின் பிளான் குறித்த என் யோசனைகள்:

வாகனங்கள் நிறுத்த முன்பக்கம் ஒரு போர்டிகோ வேண்டும். பகலில் வண்டியைத் தள்ளி நிறுத்திவிட்டு, சேர் போட்டு பார்க்க வருபவர்களிடம் பேசும் வராண்டாவாக இதைப் பயன்படுத்தலாம். எலிவேஷனுக்கும் இது பயன்படும். வராண்டா என்று தனியாகப் போட்டால், பின்னர் அதை கிரில் வைத்து அடைத்து கூண்டாக்கும் அபாயம் உண்டு. மேலும் விருந்தினரில் 2 பிரிவுகள் உண்டு. அரசியல்வாதிகளைப்போல் நிறைய சேர்கள் போட்டு, வெளியில் போர்டிகோவில் சந்தித்துப் பேசி அனுப்பக்கூடியவர்கள். உள்ளே வீட்டினுள் வரவழைத்து அமரச் செய்யும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள். இதில் வராண்டா என்பது இரண்டுங்கெட்டான். சொந்தங்களை உள்ளே கூப்பிடாமல் வராண்டாவில் வைத்துப் பேசி அனுப்பிவிட்டதாக புகாரும், வராண்டாவில் நிறையப் பேர் உட்கார இடம் போதாது. போர்டிகோ     10 X 12  என்று போட்டால் பிளாஸ்டிக் சேர் அல்லது பிரம்புசேர்கள் பத்து பன்னிரெண்டு போடலாம். இரவில் வாகனங்களை நிறுத்தலாம். தேவைப்படுவோரை உள்ளே ஹாலுக்கு அழைத்துச் செல்லலாம். ஆக போர்டிகோவில் இருந்து நேரடியாக ஹாலுக்கு நுழையும்படி செய்யவும்.

ஹால் சைஸ் பெரியதாக இருந்தால் சிறு குடும்ப விழாக்களுக்குப் பயன்படும். டைனிங் ஹால் என்று தனியாக வேண்டாம். சமையலுக்கு ஆள் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இது பயன்படும். தினசரி நாட்களில் அடுப்படியில் 2 பேர் சாப்பிடும் அளவிற்கு ஒரு சிறு மேடை போட்டால் குடும்பத்தினர் அனைவருக்கும் அவசரமாகச் சாப்பிட்டுச் செல்ல உபயோகமாக இருக்கும்.

ஆகவே, வராண்டா என்றும் டைனிங்ஹால் என்றும் தனியாக இல்லாமல் ஹாலை குறைந்தபட்சம்

24 ஜ் 12 = 288  சதுர அடி போடலாம்.

ஆக கீழ்தளத்தில்,

போர்டிகோ    –  120 சதுர அடி

ஹால் – 288 சதுர அடி

கிச்சன் – 120 சதுர அடி

பொதுக் கழிப்பறை – 40 சதுர அடி

முதியோர் அறை – 160 சதுர அடி

நூலகம் அல்லது ஸ்டோர்  அல்லது பூஜை ரூம்- 50 சதுர அடி

மொத்தம் – 778 சதுர அடி

சுவர் கனம் – 102 சதுர அடி

கீழ்தளம் ஆகமொத்தம் – 880 சதுர அடி

முதல் தளம் – 2 படுக்கையறை- 400 சதுர அடி

ஆக மொத்தம் 1280 சதுர அடிக்கு மேல் கட்டுவது குடும்பத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதிக பட்சம் 1500 சதுர அடியில் கட்டினால் போதுமானது.

இதற்கு மேல் பெரிய வீடாகக் கட்டினால் சுத்தம் செய்வதில் சிரமம்.

விருந்தினருக்குத் தனி ரூம் கொடுக்க வேண்டியதில்லை. நீண்ட நாள் தங்கிவிடும் அபாயம் ஏற்படும். ஹாலில் படுக்கவிடுங்கள்.

பெற்றோருக்குக் கீழ்த்தளத்தில் ரூம் கொடுத்தால் கவனிப்புக் கிடைக்கும். பாதுகாப்பும் கிடைக்கும்.

குழந்தைக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பவரை உள்ளே சேர்க்கவேண்டாம். போர்டிகோ போதும்.

குழந்தைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ ஒரே ரூமில் படுக்கவிடுங்கள். உள் தாழ்ப்பாள் இல்லாமல் செய்யவும். கதவே இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

எதிர் ரூமில் பெரியவர்கள் படுத்தாலும், கதவைத் திறந்தே வைத்து குழந்தைகளைக் கவனிக்க வேண்டும்.

நம் வீட்டு எல்லைக்குள் வாடகைக்கு விடும்படி எதுவும் செய்யவேண்டாம்.

பெரியதாகக் கட்டினால் குழந்தைகள் நம் கண்ணிலே படாமல் ரூமிற்குள் புகுந்து கொள்வர். குடும்பத்தினரே அந்நியர் மாதிரி ஆகிவிடும் வாய்ப்புண்டு. கண்ணை விற்று சித்திரம் வாங்கவேண்டாம். நிறைய சம்பாதித்துக் குவிக்க எண்ணி, குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டு குழந்தைகளைக் கெட்டுப்போக விட்டு விடாதீர்கள். வாடகைக்கு வந்தவர்கள் நம் குழந்தைகளுடன் பழகி பிரச்சினைகளுக்கு ஆளாகாதீர்கள்.

அடுக்குமாடி வீடுகளில் அண்டைக் குடித்தனக்காரர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உடன்படிப்போர் போன்று சமசிந்தனை, ஒத்த வசதி பழக்க வழக்கங்களுடன் இருப்பதால், தொலைநோக்கு, பல மொழி பேசும் இன, மத கலாச்சாரம் மனோ தைரியத்தை ஏற்படுத்தும். பிளாட்ஸ் கலாச்சாரம் வேறு, நம் காம்பவுண்டுக்குள் வாடகைக்குக் குடித்தனம் செய்வோர் கலாச்சாரம் வேறு. வாடகைக்கு வீடு கட்டவேண்டுமெனில், தனியாக வேறு இடத்தில் கட்டுங்கள்.  நாம் குடியிருக்கும் இடத்தில் பின்னாலோ, தலைக்கு மேலேயோ, வாடகைக்கு விட்டு நம் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

வீடு உங்கள் தேவைக்கு ஏற்பவும், மற்ற வேலைக்காரர்களை எதிர்பார்த்து வீட்டைப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லாத அளவிற்கு அளவோடும், அமைந்து வீட்டுக்கடன் உங்கள் சம்பளத்தில் திட்டமிட்ட பிளானுக்குள் அடங்கி வேறெந்த தனியார் கடனும் இல்லாமலும், இருந்தால் நிம்மதியான தூக்கம் கியாரண்டி.

வருமானம் வருகிறது. சாப்பாட்டுக்குப் பற்றாக்குறையில்லை. வீட்டுக்கடனை அடைக்க முடிகிறது. இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பணம் கட்ட முடிகிறது. மகனாக இருந்தால் மேற்படிப்புக்கு, பெண்ணாக இருந்தால் திருமணம் செய்து கொடுக்கத் தேவைப்படும் பணத்தைச் சேமிக்க முடிகிறது என்றால், நீங்களும் டாட்டா, பிர்லாவும் ஒன்றுதான். இதற்குமேல் சம்பாதிப்பதெல்லாம்,

தனிநபர் என்பதிலிருந்து நிறுவனமாக உயரும் முயற்சி.

வாரிசுகளுக்குச் சேர்த்து வைப்பது.

கார்ப்பரேட் போட்டிகள்.

புகழின் உச்சியை நோக்கிய பயணம் போன்றவற்றிற்காகத்தான்.

நம்மால் வாரிசுகளுக்கு நல்ல உணவு மற்றும்  புற சுகாதாரம், விரும்பிய அளவிற்குப் படிப்பு போன்றவைகளைச் செய்யும் அளவிற்கு முடிந்தால் போதுமானது. வாரிசை முட்டாள் என்று எண்ணி படுத்துக்கொண்டே வாழட்டும், மாதம் 1 லட்சம் வாடகையாகவோ, நிலத்திலிருந்து குத்தகையோ வரும் என்று எண்ணி செய்து வைப்பது தேவையா? அதனால் அவன் உடல் நலம்தானே கெடும்? மனநலம் பாதிக்கப்படுமே இது தேவையா?

காலையில் சூரிய உதயத்துக்கு முன்னால் எழுந்து, பகலில் வீட்டை விட்டு வெளியே சென்று, மாலையில் வீடு திரும்பும் அளவிற்கான பணி, குழந்தைகளுடன், கருத்துப் பரிமாற்றம் செய்யும் அளவிற்கு நம் வாரிசை உருவாக்குவதுதானே அனைவருக்கும் பெருமை. மகனை வாடகை வாங்கிச் சாப்பிடுவான், என்று எண்ணாமல், திறமைசாலியாகவும், சிறந்த படிப்பாளியாகவும், யோக்கியவானாகவும் ஆக்குவதே சிறந்ததாகும். நம்முடைய தேவைக்கு மட்டும் திட்டமிடுங்கள். உங்கள் கனவு இல்லத்தில் நிம்மதியுடன் வாழ என் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *