கட்டுரை – புத்தத்தில் புகுந்தழித்த பார்ப்பனர்கள் … தஞ்சை பெ.மருதவாணன் …

2023 அக்டோபர் 1 - 15, 2023 கட்டுரைகள் மற்றவர்கள்
… தஞ்சை பெ.மருதவாணன் …
ஃபாகியான் என்ற சீனப் பயணி பின்வருமாறு கூறியிருக்கிறார்:-
“புத்தமதத்தைப் பிரச்சாரம் செய்ய தீவிரமாக உழைத்துக் கொண்டிருந்த பெரும் பண்டிதரான ஒருவர் பாடலிபுத்திரத்தில் இருந்தார். மன்னர் அவரைச் சந்திக்கச் செல்லும்போது குருவின் கைகளைத் தொட்டு வணங்குவார்.  உடனே அந்தப் பிராமணர் அங்கிருந்து சென்று தலை முதல் பாதம் வரை தண்ணீரில் தோய குளிப்பது வழக்கம்.”
ஒரு புத்த பிட்சுவான பிறகும் பிராமணன் அவனுடைய தீண்டாமையைக் கைவிடவில்லை.  புத்த மதத்தின் எல்லையற்ற மனித நேய சமத்துவத்தையும் பிராமணனின் கொடுமையான ஜாதிப் பாகுபாட்டுணர்வையும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  புத்த மதத்துக்கு நேர்மாறான இந்த ஜாதியாச்சாரங்களைப் புத்தமடங்களிலேயே  பிராமணர்கள் கடைப்பிடித்தனர் என்பதைப் பார்க்கும்போது அவர்களுடைய புரோகிதத் தந்திரங்களையும் அங்கு தங்கு தடையின்றி மேற்கொண்டி ருப்பார்கள்தானே! உண்மையில் அதுதான் நடைபெற்றது.
புத்த சங்கங்களில் (மடங்கள்) புகுந்து நிருவாகத்தைக் கைப்பற்றிய பிராமணப் புரோகிதக் கும்பலால் (புத்தமதம்) வேகமான வீழ்ச்சியைச் சந்தித்தது. பெரும் நிலப்பிரபுக்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் ஏராளமான நன்கொடை பெற்று நடைபெறும் புத்தாஸ்ரமங்களில் குறிப்பிடத்தக்க வேலை ஏதுமின்றி சுகவாழ்க்கையை மேற்கொள்ளும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருங்கூட்டமாக புத்தமடங்கள் மாறின.  புத்தரையும் விக்கிரகங்களையும் பூஜிப்பது அவர்களுடைய மதத்தின் நடைமுறை ஆகிவிட்டது. (பக்கங்கள் 102 _ 103).
(இ) புத்தமதம் இரண்டாகப் பிளவு பட்டது.  பிராமணர்களின் தலைமையில் புத்தரைக் கடவுளாகக் கொண்டனர்.  யோகம் போன்ற சாஸ்திரங்களை அதன் ஒரு பகுதியாக்கி விட்டனர்.  பிராமணர்களின் தலைமையில் பிரிந்து சென்ற புத்தமதம்தான் மகாயான புத்தமதம். அவர்கள் பல்வேறு வகையான மந்திர தந்திரங்களை அதன் பகுதியாக்கி மாற்றினார்கள்.  புத்தரும் காளிதேவியும்  ஒன்றுதான் என்று மூடநம்பிக்கைகளையும் அவர்கள் பரப்பினார்கள்.  மந்திரவாதம், பெண் பூசை போன்றவற்றையும் மகாயான புத்த மதத்தின் ஓர் அங்கமாக அவர்கள் உருவாக்கினர்.  நாலந்தா பல்கலைக்கழகத்தில் மகா புரோகிதராக  இருந்த நாகார்ஜுனன் என்ற பிராமணர் இந்த மகாயான புத்த மதத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.  அவர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும் பூஜைக்குரிய தெய்வங்கள்தான் என்று கூறினார்.  இவ்வாறு பிராமணர்களுடையவும்  வெளி நாட்டினர்களுடையவும் செல்வாக்கின் மூலம் புத்தமதம் சீர்கெட்டு இளைத்துப் போனது (பக்கம் 104).
“பவுத்தத்தை அழிப்பது ஒரு தேசியக் கடமை”  சாவர்க்கர் கூற்று பேரரசர் அசோகரின் பவுத்த நெறிப்படி நடந்த அறவழிப்பட்ட ஆட்சியில் பார்ப்பன மேலாண்மை வீழ்த்தப்பட்டதால் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பார்ப்பனியம் சுங்க வம்ச ஆட்சியில் சாமவேதப் பார்ப்பனன் புஷ்யமித்திரன் என்பவன் மூலம் பழி தீர்த்துக் கொண்டது.
பவுத்த (மவுரிய) பேரரசின் கடைசி மன்னனும் அசோகரின் வழித் தோன்றலுமாகிய பிரிஹத்ரத மவுரியரின் ஆட்சியில் படைத்தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் எனும் பார்ப்பனன் தன் மனைவியை அரசனிடம் அனுப்பி மயங்கச்செய்து தன் வயப்படுத்தினான். அதன்பிறகு திட்டமிட்ட சதியின் மூலம் மன்னனைக் கொலை செய்து ஆட்சிக் கட்டில் ஏறினான்.  உடனே, பவுத்தத்தை அழிக்கும் பணியைத் தொடங்கி பவுத்த விஹாரைகளை இடித்துத் தகர்த்தான்.  அன்பே உருவான பவுத்த பிட்சுக்களைக் கண்ட இடத்தில் கொலை செய்யுமாறு கட்டளை இட்டான்.  பவுத்த பிட்சுக்களின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்குப் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தான்.  இவன் காலத்தில் தான் மனுநீதி எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.  இவன் கொலை வேள்விகள் பல நடத்தினான்.  அசுவமேத யாகம் எனும் குதிரைப்பலி யாகம் நடத்திப் பார்ப்பனக் கொட்டத்தை அரங்கேற்றினான்.  பவுத்தத்தை அழித்து ஆரிய மதத்தை நிறுவி உயிரூட்டுவதே இவன் நோக்கம்.
1) (அ) இந்த அடாத கொலையை வரவேற்று ‘இந்துத்வா’ சொல்லாடல் புகழ் சாவர்க்கர் (1883- _ 1966) எனும் சித்பவன் பார்ப்பனர் கூறியதாவது:_
வரலாற்றில் விளக்கப்படாத யாதோ ஒரு காரணத்தால் பிரிஹத்ரத மன்னன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் ஒரு சிறு குழப்பம் நிகழ்ந்தது.  பரபரப்பான இவ்வேளையில் பெயரளவில் அரசராகப் பதவியேற்றிருந்த பிரிஹத்ரத மவுரியனை நோக்கி அணிவகுத்துச் சென்று படைத்தலைவரான புஷ்யமித்திரர் அரசனுடைய தலையைக் கொய்து கொன்றார்.  அசோகரின் வழித் தோன்றலான பிரிஹத்ரத மவுரியரைக் கொலை செய்ததன் மூலம் ஒரு தேசியக் கடமையைப் புஷ்யமித்திரர் நிறைவேற்றியிருந்தார்.  பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் ஏனைய இந்துமக்கள் புத்தசமயக் கோட்பாடுகளின் மீது அருவருப்பும் வெறுப்பும் கொண்டதற்குத் தத்துவ விசாரணை அல்லது அறிவாற்றல் விவாதம் காரணம் அல்ல.  மாறாக அதற்குக் காரணமாக அமைந்தது தேசியம் மற்றும் அரசியல் காரணங்களே ஆகும்.
ஆ) சாவர்க்கர் மேலும், பேரரசர் அசோகரின் அரசைக் கண்டித்தும் அதனால் பாரதப் பண்பாடு (ஆரியப் பண்பாடு) எப்படி பாதிப்புக்கு உள்ளானது என்பதையும் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்:-
புத்த சமயத்துக்கு மாறியபின் அசோகர் அகிம்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு சில புத்த சமயக் கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததன் விளைவாகப் பாரதிய அரசியல் கண்ணோட்டம் அதன் அரசியல் சுதந்திரம், பாரதியப் பேரரசு போன்ற கொள்கைகளுக்குச் சொல்லொணாக் கேடு விளைந்தது.  அசோகர் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரம்பற்ற அகிம்சையை வலியுறுத்திப் பேரரசு முழுவதிலும் அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் அமல் செய்ததால் பாரதிய ஆணிவேர் வெட்டப்பட்டது போன்ற நிலை ஏற்பட்டது.  உயிர்ப்பலியை ஏற்றுக்கொண்டுள்ள சமய சடங்குகளைப் பேரரசு முழுவதும் அசோகர் தடை செய்தார்.  வேள்விகள் வேத சமயத்தின் உயிர் மூச்சு ஆகும்.  அதன் அடிப்படையில்தான் பாரதியப் பண்பாடு வேதகாலம் முதல் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது.  வேத சமயப் பழக்கவழக்கங்கள் அனைத்தும் தண்டனைக்கு உரியன என்று அசோகர் அறிவித்தார்.  வேத சமயப் பழக்க வழக்கங்கள் தீட்டானவை என்று பவுத்தர்கள் அதைப் புறக்கணித்தார்கள்.  ஆனால், அவை வேத சமயத்தின் அஸ்திவாரமாகும்.  புத்த சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதால் தேசியப் பலத்தையும் சமுதாயத்தின் அடிப்படைகள் முழுவதையும் கோரமாகப் பாதிக்கும் வகையில் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அசோகருக்கு ஏறத்தாழ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியர் உணர்த்தியிருக்கிறார்.  ஜாதி, இனம், தேசியம் போன்ற வேறுபாடுகளைப் பவுத்தர்கள் அங்கீகரிக்கவில்லை.  பவுத்தமதப் பிரச்சாரகர்கள் இத்தகைய தேச விரோத, பாரதியப் பண்பாட்டுக்கு விரோதமான தவறான வழியில் பாரதக் குடிமக்களைத் திசை திருப்பி ஏமாற்றி வந்தார்கள்.  அசோகரின் பிரச்சாரத்தினால் மட்டும் அல்லாமல் புத்தரின் கருத்துகளாலும் ஏற்பட்ட கடும் விளைவுகளையும் பாரதம் துரதிருஷ்டவசமாகத் தாங்க வேண்டிய கஷ்டகாலம் ஏற்பட்டது.
(எழில். இளங்கோவன் அவர்கள் எழுதிய ‘பவுத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்’ எனும் நூல் – பக்கங்கள் 125, 126, 130, 131
வெளியீடு: வானவில் புத்தகாலயம். சென்னை-17.
பதிப்பு ஆண்டு; 2014.  சாவர்க்கர் எழுதிய ”பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்’ என்ற நூலில் இருந்து எடுத்துக் காட்டப்பட்டுள்ளது).
(தொடரும்)