இளைய சமுதாயமே!எச்சரிக்கை! விழிப்போடு இரு!! – மஞ்சை வசந்தன்

2024 Uncategorized கட்டுரைகள் பிப்ரவரி 16-29, 2024 மற்றவர்கள் முகப்பு கட்டுரை

இளைய சமுதாயம்தான் எதிர்கால உலகைக் கட்டமைத்து அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கும் பொறுப்புடையது. இளைய சமுதாயம் என்பதில் ஆண், பெண், கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லாம் அடக்கம். நூறு ஆண்டுகளுக்குமுன் 30 வயது வரையில் கூட ஏதும் அறியாதவர்களாக வாழ்ந்தனர். தீய, கெட்ட வழக்கங்கள் அப்போது அதிகம் இல்லை. பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள் கூறுவதை ஏற்று நடந்தனர். பாலுறவு, போதை, களவு, பொய், ஏமாற்று என்று அதிகம் இல்லாமல் அப்போதைய இளைய சமுதாயம் இருந்தது.

50 ஆண்டுகளுக்கு முன் கல்வி, அறிவியல் மேம்பாடு, வானொலி, தொலைக்காட்சி திரைப்படம், பத்திரிகைகள், நகரமயம், போக்குவரத்து முதலியன மேம்பட்டதால், 20 வயதில் உலக அறிவு, விழிப்புணர்ச்சி, பாலுறவு, போதை போன்றவை பற்றிய செய்திகளும், விவரங்களும், அனுபவங்களும் கிடைத்தன.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக செல்போன் ஒவ்வொருவர் கையிலும் கிடைக்க, உலகம் கைக்குள் ஒடுங்கியது. இருந்த இடத்தில் எல்லாம் கிடைக்கும் வாய்ப்பும், அறியும் வாய்ப்பும் கிடைத்து வருவதால் 12 வயதிலே எல்லாவற்றையும் அறியும் சூழலும், அனுபவிக்கும் வாய்ப்பும், வேட்கையும் வந்துவிட்டது.

அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் கூரிய கத்தியைப் போன்றது. கத்தி அறுவை சிகிச்சைக்குப் பயன்பட்டு நல்லதும் செய்யும், ஆளின் கழுத்தை அறுக்கப் பயன்பட்டு தீங்கும் செய்யும். அதேபோல் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கம், வளர்ச்சி, வசதிக்கும் பயன்படும். அழிவு, கேடு போன்றவற்றிற்கும் காரணமாய் அமையும்.
எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் பயனும், கேடும் அமையும்.

இளைய சமுதாயத்தை கேடுகளே எளிதில் கவரும்; கெட்டவை பிடித்தமானதாகவும் விருப்பமானதாகவும் இருக்கும். நல்லவை அவ்வளவாக அவர்களை ஈர்ப்பதில்லை.
ஒருகட்டுக்குள், வரையறைக்குள், வரம்புக்குள் வாழ்வது வளர்ச்சி, உயர்வு, பெருமை, புகழ் தரும். ஆனால், அப்படி வாழ்வதை இளைய உள்ளம் எளிதில் ஏற்காது. கட்டுப்பாடின்றி, விருப்பப்படி வாழ்வது சுகமாக, இதமாக, மகிழ்வாக அவர்களுக்கு இருக்கும். ஆனால், அது கட்டுப்பாடில்லா வாகனம் போல மோதி அழியும்.
பிள்ளைப்பருவத்தில் துள்ளித்திரிவதும், பள்ளிப்பருவத்தில் கருத்தூன்றிக் கற்பதும், அளவோடு விளையாடுவதும், பொழுது போக்கி மகிழ்வதும், கல்லூரிப்பருவத்தில் பொறுப்புணர்ந்து தனித்திறன்களை, ஆய்வு நுட்பத்தை, ஆற்றலை வளர்த்துக் கொள்வதும், அதன் பிறகு வேலைவாய்ப்பு, வருவாய் ஈட்டலும் செய்தல் வேண்டும். அதுவரை தன்னுள் எழும் உணர்வு எழுச்சிகளை, ஆசைகளை வகைப்படுத்தி, தீயன விலக்கி, தக்கவற்றை செய்து தள்ளிப்போட வேண்டியவற்றை புலனடக்கத்தோடு தள்ளிப் போட்டு வாழவேண்டும். மாறாக பள்ளிப் பருவத்திலே பாலுணர்வு உந்துதலில், உணர்வுப் பெருக்கில் பிஞ்சில் பழுத்தால் அந்த வாழ்வு பயனற்று சுவையற்று வீழ்ந்து போகும்.

செல்பேசி:

10 வயதிலே செல்போனில் ஆபாசக்காட்சிகளைக் காணும் வாய்ப்பு இருப்பதால், அவற்றை விலக்கி, கல்வி சார்ந்தவற்றை, பொது அறிவுக்குத் தேவையானவற்றை, திறன் வளர்ச்சிக்கு உதவக் கூடியவற்றைப் பார்க்கவேண்டும்.

செல்பேசி வழி எதைவேண்டுமானாலும் பார்க்கலாம், அறியலாம்; அதில் நல்லவையும் ஏராளம், தீயவையும் ஏராளம். கெட்டதில் நாட்டம் சென்று அவற்றை விரும்பிப் பார்த்தால் வாழ்வு கெட்டு பாழாகும்; விரைவில் அழிவைத்தரும்.

அடுப்பில் சோறு அல்லது இட்லி வேக வைக்கிறோம் என்றால், அது வேக வேண்டிய கால அளவு வரைக் காத்திருந்து, வெந்தபின் சாப்பிட்டால் சுவையாகவும், உடலுக்கு உகந்ததாயும் இருக்கும். மாறாக அவசரப்பட்டு பாதி வெந்த நிலையில் சாப்பிட்டால், சுவையும் இருக்காது, உடலுக்கும் உகந்ததும் அல்ல.
அப்படித்தான் வாழ்வும். எதை எதை எந்தெந்த பருவத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அந்தந்த பருவத்தில் வயதில் அதைச் செய்ய வேண்டும். 25 வயதில் தான் உடலுறவு இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற நிலை இருக்க 14 வயதில் அதற்கான முயற்சியில் இறங்குவது வேகாத இட்லியைச் சாப்பிடுவது போன்ற அறிவற்ற, கட்டுப்பாடற்ற, காத்திருப்பு அற்ற தப்பான வாழ்க்கை முறையாகும்.

போதை நாட்டம்:

அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு நூற்றில் ஒருவர் இருவர் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவர். அதுவும் அதிக தீங்கில்லா உடலுக்கு நன்மை பயக்கும் கள் பருகுவர். பின் சாராயம் காய்ச்சி குடிக்கும் வழக்கம் வந்தது. சாராயம் குடிப்பவர்கள் ஊருக்கு ஓரிருவர்தான் இருப்பர். அப்படிக் குடிப்பவர்களை மற்றவர்கள் தாழ்வாகக் கருதுவர். குடிப்பவர்களும் குற்ற உணர்வோடு கூனிக்குறுகுவர். அதன்பிறகு வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வந்தபின் ‘பான்பராக்’ போன்ற போதைப் பொருள்களை வாயில் அடக்கும் பழக்கம் பரவியது. சாராயக் கடைகள் திறக்கப்பட்ட பின் குடிப்பழக்கம் அதிகமாயிற்று. அதுகூட தொடக்ககாலத்தில் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது.


தற்போது அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, சமூகக் குற்றவாளிகள் செயற்கையான போதைப் பொருட்களை, ஊசி மருந்தாகவும், சாக்லேட் வடிவத்திலும், தூள்களாகவும், மாத்திரைகளாகவும் தயாரித்து திருட்டுத்தனமாகக் கடைகளில் பரவலாக விற்றுவருகின்றனர். வயதானவர்கள் மத்தியில் இருந்த போதைப் பழக்கம் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவத் தொடங்கி பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சாக்லேட் வடிவில் போதைப் பொருட்களைச் சாப்பிட்டு, போதையில் மயங்கிச் சுகம் காண முற்படுகின்றனர். பள்ளிக்கு அருகிலிருக்கும் பெட்டிக்கடைகளில் எளிமையாக இவை கிடைப்பதால், மாணவர்கள் இதற்கு எளிதில் அடிமையாகும் ஆபத்து வளர்ந்து வருகிறது.
கல்விக்கூடங்களுக்கு அருகில் உள்ள புதர் பகுதிகள், ஆறு வாய்க்கால் பகுதிகளில் கூட்டாக அமர்ந்து மது அருந்தும் அவலம் அதிகமாகி வருகிறது. வகுப்பறையிலே மது அருந்திவிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் அத்துமீறலும் நடந்துள்ளது. பேருந்தில் தொங்குதல், மாணவர் தலைவனாய் அணி சேர்த்துகொண்டு ஆயுதங்களால் மோதிக்கொள்ளுதல் போன்ற சட்டத்திற்கு எதிரானவற்றைச் செய்தல் நடக்கிறது. இவையெல்லாம் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய பெரும் அச்சத்தை உருவாக்குகிறது.

திரைப்படங்கள், சின்னத்திரை சீரழிவுகள்

அக்காலத்தில் சண்டைக் காட்சிகள் திரைப்படத்தின் ஈர்ப்புக்காகச் சேர்க்கப்படும். ஆனால், இன்றோ வன்முறையின் உச்சநிலைக்காட்சிகள் இடம் பெறுகின்றன. வன்முறைக் கலாச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகத் திரைப்படங்கள் மாறி வருகின்றன.
புகைப்பிடிப்பது, மது குடிப்பது, வன்புணர்வு செய்வது என்று எல்லாவற்றையும் திரைப்படங்கள் இன்று காட்டுகின்றன. திரைப்படங்கள் பெரும்பாலும் இளைய சமுதாயத்தினராலே பார்க்கப்படுவதால் அவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு சீரழிகின்றனர்.

நாட்டுக்கு உழைக்கின்ற தலைவர்களை மதிக்காது கோடிக்கணக்கில் ஊதியம் பெற்றுக்கொண்டு நடிக்கின்ற நடிகர்களைக் கடவுளாகக் கொண்டாடும் அவலம் இன்றைக்கு அன்றாடக் காட்சியாகிவிட்டது. படித்தவர்கள் படிக்காதவர்கள் வேறுபாடின்றி எல்லா தரப்பு இளைஞர்களும் இப்படி நடப்பது மிக மிக வேதனைக்குரியதாகும்.
சின்னத்திரை தொடர்கள் பண்பாட்டுச் சீரழிவை உருவாக்கி, மூடநம்பிக்கைகளைப் பெரிதும் பரப்புகின்ற கருவிகளாக அவை மாறிவிட்டன. பெண்களை மணிக்கணக்கில் முடக்கிப்போட்டு மூளைச்சலவை செய்கின்றன. தாய்மொழியில் (தமிழில்) பெயரிடும் வழக்கத்தை மாற்றி வேற்று மொழிப் பெயர்களைக் குழந்தைகளுக்கு இடும் அவலத்தை அதிகம் உருவாக்கியவை சின்னத்திரைகளே. அதுவும் வடநாட்டு கார்ப்பரேட்டுகள் பிடியில் சின்னத்திரைகள் சிக்கியுள்ளதால் தமிழ்மொழி, பண்பாடு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

கேடு தரும் உணவு உட்கொள்ளல்

இரவு மிகுந்த சோற்றில் நீர் ஊற்றி சிறு வெங்காயம் சேர்த்து காலை உணவாக அதை எடுத்துக்கொண்டால் வயிற்றுப்புண் வராது, வந்திருந்தால் குணமாகும். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இதை ஆய்வு பூர்வமாக உறுதி செய்து, தங்கள் சிகிச்சையாகவே பழைய சோற்றைத் தருகிறது.
மதிய உணவில் காய்கறிகள், கீரைகள், மீன், கறி அதிகம் சேர்த்துக்கொண்டனர். புட்டு, இட்லி, கேழ்வரகு அடை, அதிரசம் என்று உடலுக்கு நலம் தரும் உணவுகளை உண்டனர். ஆனால், இன்றைக்கு இளைய சமுதாயம் பரோட்டா, பர்கர், பானிப்பூரி, பீசா, சமோசா, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பானங்கள் என்று உடலுக்குத் தீங்கும் நோயும் தருவனவற்றை விரும்பி உண்பதை ஒரு மேட்டிமை அடையாளமாகக் கொண்டு செயல்படுகின்றனர். ஒருகையில் குளிர்பானம், மறுகையில் சிகரெட் என்று நீண்டநேரம் நுகர்வதை இதமாக, சுகமாக, சுவையாகக் கருதுகின்றனர். வளமையான இளைய சமுதாயத்தை இவை சீரழித்து நாசமாக்குகின்றன.

அரசின் கடும் நடவடிக்கை தேவை

பள்ளிகள், கல்லூரிகளில் அதிகப்படியான கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் கட்டாயம். அரசு போதைப் பொருட்களை அறவே தடை செய்வதோடு, அதை விற்பனை செய்கின்றவர்களைக் கண்டறிந்து கடும் தண்டனை வழங்கவேண்டும். மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கும் பாட வேளைகளைக் கட்டாயப்படுத்த வேண்டும். நல்ல நடத்தைக்குக் கூட சில மதிப்பெண்கள் வழங்கினால் நன்மை பயக்கும்.

பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு

இளைஞர்களைக் கண்காணிப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. பிள்ளைகளின் மதிப்பெண் பற்றி பெற்றோர் கவலை கொள்வதில் ஒரு சிறு அளவுகூட பிள்ளைகளின் நன்னடத்தையில் கவலை கொள்வதில்லை. ஒழுக்கமின்றி சீரழியும் பிள்ளை என்ன உயர் மதிப்பெண் பெற்றால் தான் என்ன பயன்?
சமூக ஆர்வலர்கள் கிராமந்தோறும் குழுக்கள் அமைத்து, இளைஞர்கள், மாணவர்கள் சீரழிவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சமூக விரோதிகளைக் கண்டறிந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கத் துணை நிற்க வேண்டும்.

இளைய சமுதாயமே எச்சரிக்கை!

இன்றையக் காலச்சூழல் மிக மோசமானது என்பதை நீங்கள் முதலில் ஆழமாக மனதில் கொள்ள வேண்டும். இளைய சமுதாயம் சீரழிய வாய்ப்புகள் மிக அருகில் அமைகின்றன. நீங்கள் மனக்கட்டுப்பாடோடு, நல்ல வழியில் செல்லவில்லையென்றால் உங்கள் வாழ்வு உங்கள் கண்ணெதிரே சிதறி அழியும்.

சூழல் கேடாக இருந்தாலும் நாம் சரியாக நின்றால் சிறப்பாக வாழமுடியும். ஒரே தோட்டத்தில்தான் மாமரமும் வளர்கிறது, அரளிச்செடியும் வளர்கிறது. அது மண்ணின் குற்றமா? விதையின் குற்றமா? உங்கள் உள்ளம் நல்லதை நாடினால் நல்வாழ்வைப் பெறுவீர். கெட்டதை நாடினால் சீரழிவீர்! நல்லதை செய்ய உறுதிகொண்டு, அதையே செய்வீர்! விழிப்போடு வாழ்வீர்! இல்லையேல் சீரழிவது தவிர்க்க முடியாது! எச்சரிக்கை! l