நாஸ்திகர்மகாநாடு

2024 Uncategorized வரலாற்றுச் சுவடுகள் ஜனவரி 1-15, 2024

— ஈ.வெ.கி. —

சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே ஒரு புதுமையானதும், மக்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டுபண்ணக் கூடியதுமாகும்.

நாஸ்திகமானது தற்காலம் இந்நாட்டிற் சிலருக்கு மட்டில் புதுமையெனத் தோன்றுமாயினும் இது தொன்றுதொட்டே இருந்து வந்திருப்பதாக நம்மவர்களின் புராண இதிகாசங்களால் விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக இராமாயண காலத்திலும் நாஸ்திகம், கதாநாயகனான ராமனுக்கு உபதேசிக்கப்பட்டதாகவும், அவனால் மறுக்கப் பட்டதாகவும், அவன் மறுத்துவிட்டதையறிந்த உபதேசிகள் அதற்கு அவனின் இளமைப் பருவந்தான் காரணமென்றறிந்து பிறகு கொஞ்ச காலஞ் சென்று வாசிட்டம் என்கிற முறையில் உபதேசிக்கப்பட்டதாகவும், அவனும் அதை மறுக்காமல் ஒப்புக் கொண்டதாகவும் ஒரு அத்தாட்சி காணப்படுகிறது.

மற்றொரு உதாரணம் என்னவென்றால் தேவேந்திரனானவன் தனது லவுகீக அலுவல்களை விட்டுவிட்டு வைதிக மார்க்கத்தை அனுஷ்டித்து வந்த சமயத்தில் அவனது நாடும், நாட்டுக் காரியங்களும் குன்றி வருகிறதைக் கவனித்து வந்த அவன் குருவாகிய வியாழன் (பிரகஸ்பதி) என்போன் தனது சீடனான இந்திரனுக்கு நாஸ்திகத்தை உபதேசித்து அவனது ராஜ்ஜியத்தையும், ராஜ்ஜிய காரியாதிகளையும் சீரும் சிறப்புடன் நடத்தி வரச் செய்ததாகவும் காணப்படுகிறது.

ஆகையால், இது வெகுகாலமாக ஒரு சிறு சுயநலக் கூட்டத்தவர்களால் தங்களின் வாழ்க்கை நலன்களுக்காக மறைத்து வைத்து, அதற்குப் பதிலாகத் தங்களுக்கே பலன் தரத்தக்க முறைகளுக்குட்பட்ட வகுப்பு வேறுபாடுகளுக்கும், மத வேறுபாடுகளுக்கும், ஏழை பணக்கார வித்தியாசங்கள் முதலியவைகளுக்கும் வேண்டிய வகைகளைக் கொண்ட ஆஸ்திகத் தத்துவத்தைக் கூறும் நூல்களைக் கற்பித்து அப்போதிருந்த அரசர்களைத் தங்கள் வசப்படுத்தி சட்டங்களையும் அதுகளுக்கு அனுசரணையாக ஏற்படுத்த நமது மக்களை அடக்கி ஆண்டு வந்திருக்கிற காரணங்களின் முதிர்ச்சியினால்தான் இது புதுமையென்பதில் ஆச்சரியமேயில்லை.
இம்மகாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த மக்களில் பெரும்பான்மையோர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் தமிழில் பண்டிதத் திறமை வாய்ந்தவர்களேயாகும். பண்டிதத் திறமையை இதிற் குறிப்பிட வேண்டியது எதற்காக வென்றால், தற்போதுள்ள தமிழ் பாண்டித்யத்தில்தான் மதம், ஜாதி, கடவுள் என்கின்ற குறைபடா நம்பிக்கையை அலசாமல் முழுசு முழுசாகப் புகுத்தப்பட்டிருக்கிற காரணத்தால் அவற்றைத் தங்கள் பால் மணம் மாறிய சிறு வயது முதல் கொண்டு 20- _ 30 வருடம் வரையாவது படித்துப் படித்து தங்கள் தங்கள் மனதிலும் (இன்னம் சொல்லுங்கால்) இரத்தம் நாடி, நரம்பு, எலும்பு, தசை, தோல் முதலியவைகளிலும் கூடப் புகுத்திப் பதிய வைத்திருப்பவர்களின் கூட்டத்தில் தேர்ச்சியடைந்தவர்களின் தன்மையைத்தான் பண்டிதத் திறமை என்பார்கள்.

இத்தகைய திறமை வாய்ந்தவர்களே இம்மகாநாட்டில் முக்கியமாகக் கூடியிருந்ததும் பங்கெடுத்துக் கொண்டதும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதைக் காட்டிலும் மற்றொரு விசேடம் என்னவென்றால் பெண்மக்கள் விஷயம். இவர்களிலும் பண்டிதைகளானவர்களே பெரும்பான்மையானவர்கள் என்றால் இந்த மகாநாட்டின் முன்னேற்றங்களில் இதைவிட வேறு என்ன முற்போக்கான அறிகுறி வேண்டும்?

இம்மகாநாட்டை கூட்டியதினின்று மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சியின் காரணமாக இது முதற்கொண்டாவது தங்கள் தங்கள் வாழ்நாட்களை அழித்து வரும் மூடநம்பிக்கைகளையும், அடிமைப் புத்தியையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழித்து, தன்னம்பிக்கையையும், தன்மதிப்பையும், தன்முயற்சியையும் பெற்றுத் தன்னைப்போல் பிறரையும் நேசித்து, சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் வாழ இடமுண்டாவதுடன் பொருளாதார விஷயத்திலும் அனாவசியமாக நேரங்களையும், பணங்களையும், ஊக்கங்களையும், உழைப்புகளையும் விரயமாக்காமல் மக்கள் வாழ்க்கைக்குப் பலன் தரும் வழிகளில் உபயோகப்படுத்தி வாழ்வார்களென்று நம்புவதற்கு அறிகுறிகளான மேற்படி மகாநாட்டின் தீர்மானங்களே போதிய சான்றாகும். அதாவது முதல் தீர்மானத்தில் “மனித ஒற்றுமைக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாகவிருப்பது கடவுள் நம்பிக்கையும் அதிலிருந்து ஏற்படுகிற மதசம்பிரதாயங்களுந்தான் என்று இம்மகாநாடு நிச்சயமாக உணர்வதால் மனிதர் தன்நம்பிக்கையோடும், தன் முயற்சியோடும் முன்னேற்றமடைய வேண்டில், கடவுள் நம்பிக்கையைப் பூரணமாகஒழிக்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது’’ என்பதாகும்.

இத்தீர்மானமானது நடைமுறைக்கு வரும்போது மனிதர்களுக்குள் ஒற்றுமை நிலவிவரும். அப்போது சமூகமானது முன்னேற்றமடையும் என்பதும் இவற்றைத் தடுத்துவருவது “கடவுள்” நம்பிக்கை என்பதும் காணப்படுகிறது. அக்கடவுளின் நம்பிக்கை அமையவேண்டி மத சம்பிரதாயங்கள் வேண்டியிருக்கிறதென்றும் ஏற்படுகிறது.

எப்படியென்றால் கடவுள் என்கிற ஒரு கற்பனைக்கு ஆசைப்படும்படியாகவும், ஆதாரமாகவும் காட்டப்படுகிற நயபயங்களாகிற மறுஜன்மம் மோட்சம், சுவர்க்கம், நரக முதலியவைகளோடு சாஸ்திர புராண இதிகாசங்களாகிற நூல்களால் ஏற்படுகிற சம்பிரதாயங்களே காரணமாகிற படியாலும், அப்படிப்பட்ட மத சம்பிரதாயங்களே காரணமாகிறபடியாலும், அப்படிப்பட்ட மத சம்பிரதாயங்களே மக்களுக்குள் உயர்வுதாழ்வுகளைக் கற்பிப்பதால் ஒற்றுமைக்கு வழியற்று

வேற்றுமைகளைக் கிளப்பிவிடுவதால் வேற்றுமைப்பட்ட பிறகு மனிதர்கள் முன்னேற்றமும் சிதைவுறுவதாலும்தான் இப்படிப்பட்ட கெடுதல்களுக்கு மூலகாரண மாகிற “கடவுள்” நம்பிக்கை ஒழிய வேண்டுமென முதல் தீர்மானம் வற்புறுத்துகிறது.
இது இடைவிடாது நிலவி நீடித்து மக்களுக்குப் பயனளித்தல் வேண்டுமென்கிற ஆர்வத்துடனேயேதான் அதற்குத் தகுதியுடைய இளைஞர்களுக்குள் இத்தீர்மானம் முதிர்ச்சியுற வேண்டுமென்றும் அதற்கிடையூறுகளாக, தற்காலிக பள்ளிப் பாடப்புத்தகங்களில்மேற்படி இன்னல்களைப் புகுத்தாவண்ணம் பிரச்சாரம் செய்யவேண்டுமென்றும் இரண்டாவது தீர்மானம் கூறுகிறது. இவற்றுக்கெல்லாம் விரோதமாக நடந்துவரும் காந்தியத்தை மூன்றாவது தீர்மானத்தால் கண்டித்து, இவற்றைப் பின்வரும் மக்களும் அனுஷ்டித்து ஒழுகுமாறு ஒரு சங்கத்தைத் ஸ்தாபித்து நடத்திவர வேண்டுமென்று நான்காவது தீர்மானத்தினால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இன்னமும் இதைக் குறித்துச் சொல்லப்
புகுங்கால் இம்மகாநாட்டைக் கூட்டியவர்கள், இதைத் திறந்துவைத்த திறப்பாளர், இதை நடத்திவைத்த தலைவர், தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்கள் முதலியோர்களின் தன்மை முதலியவற்றைக் கவனித்தால் இம்மகாநாட்டின் ஏற்றம் இப்படிப்பட்டதென விளங்கும்.
அதாவது இம்மகாநாட்டைக் கூட்டுவிக்க முயற்சி எடுத்துக்கொண்டவர்களான தோழர் அ. பொன்னம்பலம், தோழர் ப. ஜீவானந்தம் ஆகிய இருவரும் மேற்படி மகாநாட்டுக்குக் காரியதரிசிகளாக அமைந்து எடுத்துக்கொண்ட முயற்சிக்கும், சிரமத்துக்கும் அளவே இல்லை. இவ்விருவரும் தமக்கு எல்லாவற்றையும்விட மக்கள் முன்னேறுவதே பெரும் பயனாகக் கருதி, அதற்காகவே தங்கள் மனதும், வாக்கும், உழைப்பும் பயன்படல் வேண்டுமென்கிற ஒரே ஓர் உட்கருத்துக் கொண்டு தன்னலம் சிறிதும் பாராமல் முக்காலங்களிலும் உழைத்து வரவேண்டுமென்கிற விரதம் கைக்கொண்டொழுகும் குணமும் ஆசையும், சக்தியும், உழைப்பும் வாய்க்கப் பெற்றவர்கள் ஆவார்கள் என்பதை நமது சுயமரியாதை உலகம் நன்கறிந்திருக்குமென்றால் நாம் வேறு சொல்ல வேண்டியதென்ன இருக்கிறது?
அடுத்தபடியாக மகாநாட்டைத் திறந்துவைத்தவர் யாரெனில் தோழர் நீலாவதி அம்மையார். இவரின் பெருமையும், வீரமும், தன்மையும், சொல்வன்மையும், தன்னலங் கருதா உழைப்பும், இன்னம் மற்ற அவரது குணாதிசயங்களும் நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கக்கூடிய பெருமை வாய்ந்தவர்களாவார்கள்.
இம்மகாநாட்டுக்குத் தலைமை வகித்து இம்மகாநாட்டை வெற்றிகரமாக நடத்திவைத்த பெரியார் தோழர் ம. சிங்காரவேலு அவர்களைப் பற்றியோவெனில் அவர் ஆராய்ச்சியிலும்,அனுபவத்திலும், வயதிலும், முதியவர் என்றாலும் ஆராய்ச்சியின் பலன்களையும், அனுபவத்தின் பலன்களையும் மற்ற உயரிய விஷயங்களையும் மக்களுக்குப் பயன்படுமாறு செய்விப்பதிலும் களைப்பு, சலிப்பு, பயம் பின்தங்கல் முதலியவற்றைக் கனவிலும் கண்டிராத ஓர் இளைஞரை ஒத்தவராவார். இப்படிப்பட்டவர்களால் நடத்தப்பெற்ற மகாநாட்டின் சிறப்பும், பலன்களும் எப்படி அமைந்திருக்கும் என்பதை நாம் கூறவேண்டியதில்லை.
ஆகையால், சாதாரணமாக உலகில் கடவுள் உண்டாயிருந்தாலும் இல்லாதிருந்தாலும் நாஸ்திகம் என்கிற சொல் உச்சரிக்கும்போதே ஜனங்களுக்கு ஒருவிதமான வெறுப்பும், கோணுதலும் ஆன மனப்பான்மை உண்டாவது வழக்கமாக இருந்து வந்ததை, இம்மகாநாட்டைக் கூட்டுவித்து நடத்திவைத்துக் கொடுத்தவர்களால் மனித முன்னேற்றத்துக்கு எதிர்தட்டான எவையும் ஒழித்தாகவேண்டும் என்பதும், அப்படிச் செய்வது நீடித்துவரும் வகையை ஊக்கத்துடன் தெரிந்து நடத்தப்படவேண்டும் என்றும், அது மக்களைவிட இளைஞர்களுக்குத்
தான் முக்கியமானதாகக் கருதி அவர்களுக்குப் பாடப் புத்தகம் மூலம் ஏற்படுகிற
இன்னல்களைக் களையும் வண்ணம் பிரச்சாரம் செய்யப்பட வேண்டுமென்றும், இத்தகையவற்றுக்கு விரோத வர்க்கமான காந்தியத்தை ஒழிக்கவேண்டுமென்கிற கருத்துகொண்டதும் மக்களின் முன்னேற்றமே பலனாகவும் கொண்ட இம்மகாநாட்டின் கருத்துகளால் மாற்றிவிடப்பட்டதென்றே சொல்லுவோம்.
மேலும், நாஸ்திகம் என்கிற சத்தத்தைக் கேட்டபோதே ஜனங்கள் தங்களை பொய், களவு, சூது, கொலை முதலிய குற்றங்களுக்கு மேல் செய்துவிட்டவன் வருந்துவதுபோல் கஷ்டப்படுபவர்களான நம் மக்கள் இம்மகாநாட்டின்போது கலந்துகொண்டு தாங்களும் அங்கத்தவர்களாகச் சேர்ந்து உழைக்க முன்வந்துள்ளார்கள் எனில், அதற்கு மூலகாரணம் இன்னதென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமற் போகாது. ஆகவே, இத்தகைய மகாநாடுகள் நமது நாட்டில் ஆங்காங்கு நிறுவி மக்களின் அறியாமையைப் போக்கி மக்களுக்குப் பயன்பட்டு வரும் முறைகளில் வேண்டியவற்றை அறிவித்தும், தீர்மானித்தும் நடைமுறையில் நடந்தேறும் வண்ணம் செய்வித்தும் வருவது அத்தியாவசியமாகும்.

 _ ‘புரட்சி’ தலையங்கம், 07.01.1934

(குறிப்பு : இது ஈ.வெ.கி. என்று தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
குறிப்பு: திரு. ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தந்தை பெரியாரின் தமையனார்_அவர்
ஆசிரியப் பொறுப்பேற்றவர் (மற்றவர் இல்லாத நிலையில்). எனவே தான் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.♦