மாற்றம்!

2023 சிறுகதை நவம்பர் 16-30, 2023

… ஆறு. கலைச்செல்வன் …

கடலூரிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் பேருந்து புறப்படத் தயாரானது. மூன்று பேர் உட்காரக்கூடிய இருக்கையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்தார் சிவக்குமார். அவர் அருகில் சுப்ரமணியன், சேகர் ஆகியோர் உட்கார்ந்தனர்.

பேருந்து கிளம்பியது. கிளம்பிய அடுத்த நொடியே “கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா” என்ற பாடலை பெருத்த ஒலியுடன் இயக்கினார் ஓட்டுநர்.
சிவக்குமாருக்கு ஒரே எரிச்சலாக வந்தது. காதுகளைப் பொத்திக்கொண்டார். ஆனாலும் இரைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“பாட்டை நிறுத்து!” என்று பலமாகக் கத்தினார் சிவக்குமார். நடத்துநர் அவரை முறைத்துப் பார்த்தார்.

சிவக்குமார் அவரைப் பார்த்து, “சார், எனது நோக்கம் திண்டிவனம் செல்ல வேண்டும் என்பதுதான். அதுக்காகத்தான் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கேன். நீங்க போடற பாட்டைக் கேட்க நான் பயணம் செய்யவில்லை. உடனடியா பாட்டை நிறுத்துங்க இரைச்சல் தாங்கமுடியலை” என்றார்.

நிறுத்த முடியாது என்பது போல் சைகை காட்டிவிட்டு நகர்ந்தார் நடத்துநர். சிவக்குமார் விடவில்லை. மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஒரு வாட்ஸ் அப் எண் பதிவிட்டிருந்தார். உடனே இதுபற்றி அந்த எண்ணிற்கு புகார் தெரிவித்துவிட்டு நடத்துநரை அருகில் வரும்படி அழைத்தார்.

“நாங்க இங்க உல்லாசப் பயணத்துக்கு வரல. உங்க பஸ் இரைச்சலாலும், ஸ்பீக்கர் இரைச்சலாலும் பயணிகளுக்கு இரத்த அழுத்தம்தான் அதிகரிக்கும். இதயநோயும் பெருகும். அதிக இரைச்சலால் பைத்தியம் பிடிக்கும் நிலைமைகூட வரலாம். இந்த இரைச்சல் தொண்ணூறு டெசிபல் அளவைத் தாண்டி இருக்கும் போல் உள்ளது. இதனால் காது செவிடாகும். உடனே இரைச்சலை நிறுத்துங்க. நான் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவித்துள்ளேன்” என்று சொன்னார்.
ஆனால் நடத்துநர் மசிவதாக இல்லை.

“ஆபாசப் பாடல்களையெல்லாம் போடுறீங்களே. வெட்கமா இல்லையா?”, என்று மீண்டும் கடுமையாகக் கேட்டார் சிவக்குமார். அவருக்கு ஆதரவாக வேறு சில பயணிகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

உடனே நடத்துநர் அங்கிருந்து சென்று ஓட்டுநரிடம் ஏதோ பேசினார். அதைக் கண்ட சிவக்குமார் ஒலிபெருக்கியை நிறுத்தப் போகிறார் என நினைத்தார்.
ஆனால் ஓட்டுநர் ஓடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு முன்பைவிட அதிக ஓசையுடன் வேறு பாட்டைப் போட்டார். அந்தப் பாடல் பக்திப் பாடல். பக்திப் பாடல்களைப் போட்டால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது ஓட்டுநர், நடத்துநரின் எண்ணம்.

சற்று நேரத்தில் காவலர் ஒருவர் பேருந்தை நிறுத்தினார். அவர் ஓட்டுநரிடம் ஏதோ சொன்னார். அதையடுத்து ஒலி அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருப்பதை அறிந்துகொண்டார் சிவக்குமார்.

நகரின் முக்கியத் தெரு வழியாகச் சென்ற போது, சற்று தூரத்தில் கருப்புச்சட்டை அணிந்த பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். சன்னல் அருகில் உட்கார்ந்திருந்த சிவக்குமார் சில துண்டுப் பிரசுரங்களை வாங்கினார். அதிலுள்ள முழக்க வாசகங்களைப் படித்துப் பார்த்தார்.

“பறிக்காதே! பறிக்காதே!
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறிக்காதே”

“மருத்துவக் கல்வி வளர்ச்சியை தடை செய்யாதே” என்பது போன்ற முழக்கங்கள் அதில் சொல்லப்பட்டிருந்தன. மேலும் மருத்துவக் கல்விக்கு வரவுள்ள ஆபத்துகள் பற்றி விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இவங்களுக்கு வேற வேலையே இல்லை. எப்போது பார்த்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டம். அப்புறம் சாமி இல்லைன்னு சொல்றது. இதே பொழைப்பு இவங்களுக்கு என்று சலித்துக்கொண்டனர் சிவக்குமார் மற்றும் அருகில் உட்கார்ந்திருந்த இருவரும்.

சிவக்குமார், இருவரையும் உற்றுப் பார்த்தார். அவர்கள் நெற்றியில் நீண்ட பட்டை இட்டுக்கொண்டிருந்தனர். கைகளில் பலநிறங்களில் கயிறுகள் கட்டியிருந்தனர்.
“போக்குவரத்துக்கு இடையூறு பண்றாங்க பாருங்க சார். போலீஸ்காரங்க வேடிக்கை பார்க்கிறாங்க போலிருக்கு. கடவுள் இல்லைன்னு சொல்ற அவங்களை அடிச்சி விரட்ட வேண்டாமா?” என்று சிவக்குமாரைப் பார்த்துக் கேட்டார் ஒருவர். அவர் தன் பெயரை சுப்ரமணியன் என்று கூறி சிவக்குமாரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“கடவுள் இல்லைன்னு சொல்றது அவங்க உரிமை; அதில் யாரும் தலையிட முடியாதே சார்”, என்றார் சிவக்குமார்.
மற்றொருவர் தன் பெயரை சேகர் எனக் கூறி அறிமுகம் செய்துகொண்டு சிவக்குமாரிடம் பேசினார்.

“எங்களையெல்லாம் முட்டாள்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேட்டார்.
“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்கிறார்கள். நீங்கள்தான் கடவுளைக் கற்பிச்சீங்களா?”, என்று அவரைப் பார்த்துக் கேட்டார் சிவக்குமார்.

“நான் கற்பிக்கலையே”, என்றார் சேகர்.

“அப்புறம் ஏன் நீங்க கவலைப்படுறீங்க. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். அந்த முட்டாள் கற்பித்ததைப் பரப்புகிறவன் அயோக்கியன். அந்த அயோக்கியன் பரப்பியதை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்கிறார்கள். இதில் நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. உங்களுக்கு இதில் உடன்பாடு இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். எதுவும் கட்டாயமில்லை,”
இவ்வாறு சிவக்குமார் கூறியதும் மற்ற இருவரும் இவர் ஒரு கருஞ்சட்டைக்காரராக இருப்பாரோ என நினைத்தனர்.

“இருந்தாலும் பக்தர்கள் மனசு புண்படும் இல்லையா?” என்றார் சேகர்.

“நம்மை சூத்திரர்கள் என்று சொல்லும்
போது மனசு புண்படவில்லையா? பால், பழம், நெய், காய்கறிகள் போன்றவற்றை நாசம் செய்யும்போது மனசு புண்படலையா? இப்போ எதுக்காக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் சிவக்குமார்.
இருவரும் தெரியாது என்பதுபோல் சிவக்குமாரைப் பார்த்தனர்.

“தமிழ்நாட்டில் எத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?”, என்று கேட்டார் சிவக்குமார்.

“தெரியாது”, என்றனர் இருவரும். “சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்”, என்று கேட்டார் சிவக்குமார்.

“மூன்று கண்கள்”, என்றனர் இருவரும்.

“அதைத் தெரிஞ்சி வைச்சிருக்கிற நீங்க மக்கள் வாழ்வுக்குத் தேவையான செய்திகளைத் தெரிஞ்சி வைச்சிருக்கலையே. இப்போ நான் சொல்றேன், தெரிஞ்சிக்குங்கோ. நம்ம தமிழ்நாட்டில் முப்பத்தேழு அரசு மருத்துவக்கல்லூரிகள் இருக்கு. இது தவிர முப்பத்தெட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இருக்கு. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 11,600 மருத்துவ சேர்க்கை இடங்கள் உள்ளன. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியாது” என்றனர் இருவரும். சிவக்குமார் தொடர்ந்து பேசினார்.

“இந்த மொத்த இடங்களில் 4000 இடங்களை எந்த மாநிலத்து மாணவர்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.. 8500 மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் இருக்கலாம். இப்போது தேசிய மருத்துவ ஆணையம் என்ன சொல்லி உள்ளது எனத் தெரியுமா?”
இப்போது அவர் பேச்சை உன்னிப்பாகக் கேட்க ஆரம்பித்தனர் சேகரும் சுப்ரமணியமும்.

“2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நம் தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடியே இருபத்து மூன்று இலட்சம் ஆகும். 2021 ஆம் ஆண்டு இது ஏழு கோடியே அறுபத்து நான்கு இலட்சமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் பத்து லட்சம் மக்கள் தொகைக்கு நூறு மருத்துவ இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது. அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் தற்போது 7640 மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே இருக்க முடியும். ஆனால் தற்போது 11,600 மருத்துவ சேர்க்கை இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதனால் அடுத்த பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கவே முடியாது. இது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“இல்லை, இல்லை.” என்றனர் இருவரும்.

“ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க,?” என்று கேட்டார் சேகர்.

“இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ இடங்களில் 12 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. நம்ம பிள்ளைகள் நிறைய பேர் படிக்கக் கூடாது, மருத்துவர் ஆகக் கூடாது என்ற கெட்ட எண்ணம்தான் காரணம்”, என்று சற்று கடுமையாகவே பேசினார் சிவக்குமார்.

“மருத்துவர் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாக ஒன்றிய அரசு நினைக்கிறதா?” என்று கேட்டார் சுப்ரமணியன்.”

“தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தியாவில் எடுத்துக்கொண்டால், 825 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இது ஒன்றிய அரசுக்குப் பொறுக்கவில்லை. வளர்ந்த நாடான அமெரிக்காவைவிட தமிழ்நாட்டில் மருத்துவர்கள் அதிகம். உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் 2019ஆம் ஆண்டு கணக்கின்படி 110 பேருக்கு ஒரு மருத்துவர் கியூபா நாட்டில் இருக்கிறார். கத்தார் நாட்டில் 125 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார்.”

“தமிழ்நாட்டில்தான் மருத்துவப் படிப்பிற்கு அதிக இடங்களும் வசதிகளும் இருக்கின்றனவா?” என்று கேட்டார் சேகர். சிவக்குமார் அவருக்குப் பதில் சொன்னார்.

“தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதற்குக் காரணம் அந்த அரசுகள் பல பத்தாண்டுகளாக தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாகும். இந்த நிலை வடமாநிலங்களில் கிடையாது. இன்னொரு புள்ளி விவரம் சொல்றேன், கேட்டுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு மருத்துவர்களைக் கொண்டவை 73.5 சதவிகிதம் உள்ளன. ஆனால் குஜராத்தில் இது 80 சதவிகிதமாகவும் இந்திய அளவில் 69 சதவிகிதமாகவும் உள்ளது”

“அப்போ குஜராத் மாடல் என்பது சும்மாதானா?” என்று கேட்டார் சேகர்.

“எல்லாம் உருட்டுதான். கடந்த மாதம் மட்டும் மகாராட்டிர மாநிலம் நன்னேட் என்ற நகரத்தில் 31 குழந்தைகள் இறந்துள்ளனர். 2020ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். மருத்துவர் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. இப்படிப்பட்ட நிலை தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என விரும்புகிறீர்களா?” என்ற கேள்வியோடு அவர்களைப் பார்த்தார் சிவக்குமார்.

“ஊகூம்… கூடவே கூடாது” என்றனர் இருவரும்.

“இன்னொன்றையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுப்பதோடு இது நின்றுடவிடாது. இது பொறியியல் கல்லூரிகளுக்கும் வரும். நம் பிள்ளைகள் பொறியியல் படிப்பு படிக்க முடியாமல் போகும் ஆபத்தும் வரும். பிறகு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் தடை வரும். மொத்தத்தில் மக்கள் படிக்கக்கூடாது, கல்வி அறிவு பெறக்கூடாது என ஒரு கூட்டம் அலைகிறது. அந்தக் கூட்டம் பக்தியைக் காட்டி, மதத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வருகிறது.

“ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க? அநியாயமா இருக்கே” என்றார் சேகர். சிவக்குமார் பதில் சொன்னார்.

“உயர் ஜாதிக்காரர்களின் அரசு நம் போன்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் படிக்கக்கூடாது என நினைக்கிறது. அதற்குத்தான் இத்தனை தடைகளும். குஜராத் மாடல்னு சொல்லி நம்மை ஏமாத்திகிட்டு இருக்காங்க. இந்த மாதம் குஜராத்திலிருந்து ஒரு மருத்துவக்குழு பயிற்சிக்காக தமிழ் நாட்டுக்கு வந்தனர். அவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளின் சிறப்பைப் பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார்கள். ஒரே இடத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதைக் கண்டு வியந்து போய் எங்கள் மாநிலத்தில் இப்படியெல்லாம் கிடையாது என்றார்களாம். விளையாட்டுத்துறையில் கூட ஓரவஞ்சனை செய்கிறது ஒன்றிய அரசு”

“அது என்ன சார்?” என்று கேட்டார் சுப்ரமணியன்.

“ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு 33 கோடி வழங்கியது. ஆனால் குஜராத்துக்கு 608 கோடி கொடுத்தது. ஆனால் வெற்றிப் பதக்கங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டு நிறுத்தினார் சிவக்குமார்.

“தெரியாது” என்றனர் இருவரும்.

“சொல்கிறேன் கேளுங்க. சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களைப் பெற்றது. அதில் 33 பதக்கங்களை தமிழ்நாட்டு வீரர்கள் பெற்றனர். ஆனால் குஜராத் மாநிலம் பெற்ற பதக்கங்கள் எவ்வளவு தெரியுமா? ஜீரோ ஒரு பதக்கம்கூட பெறவில்லை. அவர்களுக்குக் கொடுத்த 608 கோடி

‘வேஸ்ட்’ என்றார் சிவக்குமார்.

“நம் பிள்ளைகளுக்கு இனி மருத்துவப் படிப்பு கூட எட்டாக் கனிதான் போலிருக்கு”, என்றார் சேகர்.

“மருத்துவப் படிப்பு மட்டுமல்ல. மற்ற படிப்புகளும் எட்டாக் கனியாகும் போலிருக்கே,” என்றார் சுப்ரமணியன்.
மீண்டும் பேசினார் சிவக்குமார்.

“இந்திய அளவில் ஆண் பட்டதாரிகள் 36 சதவிகிதமும் பெண் பட்டதாரிகள் 26 சதவிகிதமும் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் ஆண் பட்டதாரிகள் 51 சதவிகிதமும் பெண் பட்டதாரிகள் 72 சதவிகிதமும் உள்ளார்களாம். இதுதான்_ இந்த மாடல்தான் அவர்கள் கண்களை உறுத்துகிறது. இதுக்கெல்லாம் நீங்க என்ன செய்யப் போறீங்க?”

“போராடத்தான் வேணும்… மருத்துவப் படிப்பைத் தடுக்கும் சதியை முறியடிக்க வேணும்”, என்றார் சேகர்.

“அய்யா! நீங்கள் கருஞ்சட்டைக்காரரா? அதில் நீங்கள் மெம்பரா? நீங்கள் ஏன் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை?” என்று கேட்டார் சுப்ரமணியன்.

“ஆமாம். நான் ‘இன்விசிபிள்’ மெம்பர். அதாவது கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர். கருஞ்சட்டைப் படை உறுப்பினர். அவசர வேலையாக இங்கு வரவேண்டியதாகிவிட்டது. திண்டிவனத்தில் கலந்துகொள்வேன். என்னைப்
போல கண்ணுக்குத் தெரியாத பல இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தருவார்கள்”, என்று பதில் சொன்னார் சிவக்குமார்.
அப்போது பேருந்து திண்டிவனத்தை அடைந்தது. பேருந்து நிலையம் அருகில் கருஞ்சட்டை அணிந்த பலர் கடும் ªயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

சிவக்குமார் பேருந்தைவிட்டு இறங்கினார். அவர் பின்னால் சேகரும், சுப்ரமணியனும் இறங்கினர்.

“நீங்க சென்னைக்குப் போறதாச் சொன்னீங்களே” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் சிவக்குமார்.

“நாங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விட்டுப் போக முடிவு செய்துவிட்டோம். நாங்களும் இனிமேல் கண்ணுக்குத் தெரியாத கருஞ்சட்டைப் படையின் உறுப்பினர்கள்தான்” என்று கூறிய அவர்களை ஆர்ப்பாட்டக் களத்திற்கு அழைத்துச் சென்றார் சிவக்குமார். ♦