ஆசிரியர் பதில்கள்

2023 ஆசிரியர் பதில்கள் ஜூன் 16-30,2023
தமிழ்நாடு அரசு 
தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
1. கே: ஒடிசா இரயில் விபத்து நடந்த பிறகாவது தவறுகள் சரி செய்யப்படுவதற்கான முயற்சிகளை நாடு முழுவதும் மேற்கொள்ளுவதற்கு மாறாக, தனியார் மயமாக்குவதற்கான காரணியாக இவ்விபத்தைப் பயன்படுத்த முயற்சிக்கும் பா.ஜ.க. தன் அஜண்டாக்களில் உறுதியாகவுள்ளதைத்தானே காட்டுகிறது? – கண்ணதாசன், தஞ்சாவூர்.
ப: ஓநாய் ஒரு போதும் ‘சைவமாக’ மாட்டாது! கார்ப்பரேட் முதலாளிக்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அரசு  அமைத்த தண்டவாளம், ரயில்வே நிலையங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு ரயில்கள் ஓடி, அவர்கள் கொள்ளை லாபம் குவிக்கின்றனர். ரயில்வே விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பது மகாவெட்கக்கேடு.
2. கேள்வி: ஆளுநர் ஆர்.என். ரவி திட்டமிட்டே ஒவ்வொரு கருத்தையும் வெளியிட்டு, தமிழக ஆட்சிக்கு இடையூறு செய்வதோடு, பா.ஜ.க. மீதான எதிர்ப்புணர்வு மக்களுக்கு வரும்போதெல்லாம், அதைத் திசை திருப்பவும் இப்படிச் செய்கிறார் என்ற கணிப்பு சரிதானே?  – சதாம் உசேன்,காவேரிப்பாக்கம்.
ப: எமது அறிக்கை (விடுதலை – 6.6.2023) படியுங்கள். விரிவாக பதில் உள்ளது.
3. கேள்வி: இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் குறைந்திருப்பதை அண்மைச் செய்திகள் தெரிவிக்கின்ற நிலையில், நாம் என்ன செய்யவேண்டும்? ஒன்றிய அரசு என்ன செய்யவேண்டும்?
– வண்ணமுகில்,தேன்கனிக்கோட்டை.
ப: நமக்குக் கவலை; மற்றவர்களுக்கு மகிழ்ச்சி. இனியாவது இலங்கை வாழ் தமிழர்கள் உணர்ந்து ஒன்றுபட்டால் உண்டு  வாழ்வு.
4. கேள்வி: ஜாதி மறுப்பு மணங்கள் புரிவோரைப் பாதுகாக்க தனிச்சட்டம் தமிழ்நாடு அரசு இயற்ற தாங்கள் வலியுறுத்துவீர்களா? – முல்லைவேந்தன், சேலம்.
ப:தொடர்ந்து வலியுறுத்தித்தான் வருகிறோம். நிச்சயம் வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு.
5. கேள்வி:   மின் உற்பத்தியில் மிகை மாநிலம் தமிழ்நாடு என்று கூறும் நிலையில், அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு மக்கள் அதிருப்தியடைவதைப் போக்க அரசு என்ன செய்யவேண்டும்? – ஆயிஜாபானு, கோவிலூர்.
ப: மின்துறை அமைச்சர் அடிக்கடி விளக்கம் அளிக்கிறார். என்றாலும் இதன்மூலம் அவரது கவனத்திற்கும் கொண்டு செல்லுவோமாக!
6. கேள்வி:  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கடவுள் சிலையை மாவட்ட ஆட்சியர் அகற்றியதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அந்த ஆட்சியருக்குத் துணை நிற்க நாமும், அரசும் என்ன செய்யவேண்டும்?
– ஷேம்ஸ்வசந்த், மேட்டுப்பாளையம்.
ப: அரசுத் துணை நிற்க அவருக்கு நாம் துணை நிற்போம்; நிற்கிறோம்.
7. கேள்வி: பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் சூழலை அறவே ஒழிக்க அரசு என்ன செய்யவேண்டும்?
– மேனகா, கூடலூர். 
ப: கடுமையான சட்ட அமல் – தண்டனை – இவற்றோடு மதுவுக்கு எதிராக தீவிரமான பிரச்சாரம்.
8. கேள்வி: கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க மறுக்கும் நிலையில், அப்படி மறுப்பவர்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்கமுடியாதா? கோயிலுக்கு சீல் வைப்பதுதான் தீர்வா?
– பாலாஷி, நுங்கம்பாக்கம்
ப: தலையங்கத்தை காண்க!