பொங்கல் வாழ்த்து

2024 Uncategorized சிறுகதை ஜனவரி 16-31, 2024

ஆறு. கலைச்செல்வன்

“இனியா, அடுத்து வாரம் உனக்கு தேர்வுகள் தொடங்கவுள்ளது. ரொம்ப நேரமா நீ செல்பேசியையே தடவிக்கொண்டு இருக்கியே! அப்புறம் எப்படி தேர்வுகளை நல்லமுறையில் எழுத முடியும்?”
தனது பெயர்த்தி இனியாவை அன்புடன் கடிந்து கொண்டார் தாத்தா முத்துராஜா.

“தாத்தா, இன்னும் த்ரீ டேய்ஸ்சில் எனக்கு பர்த்டே வரப்போவுது இல்லையா! அதை என்னோட ஃபிரண்ட்ஸ்களுக்கு மெசேஜ் பண்ணிகிட்டு இருக்கேன். அதோடு நம்ம ரிலேஷன்ஸ் எல்லோரும் வரவேண்டும்னு லைக் பண்றேன்,” என்று தாத்தாவுக்குப் பதில் சொன்னாள் இனியா.

“மிக்க மகிழ்ச்சி. உனக்கு பத்தாவது பிறந்த நாள் வருகிறது. உன் நண்பர்களுக்கு நான் வேண்டுமானால் செய்தி அனுப்புகிறேன். நீ போய் தேர்வுகளுக்குப் படி. அதோடு இன்னொரு அறிவுரையும் உனக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று கூறிய முத்துராஜா இனியாவின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.
என்ன அறிவுரையாக இருக்கும் என்ற யோசித்தபடியே…

“என்ன தாத்தா, சொல்லுங்க தாத்தா”, என்று கேட்டாள்.

“நீ பேசும்போது நல்ல தமிழில் பேசவேண்டும். முடிந்த வரை தமிழை ஆங்கிலம் கலந்து பேசக்கூடாது புரிந்துகொண்டாயா? என்றார் முத்துராஜா.

“தாத்தா, என்னால் அது முடியாதே தாத்தா. கலந்துதானே பேச முடியுது”, என்றாள்.

“இனியா, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. வீட்டில் என்னோடும் அம்மா, அப்பாவோடும் பேசும்போது நல்ல தமிழில் பேசவேண்டும். தமிழ்மொழியின் வீழ்ச்சிக்கு நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது.”

“சரி தாத்தா. நான் ட்ரை பண்றேன் தாத்தா.இப்ப நான் மெசேஜ் அனுப்பி முடிக்கணுமே,” என்றவள் பிறகு, தான் நல்ல தமிழில் பேசவில்லை என்பதை உணர்ந்து,

“தாத்தா, பேச்சு வாக்கில் ஆங்கிலம் கலந்து வந்துடுது. என்ன செய்யட்டும் தாத்தா?” என்றாள்.

“சரி, சரி. அதுபற்றி அதிகம் கவலை வேண்டாம். முடிந்த வரை என்றுதான் சொன்னேன். மேலும் ஆங்கிலமும் நன்றாகக் கற்றுக்கொள். நீ நல்லா ஆங்கிலத்தில் பேசினால் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். தேவையில்லாமல் தமிழில் கலந்து பேச வேண்டாம் என்றுதான் சொன்னேன். எதன்மீதும் அதிகப் பற்று வைக்கக்கூடாது என்பதும் எனது கொள்கைதான்”, என்று இனியாவுக்கு ஆறுதலாகச் சொன்னார் முத்துராஜா.

“என் பிறந்த நாளுக்கு எனக்கு என்ன ‘கிப்ட்’ அதாவது அன்பளிப்பு தரப்போறீங்க தாத்தா?”, என்று ஆவலுடன் கேட்டாள் இனியா.
“உனக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வீட்டில் இருக்கிறதே. இப்போது உனக்குத் தேவை நல்ல புத்தகங்களே. புத்தகம் படிக்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடப்புத்தகங்களைத் தாண்டி உனது சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இந்த ஆண்டு உனக்கு “வாழ்வியல் சிந்தனைகள்” என்ற நூலின் முதல் பாகத்தை வாங்கித் தர முடிவு செய்துள்ளேன்.”

“சரி தாத்தா, நீங்க எது கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்,” என்று சொல்லியபடியே படிப்பதற்காக பாடப் புத்தகங்களை எடுத்தாள் இனியா.
இனியாவின் பிறந்த நாளுக்கு முதல் நாள் தாத்தாவிடம் மீண்டும் வந்து பேசினாள் இனியா.

“தாத்தா, என்னோட தோழிகள் எல்லாம் இப்போதே எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து மெசேஜ் பண்றாங்க.” என்று சொன்ன இனியா பிறகு சட்டென பேச்சை நிறுத்தி.

“தாத்தா, மெசேஜ் என்றால் குறுஞ்செய்தி என்றுதானே சொன்னீங்க. மறந்துட்டேன் தாத்தா. எனக்கு நிறைய குறுஞ்செய்திகள் வருது தாத்தா”, என்றாள்.

“மிக்க மகிழ்ச்சி இனியா. நீ மறவாமல் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடு.”

“நீங்களும் உங்க பிறந்த நாளுக்கு நண்பர்-களுக்குச் செய்தி அனுப்புவீங்களா? அவங்க உங்களுக்கு வாழ்த்து சொல்வாங்களா தாத்தா.”

“ம்… சொல்வது உண்டு. ஒரு காலத்தில் கடிதம் மூலம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்வோம். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாள்தோறும் அஞ்சல்காரரை எதிர்பார்த்துக் காத்திருப்போம். நண்பர்கள் வாழ்த்து அட்டைகள் எல்லாம் அனுப்புவாங்க. அதற்கு நன்றி தெரிவித்து நன்றி அட்டைகளும் பதிலுக்கு அனுப்புவோம். ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது.”

“தாத்தா, என் பிறந்த நாளுக்கு அடுத்த வாரம் தீபாவளிப் பண்டிகை வருகிறதே. அதற்கு உங்கள் நண்பர்களுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்வீங்களா? தீபாவளிக்காக எனக்கு நீங்க எதுவும் செய்ததாக ஞாபகம் இல்லையே.”

“இனியா, நான் தீபாவளிக்கு யாருக்குமே வாழ்த்துச் சொல்வதில்லை”, என்று சொன்ன தாத்தாவை வியப்புடன் பார்த்தாள் இனியா.

“இல்லை, இனியா”,

“ஏன் தாத்தா, அது நம்ம பண்டிகை இல்லையா?” என்று கேட்டாள் இனியா.
தாத்தா இவ்வாறு கூறியவுடன் சற்றே அதிர்ச்சியடைந்தாள் இனியா. தீபாவளி நம் பண்டிகை இல்லை என்று சொல்கிறாரே என எண்ணி சற்றே வியப்பும் அடைந்தாள்.
“தாத்தா, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் கூட தீபாவளியைக் கொண்டாடிகிட்டு இருக்காங்க. நீங்க ஏன் தாத்தா தீபாவளியைக் கொண்டாடுவதும் இல்லை, மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்வதும் இல்லை.

“இனியா, தீபாவளி என்பது ஒரு மூடத்தனமான பண்டிகை. ஒருவன் சாவை அதாவது நரகாசுரன் என்பவன் இறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை. ஒரு புராணக்கதையை நம்பி பணத்தை வீண்செலவு செய்வது மிகவும் தவறானது. சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொள்வது, என்பார்களே அதைப்போல் நம் காசைக் கொண்டே நம் உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கிறோம்”

“அது எப்படி தாத்தா?”

“சொல்கிறேன் இனியா. தீபாவளி நேரங்-களில் காற்று மாசு, ஒலி மாசு அதிகமாகிறது. காற்று மாசு என்பது தொழிற்சாலை வாகனங்-கள், குப்பைகளை எரிப்பது போன்றவற்றால் ஏற்படுகிறது. இதில் பட்டாசுகளை வெடிப்பதும் அடங்கும். இதனால் நமது பூமி வெப்பமடைகிறது. இதன் காரணமாக நமக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். அதனால்தான் சொன்னேன்_ நம் காசை செலவு செய்து நம் உடம்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று. அதேபோல்தான் ஒலி மாசும். அதிக ஓசை நம் காதுகளுக்கு நல்லதல்ல. பறவைகள், விலங்குகள் எல்லாம் பட்டாசுகள் வெடிப்பதால் துன்புறுத்தப்படுகின்றன.”

“ஆனாலும் எல்லோரும் பட்டாசு வெடிக்கிறாங்களே தாத்தா.”

“அறியாமைதான் காரணம். அரசும் பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனாலும் பயன் இல்லை. சிலர் மதப் பிரச்சினையைக் கிளப்பி அரசு விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிடுகின்றனர். தீபாவளி முடிந்தபின் பலருக்கு சுவாசக் கோளாறுகள் உட்பட
பல பிரச்சினைகள் ஏற்பட்டு அதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதை நாம் பார்க்கலாம்.
முத்துராஜா சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டாள் இனியா.

“அப்படின்னா இனிமேல் நானும் பட்டாசு கொளுத்த மாட்டேன் தாத்தா. நரகாசுரன் ரொம்ப கெட்டவனா தாத்தா?” என்று ஒரு வினாவை எழுப்பினாள் இனியா.

“அதெல்லாம் ஒரு கட்டுக்கதை. அப்படி-யெல்லாம் யாரும் இருந்ததில்லை. அவன் பிறப்பு பற்றியும் ஆபாசமான கதைகளும் உண்டு. அதை நீயே பின்னாளில் அறிந்து-கொள்வாய்”, என்று அது சார்ந்த வினாக்-களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் முத்துராஜா.

“அப்புறம் தாத்தா, அய்ப்பசி அடைமழை என்பார்களே”, என்று அடுத்த பேச்சைத் தொடங்கினாள் இனியா.

“ஆமாம் இனியா. அதெல்லாம் இப்போது மாறிக்கொண்டே வருகிறது. நான் சொல்வதை கவனமாகக் கேள். நமது பூமியின் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால் தற்போது கார்பன்_டை_ஆக்சைடு வாயு அதிக அளவு வெளியேறுவதால் பூமியின் வெப்பநிலை இந்த நூற்றாண்டிலேயே மூன்று முதல் அய்ந்து செல்சியஸ் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் என்பது நமது காலத்தின் மிகப்பெரிய சவால் என அய்க்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இப்போது இது உனக்கு அதிகம் புரியாவிட்டாலும் போகப் போகப் புரிந்துகொள்வாய்”, என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் முத்துராஜா.
அவர் எளிமையாகக் கூறியதை சற்றே புரிந்துகொண்டாள் இனியா. பிறகு மீண்டும் பேச்சைத் தொடங்கினாள் இனியா.”

“கார்த்திகை கன மழை என்பார்களே தாத்தா”

“ஆமாம். அதுமட்டுமல்ல. கார்த்திகை ‘கால்கோடை’ என்றும் சொல்வார்கள். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில்கூட மழை இல்லையே! ஒரு பழமொழி உண்டு. அதாவது புரட்டாசி மாதத்தில்

“பொன் உருகக் காயும், மண் உருகப் பெய்யும்” என்பார்கள்.

“அப்படின்னா என்ன தாத்தா?”

“அதாவது புரட்டாசி மாதத்தில் பகலில் அடிக்கும் வெயிலில் பொன்னே உருகிவிடுமாம். ஆனால் இரவு நேரத்தில் பெய்யும் கனமழையால் மண்ணே உருகிவிடுமாம். ஆனால் சில ஆண்டு-களாக இப்படி நடக்கவில்லை. நடந்தாலும் வழக்கத்திற்கு அதிகமாகிவிடுகிறது.”
பிறகு திடீரென “கார்த்திகை தீபம் கொண்-டாடலாமா தாத்தா”, என்று கேட்டாள் இனியா.
முத்துராஜா பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“தேவையில்லை இனியா. தீபம் பற்றி இரத்தக் கண்ணீர் என்ற திரைப்படத்தில் நடிகவேள் எம்.ஆர். ராதா எப்போதோ சொல்லிவிட்டார். தீபம் ஏற்றுவதாகச் சொல்லி சமையலுக்குத் தேவையான நெய்யை பல டன் கணக்கில் வீணாக்குகிறார்கள். ஒரு மலையில் தீபம் ஏற்ற ஆயிரம் மீட்டர் துணியும் சுமார் 3500 லிட்டர் நெய்யும் வீணாக்கப்படுகிறது. இது ஒரு அயோக்கியத்தனம் அல்லவா.”

“அப்படின்னா கார்த்திகை தீபத்திற்கும் நாம் வாழ்த்து சொல்லக்கூடாதா தாத்தா?”
“தேவையே இல்லை இனியா. கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?அதன் கதை தெரியுமா?”

“தெரியாதே தாத்தா”

“படைத்தல் தொழிலை செய்கிற சாமிக்கும் காத்தல் தொழிலை செய்கிற சாமிக்கும் ஒரு நாள் சண்டை வந்துட்டுதாம்.”

“என்னது! சாமிக்குள்ளேயே சண்டையா தாத்தா!”

“ஆமாம். இரண்டு பேரில் யார் பெரியவன் என்பதில்தான் சண்டையாம். இந்த சண்டை பல நாட்கள் நீடித்த நிலையில் அழித்தல் தொழில் செய்யும் மற்றொரு சாமி இவர்கள் பிரச்சனையில் தலையிட்டாராம். அவர் ஜோதியாகத் தோன்றி யார் தன்னுடைய அடியையும் முடியையும் தொடுகிறார்களோ அவரே பெரியவன் என்றாராம். ஆனால் இரண்டு சாமிகளாலும் அவை கண்டுபிடிக்க முடியவில்லையாம். பிறகு அந்த இரண்டு சாமிகளும் அழித்தல் தொழில் செய்யும் சாமியே பெரியவன் என ஏற்றுக்கொண்டார்களாம். அதனால் ஜோதி வடிவாகத் தோன்றி எல்லோரும் காணும்படி இரண்டு சாமிகளும் அவரைக் கேட்டுக்கொண்டதால் அவ்வாறு செய்தாராம். இதில் உனக்கு நம்பிக்கை உள்ளதா? இதைக் கொண்டாடி உணவுப் பொருட்களை வீணாக்கலாமா?”

“கூடாது. பல இடங்களில் மக்கள் சாப்பாட்-டுக்கு கஷ்டப்படுவதாகக் கேள்விப்பட்டேன். அவங்களுக்கு உதவலாம் இல்லையா?”
ஆமாம் இனியா, இப்ப சொல் பார்ப்போம்.இதற்கெல்லாம் நாம் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா?”

“உணவுப் பொருளை வீணாக்கி மக்களுக்குக் கெடுதல் செய்யும் எந்தப் பண்டிகையும் வேண்டாம் தாத்தா.”

“இப்போதெல்லாம் நீயும் நல்ல தமிழில் பேச ஆரம்பித்துவிட்டாய் இனியா. அதே நேரத்தில் நீ நல்ல ஆங்கிலத்திலும் பேசுவாய் அல்லவா?” பேச்சை வேறு திசைக்கு மாற்ற நினைத்தார் முத்துராஜா.
ஆனால் இனியா விடவில்லை.

“தாத்தா, நீங்க எந்தப் பண்டிகைக்கும் வாழ்த்தே சொல்லமாட்டீங்களா?” என்று மீண்டும்
தனது சந்தேகத்தை எழுப்பினாள் இனியா.

“தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டிற்கும், பொங்கலுக்கும் என் நண்பர்களுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்வேன்” என்றார் முத்துராஜா.

“அவை மதப் பண்டிகைகளா தாத்தா?”
“இல்லை, இல்லை. தை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு. உலகத் தமிழர்கள் கொண்டாடும் நாள். சிலர் சித்திரை மாதம் முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பார்கள். அது மிகவும் தவறு. நாம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் சொல்வதைத்தான் ஏற்கவேண்டும்.”

“அவர் என்ன சொன்னார் தாத்தா?”

“அவர் எழுதிய கவிதையைச் சொல்றேன் கேள்.

‘‘நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை
உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த
ஆரியக் கூட்டம்
கற்பித்ததே
அறிவுக்கொவ்வா
அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே
தமிழ்ப் புத்தாண்டு-!’’

இதுதான் அவரது கவிதை. தமிழ் மக்களாகிய நாம் அதைத்தான் ஏற்கவேண்டும்.

“அவரைப் பற்றிச் சொல்லுங்க தாத்தா”, என்று ஆவலுடன் கேட்டாள் இனியா.

“புரட்சிக் கவிஞர் என்று தமிழ் மக்களால் போற்றப்படும் பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி புதுச்சேரியில் பிறந்தார். இவர் தனது பத்தாவது வயதிலேயே கவிதைகள் எழுதினாராம்”, என்று சொன்ன முத்துராஜா இனியாவை ஏறிட்டு நோக்கி,

“இனியா, இப்போது உனது வயது என்ன?” என்று கேட்டார்.

“பத்து வயது தாத்தா”, என்று பதில் சொன்னாள் இனியா.

“ம்… உன் வயதிலேயே பாரதிதாசன் அவர்கள் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார். தமிழ் இலக்கணங்களையெல்லாம் அப்போதிருந்தே நன்கு கற்றுத் தேர்ந்துவிட்டார்.”
இனியாவுக்கு தாத்தாவின் எண்ணம் புரிந்தது. தானும் அவர்போல் விளங்க வேண்டும் என அவர் விரும்புவதை உணர்ந்தாள். அவளது எண்ண ஓட்டத்தை முத்துராஜாவும் புரிந்துகொண்டார்.

“தமிழ்ப் புலமையில் அவர் சிறந்து விளங்கினார். உறங்கிக்கிடந்த தமிழர்களை தன் கவிதையால் தட்டி எழுப்பினார். சீர்திருத்தக் கருத்துகளையும் பகுத்தறிவையும் ஊட்டினார். குழந்தைகள் பாடத்தில் ‘அ’ என்றால் அணில் என்று இருந்ததை மாற்றி ‘அ’ என்றால் ‘அம்மா’ என மாற்றினார். நீயும் எந்தத் துறையை விரும்புகிறாயோ அந்தத் துறையில் சிறந்துவிளங்கவேண்டும். சமூகத்திற்கு உன் பணி சிறக்க வேண்டும்” என்றார் முத்துராஜா.

“கண்டிப்பாக தாத்தா. அப்புறம் நீங்க பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்வீங்க, இல்லையா?” என்று மீண்டும் பழைய கதையைத் தொடர்ந்தாள் இனியா.

“ஆமாம் இனியா, பொங்கல் விழாவிற்கு நான் எனது எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துச் சொல்வேன். பொங்கல் ஒரு மதப்பண்டிகை இல்லை. அது உழவர் திருநாள். பண்டிகை என்பது மக்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருக்க ஒரு நாள் வேண்டும். அது மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தீபாவளி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை போன்றவையாக இருக்கக்கூடாது. அது பொங்கல் விழாவாக இருந்து விட்டுப் போகட்டும். அந்த வகையில் நாம் பொங்கல் விழாவை நமது உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கூடி மகிழ்ந்து சிறப்பிக்கவேண்டும்.”

“தாத்தா, பொங்கல் விழாவை நாம் நான்கு நாட்கள் கொண்டாடுகிறோம் அல்லவா! அதில் முதல் நாள் போகிப்பண்டிகைதானே.”

“ஆமாம். அந்த நாளை அவரவர்கள் தங்கள் மனம்போன போக்கில் உளறி வைத்துள்ளனர். தீய எண்ணங்களை எல்லாம் போக்கும் நாளாம் அது. ஆனால் போக்கும் நாள் என்பது நாளடைவில் மருவி போகி என ஆகிவிட்டதாம். அப்புறம் அந்த நாளில் பழைய பொருட்களையெல்லாம் நெருப்பில் போட்டுக் கொளுத்த வேண்டுமாம். அப்போது போகி என்கிற மேளத்தை அடிக்க வேண்டுமாம். அதனால் போகி எனப்பட்டதாம். சிலர் இந்திரனை மகிழ்விக்க போகி கொண்டாடப்படுகிறது என்கிறார்கள். ஒன்றுகூட உறுதியாகச் சொல்லப்படவில்லை.

“அப்படியென்றால் நாம் பொங்கல் கொண்டாடும்போது சூரியனுக்கும், மற்ற இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கலாமா தாத்தா?”
“பரவாயில்லை இனியா. நீ நிறைய கேள்விகளைக் கேட்கிறாய். முன்பெல்லாம் நீ அதிகம் பேசமாட்டாய். இப்போது நிறையவே பேசுகிறாய். அதுவும் அறிவுபூர்வமாகவும் பேசுகிறாய். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்றுதானே கேட்டாய்?”

“ஆமாம் தாத்தா”

“இயற்கை நமக்கு என்னென்ன கொடுக்கிறது இனியா?”
“மழையைக் கொடுக்கிறது. மழையால் நமக்கு குடிக்கத் தண்ணீர் கிடைக்கிறது. அப்புறம் சூரியன் நமக்கு ஒளியைக் கொடுக்கிறது. வெயில் இல்லாவிட்டால் உயிர்கள் எதுவுமே வாழ முடியாதே!
அதற்காக நம் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும் அல்லவா தாத்தா!”

“அதாவது இயற்கை நமக்கு மழை, உணவு, வெளிச்சம் போன்ற எல்லாவற்றையும் கொடுக்கிறது என்கிறாய்! ஆனால் அதே இயற்கைதானே நமக்கு புயல், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் போன்ற எல்லாவற்றையும் கொடுக்கிறது. அதற்காக என்ன செய்யப்-போகிறாய்? அதற்கும் நன்றி சொல்ல வேண்டுமா இனியா?”

“அதற்கு எப்படி நன்றி சொல்ல முடியும் தாத்தா?”

“அப்படி இல்லையென்றால் இயற்கையைத் திட்டித் தீர்க்கப் போகிறாயா?”

“எனக்கு அதுபற்றி ஏதும் தெரியவில்லையே தாத்தா?”
“இயற்கை அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கும். நாம் அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நன்றி எல்லாம் தெரிவிக்கவேண்டாம். இயற்கை அதை உணரவும் முடியாது. நாமும் மனித இனத்திற்கு நன்றியை எதிர்பார்க்காமல் உதவி செய்ய வேண்டும்.”
எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட இனியா இறுதியாக ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“பொங்கல் அன்று என்ன செய்யவேண்டும் தாத்தா?”

“அதைத் தமிழர் திருநாளாகக் கொண்-டாட வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றுகூடி மகிழ வேண்டும். உழவர்களுக்கு வாழ்த்துச் சொன்னால் மட்டும் போதாது. அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். கூலிக்-காரர்களாகவே இருந்துவிடக்கூடாது. தமிழர்கள் ஒன்று கூடும் வேளையில் இதையெல்லாம் சிந்தித்து இன்றுள்ள இழிவைப் போக்க நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான செயல்பாடுகளில் இறங்க முடிவெடுக்க வேண்டும். மானமுள்ள மக்களாக வாழவேண்டும் என்பதற்காகவும், அதற்கான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்பதற்காகவும் நாம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்.”

“நிறைய செய்திகளை உங்ககிட்ட இருந்து தெரிஞ்சிகிட்டேன் தாத்தா. பொங்கல் வரும் போது நான் என் நண்பர்கள் எல்லோரையும் வரச்சொல்லிச் சந்திப்பேன். நானும் அவர்கள்
வீடுகளுக்குப் போவேன். நீங்களும் உறவினர்களையும் நண்பர்களையும் வரச்சொல்லுங்க தாத்தா. ஒன்றாகக் கூடி மகிழ்வோம். ஆனாலும் நீங்க சொன்ன செய்திகளில் எனக்கு விளங்காத செய்திகளும் இருக்கு தாத்தா.”

“உண்மைதான் இனியா. சின்ன வயதுதானே உனக்கு, போகப் போகப் புரிந்துகொள்வாய்”, என்று புன்னகையுடன் கூறி முடித்தார் முத்துராஜா. றீ