அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (321)

2023 Uncategorized அய்யாவின் அடிச்சுவட்டில் ஆகஸ்ட் 16-31,2023

சத்தியராஜுக்கு நாத்திக நன்னெறிச் செம்மல் விருது!
– கி. வீரமணி

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமை நிலைய அலுவலகத்தில் மானமிகு துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் எமது தலைமையில் 3.1.2004 சனி முற்பகல் 11:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
தொடக்கத்தில் திராவிடர் கழகத் தலைமை நிலையத்தில் மறைந்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்தோம்.

சத்யராஜுக்கு ‘நாத்திக நன்னெறிச் செம்மல்’ விருது

கலையுலக பகுத்தறிவுச் சாதனையாளர் ‘இனமுரசு’ சத்தியராஜ் அவர்களுக்கு
‘நாத்திக நன்னெறிச் செம்மல்’ விருது வழங்கும் ஆசிரியர் அவர்கள்.

திராவிடர் கழக அமைப்புகளில் ஒன்றான தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், கால் நூற்றாண்டு கலையுலக பகுத்தறிவுச் சாதனையாளர் Ôஇனமுரசு’ சத்யராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழா 3.1.2004 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் ராதா மன்றத்தில் நடந்தது.
பிரபல திரைப்பட நடிகர் சத்யராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பை டெய்சி மணியம்மை கூறினார். அதன்பின்னர் “இனமுரசு’’ சத்யராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து “நாத்திக நன்னெறிச் செம்மல்’’ என்ற விருதினையும், நூல்களையும் வழங்கினோம். தந்தை பெரியார் உருவம் வடிக்கப்பட்ட  வேலைப்பாடு நிறைந்த கேடயம் அளிக்கப்பட்டது.

அடுத்து பேசிய பாவலர் அறிவுமதி அவர்கள்,

“பெரியார் சிந்தனைகளுக்கு எதிரான பாடல்களை எழுதமாட்டேன். நாங்கள் எல்லாம் தந்தை பெரியாரின் பிள்ளைகள்.
இன்றைக்கு திரைப்பட உலகத்திற்குள்ளே நாங்களெல்லாம் கரையேறி வந்திருக்கிறோமென்றால், அன்றைக்கு தந்தை பெரியார், திராவிட இயக்கத் தலைவர்கள் பேச்சைக் கேட்டுத்தான் நாங்கள் இன்றைய நிலைக்குவந்திருக்கின்றோம். அன்றைக்கு உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம்.ஆர். ராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்ற முதுபெரும் கலைஞர்கள் இந்த மண்ணின் பகுத்தறிவுக்கும், அய்யா பெரியாருடைய கொள்கைகளுக்கும் தெளித்துவிட்டுப் போயிருக்கின்ற விதைகளின் விளைச்சல்களாகத்தான் இன்று என் மரியாதைக்குரிய உடன்பிறந்தார் சத்யராஜ் அவர்களாக இருந்தாலும், மணிவண்ணன் அவர்களாக இருந்தாலும், பாரதிராஜா அவர்களாக இருந்தாலும், போன்றவர்களெல்லாம் இருந்தாலும், அழகி என்ற படத்தை எடுத்த தங்கர்பச்சான், ‘பிதாமகன்’ என்கிற பாலா, நாங்களெல்லாம் பெரியாரின் பிள்ளைகளாகத்தான் இந்த சினிமா உலகத்தில் இருக்கின்றோம்.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில்,
மறைந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சக்ரவர்த்தி
அவர்களின் உருவப் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்.

வருமானம் எனக்குப் போனாலும் பரவாயில்லை என்கின்ற சூழ்நிலையில், அய்யா வீரமணி அவர்களுடைய முன்னிலையில் தந்தை பெரியாருடைய மண்ணில், நான் முடிவாகச் சொல்லுகிறேன். நான் எழுதுகின்ற திரைப்படப் பாடல்களில் இனி பெண்ணியச் சிந்தனைக்கு முரண்பாடு வருகின்ற எந்தப் பாடலையும் நான் எழுத மாட்டேன் என்கின்ற உறுதிமொழியை ஒரு பெரியாரின் பிள்ளையாக நான் எடுத்துக் கொள்ளுகிறேன்.

சத்யராஜ் போன்ற நண்பர்களுடைய திரை உலக வாழ்க்கை நமக்கு மேலும் மேலும் பயன்பட வேண்டும்.
பெரியார் கொள்கையைப் பரப்பும் நடிகனாக…அவர் பயன்பட்டால் மட்டும் போதாது. உலகம் முழுவதும் தந்தை பெரியாருடைய கொள்கைகளைப் பரப்புகின்ற தமிழனாக அவர் பயன்பட வேண்டும்.

நீதிபதி பெ. வேணுகோபால் தனது உரையில்,

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் ஆரம்பித்த திராவிடர் இயக்கம், அன்று வடமொழியிலே ‘அக்ராசனாதிபதி’ என்பதை ‘அவைத் தலைவர்’ என்றும், ‘நமஸ்காரம்’ என்பதை ‘வணக்கம்’ என்றும், ‘விவாக சுபமுகூர்த்தம்’ என்பதை ‘திருமணம்’ என்றும் மாற்றி தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்து மாற்றிக் காட்டிய பெருமை திராவிடர் இயக்கத்தையே சாரும். சத்யராஜ் அவர்கள் ஒரு திரைப்பட நடிகர். அவரைப்போல் இந்த அளவுக்குத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்கு பலரும் முன் வர மாட்டார்கள்.

அப்படிப்பட்ட சிறப்புடைய நடிகர் சத்யராஜ் அவர்கள் பெரியாரின் வேடமணிந்து நடிக்கவேண்டும்.
இப்போது ‘மேக்கப்’ கலை மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், உருவ ஒற்றுமையைக் கொண்டு வர முடியும். பெரியாரின் வாழ்வின் தொன்மையான நிகழ்வுகளை அவர் நடித்துக்காட்ட வேண்டும். இது இன்றைய தலைமுறைக்கு பெரியாரையும், இவரது சிந்தனைகளையும் கொண்டு செல்ல பெரிதும் பயன்படும்‘‘ என்று குறிப்பிட்டார்கள்.

நிறைவாக எமது உரையில்,

அருமைச் சகோதரர் சத்யராஜ் அவர்களுக்கு இங்கு இருக்கின்ற கூட்டத்தைவிட பெரிய கூட்டம் கூடி பாராட்டுகளை எல்லாம் நடத்தியிருக்கலாம்.
இது தாய்வீட்டுப் பாராட்டு! எப்போதும் அடக்கத்தோடு இருக்கிறவர்கள் நடத்துகிற பாராட்டு! ஆர்ப்பாட்டமில்லாதவர்கள் நடத்துகிற பாராட்டு! உண்மையிலேயே பாசத்தோடு இருக்கிற நாங்கள் இந்தப் பாராட்டை அவருக்கு நடத்துகின்றோம்.

முதலில் அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்ன பொழுது மறுத்தார். பிறகு தந்தை பெரியார் அவர்களுடைய கருத்து கொள்கைகள் என்ன? தமிழர்களை தந்தை பெரியார் அவர்கள் எப்படி உயர்த்திப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்கிற கருத்தை எல்லாம் சொன்ன பொழுது அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

எத்தனையோ நடிகர்கள் வெள்ளி விழாவைத் தாண்டி இருக்கிறார்கள். நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், பெரியார் கொள்கையைத்தான் தன் வாழ்க்கையில் பின்பற்றுகிறவர் என்று சொல்லுகின்றவர், நான் நாத்திகன் என்று வெளிப்படையாக அறிவித்து திரைப்படத் துறையிலே தொடர்ந்து சிறப்பாக விளங்குவதற்காகத்தான் உங்களை அழைத்திருக்கிறோம் பாராட்டுகிறோம்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். ராதா ஆகியோர் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையைப் பின்பற்றியவர்கள். அந்தக் காலத்திலே தந்தை பெரியார் கொள்கைகளைத் தனது நாடகங்களில் கொள்கை வாயிலாகப் பரப்பியதற்கு அரசாங்கம் தடை விதித்தது. ஒரு நடிகரை எதிர்த்து அவருக்காக அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றியது என்றால் அது நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது!

‘நாத்திக நன்னெறிச் செம்மல்’’ என்ற பட்டத்தினை, விருதினை இங்கே நமது சத்யராஜ் அவர்களுக்கு வழங்கியிருக்கின்றோம். சத்யராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படுகிறது என்று சொன்னால் தந்தை பெரியார் அவர்களே பாராட்டு விழாவை நடத்துகின்றார்கள் என்று பொருள்.

பெரியாருடைய கொள்கையோடு மட்டுமல்ல; பெரியாருடைய உருவத்தோடு உங்களைக் காணவேண்டும். உங்கள் மூலம் அடுத்த தலைமுறை தந்தை பெரியார் கொள்கையை அறிந்து கொள்ள முடியும். வரும் 2004ஆம் ஆண்டில் அதற்காக மற்றொரு பாராட்டு விழாவை நாங்கள் நடத்தும் நாளை எதிர்பார்க்கிறோம்.
உங்களுடைய அறிவு உங்களுடைய தெளிவு, எல்லாவற்றையும்விட உங்களுடைய துணிவு மேலானது. பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்வதன் மூலம் அவர்கள் ஒருபோதும் தாழ்ந்துவிட மாட்டார்கள். வீழ்ந்துவிட மாட்டார்கள்.

முன்னேறியே தீருவார்கள். காரணம், எங்கே தன்னம்பிக்கை ஆள்கிறதோ அங்கு மூட நம்பிக்கை விடை பெற்றுக்கொள்ளும் (பலத்த கைதட்டல்). எங்கே மூடநம்பிக்கை இருக்கிறதோ அங்கு தன்னம்பிக்கை இருக்காது. அவர்கள் வெற்றி பெற முடியாது. இது அறிவியல் ரீதியான காரணம், ஏதோ பாராட்டுக்காகச் சொல்லக்கூடிய செய்தி அல்ல. உங்களை நாங்கள் பாராட்ட அடிப்படைக் காரணமே இதுதான்.
தந்தை பெரியார் அவர்களாலே, எம்.ஆர். ராதா அவர்களுடைய பெயராலே இந்த மன்றம் அமைக்கப்பட்டது.

‘1963லே இந்த மன்றம் தொடங்கப்பட வேண்டும் என்று அய்யா அவர்கள் நினைத்து அடிக்கல் நாட்டி கட்டடம் திறக்கப்படுகின்ற நேரத்திலே நடிகவேள் ராதா அவர்களுடைய பெயரை வைத்து திறக்கப்படும்பொழுது, இந்த நிகழ்ச்சிக்கு வர நடிகவேள் ராதா அவர்கள் சங்கடப்பட்டார்கள்.
வேறு பயத்தினாலே அல்ல. கொஞ்சம் தயக்கத்தினாலே கூச்சத்தினாலே வரத் தயங்கினார்கள்.

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். “உங்களைப் பாராட்டுவது (எம்.ஆர். ராதா) உங்களுக்காக அல்ல. நாங்கள் உங்களைப் பாராட்டுவது இப்படிப்பட்ட கொள்கை உடையவர்கள் வளருவார்கள், வாழ்வார்ககள், முன்னேறுவார்கள் என்று உலகத்திற்குக் காட்டவேண்டும்’’ இதுதான் முக்கியம் என்பதை அய்யா அவர்கள் சொன்ன கருத்தைச் சொன்னோம். இப்படிப்பட்ட கொள்கை உடையவர்களுக்கு சிறப்புகள் செய்யப்படும். உலகம் அதை ஏற்கும் என்று சொன்னபொழுது தயங்கிய நிலையிலே இருந்த ராதா அவர்கள் வந்தார்கள்.

அதேபோலத்தான் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களுக்கு ஆசிரியர் யார்? என்று அவர்களிடம் கேட்ட நேரத்திலே அவரே சொன்னார். பச்சை அட்டை ‘குடிஅரசு’ தான் என்னுடைய ஆசிரியர் என்று கலைவாணர் அவர்கள் சொன்னார்.

எங்களுடைய அன்புச் சகோதரர் சத்யராஜ் அவர்களுக்கு நாங்கள் விடுக்கக் கூடிய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் பெரியார் கொள்கையோடு இருக்கின்றீர்கள் என்பது மட்டுமல்ல. பெரியார் உருவத்தோடு நீங்கள் இருப்பதை அகிலமே காணவேண்டும். (பலத்த கைதட்டல்) நீங்கள் பெரியாராகவே வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய காரணத்தால் நீங்கள் பெரியாராக நடிப்பது சுலபம். நீங்கள் அப்படிச் செய்வதன்மூலமாக இந்தக் கொள்கை வருங்காலத் தலைமுறையினருக்கு ஏராளமாகச் செல்லும்.

எனவே, நீங்கள் அப்படி நடிக்கும் பொழுது செய்கிறபொழுது நாங்கள் எந்த வகையில் உங்களுக்குத் துணையாக இருக்க முடியுமோ அதைச் செய்வோம்.
நிச்சயமாக 2004ஆம் ஆண்டு இம்முயற்சி சிறப்பாக அமைந்து, உங்களுக்கு மற்றொரு பாராட்டு விழாவை சிறப்பாக நடத்தக் கூடிய அந்த நாளை எதிர்பார்க்கிறோம். அப்பொழுதுதான் பல பேருக்குத் தெரியும் என்று நம்பிக்கையுடன் கூறினோம்.

‘இனமுரசு’ சத்யராஜ் அவர்கள் தமது ஏற்புரையில்,

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் கால் நூற்றாண்டு கலையுலக பகுத்தறிவுச் சாதனையாளர்
‘இனமுரசு’ சத்யராஜ் அவர்களுக்குப் பாராட்டு விழாவின்போது திரண்டு இருந்த மக்கள் கூட்டம்.

திராவிடர் கழகம் என்பது எவ்வளவு பெரிய இயக்கம்! தந்தை பெரியார் ஆரம்பித்த மாபெரும் இயக்கம். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இனத்தினருடைய வளர்ச்சிக்காகப் போராடிய இயக்கம். எவ்வளவு பெரிய தியாகங்களைச் செய்த இயக்கம்!

தந்தை பெரியார் முதற்கொண்டு வீரமணி அய்யா அவர்கள் முதற்கொண்டு எத்தனை தோழர்கள், எத்தனை சகோதரர்கள், எத்தனை தலைவர்கள் சிறைக்குப் போயிருக்கிறார்கள், எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். எத்தனை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்!

அந்த இயக்கத்தின் பேரைச் சொல்லித்தான் இன்று தமிழ்நாட்டில் எந்த இயக்கமாக இருந்தாலும் ஆட்சியை நடத்த முடியும்.
இன்று நான் அமைதியாக, சந்தோஷமாக நிம்மதியாக இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார் கொள்கையை ஏற்று அவருடைய தொண்டனாக இருப்பதுதான். நிச்சயம் தந்தை பெரியார் வேடம் ஏற்று நடிப்பேன். எப்படி காந்தியார் பற்றி பெரிய அளவுக்கு திரைப்படம் வந்ததோ அதுபோல தந்தை பெரியார் படம் வெளிவரவேண்டும் என்று இயக்குநர் ஞானராஜசேகர் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்.

பெரியார் வேடந்தாங்கி நடிக்கும்போது அதற்காக ஊதியம் கூடப் பெறமாட்டேன் (பலத்த கைதட்டல்).
நிச்சயம் பெரியார் வேடம் ஏற்று நடிப்பேன். எத்தனை ஆஸ்கார் அவார்டுகள் கிடைத்தாலும் அதைவிடப் பெரிதாக, பெரிய பாராட்டு இங்கு நடைபெற்ற பாராட்டைத் தான் கருதுகின்றேன்.

நான் வாழ்நாள் முழுக்க பெரியார் தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகின்றேன்.
நான் முதன் முதலில் இந்த திடலுக்கு வந்தபோது சொன்னார்கள், அய்யய்யோ, என்னங்க பெரியார் திடலுக்குக்கெல்லாம் போகிறீர்கள், நம் சினிமாத் தொழிலுக்கு இது சரிப்பட்டு வராதுங்க, படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று சொன்னார்கள்.
பெரியார் திடலுக்கு வந்துவிட்டுப் போனதற்குப் பிறகுதான், ‘வால்டர் வெற்றிவேல்’ என்று ஒரு படம் 200 நாட்கள் ஓடியது! அமைதிப் படை என்கிற படம் 200 நாட்கள் ஓடியது!!
இவ்வாறு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்.

நாதசுவர கலைஞர் எம்.பி.என். பொன்னுசாமி தனது உருவம் பொறித்த நினைவுப் பரிசு கேடயத்தை,
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கினார்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் எட்டாம் ஆண்டு (முதல் நாள் விழா) இயல் விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் தமிழ் இனத்தின் எழுச்சி விழாவாக 4.1.2004 அன்று தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் “தில்லானா மோகனாம்பாள்’’ புகழ் மதுரை கலைமாமணி எம்.பி.என். பொன்னுசாமி குழுவினரின் நாதசுவர இன்னிசை மழைபோல் பொழிந்தது.

அடுத்து தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற இயக்குநர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையன் இந்நிகழ்ச்சிகள் பற்றித் தொடக்கவுரையாற்றினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தலைவர் மயிலை நா. கிருட்டினன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழகப் பொருளாளர் திராவிடன் நலநிதியின் தலைவர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை விழாவிற்குத் தலைமை வகித்து உரையாற்றினார்.

பார்ப்பனர்களின் கலாச்சாரம் தொலைக்காட்சிகளில் அதிகமாக ஊடுருவிக் கொண்டு வருகின்றது. அதை தந்தை பெரியார் வழியில் நின்று தடுத்தாக வேண்டுமென்று வழக்கறிஞர் கோ. சாமிதுரை கூறினார்.

அடுத்து பெரும்புலவர் தமிழறிஞர் ச. சீனிவாசன், தில்லானா மோகனாம்பாள் புகழ் மதுரை கலைமாமணி எம்.பி.என். பொன்னுசாமி ஆகியோருக்கு தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து ”பெரியார் விருது’’ (தந்தை பெரியார் உருவம் பொறித்த கேடயம்) பல்லாயிரக்கணக்கான மக்களின் கரவொலிக்கிடையே வழங்கி நாம் சிறப்பித்தோம்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி 5.1.2004 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது.
தமிழிசைக் குயில் டி.கே. கலா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தமிழிசைக் குயில் டி.கே.கலா அவர்களுக்கு நாம் சால்வை அணிவித்து தந்தை பெரியார் அவர்களுடைய நூல்களை அனைவருடைய தொடர் கரவொலிக்கிடையே வழங்கினோம்.

சென்னை பெரியார் திடலில் 5.1.2004 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற விழாவில்,
தமிழிசைக் குயில் டி.கே. கலாவிற்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
குடந்தை சுந்தரேசனார் படத்தை உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் சா.கிருட்டிணமூர்த்தி திறந்து வைத்தார்.

பொருளியல் துறை அறிஞர் ச. இராஜரத்தினம் விழாவிற்குத் தலைமை வகித்துப் பேசினார்.
தமிழிசைக்காக தந்தை பெரியார் கொடுத்த குரலின் எதிரொலியால்தான் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழிசைக் கல்லூரியே ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், தமிழர்களின் இன உணர்வுக்காக மட்டுமல்ல, கலை உணர்வுகள் வளர வேண்டும் என்பதற்காகவும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் தொடர்ந்து செயல்படுகின்றது என்று கூறினார்.

சா.கிருட்டினமூர்த்தி உரையில்,

அடுத்து “பண்ணாராய்ச்சி வித்தகர்’’ குடந்தை சுந்தரேசனார் படத்தைத் திறந்து வைப்பதிலே பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
குடந்தை சுந்தரேசனார் அவர்கள் தமிழிசையைக் கற்க குடந்தையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அந்தக் காலத்தில் நடந்தே சென்றிருக்கின்றார். பேருந்தில் பயணம் செய்ய அவரிடம் பணம் இல்லை. திருவனந்தபுரத்தில் உள்ள லெட்சுமணன் என்பவர் தான் சுந்தரேசனாரின் ஆர்வத்தையும், நிலையையும் பார்த்து அவருக்கு கையில் பணம் கொடுத்து குடந்தையிலேயே நீங்கள் தமிழிசையை கற்கலாம் என்று சொல்லி பேருந்தில் அனுப்பி வைத்தார். குடந்தை கந்தசாமி தேசிகர், பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் தமிழ் கற்றார் என்பதைத் தெரியப்படுத்தி உரையாற்றினார்.

மூத்த பத்திரிகையாளர் ஜே.வி. கண்ணன் அவர்களுக்குப் பெரியார் விருது வழங்கி சால்வை போர்த்தி நூல்களையும் அளித்துச் சிறப்பு செய்தோம்.

ஜி.யூ. போப் படத் திறப்பு!

“தமிழ் மாணாக்கன்’’ஜி.யூ. போப் அவர்களின் படத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் திறந்து வைத்து உரையாற்றினார்.

மு. துரைராகவன் படத்திறப்பு:

கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை தலைமையில் தொடங்கியது.’விடுதலை’ மேலாளர் மறைந்த மு. துரைராகவன் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி கடலூர் அருகே உள்ள கூத்தப்பாக்கம் மூகாம்பிகை மன்றத்தில் சனவரி 8ஆம் நாள் மாலையில் நடைபெற்றது.

மு.துரைராகவன் படத்தை யாம் திறந்து வைத்து உரையாற்றுகையில்,மு.துரைராகவன் பெயரால் வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவியர்கட்கு தந்தை பெரியார் நினைவு நாளையெட்டி சிறந்த மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கப்படும். அதற்கான முதல் நன்கொடையாக ரூ.10,000/- திராவிடர் கழகம் சார்பில் அளிக்கப்படும் என அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து மு. துரைராகவன் துணைவியார் அ.தாராபாய் அம்மையார், மருமகன்
த.முருகன் ஆகியோர் தமது குடும்பத்தின் சார்பில் ரூ.10,000/எம்மிடம் வழங்கினார்.

(நினைவுகள் நீளும்…)