கட்டுரை – தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு – ஷெகதாபட்டினம் இந்தியா முழுவதும் உள்ள சனாதன சக்திகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன!

2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே-16-31,2023

உடுமலை வடிவேலு

கரை மேல் பிறக்க வைத்தான்!;

எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்;

தரை மேல் பிறக்க வைத்தான்;

பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்’

இது அந்தக்கால தமிழ்த் திரைப்படப் பாடல். ஆண்டுகள் கடந்தாலும் நிலைமையில் மாற்றங்கள் பெரிதாக ஏதுமில்லை. சொல்லப் போனால் பி.ஜே.பி. ஆட்சியில், ’கத்தி போய், வாள் வந்தது டும்! டும்!’ என்பதைப் போல, நிலைமை இன்னமும் மோசமாகிவிட்டது. இதற்கும் மீனவர்களால் பொருளாதார வரவு, செலவு கோடிக்கணக்கில் நடக்கிறது. ஜெகதாபட்டினம் போன்ற சின்ன ஊரிலேயே மீனவர்களுக்கு ’தனி வங்கி’ தேவைப்படுகிறது என்று ஜெகதாப்பட்டினம் மீனவர் நலப்பாதுகாப்பு மாநாட்டில் ஆசிரியரிடம் கோரிக்கையே வைக்கும் அளவுக்குத் தேவை இருக்கின்றது. அந்த ஜெகதாபட்டினத்தைச் சுற்றி, அதிராமபட்டினம், கட்டுமாவடி, கிருஷ்ணாஜி பட்டினம், அம்மா பட்டினம், கோட்டைப் பட்டினம், மீமிசல், சம்மைப் பட்டினம் எனும் எஸ்.பி.பட்டினம், தொண்டி, தேவி பட்டினம், செல்லனேந்தல் போன்ற 10 க்கும் மேற்பட்ட கடற்கரையோர கிராமங்கள் இருக்கின்றன.

அந்த ஜெகதாபட்டினத்தில்தான் கடந்த ஏப்ரல் 14, 2023 ஏப்ரல் 14 இல், “தமிழ்நாடு மீனவர்நல பாதுகாப்பு மாநாட்டை” திராவிடர் கழகம் நடத்தி முடித்திருக்கிறது! ஏன் திராவிடர் கழகம் இந்த மாநாட்டை நடத்தியது? அன்றைய தேதியில்கூட, சிங்கள அரசால் சிறை செய்யப்பட்ட 7 மீனவர்களில் 6 பேரை 17 ஆம் தேதி (திங்கட்கிழமை) விடுதலை செய்யப்போவதாகவும், வானகிரியைச் சேர்ந்த தில்லைக்காளியின் மகன் விஸ்வலிங்கம் என்ற மீனவர் மட்டும் 14 மாதம் சிறைத் தண்டனை தரப்பட்டு, இலங்கைச் சிறையிலிருப்பதாகவும், அதன் காரணமாகவே வானகிரி கிராமமேஅழுது அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. ஜெகதாபட்டினத்தில் மட்டுமே இலங்கை அரசின் அட்டூழியத்தால் 1000 க்கும் மேற்பட்ட படகுகள் தொழிலுக்குப் போய்க்கொண்டிருந்த இடத்தில் இன்று சிலநூறு படகுகளே போய் வந்து கொண்டி-ருக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்கள் 16 படகுகளுக்கு தலா 5 லட்சம் கொடுத்தார்.

அதில் 8 படகுகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. செல்லனேந்தல், ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 87 படகுகள் இலங்கை வசம் உள்ளன. அதில் பல படகுகள்சீர்செய்யமுடியாத அளவுக்குக் கெட்டுப்போயுள்ளது. ஜெகதாபட்டினம் துறைமுகம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், துறைமுகம் மேடும், பள்ளமுமாக பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. அதைச் சீர் செய்வதற்கு இன்றைய, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தலைமையிலான தி.மு.க. அரசு 19 கோடியை ஒதுக்கியிருக்கிறது! ஆனாலும் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை? போன்ற பல்வேறு பிரச்சனைகள் மீனவர்களைத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன.

இதற்காகவும் திராவிடர் கழகம் இந்த மாநாட்டை நடத்தியது! வேறு எதற்காக? ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தங்களின் சூழ்ச்சி வலையை வீசிக்கொண்டிருக்கிறது, ’2024’ தேர்தலை மனதில் கொண்டு. வழக்கம் போல ஏதாவது சித்து வேலை செய்து, தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் கணக்கைத் தொடங்கியது போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் கணக்கைத் தொடங்கிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறது.
ஏறக்குறைய 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் நாங்கள் இன்னது செய்தோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க முடியாமல், மீனவர்களுக்கு நாங்கள் இதைச் செய்வோம், அதைச்செய்வோம் என்று பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேட்டால்? பதிலில்லை! 2014, 2019 ஆம் ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற வக்கில்லாத ஒன்றிய அரசு-பா.ஜ.க. அரசு! அதைப் பின்னிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்! இதுபோதாதா? அதற்காகவும்தான் திராவிடர் கழகம் இந்த மாநாட்டை நடத்துகிறது.

திராவிடர் கழகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. ”1998இல், இராமேஸ்வரத்தில் ’கச்சத்தீவு மீட்பு மாநாடு’ எனும் பெயரிலேயே மாநாட்டைக் கூட்டி, அன்றைய இராணுவ அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை அழைத்து, “கச்சத்தீவை மீட்பதுதான் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு” என்று தீர்மானம் நிறைவேற்றிய இயக்கம் திராவிடர் கழகம்! அப்படிப்பட்ட இயக்கம்தான் 2023 ஏப்ரல் 14இல் ஜெகதாபட்டினத்தில், “தமிழ்நாடு மீனவர்நல பாதுகாப்பு மாநாடு” நடத்தியது! மாநாடு நடத்திய அதே தேதியில், ”ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்கத்திற்கு’’ தேர்தல் நடைபெற்றது. புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திராபதியை, அன்றைக்கு மதியம் வரைக்கும் தலைவராக இருந்த பாலமுருகன் கழகத் தோழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருபக்க அறிமுகம் நடந்த பிறகு, சங்கத் தலைவர் உட்பட, நிர்வாகிகளுக்கு மாநாட்டுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநாட்டில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா இரா.இராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவரும், தி.மு.க. நாகை தெற்கு மாவட்டத்தின் செயலாளருமான கவுதமன் ஆகியோர் கலந்துகொண்டனர். மீனவர் பிரச்சனைகளுடன் தொடர்புடைய அனைத்து துறைகளின் உயர் பதவியில் இருக்கும் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டதே மாநாட்டில் பேசு பொருளாக இருந்தது.

மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து அதிர்ச்சிகரமான ஒரு தகவலைச் சொன்னார் சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி. அதாவது, ”இந்திய எல்லை என்று ஒன்றுண்டு; இலங்கை எல்லை என்று ஒன்றுண்டு; இரண்டுக்கும் நடுவே இருப்பது சர்வதேச எல்லை! இது அனைவருக்கும் பொதுவானது. இதை Zero Zone என்கிறார்கள். நமது மீனவர்கள் சர்வதேச எல்லையில் மீன்கள் பிடிக்கும் போது, இலங்கைப் படை அவர்களைச் சுற்றி வளைத்து இலங்கை எல்லைக்குள் கொண்டு சென்று கைது செய்கிறது” என்றார். இது அனைவரையும் திடுக்கிட வைத்தது. இதற்கு தமிழ்நாடு அரசு முறைப்படி கண்டனம் தெரிவித்துள்ளது. மீனவர்களின் படகுகள் மீட்பிலும், ”நீங்கள் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளைப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்கள் எல்லை தாண்ட மாட்டார்கள்” என்று இலங்கை அரசுக்கு, இன்றைய இந்திய ஒன்றிய அரசு ஆலோசனை சொல்லியிருப்பதையும், இலங்கை மீன்வளத் துறை அமைச்சரே இலங்கைக்குச் சென்ற தங்களிடம் கூறியதை, மேடையிலேயே போட்டுடைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி. மீனவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதிர்ந்து போயினர். படகுகள் குறித்தும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கூறினார்.

தமிழ்நாடு மீனவர்கள் கைதுசெய்யப்படுவதைப் பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சியும், பா.ஜ.க. ஆட்சியும் ஒன்றுதான் என்றவொரு பொதுவான பிம்பம் ஊதப்பட்ட பலூனைப் போல, ’பட்’டென்று வெடித்துச் சிதறியது. அந்த பிம்பம் உடைத்தலைத்தான் ஆசிரியர் இந்த மாநாட்டின் இன்னொரு முக்கிய அம்சமாகக் கருதினார் என்பதை அவரது பேச்சும் உறுதி செய்தது! ஒரு நுட்பமான கருத்தை மக்கள் முன்வைத்தார். அதாவது தமிழ்நாட்டை எப்படியாவது கைக்குள் கொண்டு வரவேண்டுமென்று படாத பாடுபட்டு, வெற்றிகாணாத பா.ஜ.க, தற்போது தமிழ்நாட்டு மீனவர்களை குறிவைத்து அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது என்பதை அம்பலப்படுத்தினார். ’பா.ஜ.க.விடம் ஏமாறாதீர்! என்பதோடு அவர் விட்டுவிடாமல், ”பா.ஜ.க. உங்களை ஏமாற்றவும் விடமாட்டோம்” என்றார். இதை உணர்ந்து தான், முதலில் பேசிய, மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ’ஆசிரியர் தலைமையேற்றிருக்கும் இம்மாநாட்டை இந்திய முழுவதும் இருக்கின்ற சனாதன சக்திகள் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன’ என்று கோடிட்டுக் காட்டியிருந்தார். ஆம், ஆசிரியர் அந்த சனாதனக் காட்டில் தான் ஒரு சின்ன நெருப்புத் துண்டை வீசியிருந்தார். அந்த நெருப்பு பற்றி எரியத் தொடங்கிவிட்டது. மொத்தத்தில், மீனவர்களே! நீங்கள் வீசும் வலையில் மீன்கள் சிக்கலாம்! ஆனால், பா.ஜ.க. வீசும் வலையில் மீனவர்களான நீங்கள் சிக்கிவிடக் கூடாது! என்பதுதான் ஆசிரியரின் வேட்கை! இந்த வேட்கை, வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வரை தீராது!

மாநாட்டுக்கு அரியலூர் மாவட்டத் தலைவர் நீலமேகம், மண்டலச் செயலாளர் மணிவண்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், சோ.சுரேஷ், செந்துறை அறிவன், நாகை மாவட்டத் தலைவர் நெப்போலியன், செயலாளர் பூபேஷ்குப்தா, திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், செயலாளர் வீர கோவிந்தராஜன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.சித்தார்த்தன், செயலாளர் கணேசன், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் இராஜவேல், மாணவரணி மாநிலப் பொறுப்பாளர் செந்தூரபாண்டியன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைச் செயலாளர் பேராசிரியர் எழிலரசன், திருவாரூர் மண்டலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் நிம்மதி, செயலாளர் துரைராஜ், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், செயலாளர் அருணகிரி, வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அரவிந்தன், ஆவடி நகரச் செயலாளர் தமிழ்மணி, சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், மயிலாடுதுறை தளபதிராஜ், வி.சி.வில்வம், காரைக்குடி பொறுப்பாளர் ம.கு.வைகறை, திருவாரூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி உள்ளிட்ட தோழர்கள் வருகை தந்து மாநாட்டை சிறப்பித்திருந்தனர். இதையும் தாண்டி பொதுமக்களுக்கும், மீனவர்களும் நிகழ்ச்சி முடிந்து திரும்புகிற போது அமைச்சர் பெருமக்கள், ஆசிரியர் ஆகியோர் பேசியவற்றை அசைபோட்டுக் கொண்டே கலைந்து சென்றது மாநாட்டின் வெற்றியைப் பறைசாற்றியது.

எப்படியோ மீனவர்களை, வலையில் வீழ்த்த எண்ணிய பா.ஜ.க.வின் சூழ்ச்சி அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. அந்தச் சூழ்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறது ஜெகதா பட்டினத்தில் நடைபெற்ற, ”தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு!” ’பகுத்தறிவு மளிகைக்’ கடை நடத்தி வரும், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், யோவான்குமார் ஆகிய இரண்டு தோழர்கள் துணையுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில், பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் அவர்களின் மேற்பார்வையில், கடந்த 3 ஆம் தேதியிலிருந்தும், அதற்கும் முன்பிருந்தும் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட மண்டல, மாநில பொறுப்பாளர்களான கருஞ்சட்டைத் தோழர்களின் உழைப்பு இந்த மாநாட்டின் வெற்றிக்கு பின்னால் உண்டு! இவர்கள் கண்ணுக்குத் தெரிய மாட்டார்கள். ஆனால், இவர்களின் உழைப்பு தான் சனாதன சக்திகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன. “நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது! வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!” என்பது ஆசிரியர் கூற்று! அதைத்தான் அவரின் மாணவர்கள் ஜெகதா பட்டினத்தில் செய்து காட்டியிருக்கிறார்கள்.