அண்ணாவின் புகழ் வாழ்க!

2024 கவிதைகள் பிப்ரவரி 01-15, 2024

– முனைவர் கடவூர் மணிமாறன்

எண்ணத்தை எழுத்தாக்கிச் செயலில் காட்டி
இன, மானத் திராவிடத்தின் புகழை நாட்டிக்
கண்ணொத்த மாநிலத்தைத் தமிழ்நா டென்றே
கருத்தியலால் மாற்றியவர்! காஞ்சி ஈன்ற
அண்ணாவோ மாமேதை! பெரியார் தொண்டர்!
அய்யாவின் பாசறையின் மறவர்! வேண்டும்
கண்ணியத்தை, கடமையினை, கட்டுப் பாட்டைக்
காத்திடவே உழைத்திட்ட அறிவுச் சொற்கோ!

தென்னாட்டின் மாண்பினையே நாளும் காத்துத்
திசைகாட்டும் கலங்கரையின் விளக்கம் ஆனார்!
குன்றிலிட்ட விளக்கெனவே ஒளிர்ந்தார்! “காஞ்சி,
குடிஅரசு, திராவிடநா டி”தழில் என்றும்
பன்னரிய சிந்தனையை விதைத்தார்! வெல்லும்
பகுத்தறிவை யாவர்க்கும் பயிற்று வித்தார்!
நன்மைக்கும் உண்மைக்கும் பாடு பட்டார்
நற்றமிழை நானிலமே உணரச் செய்தார்!

ஏற்றமிகு தமிழ்நாட்டில் எவரும் போற்றும்
இருமொழிநற் கொள்கையினை வழங்கி நாட்டில்
மாற்றங்கள் மலர்ந்திடவே வழிகள் கண்டார்!
மாசற்ற பேருள்ளம் வாய்க்கப் பெற்றார்!
போற்றுகிற சீர்திருத்தத் திரும ணங்கள்
புலர்ந்திடவே பேரவையில் கொணர்ந்தார் சட்டம்!
மாற்றானின் தோட்டத்து மலரும் கூட
மணக்குமெனும் பொதுநோக்கைத் துலங்கச் செய்தார்!

எல்லாரும் ஏற்கின்ற “எதையும் தாங்கும்
இதயத்தைப் பெறவேண்டும்” என்றார்! வேண்டாப்
பொல்லாத ஆரியத்தை எதிர்த்தார்! வாழ்வும்
பொலிந்திடவே பன்னரிய மேன்மை நாடி
நல்லோர்கள் மதிக்கின்ற தமிழர் பண்பு,
நாகரிகம், கலையாவும் தழைக்கச் செய்தார்!
வல்லவராய் நல்லவராய் வாழ்ந்தார்! நம்மோர்
வரலாறாம் அண்ணாவின் புகழும் வாழ்க! 