தகைசால் தமிழர் ஆசிரியர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

2023 ஆகஸ்ட் 16-31,2023 கவிதைகள்

மிகையே இல்லை மேன்மைப் புகழ்மிகு
தகைசால் தமிழர்! தறுகண் மறவர்;
தந்தை பெரியார் தலைமை ஏற்ற
சிந்தனை யாளர்; அகவை பத்தில்
ஒலிவாங் கியின்முன் உரைகள் ஆற்றிய
வலிமை மிக்கவர்; எண்ப தாண்டுகள்
ஓய்வே இன்றி உணர்ச்சிப் பெருக்குடன்
தாய்மொழி, தமிழர், தமிழ்நா டுயர்ந்திட
உழைக்கும் திறத்தினர்; உயரிய நுண்மாண்
நுழைபுலம் யாவும் எய்திய ஏந்தல்!
விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு
மிடுக்குற திராவிடப் பொழிலை நடத்தும்
இதழியல் வல்லார்! எவர்க்கும் நல்லார்!
உதவும் பண்பினர்; உண்மை, நேர்மை,
எளிமைக் கெல்லாம் எடுத்துக் காட்டாய்
விளங்கும் கருத்தியல் வேட்கை கொண்டவர்!
ஆரியப் புரட்டை அழித்திடும் நோக்கில்
வீரியம் மிகவே வெங்களம் நிற்பவர்!
பரப்புரை மூலம் பகுத்தறி வோங்கிட
உரத்துடன் முழங்கும் ஒண்டமிழ்க் குரிசில்
சட்டம் பயின்றவர்! சால்போ நிறைந்தவர்;
திட்பம் விழையும் திராவிட முரசம்!
மானம் அறிவை மாந்தர் பெற்றிட
ஆன வரையும் அல்லும் பகலும்
எல்லா நிலையிலும் இனிதே உழைக்கும்
வல்லவர் தம்மை வாழ்த்தி மகிழ்வமே! ♦